ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

ஜெய்பீம் வந்த வரலாறு.

படம்: Father of Jaibhim L.N.ஹர்தாஸ்.


ஸ்டாலின் தி 


ஜெய்பீம் என்னும் முழக்கம் இந்திய மண்ணில் முக்கியத்தும் பெற்றுவரும் காலம் இது. சேரிகளில் முழங்கப்பட்ட ஜெய்பீம் தற்போது நாடாளுமன்றத்துள்ளும் முழங்கப்படுகிறது. ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான், ஜெய் ஹிந்த் போன்ற இந்து அடிப்படைவாத சொல்லுக்கு நேரடியான எதிர்வினையாக இன்று ஜெய்பீம் எழுந்து நிற்கிறது. மகாராட்டிரா மண்ணில் விதைக்கப்பட்ட ஜெய்பீம் இன்று இந்தியாவின் அனைத்து பிராந்தியங்களிலும் விளைந்து நிற்கிறது. கூடவே ஜெய்பீம் என்னும் சொல்லின் மீதான வன்மமும் திரிபுகளும் தொடர்கின்றன. வன்மத்திற்கான காரணம் வெளிப்படையானது. இந்து சனாதனத்தால் கட்டமைக்கப்படுவதே தேசத்தின் அடையாளங்கள் என்கிற தோற்றத்தை ஜெய்பீம் தகர்க்கிறது. அதனால் சனாதனிக்கு எழும் மனப்பதற்றம் ஜெய்பீமை கண்டிக்கவோ, புறக்கணிக்கவோ, கேலிசெய்யவோ முனைகிறது. இன்னொருபக்கம் பிராந்திய உணர்வுடைய சில தலித் அரசியல் அமைப்புகளாலும், மொழிஅடிப்படையிலான அமைப்புகளாலும் ஜெய்பீம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இவையெல்லாம் ஜெய்பீம் பற்றிய திரிபுகளையும் உருவாக்குகிறது. 

ஜெய்பீம் என்பது பீமா நதிக்கரை கோரேகான் யுத்த வெற்றியின் அடையாளமாக முழங்கப்பட்டு, அதுவே இன்றைக்கு அரசியல் முழக்கமாக வந்திருக்கிறது என்கிற கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். அதன் இன்னொரு கிளைக் கருத்தாக பீமா என்பதே பீமேஸ்வரன் என்னும் சிவன்தான். எனவே, ஜெய்பீம் என்பது சிவனை வழிபடுவதுதான் என்பதும் கூறப்படுகிறது. உண்மை என்ன? இன்றைக்கு அம்பேத்கரியர்களால் முழங்கப்படும் ஜெய்பீம் என்கிற சொல்லின் வரலாறு என்ன? 

1818 இல், பீமாநதி கோரேகான் யுத்தத்தில் பேஷ்வா இந்துக்களை மகார்களை திரட்சியாக கொண்ட ஆங்கிலேயர் படை வென்றதைத் தொடர்ந்து அதன் நினைவு தினமான ஜனவரி 1 ஆம் தேதி கோரேகானில் கூடும் மகார்கள் ஜெய்பீம் என்று முழங்கியதாக கூறப்படுகிறது. முழங்கியிருக்கலாம். ஆனால், அதுதான் இன்றைய ஜெய்பீம் என்கிற சொல் என்று கூறுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், கோரேகான் நினைவுநாளைத் தவிர வேறெந்த நாளிலும் பரவலாக அந்த முழக்கம் முழங்கப்பட்டதாக நமக்கு எந்த தகவலும் இல்லை. இதன் கிளைக்கருத்தான பீமேஸ்வரன் என்பையும் கூட நாம் இந்துக்கதையாடலாக பார்க்க முடியாது; திரிபாகத்தான் பார்க்க முடியும். மகாபாரதம் என்னும் கதையில் வரும் பீமன்(தமிழில்-வீமன்) பாண்டுவின் மகன். மகாபாரதமே பௌத்த கூறுகளை கலந்து, திரித்த பெருங்கதைதான். பாண்டு என்பது புத்தரையே குறிக்கும் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். பீமன் என்றால் வலிமையானவர் என்று அர்த்தம். பாண்டுவின் மகன் என்கிற புனைவு புத்தரின் வாரிசைக் குறிக்கும். புத்தரோ தமக்கு வாரிசாக தம்மத்தையேக் குறிப்பிட்டு சென்றுள்ளார். அதன்படி பார்த்தால் தம்மமே வலிமையான பீமன். தம்மத்தின் ஈஸ்வரனே பீமேஸ்வரன். அதாவது புத்தரே பீமேஸ்வரன். ஜெய்பீம் என்பது பீமேஸ்வரனை வழிபடுவதுதான் எனில், அது புத்தரை வழிபடுவதிலிருந்து வந்ததுதான். எனவே, இதன்படியும் ஜெய்பீம் என்பது இந்துச்சொல்லாக இருக்கமுடியாது. கோரேகானில் யுத்தத்திற்கு முன்பேவும் பின்பும் முழங்கப்பட்டிருந்தாலும் ஜெய்பீம் என்பது பௌத்த மரபுச்சொல்தான் என்பதே சரியானதாக இருக்க முடியும். அதேவேளை, இன்றைய ஜெய்பீம் முழக்கம் அன்றைய பீமாநதி முழக்கமா என்று கேட்டால் இல்லை என்பதே சரியான பதில். அப்படியானால் ஜெய்பீம் என்கிற இன்றைய முழக்கம் எப்படி வழக்கில் வந்தது? வரலாறு என்ன? 

ஜெய்பீம் வரலாற்றை அறிய வேண்டுமானால் அண்ணலின் காலத்தில் மகராட்டியத்தில் இயங்கிய, பன்முக ஆற்றல் கொண்ட ஓர் இளம் தலைவரை நாம் அறிந்தாக வேண்டும். 

மகாராட்டிர மாநிலம், நாக்பூர் அருகேயுள்ள காம்டி நகரில் உள்ள ஓர் மகார் குடும்பத்தில், இலட்சுமணராவ் நக்ரலே என்னும் ரயில்வே ஊழியருக்கு 1904 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம்தேதி மகனாக பிறந்தவர் திரு.எல்.என்.ஹர்தாஸ். மெட்ரிக்குலேஷன் கல்வி பெற்ற ஹர்தாஸ் அவர்கள், அதைத்தொடர்ந்து சமஸ்கிருதத்தை பயின்றார். அவரோடு சமஸ்கிருதம் பயின்றவர் ஆரிய சமாஜ் இயக்கத்தைச் சார்ந்த சுவாமி ப்ரம்மானந்தா ஆவார். இளமையிலேயே ஹர்தாஸ் துடிப்பான, அறிவுடைய ஆளுமையாக வளர்ந்தார். 16 வயதில் திருமணம் செய்துகொண்ட அவர் அதேக் காலக்கட்டத்தில் சமூகத்தின் மீதான தாக்கத்தையும் பெற்றார். மகார்களிடம் இளம் செயற்பாட்டாளராக திகழ்ந்தார். தம்முடைய 17 வயதில் மகாராத்தா என்னும் பத்திரிக்கையை துவக்கி, சமூகக் கொடுமைகளை அதில் கண்டித்தார்; சமூக விழிப்புணர்வை விதைத்தார். தம்முடைய 18 ஆவது வயதில் 'மகார் சமாஜ் சங்கம்' என்னும் அமைப்பைத் துவக்கினார். கூடவே, மகார் இளைஞர்களை கொண்ட பாதுகாப்பு படை ஒன்றையும் நிறுவி, அப்படைக்கு 'மகார் சமாஜ் பதாக்' என்று பெயர் சூட்டினார். அதேக் காலக் கட்டத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்களின் மீதான சுரண்டலை எதிர்த்து தொழிலாளர்களை ஒருங்கிணைத்து பணியாற்றினார். இரவு பள்ளியை துவங்கிய ஹர்தாஸ் பெண்களுக்கான விழிப்புணர்வு மையமாக 'மகிளா ஆஷ்ரமம்' ஒன்றையும் நிறுவினார். சமூகத்திற்கு அறிவுப்புகட்டும் நோக்கில் சொக்கமேளர் பெயரில் காம்டி பகுதில் நூலகத்தையும் ஆரம்பித்தார்.  

அன்றைய பட்டியலினங்களுக்கிடையே நிலவிய உட்பிரிவு வாதங்களை ஹர்தார் கடுமையாக எதிர்த்தார், சாடினார். மகார் சமூகத்தில் பிறந்த ஆன்மீக ஞானியான சொக்கமேளரின் நினைவு நாட்களில், பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து சமபந்தி விருந்துகளை நடத்தினார். 1927 இல் அன்றைய மகாராட்டியத்தின் முக்கிய தலித் தலைவரான கிஸான் பாஜுஜி பான்பட் அவர்களின் தலைமையில் ராம்டெக் நகரில் கூட்டம் நடத்தி, ராம்டெக்கில் உள்ள ராமன் கோயிலின் சிலைகளை வணங்காதீர்கள், அந்தக் கோயிலின் அழுக்கு குளத்தில் மூழ்காதீர்கள் என்று மகார்களிடம் முழங்கினார் ஹர்தாஸ்.
 
சைமன் ஆணையத்திடம் பட்டியலின மக்களுக்கான கோரிக்கைகளை அண்ணல் அம்பேத்கர் அளித்த 1928 ஆம் ஆண்டில்தான் அண்ணலை முதன்முதலாக சந்தித்தார் ஹர்தாஸ். அப்போது ஹர்தாஸுக்கு வயது 24. ஆனால், நாக்பூர் பகுதியின் ஓர் தலைவராக ஆகிக்கொண்டிருந்தார். அண்ணலின் சந்திப்புக்கு பிறகு, அண்ணலின் இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டார்.

இரண்டாவது வட்ட மேசை மாநாட்டின் போது, காந்தியை முன்னிறுத்தி அண்ணலை பின்னுக்குத் தள்ளும் வேலையில் காந்தியும் காங்கிரசும் முயன்றுகொண்டிருந்தது. அப்போது இங்கிலாந்து பிரதமரான ராம்சே மெக்டொனால்ட் அவர்களுக்கு, " டாக்டர் அம்பேத்கரே தீண்டப்படாத மக்களின் பிரதிநிதி ஆவார்; காந்தி தீண்டப்படாதவர்களின் பிரதிநிதி அல்லர்." என்று ஹர்தாஸ் தந்தி அனுப்பினார். அதைத்தொடர்ந்து அதேக் கருத்தை முன்வைத்து நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அன்றைய தலித் தலைவர்களிடமிருந்தும், சிந்தனையாளர்களிடமிருந்தும் இங்கிலாந்து பிரதமருக்கு 32 தந்திகள் போய் சேர்ந்தன.

1930 ஆகஸ்ட் 30 ஆம்தேதி நாக்பூரில் நடைபெற்ற, அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சம்மேளனத்தின் மாநாட்டின் முக்கிய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஹர்தாஸ், 1932 மே 7 ஆம்தேதி காம்டியில் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக சிறப்புற செயல்பட்டார். இந்த மாநாட்டில் ஹர்தாஸ் சம்மேளனத்தின் தேசிய செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு உயர்ந்தார். இதைத் தொடர்ந்து 1936 ஆகஸ்ட் 15 இல் அண்ணலால் உருவாக்கப்பட் தொழிலாளர் விடுதலைக் கட்சியின் செயலாளராக பொறுப்பளிக்கப்பட்டார். அதற்கும் அடுத்த ஆண்டே நடந்த சட்டமன்ற தேர்தலில் நாக்பூர் காம்டி தொகுதியிலிருந்து உறுப்பினராக வெற்றிபெற்றார், 34 வயதுடைய ஹர்தாஸ் அவர்கள். இளமையிலேயே பத்திரிக்கையாளராக, இயக்கவாதியாக, கல்வியாளராக, பெண்ணியவாதியா, தலைவராக, சட்ட மன்ற உறுப்பினராக வாழ்ந்த ஹர்தாஸ் அவர்கள் தம்முடைய 35 ஆம் வயதிலேயே 1939 ஜனவரி 12 ஆம்தேதி காசநோயின் காரணமாக அகாலமாக உயிரிழந்தார். அவருடைய இந்த வாழ்க்கைப் பயணத்தை ஒரு வால்நட்சத்திரம் ஒளிர்ந்து, பாய்ந்து, சட்டென மாயமாகும் நிகழ்வோடு இணைத்து நினைவு கூறுவார் வசந்த மூன் அவர்கள்.

போற்றுதலுக்குரிய தலைவர் ஹர்தாஸ் அவர்களை மக்கள் பலவாறு புகழ்கிறார்கள். குறிப்பாக 'ஃபாதர் ஆஃப் ஜெய்பீம்' என்று அவரை போற்றிக் கூறுவார்கள். காரணம், அவர்தான் இன்றைக்கு நாம் முழங்கும் ஜெய்பீமை அளித்தவர். 

இந்துக்கள் தங்களுக்குள் வணக்கம் செய்ய ஜெய்ராம் இருக்கிறது. இஸ்லாமியர்கள் தங்களுக்குள் வணக்கம் செய்ய சலாம் அலைக்கும் இருக்கிறது. ஆனால், பரந்துபட்ட அளவில் வாழும் சேரி மக்களுக்கு ஓர் வணக்கச் சொல் கூட இல்லையே என்கிற ஆதங்கம் அவருக்கு இருந்துவந்தது. ஒருவழியாக அவர் ஜெய்பீம் என்பதை உறுதிபடுத்தினார். அண்ணல் அம்பேத்கரின் பீமாராவ் என்னும் சொல்லிலிருந்தே அதை எடுத்துக்கொண்டார். 1935 இல் பட்டியலின தொழிலாளர்களிடம் ஜெய்பீம் என்கிற முழக்கத்தை அவர் விதைத்தார். ஒவ்வொருவரும் சந்திக்கும் போது இனி ஜெய்பீம் சொல்ல வேண்டுமென்று வலியுறுத்தி, பழக்கப்படுத்தினார். அப்படியே அது பரவலானது. புதிய சொல்லொன்றின் மூலமாக தம் தலைவரையும் அவர் கொள்கையையும் போற்றி ஒருவருக்கொருவர் வணங்கிக்கொள்ளும் முறை மக்களிடையே புதிய உற்சாகத்தைக் கொடுத்தது, கம்பீரத்தைக் கொடுத்தது. விரைவாகவே வணக்கத்திற்கான அச்சொல் அரசியல் முழக்கமாக உயர்ந்தது. எங்கெல்லாம் அண்ணலின் கொள்கையில் மக்கள் திரண்டார்களோ அங்கெல்லாம் ஜெய்பீம் என்பதே பொது மொழியாக ஓங்கியது. இன்றைக்கு அதுவே இந்தியாவின் எல்லா திசைகளிலும் விடுதலை அரசியலின் அடிநாதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

ஜெய்பீம்! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...