செவ்வாய், 1 அக்டோபர், 2024

காந்தியக் குழப்பங்களும் அண்ணல் அம்பேத்கரின் தெளிவும்.




ஸ்டாலின் தி 

1939 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 17 ஆம்தேதி அன்று பம்பாய் சட்டமன்றத்தில் தலித் உறுப்பினரான கெய்க்வாட் அவர்கள் "திரு.காந்தியால் 1932 இல் ஆலய பிரவேச இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து பம்பாய் மாகாணத்தில் எத்தனை கோவில்கள் தீண்டப்படாதவர்களுக்கு திறந்துவிடப்பட்டன?" என்று ஒரு கேள்வியை முன்வைத்தார். அதற்கு காங்கிரஸ் அமைச்சர் கொடுத்த பதிலின்படி, பம்பாய் மகாணத்தில் ஏழாண்டுகளில் தலித்துகள் ஆலயபிரவேசம் நடந்த கோயில்களின் எண்ணிக்கை 142 ஆகும். அவற்றில் 121 கோயில்கள் உரிமையாளர்களற்ற, கேட்பாரற்ற சாலையோரக் கோயில்கள் ஆகும். அதுவரையிலும் கூட, குஜராத்தில் காந்தி பிறந்த மாவட்டத்தில் ஒரே ஒரு கோயில்கூட ஆலயபிரவேசத்திற்கு திறக்கப்படவில்லை. இப்படிதான் 'தீண்டாமைக்கெதிரான' காந்திய இயக்கத்தின் வேகம் இருந்தது. 

இன்னொருபக்கம், தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் கிடையாது என்று முழங்கிக்கொண்டிருந்த காந்தி காங்கிரஸை அப்படி வழிநடத்துவதற்கு பெரிதாக செயற்படவுமில்லை. ஆலய நுழைவு மசோதாவை கொண்டுவர வேண்டுமென்று கவர்னர் ஜெனரலை நிர்பந்தம் செய்த காந்தியால், அந்த மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்க மறுத்த போது காங்கிரஸுக்கு எந்த நிர்பந்தத்தையும் கொடுக்க முடியவில்லை. 1921 திலகர் சுயராஜ்ய நிதி எனும் பெயரில் காங்கிரஸின் பணிகளுக்காக திரட்டப்பட்ட 1 கோடியே 25 இலட்ச ரூபாயில் வெறும் 43 ஆயிரம் மட்டுமே 'தீண்டப்படாதோருக்கான பணிகளுக்கு' செலவிடப்பட்டதாக காங்கிரஸ் கணக்கு காட்டியது. சுயராஜ்யத்திற்கு தீண்டாமை ஒழிப்பை முன்நிபந்தனையாக பேசிய காந்தி சுயராஜ்யத்தின் பணிகளுக்கான திரட்டப்பட்ட நிதியில் இப்படி குறைவாக தலித்துகளுக்கான பணிகளில் செலவிடப்பட்டதைப் பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை. வட்டமேசை மாநாடுகளின் போது காந்தி நடந்துகொண்டவிதத்தை எந்த ஜனநாயகவாதியாலும் அங்கீகரிக்க முடியாது. 

காந்தி துவக்கத்தில் சாதியமைப்பை பெரிதும் போற்றினார். பிறகு அப்படி அதிகம் அவர் பேசவில்லை எனினும் அவர் தீண்டாமை என்பதை மட்டுமே தீர்க்கவேண்டியதாக கருதினார். ஆனால், சாதியை ஒழிக்காமல் தீண்டாமை ஒழியாது என்கிற தெளிவான பதிலடியை காந்தியின் குழப்ப அரசியல் மீதுக் கொடுத்தார் அண்ணல் அம்பேத்கர். காந்தியின் குழப்பமான அரசியலை அவருடைய காலத்தில் எதிர்த்துக் கொண்டேயிருந்தார் அண்ணல். அவர் காந்தியிடமிருந்த குழப்பத்தை மட்டுமல்ல, காந்தியத்திடமிருந்த குழப்பங்களையும் அம்பலப்படுத்தினார்.

அண்ணல் ஏதோ தலித் மக்களின் பிரச்சனையை முன்னிறுத்தியே காந்தியத்தை மறுத்தார் என்கிற வகையில்தான் இங்கே பலரும் பேசிவருகிறார்கள். ஆனால், உண்மை இன்னும் விரிவானது. 

காந்தியத்தின் மொத்தக் குழப்பங்களையுமே அண்ணல் கேள்விக்குட்படுத்தினார். "காந்தியம் வர்க்க கட்டமைப்பை வலியுறுத்துகிறது; சமூகத்தின் வர்க்க கட்டமைப்பையும் வருமானக் கட்டமைப்பையும் காந்தியம் புனிதமானவையாக கருதுகிறது; இவற்றின் விளைவாக ஏற்படும் ஏழை-பணக்காரன், உயர்ந்தவன்-தாழ்ந்தவர், முதலாளி-தொழிலாளி போன்ற பாகுபாடுகளை சமூக ஒழுங்கமைப்பின் நிரந்தர அம்சங்களாகவும் அது பாவிக்கிறது" என்று காந்தியத்தின் வர்க்க பார்வையின் குளறுபடிகளை எடுத்துக்காட்டினார் அண்ணல். 

காந்திய பொருளாதாரத்தின்படி பொருளாதார சீர்கேட்டுக்கு எந்திரமயமும் நவீன நாகரீகமும்தான் காரணங்கள். ஆனால் அதை அண்ணல் கடுமையாக மறுத்தார். தனியார் சொத்துரிமையையும், தன்னலத்தின் மீது பேராசைக் கொள்வதையும் புனிதமானவையாக, மீறமுடியாததாக ஆக்கியுள்ள இச்சமூக அமைப்பே பொருளாதார சீர்கேட்டுக்கான முக்கிய காரணங்கள் என்று தெளிவுபடுத்தினார். 

இப்படி, காந்தியத்தை விரிவான விசாரணைக்குட்படுத்திய அண்ணல், "காந்தியம் எவ்வகையிலும் ஒரு புரட்சிகரமான தத்துவமல்ல. அது உள்ளடக்கத்தில் பழமையை பேணும் தத்துவம்" என்று கூறியதோடு, "ஜனநாயகத்தை தமது குறிக்கோளாக கொண்டிருக்காத சமூகத்திற்கு வேண்டுமானால் காந்தியம் பொருத்தமாக இருக்க முடியும்" என்றும் தெளிவுபடுத்தினார்.

காந்தியத்தின் குழப்பங்களை அறிய அண்ணலின் பார்வையை புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அண்ணலின் நூலைத் தொட்டாலே தீட்டென்று இருப்பவர்களுக்கு அந்த பார்வையை புரிந்து கொள்ளவே முடியாது. அந்த புரிதல் வரும்வரை, மறுக்கவே முடியாத சித்தாந்தமாகத்தான் காந்தியம் ஊதிக்காட்டப்படும்.

(2019 அக்டோபர் 2 இல் எழுதப்பட்ட முகநூல் பதிவு) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தீட்சா தின குறிப்புகள்.

ஸ்டாலின் தி 1  1935 அக்டோபர் 13 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இயாலோவில் நடைப்பெற்ற பட்டியலின மாநாட்டில்...