திங்கள், 19 ஆகஸ்ட், 2024

அண்ணலும் பெருந்தலைவரும்: ஒரே திசையின் இரு பயணிகள்.


ஸ்டாலின் தி 

இந்திய சேரிமக்களின் மாபெரும் தலைவர்களில் அண்ணலும் பெருந்தலைவர் அவர்களும் முக்கியமானவர்கள். அவர்களை எதிரெதிராக நிறுத்தும் செயலை அவர்கள் காலத்திலிருந்தே பலர் செய்திருக்கிறார்கள். இப்போதும் அது தொடர்கிறது. அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி காரணம் ஒன்றுதான். அது, இந்திய தலித் சமூகம் ஒருங்கிணைந்துவிடக் கூடாது என்பதுதான். 

அண்ணலைவிட சுமார்
எட்டுவயது மூத்தவர் பெருந்தலைவர். 1908 ஆம் ஆண்டிலேயே அரசியல் களத்துக்கு வந்துவிட்டவர் தலைவர் ராஜா. இந்திய அளவில் தலித் சமூகத்தின் முதல் மாநில சட்டமன்ற கவுன்சில் உறுப்பினர், முதல் சட்டமன்ற உறுப்பினர், முதல் நாடாளுமன்ற உறுப்பினர், முதல் (தற்காலிக) சபாநாயகர் என பல அரசியல் பொறுப்புகளை வகித்தவர். ஆசிரியராக, கல்வியாளராக, நீதிபதியாக, எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர். அத்தகைய பெருமைக்குரியவரை வட்டமேஜை மாநாட்டுக்கு அழைக்காதது அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் கொந்தளிப்பைக் கொடுத்தது. அதற்கு காரணம் அண்ணல்தான் என்று திசை திருப்பப்பட்டது. உண்மையில் அவ்வாறு தலைவர் ராஜா புறக்கணிக்கப்பட்டதற்கு பின்னணியில் இருந்தது காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பிராமணர்களான சத்திய மூர்த்தி அய்யரும், ராஜ கோபாலாச்சாரியும் தான் என்கிறார் அறிஞர் அன்பு பொன்னோவியம். எப்படியானாலும் வட்டமேஜை மாநாடு இருபெரும் தலைவர்களை பிரித்துப்போட பார்ப்பனியத்துக்கு உதவியது. அதைத்தொடர்ந்து ஓரிரு ஆண்டுகள் இரு தரப்புகளும் கசப்புடனே காலம் கடந்தனர். ஆனால் மீண்டும் அந்த இரு தலைவர்களும் ஒன்றாகி தமது சமூகத்துக்காக உழைத்தனர். சமூகத்தின் முன்னேற்றத்தை உணர்ந்து செயல்பட்டனர்.

1941 ஜூலையில் இந்திய வைஸ்ராய் தமது பாதுகாப்புக் கவுன்சிலை விரிவாக்கம் செய்தார். அப்போது பாதுகாப்புக் குழு ஒன்றும் ஏற்படுத்தினார். அக்குழுவில அண்ணலும் பெருந்தலைவரும் இணைந்து பணியாற்றினர்.

கிரிப்ஸ் ஆணைக்குழுவில், 1942 மார்ச் 30 இல் தங்களது சமூக மக்களுக்காக இருவரும் ஒன்றாக இணைந்து சென்று மக்களின் தேவைகளை எடுத்துரைத்தனர். 

'தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தாங்களே முன்வந்து ஏற்காத, அவர்களது பாதுகாப்புக்கு தேவையான விதிமுறைகளைக் கொண்டிருக்காத ஓர் அரசியல் அமைப்பை அவர்கள் மீது திணிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்யுமானால் அதனை நம்பிக்கை துரோகமாகவே கருதுவோம்' என்று இருவரும் சேர்ந்தே 1942 ஏப்ரல் 1 இல், 
 சர்.எஸ்.கிரிப்ஸூக்கு கடிதம் எழுதினார்கள். மேலும், அண்ணல் இந்திய தலித் தலைவர்களை ஒருங்கிணைத்து 1942 இல் மாநாடு ஒன்றை நடத்தினார். அப்போது அண்ணலோடு பெருந்தலைவரும் கைக்கோர்த்தார்.

1942 ஏப்ரல் 14 இல் அண்ணலின் ஐம்பதாவது பிறந்தநாள் நாட்டின் பல இடங்களில் கொண்டாடப் பட்டது. மராட்டிய மாநிலத்தில் பூனே வில் உள்ள வரலாற்று இடமான ஷனிவார்வடாவில் பேரா.எஸ்.எம்.மத்தே தலைமையில் நடந்த அண்ணல் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் பங்கேற்று வாழ்த்துரை ஆற்றினார் பெருந்தலைவர் எம்.சி.ராஜா.

அண்ணலும் பெருந்தலைவரும் சமூக விடுதலைக்கான பாதையில் பயணித்தவர்கள். பயண முறைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இலக்கு ஒன்றுதான். அண்ணலும் பெருந் தலைவரும் மாறுபடும் இடம் மதம் சார்ந்த இடம்தான். நமது தொடர் விவாதங்களில் அதை நேர்செய்ய முடியும்.
*


ஆகஸ்ட் 20:
பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் நினைவுநாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நினைவில் நிற்கும் ஆசிரியப் பெருமக்கள்.

ஸ்டாலின் தி  1 எங்கள் ஊர் டேனிஷ் மிஷன் பள்ளிதான் இறையூர், பெண்ணாடம் அம்பேத்கர் நகர் ஆகியபகுதியினருக்கும் அப்போது பள்ளியாக இருந்தது. இதில் பண...