வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

ஆடி பதினெட்டாம் நாள்; மாரியம்மன் எனும் பௌத்த அம்மனின் பரி நிப்பான நாள்.

ஸ்டாலின் தி 

மாரியம்மன்,மாரியாத்தாள்,ஆத்தா, அம்மன், என்றெல்லாம் அழைக்கப்படும் மாரியம்மனை வணங்குவோர்க்கு ஆடி மாதம் புனிதமாதமாக திகழ்கிறது. விரதம், மாவிளக்கு, பால்குடம், கூழூற்றுதல், பொங்கலிடுதல் என்று ஆடிமாதம் முழுவதும் மாரியம்மன் கோயில் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். மாரியம்மன் கோயில்கள் சேரிகளின் முதன்மையான கோயிலாக இருக்கின்றன. சேரியல்லாத இடங்களில் இருக்கும் அம்மன் கோயில்களுக்கு பல பெயர்கள் உண்டு. ஆனால் சேரியில் உள்ள அம்மன் கோயிலெல்லாம் அல்லது பெரும்பான்மையான கோயில்கள் மாரியம்மன் கோயில் என்ற பெயரிலேயே இருக்கின்றன. 

அதாவது தலித்துகளுக்கு மாரியம்மன் பொது தெய்வமாக இருக்கிறது. தங்களின் இன்ப,துன்பங்களை சொல்லி மனதை சீர்படுத்தி, தங்களின் எந்த நற்காரியங்களை மாரியம்மனை வழிப்பட்டபின்பே செய்கிறார்கள். நோய்ப்பட்டாலோ கஷ்டப்பட்டாலோ மாரியம்மனை மனத்தில் ஏற்றி விரதமிருக்கிறார்கள். இதையெல்லாம் மூடநம்பிக்கை, முட்டாள்தனம் என்றெல்லாம் சொல்லி ஒதுக்கிவிடலாமா? நாத்திகம் பேசுவோர் சொல்வதைப்போல் மாரியாத்தாள் வெறும் மூட நம்பிக்கையால் வணங்கப்படும் தெய்வமா? பகுத்தறிவு என்னும் போர்வையில் நாத்திகம் பேசுவதை ஒதுக்கிவைத்து விட்டு உண்மையான பகுத்தறிவைக் கொண்டு மக்கள் பண்பாட்டை ஆராயவேண்டும். அதைத்தான் பௌத்தப் பேரறிஞர் பண்டிதர் க.அயோத்திதாசர் செய்தார். மாரியம்மன் என்பதே பொய் என்றவர்கள் அதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டுவதில்லை. ஆனால் மக்களின் பண்பாட்டையும் இலக்கியத்தரவுகளையும் ஆராய்ந்து மாரியம்மன் யார்? மாரியம்மன் கோயில் ஏன் சேரியில் இருக்கிறது? மாரியம்மன் எதைப் போதித்தார்? மாரியம்மனை ஆடிமாதத்தில் சிறப்பாக பூஜிக்கவேண்டியதன் பின்னனியென்ன? போன்ற கேள்விகளை ஆராய்ந்து விளக்கினார். இன்று பண்டிதரின் பார்வையில் மாரியம்மன் புதுப்பொலிவைப் பெறுகிறார்.

ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய கண்டத்தில் இருந்த நாடு புந்நாடு. அந்நாட்டை ஆண்டுவந்த சாக்கிய  மன்னன் சுந்திரவாகு. அவருக்கு பிறந்த அழகிய பெண்குழந்தைக்கு அம்பிகாதேவி என்று பெயரிட்டு வளர்த்தார். அம்பிகாதேவி தனது ஏழாம் வயதிற்குள் பௌத்தம் கொடுத்த தமிழ் மொழியிலும் அதன் அட்சரங்களையும் கற்று தேர்ந்தார். அக்காலத்தில் இத்தேசமெங்கும் பௌத்தம் செழித்திருந்தது. பௌத்த மன்னன் சுந்திரவாகுவின் அருமைப் புதல்வியாம் அம்பிகைதேவியும் புத்தமார்க்கத்தில் ஆர்வம்கொண்டு வளர்ந்தார். அன்றைய காலத்தில் இருந்த வழக்கத்தின்படி அம்பிகாதேவியின் பதின்மூன்றாம் வயதில் அவருக்கு திருமணம்செய்ய முடிவு செய்தார் தந்தை சுந்திரவாகு.இதையறிந்த அம்பிகாதேவி தந்தை சுந்திரவாகுவிடம் சென்று “தந்தையே நான் நம் குலக்குருவாம் புத்தரின் வழியில் சென்று மக்களுக்கு அறம் கூறி நல்வழிக்காட்டி பணி செய்யவிரும்புகிறேன். 

எனவே புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட பிக்குணிகள் சங்கமென்னும் பெண் துறவிகளின் ஞானசங்கத்தில் சேரவிரும்புகிறேன்.தாங்கள் அதற்கு தடைசெய்யாமல் உத்திரவளிக்க வேண்டுகிறேன்” என்றார். தன் அன்புக்குரிய மகள் இல்லறம் வேண்டாமல் துறவறம் தேடிப்போவதைக் கேட்டறிந்த சுந்திரவாகு மனம் கலங்கி நின்றாலும் ஞானத்தின் பாதையை தேர்வு செய்த தன் மகளை நினைத்து தேறுதலடந்தார். இருந்தும் அவர் ஓர் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருந்தது. அதாவது, பிக்குணி சங்கத்தில் சேரும் பெண் பேதையாக இருக்கவேண்டும் அல்லது இல்லறவாழ்வில் சிலகாலம் இருந்திருக்கவேண்டும் என்பதே சங்கத்தின் விதி. இங்கே அம்பிகாதேவியோ பேதைப் பருவத்தைக் கடந்தவர். திருமணமாகாத கன்னிப் பெண். இப்பிரச்சனையை சொல்லியபிறகும் தான் துறவு போவதில் மாற்றுக் கருத்திலை என்று பிடிவாதமாகவே சொல்லி விட்டார் அம்பிகாதேவி. மன்னன் சுந்தரவாகுவுக்கோ என்ன செய்வதென்றக் குழப்பம். இதைப்பற்றி ஆராய அவர் அமைச்சர் பெருமக்களை அழைத்து ஆலோசனைக்கேட்டார். அவர்கள் ஆலோசித்து முடிவாக ஒருவழியை தீர்வாகச் சொன்னார்கள். அதன்படி அம்பிகாதேவியின் கழுத்தில் தாய்மாமனால் ஓர் பொட்டு (தாலி)க்கட்டி அறஹத்துக்கள் என்றழைக்கப்பட்ட சங்கத்தின் குருக்களுக்கு அறிவித்துவிட்டு பெண்களுக்கான சங்கத்தில் சேர்த்துவிடவேண்டும். இதுவே விதியென்று கூறினார்கள் அமைச்சர்பெருமக்கள்.

 உடனடியாக அம்பிகாதேவியின் தாய்மாமனான கந்தருவத்தனை வரவழைத்து நடந்தவற்றையும் நடக்கவேண்டியவற்றையும் தெளிவுபடக்கூறினார் மன்னன் சுந்தரவாகு. அனைத்தையும் அறிந்து உணர்ந்துகொண்ட கந்தருவத்தன் தன் கரங்களால் அம்பிகா தேவியின் கழுத்தில் பொன்னினால் ஆன தாலியைக்கட்டினார்.பின் புத்தப்பெரியார்களின் உத்திரவுப் பெற்று புத்தம் வளர்த்த பிக்குணிகளின்  சங்கத்தில் சேர்ந்தார் அம்பிகாதேதி.
புத்தம் போதித்து அறப்பணிச் செய்ய சங்கத்தில் சேர்ந்த அம்பிகாதேவி, வேம்பு மரத்தடியில் அமர்ந்து  புத்தத்திருமறையாம் திரிபிடகங்களை, பெரியவர்,சிறியவர் என எல்லாத்தரப்பினரும் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் போதித்து வந்தார். பிடகத்தை போதித்தமையால் பிடகக்காரி என்று அழைக்கப்பாட்டார்.இதுவே மக்களிடம் கிடைத்த முதல் பட்டப்பெயராகும். பிடகக்காரி என்பதே பிடாறி என்று திரிந்தது. 

 வேம்பு மரநிழலில் அமர்ந்து அம்பிகாதேவி என்னும் பிடாறியம்மன் அறத்தையும் பிரச்சனைகளுக்குத் தீர்வையும், நோய்நாடிகளுக்கு மருந்தையும் அளித்துவந்தார். இதனால் அவர் வேம்படியாள் என்றும் அழைக்கப்பட்டார். அதேவேளை, அம்பிகாதேவி வெறும் நிழலுக்காகமட்டும் வேம்புமரத்தினை தேர்வு செய்தார் என்று கருதமுடியவில்லை. இன்றைய அறிவியல் வேம்புவை முக்கியமான மருத்துவ தாவரமாக கருதுகிறது. எனவே வேம்புவின் குணமறிந்துதான் அம்பிகா தேவி வேம்புவைத் தேர்வு செய்திருக்க வேண்டும். மேலும் வேம்புவுக்கும் அம்பிகாதேவிக்கும் இன்றளவும் ஓர் தொடர்பு இருப்பதை மக்களின் வழிபாட்டின் மூலம் காணலாம். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஒரு நோயாகும்.

 இன்றைக்கு அம்மை என்று அழைக்கப்படும் நோய்தான் அந்நோயாகும்.அம்பிகாதேவி தம்மப்பணியில் இருந்தகாலத்தில், நாகைநாடு என்ற பிரதேசத்தில் மழை குன்றி, வெக்கை மிகுந்ததால் சாமளை என்னும் நச்சுக்கிருமிகளின் தாக்குதல் வலுவடைந்திருந்தது. அதன் காரணமாக வைசூரி என்னும் மாறி நோய் பரவி, மக்களும் விலங்குகளும் துன்புற்றுவந்தனர். அம்பிகாதேவியின் அருமையறிந்த மக்கள் திரண்டுவந்து வேம்படியில் இருந்த அவரிடம் வந்து வணங்கி, தங்களின் துன்பத்தைச் சொல்லி நின்றனர். அனைத்தையும் கேட்டறிந்து தியானித்த அம்பிகாதேவி “மக்களிடம் அன்பும் அறமும் குறைந்து, வஞ்சகம், பொறாமை, பேராசை, கெட்டப்புத்தி ஆகியவை மிகும்போது துன்பம் உண்டாகிறது.மழைக்குன்றி வெப்பம் மிகும்போது வைசூரி என்னும் மாறி நோய் பரவி உயிர்களை பலிக்கொள்ளுகிறது” என்றார். மேலும் அம்பிகாதேவி மக்களை நோக்கி “உங்கள் உள்ளங்களில் உள்ள கள்ளங்களை அகற்றி மனத்தைச் சுத்தஞ்செய்வதுடன் வீதிகளையும் வீடுகளையும் சுத்தஞ்செய்து வாசனைமருத்துவ மரமான மட்டிப்பால் வர்த்தி புகை,கற்பூரப் புகைகளை வீடுகள் முழுவதும் கமழச்செய்து, வேப்பிலைத் தோரணத்தை வாசலில் கட்டி,கூறைகளிலும் வேப்பிலையை சொருகி,தானியங்களை உப்பிடாமல் அவித்து மக்களுக்கு தானங்கொடுப்பதுடன், பச்சரிசிமாவும் கூழும் தானமளிப்பீர்களேயானால் இதன் மூலம் மனச்சுத்தத்தாலும் தேசச்சுத்தத்தாலும் வேப்பிலை மணத்தாலும்,கற்பூரப் புகையாலும்,அவுரிப்புகையாலும் சாமளைப் புழுக்கள் அகன்று மாறியென்னும் கொடிய நோய் அகன்று குணம் அடைவீர்கள்” என்று தீர்வு சொன்னார். அம்பிகா தேவியின் சொல்படி நாகைநாட்டு மக்கள் மனச்சுத்தம், தேசச் சுத்தம் செய்து அன்பையும் தானகுணத்தையும் பெருக்கி நோய் நீங்கி துயர் நீங்கி உள்ளம் குளிர்ந்தனர். மாறி என்னும் நோயை தீர்க்கவழி சொன்னதால் அம்பிகாதேவி அன்றுமுதல் மாறியை ஆற்றியவள் என்று மக்களால் புகழப்பட்டார். மாறியை ஆற்றியவள் என்பது மாறியாற்றாள் என்று திரிந்து பின் அதுவே மாரியாத்தாள் என்று ஆனது.

மக்களிடம் மட்டுமல்லாமல் அரசர்களும் அம்பிகாதேவியிடம் வந்து அறவுரையையும் அறிவுரையையும் கேட்டு அவர் சொல்வழியில் நடந்து மகிழ்வுற்றனர். இவ்வாறு மக்களை நல்வழிப்படுத்தி தம்மப் பணிசெய்த சாக்கியக்குலத்தலைவி அம்பிகாதேவி, அரசர்களையும் குடிமக்களையும் வேம்படிக்கு வரவழைத்து “திரிபிடக வாக்கியங்களாகும் திரிசீலமே தத்துவம், திரிசீலமே சத்தியம்,திரிசீலமே உத்தமம். அதுவே உங்களைக் காக்கும் தெய்வம் என்று கூறி, கொல்லா நோன்பு,குறளா நோன்பு,கள்ளா நோன்பு ஆகிய திரிநோன்புகளையும் மனத்தில் பதித்து, வாக்கு,மனம்,தேகம் ஆகியவற்றைக்காக்கும் திரிவிரதங்களையும் ஓதி தான் பரி நிருவானம்(இறப்பு) அடையும் நாளையும் அறிவித்தார். 

அதன்படி ஆடிமாதம் பதினெட்டாம் நாள், பௌர்ணமி தினத்தில் வேப்பமரத்தடியில் புத்தரின் தியான வடிவாமான பத்மாசணத்தில் அமர்ந்து கண்கள் மூடி தியாண அமைதியுடன் பரி நிர்வாணமடைந்தார். அதனைக்கண்ட அரசர்களும் குடிமக்களும் பதறிக்கண்ணீரைத்தாரைத் தாரையாகவடித்து தலைக்குமேல் இருகரம் கூப்பி “வாலாம்பிகையே, அறமுதற்செல்வியே, ஆதி தேவியே, எங்கள் ஆயியே, உள்ளக்குறையகற்றும் சீலியே,பச்சைப்பருவ பகவதியே, உன் பரி நிருவாணம் கண்டு நிலைக்குலைந்தோமே! இனி எவரால் அறவுரைக்கேட்டு மகிழ்வோம்? ஆபத்துகாலத்தில் யாரை நாடி நிற்போம்?” என்று கதறினார்கள்.

வடபாரதத்தில் சாக்கா அல்லது சாக்கியரென்றும் தென்பரதத்தில் வள்ளுவரென்றும் அழைக்கப்பட்ட கர்மஞானம் கொண்ட குருக்களும், அரசர்களும் மக்களும் குடும்பத்தோடு வந்து அவ்வை என்னும் அம்பிகா தேவியின் உடலை தகனம் செய்து சாம்பலை காவிரிநீரில் விடுத்து நீராடி, தங்களிடங்களுக்குச் சென்று அன்னதானங்களுக்கான உணவுப் பொருட்களை சேகரித்து, அம்மன் பரி நிருவணமடைந்த வேப்பமரத்தடியில் வந்து, பொங்கல் வைத்து எல்லோர் சோற்றையும் ஓர் போராகக் குவித்து எல்லாமக்களுக்கும் வயிறு நிரம்ப சோறளித்தனர். அன்றுமுதல் ஆடி மாதத்தை அம்மனை மனம் உருகி வணங்கும் மாதமாக மக்கள் கடைப்பிடிக்கிறார்கள். அம்மன் பரி நிருவாணமடைந்த ஆடி பதினெட்டாம் நாளை பெரு நாளாகக் கொண்டாடுகிறார்கள். பௌத்தத் தலைவியான அம்பிகா தேவியெனும் மாரியாத்தாளை பூர்வ பௌத்தக் குடிகளான சேரிமக்கள் கோயில் கட்டி வணங்குகிறார்கள்.



#தமிழ்ப்பெளத்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...