வியாழன், 30 மே, 2024

விவேகானந்தர் பாறை என்னும் கட்டுக்கதையும் மோடியின் தியான நாடகமும்.

ஸ்டாலின் தி 

பத்தாண்டுகளாக பல்வேறு வேடங்களை தரித்து நின்ற மோடி, தியான வேடம் போட கன்னியாகுமரி கடலில் உள்ள பாறைத்திட்டுக்கு வந்துள்ளார். முன்பொருமுறை, இமயமலைக் குகையில் இப்படியான தியான நாடகம் நடத்தி கேலியாகிப் போன மோடி இப்போது முக்கடல் கூடும் குமரிக்கு வந்துள்ளார். பக்குவத்திற்கு தயாராகும் மனப்போக்கு உடையவர்களுக்கு தான் தியானம் சாத்தியமாகும். மோடிக்கு அந்த கொடுப்பினை எப்போதும் கிடைக்காது. எந்நேரமும் சூது, சூழ்ச்சி, வன்மம், வன்முறை போன்ற தீயவற்றிலேயே மனத்தை ஆழ்த்தி வைப்பவர்களுக்கு தியானம் எட்டாக்கனியாகும். அதுவொருபுறம் இருக்க, மோடி தம்முடைய தியான நாடகத்திற்கு இப்போது தேர்வு செய்துள்ள இடம் முக்கியமானது. பூர்வகுடி மக்களின் பகவதியம்மன் வழிபாட்டு தலமாகவும், தமிழ் கிறித்தவ மீனவ மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் இருந்துவந்த பாறைத் திட்டை சுமார் அறுபதாண்டுகளுக்கும் முன்பாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் அடாவடியாக ஆக்கிரமித்தது. அந்த ஆக்கிரமிப்புக்கு இந்துத்துவ கும்பல் கையிலெடுத்த ஆயுதம், தியானம். விவேகானந்தர் தியானம் செய்த இடம் என்று கூறித்தான் அந்த இடத்தை ஆக்கிரமித்தது ஆர்.எஸ்.எஸ்.


கல்கத்தாவில் 1863 ஜனவரி 12 இல் பிறந்தவர் நரேந்தர நாத் தத்தா. கிறித்துவ பள்ளியின் மானவனாக இருந்த நரேந்திரனுக்கு மனப்பிறழ்வு நோயாளியான ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பிடித்துப்போக, அவரிடம் சீடனாக சேர்ந்தார். மனநோயும் புற்று நோயும் தாக்கியதில் ராமக்கிருஷ்ணர்  1886 இல் உயிரை விட்டார். அதற்கும் அடுத்த ஆண்டான 1887 இல் சன்னியாசம் பெற்ற நரேந்திர நாத் தத்தா விவிதிஷியானந்தா, சச்சிதானந்தா, என்றெல்லாம் பெயர்களை மாற்றிக்கொண்டார். இறுதியாகத்தான் விவேகானந்தர் என்னும் பெயர். இந்தியா முழுவதும் ராமக்கிருஷ்ணரின் கொள்கையை பரப்பிய பின் அமெரிக்காவுக்கு பரப்பச் சென்றார் என்பார்கள் இந்துக்கள். ஆனால், உண்மை வேறு. நாடு முழுவதும் விவேகானந்தா சுற்றினாலும் யாரும் அவரைக் கண்டுகொண்டதாக அவர் கருதவில்லை. 'நாடெங்கும் அலைந்த என்னை இந்தியர் யாரும் கண்டுகொள்ளவேயில்லை' என்று மனம் நொந்துபோய்தான் அவர் அமெரிக்கா சென்றதாக அவரே கூறினார். அவரை அமெரிக்காவுக்கு அனுப்பும் செலவை ஏற்றுக்கொண்டவர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி. இந்த பாஸ்கர சேதுபதி 'கமுதி கோயிலில் நாடார்கள் நுழைய நிரந்தர தடைவிதிக்க வேண்டும்' என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் பெற்று தீண்டாமையை நிலைநாட்டினார் என்பது தனி வரலாறு. அமெரிக்கா செல்லுவதற்கான கப்பல் பயணத்தில்
கிரேக்கரான டபிள்யூ. ரைட் என்பவரிடம் நட்பு கொண்ட விவேகானந்தர், அவருடைய சிபாரிசில்தான் 1893 இல் அமெரிக்காவில் நடைப்பெற்ற மதபிரதிநிகளின் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். இதற்கிடையில்தான் 1892 இல், கன்னியாக்குமரியில் விவேகானந்தர் தியானம் செய்தார் என்பதாக கூறப்படுகிறது. உண்மையில் அது ஒரு கட்டுக்கதை. 

விரக்தியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றித் திரிந்த விவேகானந்தர் 1892 வாக்கில் தென்னிந்திய பக்கம் வந்து சேர்ந்தார் என்பது உண்மைதான். மைசூர் மகாராஜா, இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி போன்றோரிடம் உதவி கேட்டுதான் அவர் வந்தார். உதவிகளைப் பெற்றுக்கொண்டு அமெரிக்கா புறப்பட்டார். அதன் பிறகு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தேசங்களில் சுற்றிவிட்டு 1897 இல்தான் அவர் இந்தியா திரும்பினார். அமெரிக்கா புறப்படும் முன்னர் கன்னியாகுமரி கடலில் குதித்து, சுமார் அரைக் கிலேமீட்டர் (சுறா மீன்களைக் கடந்து!) நீந்தி பாறையில் ஏறி, அங்கே மூன்று நாள்கள் தியானத்தில் ஆழ்ந்தார்' என்பது பிற்காலத்தில் இந்துத்துவ கும்பல் கட்டிவிட்ட கதை. விவேகானந்தர் அங்கே தியானம் செய்ததை அறிந்தவர் என்று எவருமில்லை. விவேகானந்தரும் கூட தியானத்தை அறிந்தவர் கிடையாது. அவருடைய பரமார்த்த குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர் தம்முடைய நோய்வாய்ப்பட்ட மனம் மற்றும் உடலால் மூர்ச்சை ஆகிவிடுவதையே தியானம் என நம்பினார்.‌ அவரிடம் எந்த இலட்சணத்தில் விவேகானந்தர் தியானத்தைக் கற்றிருக்க முடியும். பௌத்த-சமண மரபான தியான முறையை தங்களுடைய அடையாளமாக ஆக்கும் பிராமணிய மரபை ஏற்றவரானதால் விவேகானந்தருக்கும் தியான அடையாளம் பூசப்பட்டது, அவ்வளவுதான். 

தற்போது விவேகானந்தர் பாறை என்று கூறப்படும் பாறையின் முந்தைய பெயர் 'பகவதியம்மன் பாறை.' பௌத்த பெண் தெய்வ மரபில் பகவதியம்மன் என்பதுவும் ஒன்று. பகவன் புத்தரின் வழியில் சென்ற பெண்பால் அறவோருக்கு 'பகவதி' என்பது பொதுப்பெயர். தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் கண்ணகி உள்ளிட்ட பூர்வகுடி பெண் தெய்வங்கள் பகவதி அம்மன்களாக வழிபடப்படுகின்றனர். கன்னியாகுமரி பாறையிலும் பகவதியம்மன் வழிபாடு இருந்து வந்தது. 'திரி பாதை' அம்மன் பாறை என்னும் அவ்விடத்தை 'ஸ்ரீ பாத அம்மன் பாறை' என்றும் திரிந்தனர். கிறித்துவம் தழுவிய மீனவர்கள் அதே பாறையில் ஒரு பகுதியில் சிலுவையை நட்டு வழிபட்டு வந்தனர். இவற்றையெல்லாம் கவனித்த உள்ளூர் மற்றும் கேரள இந்துத்துவ கும்பல் வெகுமக்கள் வசமிருந்த அந்த பாறையை ஆக்கிரமிப்பு செய்ய முடிவெடுத்தனர். வழக்கம் போலவே கதைக் கட்டினர்; 'விவேகானந்தர் தியானம் செய்து ஞானம் பெற்ற இடம் இது.' அதிலும், அவர்கள் விவேகானந்தர் தியானத்தில் உட்கார்ந்த நாளாக கூறிய தேதி முக்கியமானது. அந்த தேதி டிசம்பர் 25(1892).‌ அதாவது, கிறிஸ்துமஸ் தினம். அந்தக் கதையைத் தொடர்ந்து அங்கே வழிபட்டு வந்த சிலுவை 'மர்மமான முறையில்' கடலில் கிடந்தது. கட்டுக் கதையின் மூலம் மற்றவர்களின் இடத்தை ஆக்கிரமிக்கும் இந்து கலாச்சார மரபின்படி கன்னியாகுமரி பாறையும் ஆக்கிரமிப்பு எல்லைக்குள் கொண்டுவரப்பட்டது.

1863 இல் பிறந்த விவேகானந்தருக்கு 1963 ஆனது நூற்றாண்டு. அதை சாதகமாகக் கையிலெடுத்தார்கள் இந்துத்துவவாதிகள். 'விவேகானந்தர் தியானம் செய்து ஞானம் பெற்ற கன்னியாகுமரி பாறையில் அவருக்கு நினைவிடம் கட்ட வேண்டும் ' என்கிற கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்தது. இராமகோபாலன் போன்ற தமிழ்நாட்டு சங்பரிவார கும்பலும், சென்னை ராமகிருஷ்ண மடமும் கைக்கோர்த்தன. ஆர்.எஸ்.எஸ். தலைவரான கோல்வால்கர் இந்த கரசேவைக்காகவே மகாராஷ்டிரா பார்ப்பனரான 'ஏக்நாத் இராமக்கிருஷ்ண ராணடே' என்பவரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தார். ஏக்நாத் ராணடே ஆர்.எஸ்.எஸ்.இன் தீவிர களப்பணியாளர். ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்ட அடுத்த ஆண்டே(1926) அதில் தம்மை இணைத்துக் கொண்ட அதிதீவிர இந்து வலதுசாரி அவர். கன்னியாகுமரிக்கு அவர் வந்ததும் பதற்றமும் வந்தது. உள்ளூர் கிறித்துவ மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.‌ஆனால், காவல்துறை அவர்களை ஒடுக்கியது. மாநில அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு 'கத்தோலிக்கர்களுக்கும் அந்த பாறைக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று பூர்வகுடி மக்களை அந்நியமாக்கி, விவேகானந்தர் பாறை என்னும் கட்டுக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது.  
அதேவேளை, அன்றைய தமிழக முதல்வர் பக்தவத்சலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டவும் அனுமதிக்கவில்லை. ஏக்நாத் ராணடே, லால்பகதூர் சாஸ்திரி மூலம் நேருவைப் பிடித்து அனுமதி வாங்கினார். ஆர்.எஸ்.எஸ். இன் இந்த திட்டத்தை நிறைவேற்ற அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து ரூ.34 இலட்சத்தை நிதியாக அளித்தன. கூடவே, நாடெங்கிலும் பல இடங்களில் நிதிகளை இந்துத்துவ கும்பல் திரட்டியது.1964 இல் கட்டுமானப்பணி துவங்கியது. 1970 செப்டம்பர் 2 ஆம் நாளில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில், அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை திறந்துவைத்தார். ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்தை ஒன்றிய, மாநில, அரசுகளின் துணையுடன் நடத்திக்காட்டிய ஏக்நாத் ராணடே கன்னியாகுமரியில் 'விவேகானந்தா கேந்திரா' என்னும் சங்பரிவார துணை அமைப்பை நிறுவினார். தென் தமிழகத்தில் இந்துத்துவ கருத்தியல் பரவுவதற்கு இந்த அமைப்பு முக்கிய பங்காற்றியது.

இவ்வாறாக, ஒரு கட்டுக்கதையின் மூலம் மற்றோரின் இடத்தை இந்துத்துவ கும்பல் அபகரித்த வரலாற்றை உடைய இடத்தில்தான் இன்றைக்கு, தியான நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் மோடி. நரேந்திர தத்தா என்னும் விவேகானந்தருக்கும் நரேந்திர மோடிக்கும் பெயரில் மட்டுமல்ல, இருவருமே இந்துத்துவ கும்பலால் ஊதிப்பெருக்கி காட்டப்பட்ட பிம்பங்கள்தான் என்பதிலும் பொருத்தமானவர்கள். இந்த பொருத்தத்தை உணர்ந்துதான், மோடி கன்னியாகுமரி பாறைக்கு வந்திருப்பார் என்று தோன்றுகிறது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நினைவில் நிற்கும் ஆசிரியப் பெருமக்கள்.

ஸ்டாலின் தி  1 எங்கள் ஊர் டேனிஷ் மிஷன் பள்ளிதான் இறையூர், பெண்ணாடம் அம்பேத்கர் நகர் ஆகியபகுதியினருக்கும் அப்போது பள்ளியாக இருந்தது. இதில் பண...