சனி, 10 பிப்ரவரி, 2024

நாயகி பி.கே.ரோசி அம்மாள்.



ஸ்டாலின் தி 


இன்று(10 பிப்ரவரி 2023) தம்முடைய அடையாள வரைபடமாக(Doodle) ஓர் பெண்ணின் உருவத்தை வைத்திருக்கிறது கூகுள் இணையதளம். அப்படத்தில் இருப்பவர் கேரள திரை வரலாற்றின் முக்கியத்துவம் பெற்றவரான பி.கே.ரோசியம்மாள் அவர்களே ஆவார். 

தமிழக திரைப்பட வரலாறு 1916 களிலேயே துவங்கிவிட்டாலும் மலையாளத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஜே.சி. டேனியல் என்னும் தமிழர் மும்பைக்கு சென்று திரைத் தொழில்நுட்பங்களை கற்றறிந்து கேரளத்தில் படம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அவரே தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்து உருவாக்கிய அப்படத்திற்கு நாயகியாக நடிக்க எவரும் கிடைக்கவில்லை. இன்றைக்கு நடிப்புத் துறைக்கு புகழ் பெற்ற கேரளாவில், அன்றைக்கு நாயகியாக நடிக்க பெண்கள் தயங்கினார்கள். சாதிய ஆணாதிக்கத்தின் பிடியிலிருந்ததே அவர்களின் முக்கியமான பிரச்சனை. அந்நேரத்தில்தான் காக்காசி என்னும் நாடக வடிவத்தில் பெயர்பெற்றுக் கொண்டிருந்த ரோசியம்மாளைப் பற்றி கேள்விபட்டார் ஜே.சி. டேனியல். 

கேரளா திருவனந்தரபுரத்தில் உள்ள நந்தன்கோடு கிராமத்தில், ஒரு ஏழை தலித் குடும்பத்தில், 1903 பிப்ரவரி 10 நாளில் பிறந்தவர் ராஜம்மாள். சிறுமியாக இருக்கும் போது புல் வெட்டும் தொழிலாளியாக பாடுபட்ட ராஜம்மாள், கிறித்துவர்களின் ஆதரவுக் கிடைக்க, ரோசியம்மாள் என்று மாறினார். அதே காலத்தில் நாடகங்களிலும் ஆர்வம் கொண்டு நடிப்புக் கலையில் கவனம் செலுத்தினார். அவருடைய உறவினர் உதவியால் அப்போது பெயர்பெற்று விளங்கிய காக்காசி என்னும் நாடகவடிவத்தில் தேர்ந்தார் ரோசியம்மாள். அவரை அணுகி தம்முடைய திரைப்படத்தில் நாயகியாக நடிக்க வேண்டுமென்று டேனியல் கேட்கவும், ஒப்புக்கொண்டார் ரோசியம்மாள். ரோசியம்மாள் திரைத்துறைக்காக ரோசி என்று ஆக்கப்பட்டார். டேனியல் தயாரித்து, இயக்கி நாயகனாக நடித்த விகதக் குமாரன் திரைப்படத்தில் இவ்வாறுதான் நாயகியாக வந்தார் ரோசி அம்மாள். 1930 இல் வெளிவந்த விகதக் குமாரன்தான் மலையாளத்தில் வந்த முதல் திரைப் படம்;ஜே.சி. டேனியல் முதல் மளையாளத் திரைப்படத்தின் முதல் இயக்குநர், முதல் தயாரிப்பாளர், முதல் நாயகன்; ரோசி அம்மாள் மலையாள திரைத்துறையின் முதல் நாயகியானார். 

ஆனால், சாதிய சமூகம் இந்த கலை வரலாற்றுத் தடத்தை ஏற்கவில்லை. ரோசியம்மாள் விகதக் குமாரன் திரைப்படத்தில் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் 'சரோஜினி நாயர்.' 'உயர்சாதி பெண்ணின் கதாபாத்திரத்தில் கீழ்சாதி புலையர் பெண் எப்படி நடிக்கலாம்?' என்று மலையாள சாதிவெறியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். திரைப்படத்தை திரையிட எதிர்ப்புக் காட்டினர். திரையிடப்பட்ட திரை மீது கல்வீசப்பட்டது, தீ வைக்கப்பட்டது. ரோசியம்மாளின் எளிய குடிசை வீடும் கொளுத்தப்பட்டது. சாதிவெறியர்களால் ரோசியம்மாவின் உயிருக்கே ஆபத்து வந்த சூழலில் கேரளாவிலிருந்து லாரியில் தமிழகம் தப்பி வந்து சுமார் ஐம்பதாண்டுகாலம் 'ராஜம்மாள்' என்னும் பெயரிலேயே வாழ்ந்து 1988 இல் மறைந்தார். சிறந்த கலைஞராக வளர்ந்திருக்க வேண்டிய அவர் அதற்கான தகுதிகளையும் திறமைகளையும் கொண்டிருந்தார். ஆனால், இம்மண்ணின் பெருங்கேடான சாதிவெறி ரோசியம்மாள் அவர்களை விரட்டியடித்து காணாமல் ஆக்கிவிட்டது. 

தமிழர், கிறித்துவ நாடார் என பல்வேறு புறக்கணிப்புகளை சந்தித்த போதும் ஜே.சி. டேனியல் 'மலையாள சினிமாவின் தந்தை' என்று இன்றைக்கு அழைக்கப்படுகிறார். அவர் பெயரிலேயே விருதும் கூட கேரள அரசால் கொடுக்கப்படுகிறது. ஆனால், தலித் வரலாற்றில் பலருக்கும் நேர்ந்த கொடுமையை சந்தித்து வாழ்ந்து மறைந்த ரோசியம்மாள் மறக்கப்பட்டார். 
உண்மையின் வலிமை அது எப்போதும் மறைந்தே கிடந்துவிடாது என்பதுதான். இன்றைக்கு, ரோசியம்மாளின் 120 ஆவது பிறந்த நாள். இன்றைக்கு அவரை பெருமைப்படுத்துவதன் மூலம், இந்த மண்ணின் சாதிய வக்கிரத்தால் ஒடுக்கப்பட்ட பி.கே. ரோசி என்னும் நாயகியின் வரலாற்றையும், சாதியின் கோர வரலாற்றையும் பேசு பொருளாக்கியிருக்கிறது கூகுள். 

நாயகி ரோசியம்மாள் அவர்களுக்கு எம்முடைய வணக்கம்.

(ரோசியம்மாள் அவர்களின் 120 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 10/2/2023 அன்று முகநூலில் எழுதப்பட்ட கட்டுரை. ஓவியம்: சந்தோஷ் நடராஜன்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...