ஞாயிறு, 16 ஜூன், 2024

எம்.சி.ராஜா எனும் கல்வியாளர்.

 

ஸ்டாலின் தி 


'எம்.சி.ராஜா அவர்கள்தான், அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகள் உருவாகக் காரணமாக இருந்தார்' என்பது பரவலாக அறிந்த தகவல். இதன் மூலம் அவர் தலித் மாணவர்களுக் காக மட்டுமே சிந்தித்தார், உழைத்தார் என்கிற தோற்றத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. ஆனால் உண்மை என்ன? அவர் அப்படி ஒரு சமூகத்தைச் சார்ந்த மாணவர்களுக்குத்தான் பாடுபட்டாரா?

அன்றைக்கு உருவான தலித் சமூகத்தலைவர்கள் போலவே, கல்வி மீது கவனமும் வளரும் தலைமுறைகள் மீது அக்கறையும் கொண்டவர் தான் பெருந்தலைவர் ராஜா. சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் சிறந்த ஆசிரியராக பணியாற்றினார். அவர் வெறுமனே கற்பிக்கும் ஆசிரியரிக அல்லாமல் கல்வி சிந்தனையாளராக திகழ்ந்தார். எல்லோருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்று செயல்பட்டு பல பாடநூல்களை இயற்றினார். அவரது கல்வி சிந்தனையை வரவேற்று பிரிட்டீஷ் ஆளுநரான திரு. பெனட்லான்ட் அவர்கள், பெருந்தலைவரை ஆரம்பக் கல்விக் குழுவில் 1919 இல் இணைத்தார். அதன்பிறகு, தமது அறிவார்ந்த பணிகளால் 1924 இல், சென்னைப் பல்கலைக் கழத்தின் ஆட்சிமன்றக் குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டார். மாணவர்களுக்கான விடுதிகளின் தேவையை அரசுக்கு எடுத்துரைத்தார். அப்போதுதான் மாணவர் விடுதிகள் நிறுவப்பட்டன. மேலும், 1926 இல் பாடிசன் விடுதிக்குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டார். தொடர்நது அவர் கல்விப்பணிக்கு ஆற்றிய பெருந்தொண்டை மதிக்கும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் 1927 இல் அவரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவிற்கு இரண்டாம் பருவ காலத்திற்கும் நியமித்தார் ஆளுநர் திரு. கோஷென் பிரபு அவர்கள். இவ்வாறு கல்விப்பணியாற்றிய பெருந்தலைவர் அத்தோடு நிற்காமல் மாணவர்களின் சமூக பற்றையும், சேவை மனப்பான்மையையும், தன்னம்பிக்கை உணர்வையும் ஊக்குவிக்கும் விதமாக 'சாரணர் இயக்கத்தை' தலைமையேற்று வடிவமைத்தார். பள்ளிகளின் சாரணர் இயக்குனராகவும் பணியாற்றி மாணவர்களை சீர்படுத்தினார். வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையின் போது இளவரசரின் பெயரிலேயே சாரணர் அணியை துவக்கினார். ஆளுநர் பென்ட்லான்ட் பிரபுவின் அழைப்பில் அரசினர் மாளிகையில் நடந்த சாரணர் இயக்கம் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற பெருந்தலைவர் செங்கல்பட்டு மாவட்டத்தின் சாரணர் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். பள்ளிகளில் அமைக்கப்பட்ட சாரணர் இயக்கத்தில் மட்டுமல்ல அதற்கும் வெளியே ஒரு பொது சாரணர் இயக்கத்தின் தேவையையும் அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய சிறந்த, புகழ்மிக்க கல்வியாளரான பெருந் தலைவர் எம்.சி.ராஜா அவர்களை நம் பள்ளி பாட நூல்களில் பாடமாக வைக்காமல் தமது தீண்டாமையை கடைப்பிடிக்கிறது தமிழக கல்வித்துறை!



*ஜூன்17: பெருந்தலைவர் எம்.சி.ராஜா பிறந்தநாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நினைவில் நிற்கும் ஆசிரியப் பெருமக்கள்.

ஸ்டாலின் தி  1 எங்கள் ஊர் டேனிஷ் மிஷன் பள்ளிதான் இறையூர், பெண்ணாடம் அம்பேத்கர் நகர் ஆகியபகுதியினருக்கும் அப்போது பள்ளியாக இருந்தது. இதில் பண...