வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

திரி ரத்னா-பாரத் ரத்னா- அண்ணல் அம்பேத்கர்.



ஸ்டாலின் தி 

பௌத்த பண்பாட்டில் த்ரி ரத்னா என்பது முக்கியமானது. பாலியில் த்ரி ரத்னா என்றால் மூன்று மணிகள் என்று அர்த்தம். புத்தம் சரணம், தம்மம் சரணம், சங்கம் சரணம் என்பவையே அம்மூன்று மணிகளாகும். அவையின் கூர்மையை(வீரியம்>பலம்)விளக்கும் உருவகமே த்ரீ சூல் என்கிற திரிசூலம். அதையும் வழக்கம்போல் களவாடியிருக்கிறது இந்து சனாதனக் கூட்டம். இருக்கட்டும். 

இந்தியாவின் உயர்ந்த அரசு விருதாக 1954 இல் நிறுவப்பட்டது பாரத ரத்னா விருது. இந்தியாவின் சிறந்த அடையாளமான பௌத்த கூறுகளை கொண்டதே பாரத ரத்னா என்பதற்கு அதன் பாலியிலான ரத்னா என்னும் பெயரும், அரச இலை (போதியிலை) வடிவ பதக்கமும் அதன் நடுவில் சூரியன் வடிவில் ஒளி உமிழும் (பகவன்>புத்தர்) தோற்றமும் காணப்படுகின்றன. பாரத் என்பதும் கூட புத்தரின் பெயர்களுள் ஒன்று என்பதை அறிவோம். எனவே, தங்களிடம் உயர்ந்த அடையாளங்களைக் கொண்டிருக்காத இந்து (அன்றைய காங்கிரஸ்) ஆட்சியாளர்கள் பாரத் ரத்னாவை பௌத்த அடையாளங்களோடு நிறுவிக் கொண்டார்கள். திரி ரத்னா என்கிற பௌத்த அடையாளத்தை கைக்கொள்ளும் வகையில், பாரத் ரத்னா விருது நிறுவப்பட்ட 1954 இல் முதல் முதலாக அவ்விருதைப் பெறுகிறவர்களாக மூன்று பிராமணர்களே தேர்வு செய்யப்பட்டனர். சுந்திர இந்தியாவின் முதல் ஆளுநர்(ராஜகோபாலச்சாரி), இயற்பியல் அறிஞர்(சி.வி.ராமன்), தத்துவ அறிஞர்(டாக்டர் ராதாகிருஷ்ணன்) என்று காரணங்கள் கூறப்பட்டாலும் அவர்கள் மூவருமே பார்ப்பனர்கள்தான் என்பது தற்செயலானதல்ல. திரி ரத்னா என்னும் பௌத்த அடையாளத்தை குழப்பவே முதல் மூன்று (பாரத ) ரத்னாக்களாக மூன்று பார்ப்பனர்கள் முன்னிறுத்தப்பட்டார்கள். காந்திக்கு கொடுத்திருக்கலாமே என்கிற கேள்வி வரலாம். ஆனால், இறந்தவர்க்கு அந்த விருது இல்லை என்கிற விதி அப்போது இருந்தது. பிறகு, அந்த விதி தளர்த்தப்பட்டது. 

நேருவுக்கு, இந்திராவுக்கெல்லாம் உயிருடன் இருக்கும் போதே கொடுக்கப்பட்ட பாரத் ரத்னா விருது, அண்ணல் இயற்கையடைந்து 35 ஆவது ஆண்டு(1990) துவங்கும் போதுதான் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆருக்கெல்லாம் அவர் இறந்த அடுத்த ஆண்டே(1988) பாரத் ரத்னா விருது கொடுக்கப்பட்டது. இதுக்குறித்த கேள்வியை அப்போது எழுந்த 'அம்பேத்கர் நூற்றாண்டு' எழுச்சியின் துவக்கம் முன்வைத்தது; அண்ணலுக்கு ஏன் பாரத் ரத்னா விருது கொடுக்கப்படவில்லை என்று தலித்துகள் நேரடியாகக் கேட்கத் துவங்கினர். அப்போதுதான் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தது. 1989 தேர்தலில் மூன்று நாடாளு மன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தது பகுஜன் சமாஜ் கட்சி. அதன் தலைவர் கன்ஷிராம் அவர்கள் வி.பி.சிங் அரசுக்கு 'பாபாசாகேப் அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது அளித்திட வேண்டும்' என்கிற கோரிக்கையை முன்வைத்தார். வி.பி.சிங்கிடம் நேரடியாகவும் அக்கோரிக்கையை முன்வைத்தார் தலைவர் கன்ஷிராம்.

இந்நிலையில், அன்றைக்கு நெல்சன் மண்டேலா பிரபலமாகிக் கொண்டிருந்தார். அவரை பாராட்டவும், போற்றவும் சர்வதேச நாடுகள் முனைந்தன. அதன் மூலம் (நிற )பாகுபாடுகளை தாங்கள் மறுக்கிறோம் என்று அந்நாடுகள் காட்டிக்கொள்ள விரும்பியன. பலவகையான பாகுபாடுகளை உடைய இந்தியாவுக்கும் அந்த அவசியம் இருந்தது. எனவே, நெல்சன் மண்டேலாவுக்கு பாரத் ரத்னா விருது கொடுக்க மத்திய அரசு விரும்பியது. அதே நேரத்தில் காங்கிரசை வீழ்த்திவிட்டு வந்த ஜனதா ஆட்சிக்கு தலித்துகளின் ஆதரவையும் பெறுவதற்கும் தேவை இருந்தது. 'அண்ணல் அம்பேத்கர்க்கு பாரத் ரத்னா வேண்டும்' என்கிற கோரிக்கையையும், கிட்டத்தட்ட அதே வகையிலான கறுப்பின விடுதலை அரசியலை ஆதரிக்க வேண்டுமென்கிற சூழலையும் கருத்தில் கொண்டு 1990 இல் அண்ணல் அம்பேத்கருக்கும் நெல்சன் மண்டேலாவுக்கும் பாரத ரதனா விருதுகள் அளிக்கப்பட்டன. 

இவ்வாறாகத்தான் அண்ணல் பாரத் ரத்னா விருதை பெற்ற 22 ஆவது ஆளுமையாக அறிவிக்கப்பட்டார். பாரதத்தின் அசலான ரத்னாவான அண்ணலுக்கு அந்த விருது வந்து சேர 36 ஆண்டுகள் ஆகிவிட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...