புதன், 21 பிப்ரவரி, 2024

பௌத்தமும் தமிழும்.



-ஸ்டாலின் தி


மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஒருமலை பொதிகை மலை. பொதிகை என்பது கால்டுவெல் போன்றவர்கள் கூறிய பெயர். அதற்கு முந்தைய கால பெயர் 'பொதியில்' என்பதாகும். இது போதி என்னும் பௌத்தச் சொல்லிலிருந்து வந்ததாகும். அதாவது, போதியில் (போதியர்+இல்) என்றால் போதியர் என்னும் பௌத்த பிக்குகள் தங்குமிடம் என பொருள். இல் என்றால் வசிப்பிடம், தங்குமிடம் என பொருள். இல்லம் என்பதன் வேர்ச் சொல்தான் இல். 

அகத்தியர் என்னும் சைவ முனிவர் பொதிகை மலையில் சிவனிடம் தமிழைக் கற்று வந்து பரப்பினார் என்னும் கதை ஒன்று இங்குண்டு. அந்தக் கதையின் உள்மெய்(உண்மை) வேறாகும். நாட்டின் பல்வேறு இடங்களிலும் பௌத்தர்கள் நடத்திய மொழிப்பட்டறைகளைப் போலவே, போதிய(ர்) மலையிலும் அவலோகிதர் என்னும் மகாயான போதிசத்துவரை தலைமையாகக் கொண்டு மக்களுக்கான மொழியாக தமிழ் வடிவமைக்கப்பட்டது. போதி மலை பௌத்த பள்ளியின் மூத்த பிக்குவான அகத்தியர் அம்மொழியை சமூகத்திடம் போதித்தார். அவலோகிதரிடமிருந்து அகத்தியர் தமிழைக் கற்று வந்ததை புத்தமித்திரர் இயற்றிய வீர சோழியம் கூறுகிறது. 
இவ்வாறு, பௌத்த அடையாளமாக காணப்பட்ட போதிமலையை சீன பௌத்த அறிஞர் யுவான் சுவாங் உள்ளிட்டவர்கள் 'போதலகம், புத்தலகம்' என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பது பொதிகை என்பது பௌத்த அடையாளத்திலிருந்தே வந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது. 

அறம் போதித்த சமயம்‌ பௌத்தம்; அறம் போதிக்க பயன்பட்ட மொழி தமிழ். தமிழ், பௌத்தர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மொழி; தமிழ் பௌத்தத்தால் பண்பட்ட மொழி. 
பௌத்தர்களை நீசர்கள் என்றும் பௌத்த மொழி தமிழை நீசமொழி என்றும் கூறிய இந்து சனாதனிகள், பிறகு, தமிழை அபகறித்து 
 'பக்தி இலக்கியம் ' என்னும் பெயரில் பௌத்த கதைகளை திரித்து, அறமற்ற, உண்மையற்ற, புராணங்களை வேடதாரிகள் உருவாக்கினார்கள். அதன் மூலம், அன்பும் அறமும் இல்லாத சாதிய சமூகத்தை நிறுவினார்கள். தங்களுடைய புராணக் கதைகளை கோயில்களில் 'பாடல்களாக' வைத்துக்கொண்டு, பௌத்த அற இலக்கியங்களை தாங்கியிருந்த சுவடிகளை ஆற்றிலும் தீயிலும் வீசினார்கள். தமிழ்ச் சொற்களின் உள்மெய்யை மறைத்து திரித்தனர் . இப்படியாக, பௌத்த மொழி பண்பாட்டை சிதைத்தல், திரித்தல், களவாடுதல், புறக்கணித்தல் ஆகிய செயல்களைக் கொண்டு இம்மண்ணையும் சமூகத்தையும் ஆக்கிரமித்துள்ள வேஷ பிராமணிய கூட்டத்திடமிருந்து, தமிழின் பூர்வத் தன்மையையும் பூர்வ வரலாற்றையும் மீட்டெடுப்பதுதான் உண்மையான தமிழ்ப்பற்றாகும். 

(பிப்ரவரி21: உலக தாய்மொழி நாள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...