வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

தங்கலான் ரவிக்கைக் காட்சியும் சாதிய மனநோயும்.

ஸ்டாலின் தி 

தங்கலான் திரைப்படத்தில் பெண்கள் ரவிக்கையை கொண்டாடும் காட்சியை கேலியாகவும், வக்கிர எண்ணத்துடன் சமூக ஊடகங்களில் சிலர் சித்தரிக்கும் நிலையை பார்க்க முடிகிறது. இவர்களுக்கு வரலாற்று அறிவுமில்லை, சமூக அக்கறையும் இல்லை என்பதே உண்மை. இங்கே ஆண்/ பெண் உடை நாகரீகத்தில் பண்டைய பௌத்த பண்பாடு முக்கிய பங்காற்றியிருக்கிறது. கீழாடை, மேலாடை, வெளி ஆடை  ஆகியவற்றை பௌத்தம் மக்களுக்கு வரையறுத்தது. இவை பாலியில் முறையே அண்டர்வாஸகா, உட்டரசங்கா மற்றும் சங்காதி என்று அப்போது அழைக்கப்பட்டன. இம்மூன்றையும் சேர்த்து கூறப்பட்ட பாலிச் சொல் 'கசாயா.' கசாயா என்பதிலிருந்துதான் 'கச்சை' என்னும் சொல் வந்தது. பிறகு அச்சொல் பெண்களின் மேலாடை அல்லது மேல் உள்ளாடையைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. பெண்கள் அணியும் வெளியாடைக்கு சேலை என்று பெயர் இருப்பது தெரியும். சேலை என்பதே சீலை என்பதிலிருந்து வந்தச் சொல்லாகும். சீலை என்பது சீலம் என்பதிலிருந்து வந்தச் சொல்லாகும். பெண்களின் வெளியாடை   மட்டுமல்ல ஆண் பிக்குகள் அணிந்த சீவர வெளியாடையும் சீலை தான். சீலர்களின் ஆடை சீலை. இன்றும் நெசவுக்கு பெயர்பெற்று வடக்கில் வாரணாசியும்  தெற்கில் காஞ்சீவரமும் முன்னொரு காலத்தில் பௌத்தர்களின் நெசவு நகரங்கள். 
அப்படியான நாகரீக பண்பாட்டில் தான் வைதீக கும்பல் தலையீடு செய்தது.சூழ்ச்சிகள், வன்முறைகள் என பலவகையான தாக்குதல்களை பௌத்தர்கள் மீது செலுத்தி தம்மை நிறுவிக் கொண்டது பார்ப்பனியம். பௌத்தர்களின் சுதந்திரங்கள் பறிக்கப்பட்டன; ஆடை சுதந்திரமும் அவற்றில் ஒன்று. 

இந்து அரசாட்சிகளில் மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் நாடு இருந்த போதும் கூட, பூர்வகுடிகள் மீதான உடைக் கட்டுப்பாடுகளை சுதந்திரமாக கடைப்பிடித்தனர் சாதி இந்துக்கள். கேரள திருவிதாங்கூர் சமஸ்தானம் தலித் மற்றும் சில சூத்திர சாதியினருக்கு(மொத்தம் 18 சாதிகளுக்கு) உடைக்கட்டுப்பாட்டை கடுமையாக விதித்திருந்தது. குறிப்பாக, இச்சாதிகளைச் சார்ந்த பெண்கள் ரவிக்கையை மட்டுமல்ல, சீலையால் மாராப்பும் கூட அணிய தடை செய்யப்பட்டது. அந்த அரசாணையை சமஸ்தானத்தின் ராணியான பார்வதி பாய் மூலமே வெளியிட்டது அந்த பிராமணிய சமஸ்தானம். இவ்விதியை கடைப்பிடிக்காக பெண்கள் பொது இடங்களில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டார்கள்; வெற்றுடம்பாக நிற்க வைத்து சாட்டையால் அடிக்கப்பட்டார்கள். தோள்சீலைப் போராட்டம் வெற்றிபெரும்வரை அப்படியான கொடுமைகள் நடந்தேறின.

தமிழ்நாட்டிலும் பூர்வ பௌத்தர்கள் மீதான உடைக் கட்டுப்பாடுகள் பிராமணிய கும்பலால் நடைமுறைப்படுத்தப்பட்டது. முகவை ஜில்லா எனப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பகுதி கல்லல்  என்னும் ஊரில்  1919 ஆம் ஆண்டு சாதி இந்துக்கள் கூடி தலித் மக்கள் மீது எட்டு வகையான தடைகளை விதித்தனர். அவற்றில், 'ஆண்கள் முழங்காலுக்குக் கீழும்  இடுப்புக்கும்  மேலும் உடையணிவதற்கும், பெண்கள் ரவிக்கை அணிவதற்கும்   மார்பை மறைத்துக் கொள்வதற்கும் விதிக்கப்பட்டன. இத்தடைகளை  நீதி மன்றம் சென்று உடைத்தனர் தல்லித்துகள். ஆனால், தேவக்  கோட்டையில் 1930 இல் கூடிய சாதி இந்துக்கள் மீண்டும் அந்த எட்டு தடைகளையும் அறிவித்தனர். 1931 இல் மேலும் சில தடைகளையும் சேர்த்து மொத்தம் 17 தடைகளைக்  கொண்டுவந்தனர் சாதி வெறியினர். 'சேரிப்பிள்ளைகள் படிக்கக்கூடாது, செம்பு பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது, திருமணம் போன்ற சடங்குகளில் மேளதாளம் இருக்கக்கூடாது" என்றெல்லாம் இத்தடைகள் நீண்டன.தலித் போராட்டங்களும் ஆங்கிலேய அரசின் சட்டங்களும் படிப்படியாக அவற்றை போக்கின. ஆனாலும் உடைரீதியான அதிகாரம் தலித் சமூகத்தின் மீது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. இந்த வரலாற்றையெல்லாம் அறியாதவர்கள், அறிந்தும் வன்கொடுமைகளை அங்கீகரிக்க நினைப்பவர்கள், பெண்கள் மீதான ஆண்களின் பாலியல் ஆதிக்கத்தை விரும்புகிறவர்கள்தான் தங்கலான் காட்சியில் பெண்கள் ரவிக்கையை கொண்டாடும் காட்சியின் மீது வெறுப்பைக் காட்டுகிறார்கள். இதற்கும் முன்பு மண்வாசனை அடையாளத்துடன் வந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒடுக்கப்பட்ட/ வறிய நிலை நாயகிகளை ரவிக்கை அணியாமல் காட்சிப்படுத்தப்பட்ட போது மெய்சிலிர்த்து பரவசமானவர்கள், தங்கலானில் ரவிக்கையின் மீதான உரிமையை கொண்டாடும் பூர்வகுடி பெண்களின் கதாபாத்திரங்களை காண தயங்குகிறார்கள், பதறுகிறார்கள். ஒருவகையில் இதுவொரு மனப்பிறழ்வு நிலை. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், சாதியம் உருவாக்கிய கொடும் மனநோயின் வெளிப்பாடுதான் இது. 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...