ஸ்டாலின் தி
கிருஷ்ண ஜெயந்தி நாளன்று வீடுகளில் பாதங்களை வரைவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள் இந்துக்கள். இந்துக்களின் இந்த வழிமுறை எதையேனும் விளக்குகிறதா? இல்லை. கிருஷ்ணனின் வருகையை எதிர்நோக்கிய ஏக்கத்தின் வெளிப்பாடாகவே இது நடத்தப்படுகிறது. உண்மையில் இந்துக்களுக்கு இந்த பழக்கம் எங்கிருந்து வந்திருக்க வேண்டும். வழக்கம் போல் அது பௌத்தத்திடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்பதை கூற நம்மிடம் மெய்ப்பொருள் இருக்கிறது.
பாதை என்பது பாதத்தின் சுவடுகளைத்தான் குறிக்கிறது. சரியான இலக்கை அடையும் பாதங்கள் தொடர்ந்து பல பாதங்களுக்கு வழிகாட்டுவதால் தொடர்ந்து பாதங்கள் படும் இடங்கள் பாதையாக ஆகிவிடுகிறது. இலக்கற்ற பயணம் பாதையை உருவாக்குவதில்லை. எனவே, ஒற்றையடிப் பாதையும் கூட தேவையற்ற எங்கும் சென்று முடிவது அரிது. அந்த வகையில் மானுடத்திற்கு வழிகாட்டிய புத்தரின் பாதம் பல்லாயிர பாதங்களை வரவழைத்து பெரும்பாதையை உருவாக்கியது.
புத்தர் சித்தார்த்தராக இருக்கும் போது குதிரைகளில் வலம் வந்தவர். ரோகிணி ஆற்று நீர் பிரச்சனையில் ஏற்பட்ட போர்ச்சூழலை எதிர்த்து அவர் நாட்டைவிட்டு வெளியேறினார். அந்த சமயத்திலிருந்து குதிரையை அவர் துறந்தார். வெகுதூரம் அவரை பின்தொடர்ந்து சென்ற அவருடைய குதிரையை திருப்பி அனுப்பிய சித்தார்த்தர் நடக்கத் துவங்கினார். அந்த நடை பயணம்தான் அவர் ஞானத்தேடலின் துவக்கம். அதிலிருந்து அவர் ஞானம் பெற்றவரை அவர் நடந்த தொலைவு சுமார் 300 கி.மீ. இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஞானம் பெற்ற பின் அந்த ஞான வழியை சக மனிதர்களுக்கும் போதிக்க வேண்டுமென்று மீண்டும் நடக்கத் துவங்கினார். சித்தார்த்தனா தம்முடைய வீடான இராஜகிரகத்திலிருந்து புறப்பட்டு புத்தராக மீண்டும் அதே வீட்டை கடக்கும் போது அவர் சுமார் 1600 கி.மீ.தூரம் நடைபாதையாகவே பயணித்திருந்தார். அவர் போதிக்கும்போதும், சற்று ஓய்வுகளிலும்தான் ஓரிடத்திலிருந்தார். மற்ற நேரங்களில் நடந்துகொண்டே இருந்தார். அவருடைய நடை அன்றைய சராசரி மனித நடையைவிட வேகமாகத்தான் இருந்தது. அது மானுடத்தின் துக்கத்தைத் தீர்க்கும் நடையாக இருந்ததால் அந்த வேகம் சாத்தியப்பட்டது. மக்களைத் தேடித் தேடி அவருடைய பாதங்கள் நடந்தன; அவரைத்தேடித் தேடி மக்களின் பாதங்கள் வந்தாலும் கூட, அவருடைய பாதங்கள் ஓயாமல் மக்களைத் தேடித்தேடி நடந்துகொண்டே இருந்தன.
இறுதிகாலத்தில் வயோதிகத்தால் அவருடைய நடையின் வேகம் குறைந்தது. அப்போது அவர் சுமார் 90 கி.மீ.தூரத்தை கடக்க ஏழுமாதங்கள் பிடித்தது. ஆனாலும் அவர் நடப்பதை நிறுத்தவே இல்லை. தன் சிந்தனையாலும் அது வழிநடத்திய பாதத்தாலும் புத்தர் மாபெரும் பாதையை வகுத்தளித்தார். அவருடை வாழ்காலத்தில் சுமார் 200,000 ச.கி.மீ.அவர் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக இன்றைய ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். புத்தர் வகுத்தளித்த பாதப் பயணம் புத்தருக்குப் பிறகு, புத்த மார்க்கத்தின் அடையாளமாக ஆனது. 'மக்களிடம் உலாவுங்கள்' என்று பிக்குகளுக்கு புத்தர் அறிவுரைத்தார். இயேசுவின் சீடர்களுக்கும் முன்னவே கொள்கைப் பரப்ப நடைபயணத்தைத் துவங்கியவர்கள் புத்தரின் சீடர்கள். இயேசுவேக் கூட அப்படி நடந்து வந்து புத்தம் கற்று, நடந்து சென்று புத்தம் போதித்தார் என்கிற கூற்றும் உண்டு.
புத்தருக்கு பிறகு, பிக்குகளை அதிகம் நடக்க வைத்தவர் அசோகர். தம்முடைய மகனையும் மகளையும் இலங்கைவரை நடக்க(நடுவேக் கடலில் அவர்கள் எந்தக் குரங்கையும் வைத்து பாலம் கட்டவில்லை.) வைத்தவர் அசோகர். அண்ணல் அம்பேத்கர் மடங்களில் முடங்கி(மக்களை நோக்கி நடக்காமல்) இருக்கும் பிக்குகளைக் கண்டித்தார். ஏனெனில், மக்களை நோக்கி, துக்கத்திற்கான தீர்வுகளை நோக்கி நடப்பதையே புத்தர் வழியாகக் காட்டினார். அவருடைய புத்தமும் அதையே வலியுறுத்துகிறது. அதனால், பிக்குகளை நடக்கச் சொன்னார் அண்ணல்.
எனவே, பாதக் குறியீடு என்பது பௌத்தத்தின் அடையாளம். அசோகர் காலத்திலிருந்து பாத சின்னங்கள் பௌத்த தொடர்பானவையாகவே கிடைக்கின்றன. ஆசியாவில் சுமார் 3000 தொன்மையான பௌத்த பாதச்சின்னங்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் மட்டும் ஆயிரம் பாதச் சின்னங்கள் கிடைத்துள்ளன. தம்மச் சக்கரம், முச்சரண அடையாளம் ஆகியவற்றை அச்சின்னங்கள் கொண்டுள்ளன.
"...மாணடி சேர்ந்தார்" என்று திரிக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுவதும் கூட மாண்புடைய புத்தரின் அடியை(பாதத்தை) சார்ந்தோர் என்பதுதான். பாதம் என்பதை பாதையின் உருவகமாகவே பௌத்தம் கூறுவதற்கு இதுவும் ஓரு சான்றாகும்.
எனவே, புத்தரின் பாதையை போற்றும் வகையிலேயே பாதவழிபாடு வந்திருக்கிறது; இருந்திருக்கிறது. இவ்வுண்மையை மறைக்கவும் திரிக்கவும்தான், பார்ப்பனியம் கிருஷ்ணன் எனும் திரிபுவாதக் கதையின் ஊடாக போலி பாதவழிபாட்டை உருவாக்கியது என்கிற உண்மையை நம்மால் அறிய முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக