ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

இந்துத்துவ கரசேவையில் திராவிட மாடலின் கல்வித் திட்டம்.



ஸ்டாலின் தி 

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை பழனியில் இருதினங்களாக (ஆகஸ்ட் 24 மற்றும் 25) நடத்தி முடித்திருக்கிறது திமுக அரசு. இம்மாநாட்டில் இயற்றப்பட்ட 21 தீர்மானங்களில் கல்வித்துறையில் இந்துத்துவத்தை திணிக்கும் திட்டங்களும் உள்ளன. 

'முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது' என்கிறது ஐந்தாவது தீர்மானம். 'விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது' என்கிறது எட்டாவது தீர்மானம். பன்னிரெண்டாவது தீர்மானம், 'முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம்' என்று கூறுகிறது. 

இவை அனைத்துமே கல்வித்துறையை இந்துமயப் படுத்தும் வேலைத்திட்டங்கள் என்பது அப்பட்டமான உண்மை. கடந்த 2018 ஆண்டில் கேரளாவில் நடைப்பெற்ற ஒரு போராட்டத்தில் உரையாற்றும் போது, "பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் கல்வித் துறையையும் இளைஞா்களின் சிந்தனைத் திறனையும் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநா் அலுவலகங்கள் களமிறங்கியுள்ளன" என்று பேசினார் மார்க்ஸிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராமன் யெச்சூரி. ஆனால், பாஜக ஆளாத தமிழ்நாட்டில் திமுக அரசே அந்த வேலையில் இறங்கிவிட்டது என்பதையே முத்தமிழ் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் காட்டுகின்றன. 2018 இல் கர்நாடகாவைச் சார்ந்த பாஜக ஆதரவாளரான சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்தபோது, 'தமிழக பல்கலைகழக வளாகங்களை காவி மயமாக்க வேண்டாம்' என்று கண்டித்துப் பேசிய ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் முருகனின் பெயரில் கல்வியை காவிமயமாக்கும் பணி செவ்வனே நடக்கிறது. 

இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக சார்பிலான அரசுகள் கல்வியில் இந்துத்துவ திணிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் கூட தனியார் கல்வி நிறுவனங்களின் மூலம் ஆர்.எஸ்.எஸ். வகுப்புகள், பாதபூஜை வழிபாடுகள், பள்ளி விழாக்கள் போன்றவற்றின் மூலம் இந்துத்துவ பண்பாட்டு அரசியல் ஏற்கனவே பயிற்றுவிக்கப்படுகிறது. அதற்கெல்லாம் துணைபோகும் வகையில், அரசு சார்பிலான கல்விக் கூடங்களில் 'தமிழ் பக்தியின்'பெயரில் கல்வியை இந்துத்துவ மயமாக்க முயற்சிக்கிறது திமுக அரசு.  

முருகனின் பெயரிலான இந்து புராணங்களையும் பண்பாட்டையும் மாணவர்களுக்கு கல்வியின் மூலம் புகட்டுவது இந்துத்துவ அரசியலுக்கு வலுசேர்க்கும் வேலையல்லாமல் வேறல்ல. 'கல்வி அமைப்பை தங்களின் கருத்தியலுக்குத் தக்க வடிவமைப்பதன் வழியாகத்தான் மாணவர்கள் மத்தியில் இந்துத்துவ பண்பாட்டை திணிக்க முடியும் என்பதில் அவர்கள் (இந்துத்துவவாதிகள்) மிகத் தெளிவாக உள்ளார்கள்' என்று கூறுவார் மறைந்த மனித உரிமை செயற்பாட்டாளரான எழுத்தாளர் கே.பாலகோபால் அவர்கள். கல்வி சேவையை இந்துத்துவ கரசேவையாக ஆக்குவதன் மூலம் திமுக அரசு பாஜகவின் வேலைத் திட்டத்தையே செயல்படுத்துகிறது. இதை துவக்கத்திலேயே தடுக்காவிட்டால் பால்வாடி பள்ளிவரை இந்துத்துவ கல்வித்திட்டம் பரவி, சமூகத்தை மேலும் நாசமாக்க வழிவகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...