ஸ்டாலின் தி
1
எங்கள் ஊர் டேனிஷ் மிஷன் பள்ளிதான் இறையூர், பெண்ணாடம் அம்பேத்கர் நகர் ஆகியபகுதியினருக்கும் அப்போது பள்ளியாக இருந்தது. இதில் பணியாற்றிய ஆசிரியர்கள் அனைவருமே 'பறைக் கிறுத்துவர்' என்பதால் அதுவொரு ஆதிதிராவிடர் நலப்பள்ளியாகவே இருந்தது. அதன் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உறவினர்களாக நடந்துகொள்வார்கள். கண்டிப்பதிலும் கண்காணிப்பதிலும் அக்கறை இருக்கும். நான் பள்ளியில் சேர்ந்தபோது ஒன்றாம் வகுப்பு டீச்சராக இருந்தவர் ரோசி டீச்சர். கதைகளைச் சொல்லியே மாணவர்களை கட்டிப்போடுவார். சேர்ந்த புதிதில் பள்ளிக்கு செல்லவே பிடிக்காத (என்னைப்போன்ற!) மாணவர்களை கதைச் சொல்லியே வரவழைத்து விடுவார். எல்லோரிடமும் பாசமாகவே பழகுவார். அவரைப் பிடிக்காத மாணவரென்று அப்போது யாருமில்லை. அவர் பெண்ணாடத்திலிருந்து வருவார். அவர் வரும் 'ஆசியா பஸ்' பள்ளிக்கு முன் நிறுத்தி அவரை இறக்கிவிட்டுச் செல்லும். ஒரு கூட்டமே பஸ்ஸை நோக்கி ஓடி அவரது பைகளைப் பற்றிக் கொண்டு அவரை அழைத்துவரும். எல்லா நாட்களிலும் இப்படித்தான் அவரின் வருகை இருக்கும்.அவர் வந்ததும் ஓடி வரும் அந்த கருப்பு நிற நாய் ஒன்று. அந்த நாய் அவரது வகுப்புக்கு வெளியேயே கிடக்கும். மதியம் உணவு நேரத்தில் மர நிழல்களில் உட்கார்ந்து சாப்பிடும் எங்களிடம் 'ஒரு ரவுண்ட்' வரும். சோற்று உருண்டையை தூக்கி மேலே போடுவோம். அவ்வளவுக் கச்சிதமாக அதைக் 'காட்ச்' பிடிக்கும். திடீரென டீச்சர் மாறுதலாகிப் போனார். எல்லோருக்கும் வெறுமையாகவே இருந்தது. மதிய நேரத்தில் வந்த அந்த நாய்க்கு நாங்கள் சோறு தூக்கிப்போட்டபோது நாய் கண்டுகொள்ளவே இல்லை. சோற்றுருண்டை தரையில் விழுந்து சிதறியது. தினமும், காலையில் பள்ளிக்கு எதிரே நிற்காமல் செல்லும் அந்த ஆசியா பஸ்ஸை துரத்திக்கொண்டே ஓடும் அந்த நாய். நாங்கள் அந்த நாயையும் ஆசியா பஸ்ஸையும் வெறித்துப் பார்த்தபடியே நிற்போம்.
*
2
இரண்டாம் வகுப்புக்கு வந்தபோது 'குண்டு டீச்சர்'. பெண்ணாடம் அம்பேத்கர் நகரைச் சார்ந்தவர். எங்களுக்கு உறவினரும் கூட. அருள்மணி ஜோதிபாய் என்பது அவரது பெயர். ஆனால் ரெண்டாப்பு டீச்சர் என வெளிப்படையாகவும். குண்டு டீச்சர் என கமுக்கமாகவும் குறிப்பிட்டே வந்ததால் அவரது பெயரே மறந்து போனது. என்னை அழைத்து குடும்பத்தைப்பற்றி அடிக்கடி விசாரிப்பார். 'ஒழுங்கா படி. ஒப்பன மாதிரி சமுதாயம் வெங்காயமுன்னு வீணாப்போயிடாத' என்ற சொல்லை அவரிடம் நான் வாங்காத நாளே இல்லை. என்னுடைய அம்மாவிடம் ஒருநாள் 'அந்த குண்டம்மா திட்டிக்கிட்டே இருக்கு'ன்னு சொல்லிவைத்தேன். தன்னுடைய மகளை தையல் கற்றுக்கொள்ள என் அம்மாவிடம் விட்டார் டீச்சர். அப்போது நான் சொன்னதை அப்படியே என் அம்மாவும் சொல்லிவிட அந்த வாரமுழுக்க நான் பள்ளிக்கே செல்லவில்லை.
ஆனால் மிகுந்த பாசமும் பரிவுமிக்கவர் அருள்மணி டீச்சர். நான் எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு(அது அப்போது நடுநிலைப் பள்ளியாக இருந்தது.) வெளியேறும் போதும் உன் அப்பா பாதையில் போகாதே என்று சொன்னார். நான் எதுவும் பேசாமல் நிற்க, வாயத் தொறக்கிறானா பாரு என தலையில் கொட்டி சிரித்தார்.
ஓரிரு ஆண்டுகள் கழித்து பெண்ணாடத்தில் விடுதலைச்சிறுத்தை இயக்க போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த போது, சரியாக அவரிடம் சிக்கினேன். பசைக் கையாலேயே வணக்கம் வைத்த என்னைப் பார்த்து 'நீ எங்க உருப்பட போற' என்று சொல்லிவிட்டுப்போனார். அதன் பிறகு நான் அவரைச் சந்திக்கவே இல்லை. அண்மையில் என் அப்பாவிடம் என்னை விசாரித்திருக்கிறார். பக்கத்து ஊர்தான். உறவினர்தான். சென்று பார்க்கலாம்தான். ஆனால் 'உருப்படாதவனை' டீச்சரிடம் காட்ட மனமில்லையே!🙂
*
3
"மூனாப்பு சார்" என எங்களால் அழைக்கப்பட்டவர் பால் பிச்சை. கமலஹாசன்னும் சொல்லுவோம். அவர் கலர் அப்படி. எங்கள் குடும்பத்துடன் நெருக்கமான குடும்பம் அவருடையது. பெண்ணாடம் அருகில் உள்ள ஆதமங்களம்தான் ஊர். பால் பிச்சைக்குடும்பம் மட்டுமல்ல, இப்பகுதியின் ALC பிரிவுக் குடும்பங்கள் பலவும் எங்களுக்கு நெருக்கமானவையே. தாத்தா வேதமாணிக்கம் அதற்கு முக்கியக்காரணம். என் அப்பாவின் தாய்மாமனான வேதமாணிக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். சுயேச்சையாக வென்றவர். ALC பிரிவு கிறித்தவர்களிடம் இவருக்கும் இவரது குடும்பத்திற்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. வேதமாணிக்கத்தின் தங்கையான ரஞ்சிதம் தான் என் பாட்டி, அதாவது அப்பாவின் அம்மா. அதனால் இப்பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு எங்கள் குடும்பத்தின் நட்பு இருந்தது.
பால்பிச்சை சார் என் தாத்தாவிடம் திண்ணையில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருப்பார். அந்தசமயத்தில் அந்த தெருவில் ஒருத்தனும் விளையாடமாட்டோம். பால்பிச்சை அவ்வளவுக் கண்டிப்பானவர். பாடம் நடத்துவதிலும் சிறந்தவர். ஆனால், கட்டுப்பாடு வேண்டுமென்பதில் அதிக கவனமெடுத்துக்கொள்வார். நாங்கள் அப்போது பள்ளியின் பின்னால் உள்ள மதுரைவீரன் கோயிலில் பொய்க்கால் குதிரை சண்டை விளையாடுவோம். ஒருவரின் முதுகில் இன்னொருவர் ஏறிக்கொண்டு, இருக்குழுக்களாக பிரிந்து சண்டையிடவேண்டும். கையால் அடிக்கக்கூடாது. உதைமட்டும்தான். உதைத்து கீழே தள்ளவேண்டும். உதை முதுகிலும் விழும் முகத்திலும் விழும். வாய், மூக்கில் ரத்தம் கூட வழியநேரிடும். ஆனால் எல்லாவற்றையும் தாங்கி நிற்கவேண்டும். கீழே விழாத அணி வென்றது.
இந்த விளையாட்டை விளையாடும் போது பால்பிச்சை சாரிடம் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். அவர் கையில் இருக்கும் குச்சி நார் நாராக ஆகும் வரை அடி நிற்காது. என்னை பலமுறை இந்த விளையாட்டில் பார்த்திருக்கிறார். ஆனால் அடித்ததே இல்லை. 'உன்ன அப்பாக்கிட்ட சொல்றேன்' என்பதுதான் அவரின் மிரட்டலாக இருக்கும். எங்களை கண்டிப்பதாக காட்டிக்கொண்டாலும், 'நம்ம பசங்க படிக்கனும்டா' என மென்மையாக, அக்கறையாக கூறியும் கேட்டிருக்கிறோம். அவரது மனைவி ஷீலா டீச்சரும் எங்கள் பள்ளியில் பணிசெய்தார். பள்ளிக்கு வந்த புதிதில் விருதாச்சலத்தில் இருந்த என் அத்தை விமலா டீச்சருக்கும் இவரதுக் குடும்பத்திற்கும் உள்ள நெருக்கத்தைக் கூறி 'நீ எங்க சொந்தம்தான்' என்றார் ஷீலா டீச்சர். ஷீலா டீச்சர் பால்பிச்சை சாருக்கு நேர் எதிரானவர். டீச்சர் சத்தமாக பேசியும், கோபப்பட்டும் நாங்கள் பார்த்ததே இல்லை. எதோ ஒரு சமயம் தலைமையாசிரியர் ஷீலா டீச்சரை முறைத்துவிட இவர் அழுதேவிட்டார். நாங்கள் அவரைத் தேற்றினோம். அவ்வளவு மென்மையானவர். பெண்பிள்ளைகள் அவரை செல்லப்பிள்ளைகளாக பார்த்துக்கொள்ளுவார்கள். அவ்வளவு பாசமாக டீச்சரும் இருப்பார். சிலவருடங்களுக்கு முன் ஷீலா டீச்சரின் கணவரான பால்பிச்சை சாருக்கு சர்க்கரை நோய் பிரச்சனையால் இரண்டு கால்களும் எடுத்துவிட்டார்கள் என்று அறிந்தபோது பாரமாக இருந்தது. அவர் வேகமாக நடந்ததும், சைக்கிளில் பள்ளிக்கு வந்ததும் கண்முன்னே வந்து போயின. கடந்த மாதம் தம்பி ஒருவன் வந்து, 'பால் பிச்சை இறந்துட்டாராம், நாளைஞ்சு நாளாகுதாம்' என்றான். பொய்க்கால் குதிரைபோலவே நொண்டியடித்து விழுந்தது மனது.
*
4
கலாவதி டீச்சர் எங்கள் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றியவர். பெண்ணாடம் அம்பேத்கர் நகரைச் சார்ந்தவர். மாணவர்களை தம் பிள்ளைகளாகவே பார்க்ககூடியவர். மாணவர்களை அருகில் உட்காரவைத்து அவரவர் குடும்பநிலைகளை அக்கறையுடன் கேட்பார். வீட்டில் நடக்கும் அப்பா-அம்மா சண்டை முதற்கொண்டு அவரிடம் பேசிக்கொண்டிருப்போம்.
ப்ரேயரில் 'அழைக்கிறார்....அழைக்கிறார்' என்று உரக்கப்பாடும் அவரைப் பின்தொடர்ந்து நாங்கள் பாடுவோம். அவருடைய மூன்று பிள்ளைகளும் எங்களோடு சகோதரமாகவே இருப்பார்கள். அவர்களில் மூன்றாவது பிள்ளையான ஜூலி அக்கா எங்கள் பள்ளியில்தான் படித்தார். போலியோவால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு உதவுவதற்காக நாங்கள் ஒரு பட்டாளமே இருந்தோம். அவ்வளவு அன்பானவர். அவருடைய பேக்கிலிருந்து பிஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு நாங்கள் ஓடுவோம். 'டேய் திருடனுங்களா' என சிரித்தபடியே கத்துவார் ஜூலி அக்கா, அதை சிரித்துக்கொண்டே பார்ப்பார் எங்கள் கலாவதி டீச்சர். என்னை 'வள்ளுவனண்ணன் மவனே' என்றே அழைப்பார். அப்பாவையோ அம்மாவையோ எங்கேனும் பார்த்தால் 'ஸ்டாலின் நல்லாபடிக்கிறான்'என்பாராம்.
ஒரு முறை நான் அம்மாவிடம் கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் பள்ளி வந்துவிட்டேன். சாப்பாட்டுடன் அம்மா பள்ளிக்கு வந்துவிட்டார். டீச்சரிடம் பஞ்சாயத்து.'இந்த வயசுல உனக்கென்னடா இவ்வளவுக் கோவம்' என்று டீச்சர் சிரித்தார். சரி சாப்பிடு என்று அவர் சொன்னபோதும் நான் மசியவில்லை. நீங்க போங்க என என் அம்மாவை அனுப்பிவிட்டு இரண்டு மாணவிகளை அழைத்து தன் வீட்டு சாவியைக் கொடுத்து அங்கேயிருக்கும் சாப்பாட்டை எடுத்துவரச்சொல்லி என்னை சாப்பிடவைத்தார். அந்த வெண்டைக்காய் குழம்புச்சோறு இன்னமும் நிறைந்திருக்கிறது மனதில்.
*
5
அறிவியல் டீச்சராக எங்கள் பள்ளிக்கு வந்தவர் ஜான்சி டீச்சர். அறிவியலில் ஆர்வம் வந்ததற்கு ஜான்சி டீச்சர் முக்கியக்காரணம். ரெக்கார்ட் நோட்டென்பதையெல்லாம் இவர்தான் எங்களுக்கு அறிமுகம் செய்தார். மதிய நேரத்தில் மாணவர்களுடன் இணைந்து உணவு உண்ணுவார். என்னை 'ஸ்டான்லி' என்றுதான் அழைப்பார். ஏன் டீச்சர் எனக்கேட்டால் அப்படித்தாண்டா வருது, விடு என்பார்.
ஆசிரியர்களின் விடுமுறைக்காலத்திலும் பயிற்சிக்காகவும் அவ்வப்போது புதியவர்கள் வருவார்கள். நெய்வேலியிலிருந்து ஷீலா டீச்சர், நெல்லிக்குப்பம் ரவிசார், ராபர்ட் சார், சாமுவேல் சார், ஸ்டீபன் ராஜ் சார், சம்பூர்ணம் சார் என அப்படி வந்தவர்களும் எங்களை வளர்த்தெடுத்தார்கள். இவர்களில் ஸ்டீபன்ராஜ் சாரை நான் உள்ளிட்ட பலரும் அண்ணன் என்றே அழைப்போம்.அவரும் எங்களுடன் ஓடிப்பிடித்தெல்லாம் விளையாடுவார்.
எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தவர்கள் எங்களுக்கு வந்த தலைமையாசிரியர் டேனியல் ஜேம்ஸ் அவர்களும் அவருடைய மனைவி மணி டீச்சர் அவர்களும். நெல்லிக்குப்பத்தைச் சார்ந்தவர்கள். மணி டீச்சர் மூன்றாம் வகுப்பு ஆசிரியையாகவும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் வகுப்புகளுக்கு (6-8) வரலாறு ஆசிரியையாகவும் இருந்தார். வரலாறு பாடத்தில் ஆர்வமுள்ள நான் அவருக்கு இயல்பாகவே பிடித்துவிட்ட மாணவனாகிவிட்டேன். ஒருமுறை, அன்றைய தமிழக அமைச்சர்களை சொல்லச் சொல்லி மாணவர்களைக் கேட்டார் மணி டீச்சர். முதல்வர் பெயரை மட்டும் எல்லோரும் சொல்ல நான் அனைத்து அமைச்சர்களின் பெயரையும் அவர்களின் துறைகளையும் கடகடவெனச் சொல்லியதை மற்ற ஆசிரியர்களிடம் கூறி பாராட்டுவார். அப்போதுதான் 'ஹவாலா மோசடி' என்னும் பிரச்சனை பரபரப்பாக இருந்தது. அதைப்பற்றி ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்த போது நானும் கலந்துகொள்ள 'இதெல்லாம் எப்படிடா உனக்கு தெரியுது' என்று தட்டிக்கொடுத்தார் (அதெல்லாம் வீட்டில் அப்பா யாரிடாமவது பேசும் போது கேட்டதுதன்!).
மணி டீச்சர் போலவே அவரது கணவரும் தலைமையாசிரியருமான டேனியல் சாரும் மிக அன்பானவர். அவர் என்னை 'சாக்கிரடீஸ்' என அவ்வப்போது கூப்பிடுவார். அது ஏன் என நானும் கேட்டதில்லை. அப்பாவுக்கு நண்பராக இருந்த டேனியல் சார் ஊரில் பலருக்கும் நண்பராகவே நடந்துகொண்டார். பாடங்களை அவர் நடத்தும்போது நகைச்சுவைகளையும் பழைய பாடல்களையும் துணைக்கு வைத்துக்கொள்வார். அவர்கள் வாடகைக்கு இருந்த வீடும் எங்கள் வீட்டுக்கருகில்தான் இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அங்குதான் டிவி பார்க்க செல்லுவோம். புதிய படங்களை வீடியோவில் போடும்போது வரச்சொல்லுவார்கள். சில ஆண்டுகளுக்கும் முன் டேனியல் சாரையும் மணி டீச்சரையும் கடலூரில் ஒரு தனியார் மருத்துவமணையில் சந்தித்ததாக என் சித்தி பையன் சொன்னான். பிறகு டேனியல் சார் இறந்துவிட்டார் என்றும் தகவல் கிடைத்தது. 'படிக்கலைன்னா உங்க அப்பா அம்மா மாதிரி கரும்புவெட்டத்தான் போகனும்' என ப்ரேயர்களில் அடிக்கடிச் சொல்லுவார் டேனியல் சார். அதை அவர் எங்கள் அப்பா அம்மா இடத்திலிருந்துதான் சொன்னார் என்பதை தாமதமாகத்தான் புரிந்துகொண்டோம்.
*
6
எனக்கு நெருக்கமாக இருந்த ஆசிரியர்களின் இறப்பில் நான் பங்கேற்றதேயில்லை. புற்றுநோய் தாக்கி கலாவதி டீச்சர் இறந்தார்; உடல் நலக்குறைவால் டேனியல் சார் இறந்தார்; அதேபோலவே பால்பிச்சை சாரும் இறந்தார். இவர்களுடைய இறப்புகளெப்போதும் தாமதமாகவே எனக்குத் தெரியவந்தது. ஆனால் ஒரு ஆசிரியரின் மரணத்தின் கொடியத்துவக்கத்தை கண்முன்னே கண்டேன்.
எட்டாம் வகுப்புவரை உள்ளூர் டேனிஷ் மிஷனில் படித்த நான், பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன். பள்ளியில் சேர்க்க அப்பாவெல்லாம் வரவில்லை. எங்கள் வீட்டில் தங்கியிருந்த அண்ணன் பிலிப்குமாரை உடன் அனுப்பினார் அப்பா. தற்போது விசிக வின் கடலூர் மாவட்ட செயலாளர்(மேற்கு) தயா தமிழன்பன் தான் அன்று பிலிப்குமார். அங்கு பள்ளியில் என்னைச் சேர்த்தவர்கள் ஆசிரியர்கள் தங்க.வீரப்பன் மற்றும் பாரி அவர்கள்தான்.
பாரி ஆசிரியர் என்னுடைய சித்தியின் கணவர், உள்ளூர்தான். தங்க.வீரப்பன் பெண்ணாடம் சோழன் நகரைச் சார்ந்தவர். இருவரும் பள்ளியின் தலித் பிரதிநிதிகள் போலசெயல் பட்டவர்கள். தலித் மாணவர்கள் இவர்களைத்தான் அணுகுவார்கள். அந்தளவிற்கு ஈடுபாடுள்ளவர்கள். வீரப்பன் சார் எனக்கு சிறுப்பிள்ளையிலிருந்தே நல்ல பழக்கம். அப்பா RYL(மக்கள் யுத்தக் குழு)யில் இருந்தபோதே வீட்டுக்குவந்தவர். சமூக பிரச்சனைகளில் முன்னிற்பவராகவே வீரப்பன் சார் இருந்தார். விசி இயக்கத்தின் வளர்ச்சியில் அப்பாவுக்கு துணையாக இருந்தவர்களில் வீரப்பன் சாரும் முக்கியமானவர். எங்கள் குடும்பத்தின் மீது எப்போதும் அக்கறையானவரான வீரப்பன் சார் மோட்டார் சைக்கிள் வாங்கியபோது அதுவரை அவர் பயன்படுத்திய சைக்கிளை எனக்கு கொடுத்தார். சில நாட்களில் ஒரு பொதுக்கூட்டத்துக்குப் போகவேண்டுமென அப்பா அந்த சைக்கிளை விற்றுவிட்டார் (அந்த சைக்கிளை விற்றுவந்து பணம் கொடுத்தவர் பெண்ணாடம் சோழன் நகரைச் சார்ந்த அண்ணன் ந.இராமு அவர்கள். 2001 இல் இவர் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.) அப்பா சிறையில் ஓராண்டுக்குமேல் இருந்தபோது அவர் வரும் வரை வீட்டுக்கு மாதாமாதம் வந்து உதவினார்கள் வீரப்பன் சாரும் அவருடன் வரும் வீரராகவன் ஆசிரியரும் (வீரராகவன் திருமாவளவன் அவர்களின் மாமா மகன்.).
என்னுடைய தமிழாசிரியரான சுந்தரம் அய்யா அவர்களும், உறவினர்தான். இவர் பாடம் நடத்துகிறாரா பசங்ககூட அரட்டை அடிக்கிறாரா என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருக்கும் இவரது வகுப்பு. அவ்வளவு ஜாலியானவர். இப்போதும் எங்கேனும் பார்த்தால் டக்கென கலாய்த்துவிடுவார். நரசிங்கமங்களம் பெருமாள் அய்யா எனக்கு பாட ஆசிரியராக இல்லையானாலும் பாசமாக விசாரித்துக்கொண்டே இருப்பார். விலங்கியல் ஆசிரியர் கிளிமங்களம் இளாங்கோவன் சாரும் தாவரவியல் செல்வராஜ் சாரும் உயிரியலை உயிரிலேயே கரைத்துவிட்டவர்கள். ஆங்கில ஆசிரியர் சுப்பிரமணியன், தமிழாசிரியர் தங்கசாமி அய்யா, வேதியியல் ஆசிரியர் ராஜசேகரன் ஆகியோரும் என்மீதும் அப்பாமீதும் பாசமான விசாரிப்புகளை நடத்திக்கொண்டே இருப்பார்கள்.
தலைமையாசிரியர் பத்ரு அவர்கள் குறித்து நிறையப்பேசலாம். அப்பா சிறையிலிருந்த போது, "ஜாமின் கிடைச்சுதா" என அடிக்கடி விசாரிப்பார். இந்தப்பள்ளியில் என்னை மிகவும் பாதித்தவர்தான் என் இயற்பியல் ஆசிரியர் ஜெய்சங்கர். மாற்றுத்திறனாளியான அவருக்கு ஒரு கை சிறுத்து காணப்படும். ஆனால், ஆள் சபாரிகோட் சூட்டில் கம்பீரமாக இருப்பார். அவரை அந்த உடையில்தான் வெளியில் பார்க்கமுடியும்.
தமிழ்நாடு விடுதலைப்படை தமிழரசனின் முக்கியத் தளமான வல்லம் கிராமத்தைச்சார்ந்தவர் ஜெய்சங்கர். அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் அப்பாவிடம் வந்து மார்க்ஸியத்தைக் கற்றதாக ஜெய்சங்கர் சார் என்னிடம் சொல்லியிருக்கிறார். நான் அப்போது குழந்தையாக இருந்ததையும் இரவில் தோட்டத்தில் வீதி நாடகங்களுக்கு ஒத்திகை நடக்கும் போது அம்மா உப்புமா செய்துகொடுத்ததையும் நினைவுகூர்வார். பெண்ணாடம் பள்ளிக்கு அவர் வந்தபிறகு மீண்டும் தோழமை தொடர்ந்தது. வன்னியரான ஜெய்சங்கர் சார் வகுப்பில் 'தலித்துகள்தான் தலைமை தாங்கனும்' என்று பேசுவார். வன்னிய மாணவர்களுக்கு அதனாலேயே அவரைப்பிடிக்காமல் போனது. அப்பா சிறைக்கு சென்றபிறகு எங்களுக்குத் துணையாக இருந்தவர்களில் ஜெய்சங்கர் சாரும் ஒருவர். ஒருமுறை நான் வகுப்பில் அண்ணலின் படம்போட்ட சிறு நூலொன்றை வைத்திருப்பதைப் பார்த்த அவர், 'நிறைய படிப்பியா?' என்றார். நான் புன்னகைக்க, 'படி..படி..' என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.
ஆனால் அவர் தமிழ் தேசியத்தில் உறுதியாக இருந்தார். தலித் தலைமையில் தமிழ்தேசியம் வேண்டும் என்பார். அவரிடம் துப்பாக்கி இருந்ததாக ஒரு செய்தி உண்டு. அவர் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அது தென்படுகிறதா என நோட்டமிடுவேன். அவரை காவல்துறை ஆசிரியராகப் பார்க்கவில்லை. அவரும் ஆசிரியராக மட்டும் இருக்கவில்லை. தலைமறைவு தமிழ்தேசியர்களுடன் அவர் தொடர்பில் இருந்தார். அந்த சமயத்தில் அத்தகையவர்கள் தங்களுக்குள் வெட்டி சாய்த்துக் கொண்டனர். இவர் ஒரு தரப்புக்கு ஆதரவாக இருந்தார். அவருக்கு எப்போதுவேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்பதை அவர் அறிந்திருந்ததாகவே தெரிந்தது.
ஒரு நாள் மதியம் திடீரென மாணவர்கள் கூச்சலுடன் ஒரு திசையில் ஓடினார்கள். நாங்கள் வகுப்பிலிருது பார்த்து ஓடினோம். ராஜா தியேட்டர் எதிரில் கும்பலாக இருந்தது. ஏதோ விபத்துதான் என ஓடிப்போய் கூட்டத்தை விலக்கி நுழைந்த போது அங்கே வெட்டுப்பட்டு உட்கார்ந்திருந்தார் எங்கள் ஜெய்சங்கர் சார். அவருகு அருகில் அவர் ஒருகையால் பிடித்தபடி ஒட்டிவரும் சிறிய சைக்கிள் கிடந்தது. சைக்கிள் ஹேண்ட் பார் இடுக்கில் அவர் விரும்பி படிக்கும் 'சிந்தனையாளன்' இதழ் சொருகியிருந்தது. என்ன நடந்திருக்குமென எனக்கு புரிந்துவிட்டது. சுற்றிலும் மாணவர்கள் கதறிக் கொண்டிருந்தார்கள், அவர்களை புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் சார். மாணவர்களிடமிருந்து கைக்குட்டைகளை வாங்கி விலங்கியல் ஆசிரியரும் நாங்களும் ரத்தம் வரும் இடங்களில் கட்டுப்போட்டோம். கடுமையா வெட்டு. ரத்தம் நிற்கவே இல்லை.வீரப்பன் சார் கார்கொன்டுவர அதில் ஏற்றி அனுப்பினோம். என்னை புன்னகையுடன் பர்த்துக்கொண்டே போனார். ஆத்திரம் மனதை முட்ட பெண்ணடம் நகரத்திலிருந்த அத்தனைக் கடைகளையும் நாங்களே மூடினோம். பேருந்தை நிறுத்தினோம். காவலர்கள் எதுவும் செய்யமுடியாமல் எங்கள் கூடவே வந்தனர். 'உங்க வாத்தியார் தீவிரவாதிப்பா, அவங்க ஆளுங்களே பன்னிருக்காங்க' என்றனர் காவலர். ஆனாலும் சுமார் மூன்று மணிநேரம் மாணவர்களின் கட்டுக்குள்தான் பெண்ணாடமிருந்தது.
இரவு உணவு உண்ண உட்காரும் நேரத்தில் சரியாக செய்தி வந்தது. "சார் செத்துட்டார்". சோற்றை தள்ளிவிட்டு படுத்துக்கொண்டேன். கொல்லப்படுவதற்கு சிலமாதங்களுக்கும் முன் தனது கிராமத்தில் வீடு குடிபோனார் ஜெய்சங்கர் சார். 'அப்பாவை வச்சுதான் திறக்கனும்னு இருந்தேன். அவர் சிறைக்கு போகவேண்டியதாச்சு. நீ கட்டாயம் கலந்துக்க' என்றார். நானும் போயிருந்தேன். அங்கே அவரது சகோதரர்கள், தோழர்களிடம் "தோழர் திருவள்ளுவன் பையன்" என அறிமுகம் செய்தார். அவர் வீட்டின் மீது 'சிந்தனையாளன் இல்லம்' என்று பொறிக்கப்பட்டிருந்தது. சிந்தனையாளர்கள் மீது அவ்வளவு பற்றுக்கொண்டவர் எங்கள் ஜெய்சங்கர் சார்.
(2015/செப்டம்பர் 5 இல் முகநூலில் எழுதிய பதிவுகள்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக