சனி, 1 ஜூன், 2024

சுபவீயின் கட்டுக்கதைகள்: தலித் வரலாற்றின் மீதான சாதிய ஆத்திரம்.

ஸ்டாலின் தி 

பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார் அடுப்பெரிக்கும் போது தற்செயலாகக் கிடைத்த ஓலைச் சுவடிகளில் ஒன்றுதான் திருக்குறள் என்று ஒரு கதையை விசிகவின் மாநாட்டிலேயே இறக்கிவிட்டு, பண்டிதர் குடும்பத்தின் அறிவு சேகரிப்புப் பணியை அவமானப்படுத்தியவரான திமுகவின் பிரச்சாரகர் சுபவீ அவர்கள், தற்போது இன்னொருக் கதையை கட்டிவிட்டிருக்கிறார். 

அவர் புதியதாக அவிழ்த்துவிட்டக் கதை இதுதான். அதாவது, அண்ணல் அம்பேத்கர் பௌத்த அறிஞர் பொ.லட்சுமி நரசு அவர்களை சந்தித்ததாகவும், அப்போது பண்டிதர் அயோத்தி தாசரை சந்திக்காமல் போய்விட்டதாகவும் கதையைக் கூறியிருக்கிறார். இந்தக் கதையின் மூலம் சுபவீ முன்வைக்கும் கேள்வி என்னவென்றால், "பெரியார் அயோத்திதாசரை மறைத்ததாக கூறுகிறீர்களே. இதோ அம்பேத்கரே அயோத்திதாசரை தவிர்த்துவிட்டுதான் போனார். அப்படியானால் அயோத்திதாசரை அம்பேத்கர் மறைத்தார் என்று கூறமுடியுமா?" என்பதுதான். நல்லக் கேள்விதான். ஆனால் இந்தக் கேள்விக்காக சுபவீயால் கூறப்பட்ட கதையின் உண்மை தன்மை என்ன? 

பண்டிதர் 1845ஆம் ஆண்டு மே மாதம் 20 தேதி பிறக்கிறார். தமது 46 ஆவது வயதான 1891 ஆம் ஆண்டில் பண்டிதர் ஊட்டியில் பத்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆதிதிராவிடர் மாநாடு நடத்துகிறார்.  அதே ஆண்டில் பிறக்கிறார் அண்ணல். பண்டிதர் இங்கே பெரும் ஆளுமையாக இயங்கிக்கொண்டிருந்த போது அண்ணல் மழலை பருவத்திலும்,  மாணவப்பருவத்திலும் வளர்கிறார்.  1912 ஆம் ஆண்டில் இளம்கலை  கல்வியை பம்பாய் பல்கலைக்கழத்தில் முடிக்கிறார் அண்ணல். அடுத்த ஆண்டான 1913 பிப்ரவரி 2 ஆம் தேதி அண்ணலின் தந்தை காலமாகிறார். அதே ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி,  அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை கல்வியைப் பெறுவதற்கு புறப்பட்டுச் செல்கிறார். அப்போது அண்ணலுக்கு வயது 22. அடுத்த ஆண்டான 1914 இல் பண்டிதர் அயோத்திதாசர் இயற்கையடைகிறார். அதாவது பண்டிதர் இறப்பதற்கும் ஓராண்டுக்கு முன்னவே அண்ணல் அமெரிக்காவிற்கு கல்வி கற்க சென்றுவிடுகிறார். மேலும் அவருக்கு பண்டிதர் அயோத்திதாசர் என்பவரைப் பற்றியும் எதுவும் அப்போது தெரியாது. 

எனவே, 'அம்பேத்கர் தமிழகம் வந்த போது அயோத்திதாசரை பார்க்காமல் போய்விட்டார்' என்று சுபவீ கூறுவது அப்பட்டமான கட்டுக்கதையைத் தவிர வேறொன்றும் இல்லை. இந்தக் கட்டுக்கதையின் இன்னொரு கிளைக்கதையையும் பற்றியும் பார்த்துவிடுவோம்.

அதாவது, "லட்சுமி நரசுவை அம்பேத்கர் பார்த்தார்" என்கிறார் சுபவீ. மேலும் அதை "அம்பேத்கரே சொல்கிறார்" என்றும் கதையை நீட்டுகிறார்.  இவையும் உண்மை இல்லை.சரி உண்மை என்ன? 

பௌத்த அறிஞரும் பேராசிரியருமான பொ.லட்சிமி நரசு அவர்கள் 1861 இல் பிறந்தவர். பண்டிதரோடு இணைந்தும், விலகியும் நின்று பௌத்தத்தை மீட்டுருவாக்கம் செய்த ஆளுமை. பண்டிதரின் மறைவுக்குப் பிறகு அவர் உருவாக்கிய தென்னிந்திய சாக்கைய பௌத்த சங்கத்தாருடன் நெருக்கமாகவும் இருந்தவர். தமது 73 ஆவது வயதில் 1934, ஜூலை 14 ஆம் தேதியில் நரசு இயற்கையடைந்தார். அதற்கும் அடுத்த ஆண்டு 1935 அக்டோடபர் 13 ஆம் தேதி,மகாராஷ்டிரா மாநில,  நாசிக் மாவட்டத்தின் இயாலோவில் நடந்த மாநாட்டில் "நான் இந்துவாக இறக்கமாட்டேன்" என்று முழங்கினார் அண்ணல். 

அதன்பிறகுதான் அண்ணலின் பிரவேசம் மதத்தின் பக்கம் வேகமெடுக்கிறது. பட்டியலின வரலாறு அவரை பௌத்தத்தில் கொண்டு போய் நிறுத்தியது. அதைத் தொடர்ந்து பௌத்தம் குறித்த ஆய்வுகளை மேலும் விரிவாக்குகிறார் அண்ணல். பல்வேறு இடங்களுக்கும் பௌத்தத்தின் தடம் தேடிச் சென்ற அண்ணல், தென்னிந்திய பௌத்த தகவல்களை சேகரிக்க தமிழகமும் வந்தார். அப்போது  லட்சுமி நரசு அவர்கள் இறந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. நரசுவின் குடும்பத்தினரை மட்டும் சந்தித்துப் பேசினார் அண்ணல். அதைத் தொடர்ந்து, லட்சுமி நரசு அவர்களின்  The Essence Of Buddhism  என்னும் ஆங்கில நூலை 1948 ஆம் ஆண்டு தமது முன்னைரையுடன் மீண்டும் கொண்டுவந்தார் அண்ணல்.

இவைதான் உண்மை. பண்டிதர் இறந்து பல ஆண்டுகள் கழித்துதான் அண்ணல் தமிழகம் வந்தார். அண்ணல் நரசுவையும் நேரடியாகப் பார்க்கவுமில்லை. நரசுவின் நூல் ஆங்கிலத்தில் இருந்ததால் அதன் மூலம்தான் நரசுவின் அறிவை அடையாளம் கண்டார் அண்ணல். பண்டிதரின் நூட்கள் தமிழிலே இருந்ததால் அதிகம் அவர் பற்றிய விரிவான அறிதலுக்கு அண்ணலால் வரமுடியவில்லை. ஆனால், பண்டிதரை அண்ணல் அறிந்திருந்தார். இவ்வுண்மைகளின் மீதுதான் திராவிடப் போர்வையை வீசி கண்கட்டு வித்தையை  நிகழ்த்துகிறார் சுபவீ.

சுபவீ தம்மை ஒரு பகுத்தறிவாளராக அடையாளப்படுத்தி வருகிறார். இன்னொருபக்கம் தலித் வரலாற்றின் மீது இத்தகைய திரிபு வேலைகளை எந்த கூச்சமும் இல்லாமல் வெளிப்படையாக செய்து வருகிறார். இது அவருடைய தனிப்பட்ட குணமாகப் பார்க்க முடியவில்லை. தலித் வரலாற்றின் மீது கடும் ஆத்திரமும் பொறாமையும் கொண்ட சாதி இந்துச் சமூகத்தின் விளைச்சலாகவே பார்க்கமுடிகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் சுபவீ போன்றவர்கள் தலித்திய கேள்விகளாலும் வரலாற்று மீட்புகளாலும் கடும் பதற்றமடைகிறார்கள். பதற்றம் அதிகமாக, அதிகமாக அவர்களின் கட்டுக்கதைகளும் அதிகமாகின்றன. 

கட்டுக்கதைகளால் ஆகும் இருளை மெய்யொளி நீக்கும்.

(2018/டிசம்பர் 11 இல், முகநூலில் எழுதப்பட்ட எதிர்வினைக் கட்டுரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...