திங்கள், 12 பிப்ரவரி, 2024

பில்கிஸ் பானோ: இந்துத்துவ மத- அரசியல் வன்முறையை எதிர்கொண்ட போராளி.




ஸ்டாலின் தி


உலகம் புத்தாயிரமாண்டு   கொண்டாடிய இரண்டாம் ஆண்டில் இந்தியா மாபெரும் தலைகுனிவை   சந்தித்தது. சர்வதேசத்தில்  இந்தியாவை 'மதவெறி நாடு' என்று அடையாளப்படுத்திய  மாபெரும்  வன்முறை குஜராத்தில் இந்துத்துவ கூட்டத்தால் நடத்தப்பட்டது. வரலாற்றில் 'குஜராத் படுகொலை' என்று பதிவாகியுள்ள அந்த கொடூர நிகழ்வுகள் நடத்தப்பட்ட போது,   இன்றைய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில பாஜக அரசின் முதலமைச்சராக இருந்தார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி, குஜராத் மாநிலத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் அயோத்தியிலிருந்து அகமதாபாத் திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயில் நின்றுகொண்டிருந்தது. இரயில் நிலைய வணிகர்களுக்கும்   பயணிகளில் சிலருக்கும் வாக்குவாதமும் சச்சரவுகளும் நடந்ததாக கூறப்படுகின்றது. அதே நேரத்தில் சபர்மதி விரைவு இரயிலில் தீ பற்றி அது நான்கு பெட்டிகளில் வேகமாகப் பரவியது. அந்த தீ விபத்தில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 59 பேர் உயிரிழந்தனர். பிற்காலத்தில் அமைக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் இதுவொரு விபத்துதான் என்பது உறுதியானது. ஆனால், சம்பவம் நடந்த சில மணித்துளிகளில் 'அயோத்திக்கு சென்று வந்த இந்துக்களை இஸ்லாமியர்கள் இரயிலில் வைத்து கொளுத்தி விட்டார்கள் ' என்று இந்துத்துவ அமைப்புகள் மாநிலம் முழுக்க பரப்புரை செய்தனர். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மாநிலம் தழுவிய மறியலை அறிவித்தது. மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த பாஜக ஆதரித்தது. அதனால், 'மறியலக்கு முழு ஆதரவை' மோடி தலைமையிலான குஜராத் அரசு வழங்கியது. கூடவே, 'கோத்ரா ரயில் எரிப்பு ஒரு தீவிரவாத செயல்' என்று மதவாதத் தீயில் எண்ணெய் ஊற்றினார் குஜராத் முதல்வர் மோடி. மோடியின் இந்தக் கூற்று,  'பாகிஸ்தானின் உளவுத்துறைதான் உள்ளூர் முஸ்லிம்கள் மூலம் கோத்ரா ரயிலில் இந்துக்களை எரித்துக் கொன்றது' என்று பரப்பப்பட்டது. 'இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களை கடத்தி வன்புணர்வு செய்கிறார்கள்' என்று பொய் செய்தியை பாஜக ஆதரவு ஊடகங்கள் அச்சிட்டன. குஜராத் மாநிலத்தின் 27 நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த ஊருக்கு உத்தரவே இஸ்லாமியர்களை முடக்கி, ஆர்.எஸ்., பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துதுவ கும்பலை வழிநடத்தத்தான் என்பது பிறகுதான் தெரியவந்தது. 

2002 பிப்ரவரி 28 இல் லாரிகளில் கும்பல் கும்பல்களாக பயங்கர ஆயுதங்களுடன் இந்துத்துவ கும்பல் மாநிலத்தில் பல இடங்களிலும் கூடியது. மெபெரும் அழித்தொழிப்புத் திட்டம் இஸ்லாமியர்கள் மீது நடைமுறைப்படுத்தப்பட்டது. குஜராத் மாநில காவல்துறை காணாமல் போனது. கலவரத்திற்கு துணைபோன காவல் துறையினர் இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் பற்றிய விவரங்களை இந்துத்துவ கும்பலின் கையில் சேர்த்தனர். மூன்று நாட்களில் முழுவதுமாக கலவரங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது மோடி அரசு. மூன்றாவது நாளில், சுமார் 2000 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள்.  சிறுமிகள் உள்ளிட்ட சுமார் 250 பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடத்தப்பட்டன. அவர்களில் பலர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இஸ்லாமிய பெண்களின் உடலில் இந்துத்துவ குறியீடுகளை கத்தியால் கீறி வரைந்தனர். சாலைகளில் வைத்து இஸ்லாமிய பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டன. பிறப்புறுப்புகளில் ஆயுதங்கள் செலுத்தப்பட்டன . இப்படியான கொடூர,  பாலியல் வன்முறைகளில் சிக்கியவர் தான் பில்கிஸ் பானு. 

மோடி அரசின் ஆதரவுடன் 
வன்முறைகள் தொடர்ந்துகொண்டே இருந்ததால் இஸ்லாமியர்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர். அப்படித்தான் மார்ச் 3 (2002) ஆம் நாளில்,
குஜராத் மாநிலத்தின் தகோத் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பம் ஒன்று தம்முடைய குடும்ப உறுப்பினர்களான 16 பேர்களுடன் பாதுகாப்புத் தேடி வேறிடம் நோக்கி போய்க்கொண்டிருந்தது. அக்குடும்பத்தில் ஒருவர் பில்கிஸ் பானு.‌ மூன்று வயது சிறுமிக்கு தாயான அவர், ஐந்துமாத கர்ப்பிணியாகவும் அப்போது இருந்தார்.   அவர்களை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த இந்துத்துவக் கும்பல் கொடூரமாகத் தாக்கியது.‌ பில்கிஸ் பானுவின் மூன்று வயது மகளை தூக்கி கல்லில் அடித்தது அந்த வெறிப்பிடித்தக் கும்பல். தலை சிதறி உயிரிழந்தது அந்தக் குழந்தை. அக்குழந்தை உள்ளிட்ட பில்கிஸ் பானோவின் குடும்ப உறுப்பினர்கள் 14 பேர்களை அதே இடத்தில் கொடூரமாக படுகொலை செய்த இந்துத்துவக் கும்பல், கர்ப்பிணியான பில்கிஸ் பானோவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீசியெறிந்தது.  தம்முடைய குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினரை கொடூரமாக கொலைசெய்துவிட்டு தம்மையும் பாலியல் வன்கொடுமைகள் செய்த இந்துத்துவ குற்றவாளிகள் 12 பேர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அகமதாபாத் லிம்கேடா காவல் நிலையத்தில் மார்ச் 4(2002) அன்று வழக்கு தொடுத்தார் பில்கிஸ் பானோ.   குற்றத்தை பதிவு செய்த காவல்துறை குற்றவாளிகளின் பெயர்களை சேர்க்காமல் தவிர்த்தது. ஓராண்டுக்குப் பின்னர் ( 2003 மார்ச் 25) 'வழக்கின் அறிக்கை (Summary A) முன்னுக்குப் பின் முரணாக உள்ளது' என்று கூறி லிம்கேடா  நடுவர் நீதிமன்றம் பில்கிஸ் பானோ தொடுத்த  வழக்கை முடித்து வைத்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை நாடினார் பில்கிஸ் பானோ. அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும் மனு செய்தார். மத்திய புலனாய்வு பிரிவு (CBI) விசாரணைக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். மேலும், 'குஜராத்தில் வழக்கு விசாரணை நடத்துவது அச்சுறுத்தலானது' என்று உச்சநீதிமன்றத்தில் பில்கிஸ் பானோ மனுசெய்ததைத் தொடர்ந்து, வழக்கு மும்பை சி.பி.ஜ. சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  வழக்கை விசாரணை செய்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி யு.டி. சால்வி அவர்கள், குற்றம்சாட்டப்பட்ட  12 பேரையும் உறுதிசெய்யப்பட்ட  குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பில், அவர்கள் அனைவருக்கும் 'இந்திய தண்டனைவியல் சட்டம் 302 (கொலை), 120 பி (சதித் திட்டம்), 149 (குற்றம் செய்யும் நோக்குடன் ஒன்று கூடியது), 376 (2) (இ) (ஜி) (கர்ப்பிணியை வல்லுறவுக்கு உள்ளாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனையையும் வழங்கினார் நீதிபதி யு.டி.சால்வி.  பனிரெண்டு குற்றவாளிகளில் ஒருவர் உயிரந்துவிட, மற்ற பதினோர் பேரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதே உயர் நீதிமன்றத்தில் 'ஆயுள் தண்டனை போதாது. மரண தண்டனை அளிக்க வேண்டும். மேலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட மருத்துவர், காவல்துறையினர் அடங்கிய ஆறு பேர்களுக்கும் தண்டனை அளிக்க வேண்டும்' என்று சிபிஐ யும் மனுத்தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியதோடு,  குற்றவாளிகளுக்கு சாதகமாக ஆவணங்களை திருத்திய மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் என புதிதாக 6 பேருக்கு சிறை தண்டனை அளித்து 2017 மே 4 ஆம் நாளில் தீர்ப்பளித்தது மும்பை உயர் நீதிமன்றம். 

இந்நிலையில்தான் குஜராத் மாநில பாஜக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தில்(ஆகஸ்ட் 15) பில்கிஸ் பானோ வழக்கின் மன்னிக்கவே முடியாத குற்றவாளிகளையும் 'பொது மன்னிப்பு அளித்து விடுதலை' செய்தது.  இந்திய விடுதலை தினத்தை இந்துத்துவ கும்பலின் விடுதலை தினமாக கொண்டாடியது பாஜக- ஆர்.எஸ்.எஸ். கூட்டம்.  அன்றைக்கு விடுதலை ஆன அந்த கொடுங்குற்றவாளிகளை ஆட்டம் பாட்டத்தோடு, ஜெய் ஸ்ரீராம் எனக் கூச்சலிட்டு,  மாலை மரியாதையுடன் இந்துத்துவ கும்பல் வரவேற்றது, குஜராத் படுகொலையை கொண்டாடும் விதமாகவே இருந்தது. 

மீண்டும் சட்டத்தையே தமக்கான அரணாக எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார் பில்கிஸ் பானோ. அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லோல், லக்னோ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா ஆகியோர் பொதுநல மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவற்றைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நீதிமன்ற  விசாரணையின்  தீர்ப்பைத் தான் கடந்த 8/1/2024 அன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.  உச்ச நீதிமன்ற நீதிபதிகள்   பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள இத்தீர்ப்பில்,
'பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை குஜராத் அரசு  விடுதலை செய்தது செல்லாது. குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், விடுதலை செய்யப்பட 'ஜஸ்வந்த்லால் பாய், கோவிந்த் பாய், ஷைலேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, பிபின்சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகியோர் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும்' என்றும் இத்தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

பில்கிஸ் பானோவின் ஜனநாயகப் போராட்டமானது இந்துத்துவத்தை 'எளிய மக்கள் எதிர்த்து நிற்க முடியாது' என்கிற போலித் தோற்றத்தை உடைத்துள்ளது. மாபெரும் அரச ஆதிக்கம், மதவாத மிரட்டல்கள், வாழ்வியல் மீதான அச்சுறுத்தல்கள் அனைத்தையும் எதிர்த்து, இந்திய அரசமைப்பு மீதும், தம்முடைய நீதிக்கான உரிமை மீதும் கொண்ட நம்பிக்கையின் மூலமே இந்த வெற்றியை அவர் அடைந்துள்ளார். குற்றவாளிகளுக்கு இதெல்லாம் போதிய தண்டனை அல்லதான். ஆனால், பெரும்பான்மை மதவாத ஆணவத்தில்,  அரசின் அதிகார அனுகூலத்தில், இந்துத்துவ பாசிசத்தை நிலைநாட்டிவிடலாம் என்கிற நினைப்பில் நீதியின் கரத்தால் மண்ணள்ளிப்  போட்டுள்ளார்  பில்கிஸ் பானோ. அந்தவகையில், பாதுகாத்து, போற்றப் பட வேண்டிய அடையாளமாக திகழ்கிறார் சகோதரி பில்கிஸ் பானோ அவர்கள்.

(புதிய கோடாங்கி- 2024 பிப்ரவரி இதழ்; படம்- வினவு)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...