திங்கள், 26 ஆகஸ்ட், 2024

முருகன் என்னும் பூர்வ பௌத்தர்.




ஸ்டாலின் தி 

முத்தமிழ் முருகன், தமிழ்க் கடவுள் முருகன் என்கிற பெயரில் இந்துத்துவ அரசியலுக்கு துணை போகிறார்கள் பலர். மக்களின் பூர்வ பண்பாட்டை எடுத்துக் கூறமுடியாத கோழைகள் இந்துமய பண்பாட்டு அரசியலுக்கு பலியாகிவிடுவது வரலாற்றில் புதிது அல்லதான். இத்தகைய கோழைகள்தான் பூர்வ பௌத்த வரலாற்றையும் பண்பாட்டையும் தேடிக்கண்டடையும் எம்மைப் பார்த்து 'எதையும் பௌத்தமாக்குகிறார்கள்' என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நாம் எதையும் பௌத்தமயாக ஆக்கவில்லை. பௌத்தத்தை திரித்த வரலாற்றையே பேசுகிறோம். இன்னும் பேசுவோம். 

இந்து புராணம் கூறும் முருகனைத்தான் இவர்கள் தமிழ்க் கடவுள் என்கிறார்கள். தமிழ்க் கடவுள் என்று இவர்கள் கூறிவிடுவதால் முருகன் வேறு ஒரு அடையாளத்தை அடையவில்லை. முருகனின் அறுபடை வீடுகளின் கருவறைகளிலிருந்து பிராமணர்கள் வெளியேறவும் இல்லை. வழிபாடு இந்து வழிபாடு. வழிபாட்டை நடத்துபவர்கள் இந்து வர்ணாசிரம முறையிலானவர்கள். ஆனால், கடவுள் மட்டும் தமிழ்க் கடவுள். நகைப்பாக இருக்கிறது இவர்களின் இராஜதந்திரம். 

முருகன் பற்றிய வேறுபட்ட கதைக் கூறலை நூற்றாண்டுகளுக்குப் முன்னரே முன்வைத்திருப்பவர் பண்டிதர் அயோத்தி தாசர். பண்டிதரின் கதையாடலில் முருகன் சிவனின் மைந்தனுமில்லை, அவதாரக் கடவுளுமில்லை, தமிழ் ஒரு மொழிக்குரிய கடவுளுமல்ல. மாபெரும் தத்துவத்தை பின்பற்றி, மற்றவர்களுக்கும் அத்தத்துவத்தை‌‌ போதித்து, தன்னலத்தை முற்றிலும் துறந்த ஆண்டியாக (பிக்குவாக) ஆகி வாழ்ந்தவர் முருகன். அவர் பின்பற்றிய தத்துவம் தம்மம். 

இன்றைக்கு பழனி என்று அழைக்கப்படும் அன்றைய 'பூங்குறிஞ்சி' மலையை ஆண்டு வந்த பௌத்த அரசனான மருகனுக்கும், அவருடைய மனைவியான ராணி கங்கையம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் முருகன். முருகனின் மனைவி தெய்வானை. மயில் உருவில் செய்யப்பட்ட வாகனத்தில் வலம் வந்த முருகன், புத்த பள்ளியில் பயின்று, அறவாழ்வை மேற்கொண்டு மக்களின் நல்மதிப்பைப் பெற்றான். முருகன் புத்த தம்மத்தில் பயணித்து, வாழ்க்கையை கடந்து சென்ற பௌத்த சிரமணர் ஆவார். சிரமணன் என்பதே சரவணன் என்று ஆனது. இதுவே பண்டிதரின் பார்வையிலான முருகனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கமான வடிவமாகும். அதாவது, முருகன் என்பவன் பௌத்த இளவரசன். அவர் தம்ம நெறியில் வாழ்ந்து, ஞான மார்க்கத்தை மக்களுக்கு போதித்தமையால் போற்றுதலுக்குரியவராக ஆனார், தெய்வமானார். வழிபடப்பட்டார். பௌத்தத்தில் தெய்வ நிலை என்பது பற்றற்ற மனநிலையைக் குறிக்கும் என்பதை நாத்திக இந்துக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அடுத்து அருக வழிபாட்டில் இணைக்கப்பட்ட முருக வணக்கம் பற்றியும் பார்ப்போம். அருகர், அருகன் என்பவை புத்தரின் ஆயிரம் பேர்களில் உள்ளவை. 'புத்தன், மால், அருகன், சாத்தன்' எல்லாம் புத்தரின் பெயர்களே என்று, நிகண்டுகளைக் கொண்டு எடுத்துக்கூறியிருக்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். அருகன் மேடு, அருகேரி, அருங்குணம், போன்ற ஊர்களின் பெயர்கள், இன்றளவும் பௌத்த மரபுகளையும் அடையாளங்களையும் கொண்டிருக்கின்றன. புத்த வழிபாடான அருக வழிபாட்டோடு, பூங்குறிஞ்சி மலை மக்கள், அருக நெறியாளன் முருகனையும் இணைத்துக் கொண்டதால், இன்றைக்கும் 'வைசாக கால' வழிபாடு பழனியில் நடக்கிறது. பழனிக்கு சென்று மொட்டை போடும் வழக்கத்தில், புத்த தீட்சை சடங்கு கலந்திருப்பதையும் இத்தோடு இணைத்துக் காணலாம். முருகனின் இன்னொரு பெயர், ஆறுமுகம். முருகனின் உடல் முகத்தோடு, பஞ்ச சீலமான ஐங்குணங்களையும் முகமாகக் கொண்டதால்தான் அவர் ஆறுமுகம். 

முருகனோடு அடையாளப் படுத்தப்படுபவற்றில், 'வேல்' முக்கியமானது.முருகனுக்கு சரியாகப் பொருந்தக் கூடிய அடையாளம் வேல் அல்ல வேள்தான். பௌத்தப் பார்வையில் அதுதான் சரி.
முருகன் அரசக் குடும்பத்தைச் சார்ந்தவன். அவனின் அரண்பணியை அடையாளப்படுத்த 'வேல்' தேவைப்படுகிறதுதான். மேலும் சூரசம்காரம் என்பது, 'சுரா பானமருந்திய' சுரர்களுடனான, புத்த அசுரனான(சுரா×அசுரா)முருகன் மோதியதையேக் குறிக்கிறது. இதன்படி சம்கார போர் வீரனாக அடையாளப்படுத்தவும் வேல் அடையாளம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதேவேளை, முருகனைப் போற்றும் பெயராக 'வேள் முருகன்' என்பதுவும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. 

வேள் என்றால் கொடை என்று அர்த்தம். கொடை வள்ளல்கள் வேளிர் எனப்பட்டனர். கொடைக்குப் பெயர் பெற்ற மன்னர்களின் பெயருக்கு முன் 'வேள்' என்று இடுவது சங்க இலக்கியங்களிலும் வழக்கமாக இருந்துள்ளது. பாரியை 'வேள்பாரி'என்று கூறியிருக்கிறார் கபிலர். புத்த தன்மத்தைக் கடைப்பிடித்ததால் கொடை வள்ளலாகவும் இருந்த முருகன் 'வேள் முருகன்' என்றும் அழைக்கப்பட்டார். வேளன் என்பது கொடையாளியை அடையாளப்படுத்துவதால், முருகனுக்கு வேலன் என்பதைவிட, வேளன் என்பதே சரியான அடையாளத்தைக் கொடுக்கும்.

 சரி.முருகன் கதையாடலில் வருகின்ற வள்ளி என்பவர் யார்? 
முருகனின் இரண்டாவது மனைவியே வள்ளி என்பார்கள். இதுவும் திரிபுதான் என்றே எண்ணத் தோன்றுகிறது. வள்ளல் என்பதன் பெண்பால்தான் வள்ளி என்பதாகும். வள்ளியம்மை என்றால் தயாளக் குணம் கொண்டப் பெண் என்று பொருள். முருகன் 'வேளன்' என அழைக்கப்பட்டதால், முருகனின் மனைவியான தெய்வானை 'வள்ளி' என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். பிற்கால பௌத்த விரோத திரிபுவாதக் கும்பல், 'ரெண்டு கல்யாணக்'கதையை இட்டுக் கட்டிவிட்டது.

இவ்வாறான மாற்று விளக்கங்களைக் கொண்டே நாம் இந்துப் பெருங்கதையாடலை உடைக்க வேண்டும். அதில்லாமல், சமரசம் செய்துகொண்டு, உண்மைகளை மறைத்துக்கொண்டு, பகுத்தறியும் திறனை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு இந்துத்துவத்தை ஒருவழி செய்கிறோம் பாருங்கள் என்பது ஏமாற்றுத்தனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...