திங்கள், 17 ஜூன், 2024

மாவீரர் ஐயன்காளி.

  
ஸ்டாலின் தி 


கேரளாவில் இயற்கை எழில் கொஞ்சும் வெங்கனூர் என்னும் சிறுகிராமத்தில் 1863-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி அய்யன்-மாலா தம்பதிகளுக்கு காளி பிறந்தார்.  காளி, அப்பாவினுடைய பெயரைச் சேர்த்துக் கொண்டு அய்யங்காளி ஆனார்.

அய்யங்காளி பலம் பொருந்தியவாராவும், உற்சாகம் மிகுந்தவராகவும் இருந்தார். நாட்டுப்புறக் கலைகளிலும், கால்பந்து, மட்டைப்பந்து விளையாடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த அவர் சிறந்த உடற்பயிற்சி வீரராகவும் இருந்தார்.

ஒடுக்கபட்ட மக்கள் பொது இடங்களில் நடமாடக் கூடாது என தடுக்கபட்டிருந்த காலம் அது. அதே போல் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலாடையோ, தோள் துண்டோ, தலைப்பாகையோ அணியக்கூடாது என்ற கட்டுப்பாடுகளும் அன்று விதிக்கபட்டிருந்தது. 

அய்யங்காளின் முதல் புரட்சி இந்த மாதிரி ஆடைகளுடன் பொது இடங்களில் செல்வது தான். அக்காலத்தில் வெளுத்த வேட்டி கட்டுவதே சமூக எதிர்பை காட்டுவதின் அடையாளம் தான். வெள்ளை அரைக்கை பணியன் அணிந்து, தோளில் துண்டும், தலையில் வட்டக்கட்டுமாக எப்போதும் தோற்றமளித்தார் அய்யங்காளி அவர்கள்.

சமூகத்தில் நிகழும் தீண்டாமை கண்டு மனம் நொந்து, ஓய்வில்லாமல் உழைத்த அய்யங்காளி அவர்களுக்கு அவருடைய பெற்றோர் 1888ஆம் ஆண்டில் மச்சாங்குழியைச் சேர்ந்த செல்லம்மாவைத் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகளும் (பொன்னு, செல்லப்பன், கொச்சுகுஞ்நு, சிவதாணு) ஒரு பெண் குழந்தை தங்கம்மாவும் பிறந்தனர். 

1898 இல் அய்யங்காளி அவர்கள் ஒரு வில் வண்டி வாங்கி, காளைகள் பூட்டி, ஆதிக்க சாதியர் தெருக்களில் சுற்றித்திரிய தொடங்கினார். காளைகளின் வெண்கலக் கழுத்து மணிகள் தெருக்களில் அவர் வருகையை கம்பீரமாக அறிவித்தன. இது ஆதிக்க சாதிக்காரர்களுக்கு படுங்கோபத்துக்குள்ளாக்கியது. தீண்டாமைக்கு எதிராக அவருடைய திட்டமிட்ட முதல் நடவடிக்கை இது.

கண்ணுக்கு புலப்படாத தீண்டாமைச் சுவர் அய்யன் காளியின் காளைகளின் வெண்கல மணியோசையால் நடுங்குவதை பொறுக்காத ஆதிக்க சாதிகாரர்கள், அவர் வண்டியைத் தடுத்தார்கள். "தோளில் போட்டிருக்கும் துண்டை எடுடா?" என்று அதட்டினார்கள். தான் மறைத்து வத்திருந்த கத்தியை தூக்கினார் அய்யன்காளி 'இந்த கத்தியும், என் உடம்பில் உயிரும் இருக்கும்வரை  காளியிடம் உங்கள் வேலை எதுவும் எடுபடாது' என்றார்.
காளியின் இந்தப் பதில் கேரளம் முழுவதும் எதிரொலித்தது.

சமுதாய சுதந்திரத்திற்கான போராட்டங்களில் அய்யங்காளி மிகுந்த வீரத்துடன் பங்கு கொண்டார். சுதந்திரம் என்று அவர் சொல்லியிருந்தது சமத்துவமும் மரியாதையுமாகும். சமூகத்தின் தீமைகளுக்கு எதிராக, அதற்கிடையில் சிக்கிநசுங்கிக் கொண்டிருந்த பட்டியலின மக்கள் பயன்பெறும் வகையில் ஒன்றுதிரட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் புரிந்து கொண்டிருந்தார். அவர்களை ஒரு கொடிக்குக் கீழ் கொண்டு வருவதற்காக 1907-ல் "சாது ஜன பரிபாலன சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கினார்.  பட்டியலின மக்கள் அனைவரையும் விடுதலைபடுத்தும் சங்கமாகவே அமைந்தது. வெகு விரைவில் திருவிதாங்கூர் முழுவதும் சங்கத்தின் கிளைகள் உருவாகின. தீண்டாமை, சாதி ஒழிப்பு, சமூகத்தில் நிலவிய மற்ற மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக சக்திவாய்ந்த பிரச்சாரம் செய்தார்.

நிலைமை இப்படி இருந்தாலும் புலையர் குழந்தைகள் அரசு பள்ளிகளில் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. அய்யன் காளி அதற்கான முயற்சியில் இறங்கினார். ஆதிக்க சாதிகாரர்கள், குறிப்பாக அன்றைய நாயர்கள் இதற்க்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். தன் சொந்த முயற்ச்சியால் ஒரு திண்ணைப் பள்ளிகூடம் ஆரம்பித்தார் அய்யன்காளி. அதையும் அவர்களால் நடத்த முடியவில்லை. ஆதிக்க சாதி எதிர்ப்பு ஒரு பக்கமென்றால் ஆசிரியர் இல்லாப் பஞ்சம் இன்னொரு பக்கம்.

இந்த சூழ்நிலையில்தான் அய்யன்காளி அன்றைய தலைமைக்கல்வி அதிகாரியைச் சந்தித்து தன் கோரிக்கையை சமர்ப்பித்தார் அதிகாரி ஒரு இஸ்லாமியர். அய்யங்காளின் வேண்டுகோளை ஏற்று, புலையர்களையும் பள்ளிகூடத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கலாம் என்று பரிந்துரை செய்து, மகாராஜாவுக்கு குறிப்பு அனுப்பினார். அய்யங்காளி அவர்கள் திவானையும், மகாராஜாவையும் பல முறை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

இம்மாதிரியான முயற்ச்சிகளின் பலனாக திருவிதாங்கூர் அரசு, பட்டியல் மக்களை அரசு பள்ளிகூடங்களில் சேர்த்துக்கொள்ளலாம் என்று ஒரு அறிக்கையை 1910-ல் வெளியிட்டது.

பல போராட்டங்களுடைய பலனாய் 1911 டிசம்பர் 5ஆம் நாள் "சாது ஜனபரிபாலன சங்கத்"தினுடைய தலைவர் என்னும் நிலையில் தலித்துகளினுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக சிறீமூலம் சட்டசபைக்கு அய்யங்காளி பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

அமைப்பினுடைய செயல்பாடுகளுக்காக புதிய முறைகள் பின்பற்றப்பட்டன. 1916ஆம் ஆண்டு சாது ஜன பரிபாலினி  என்னும் பெயரில் சங்கனாசேரியிலிருந்து மாத இதழ் தொடங்கப்பட்டது. 

கையெழுத்து மட்டுமே போடதெரிந்த அய்யன்காளி. தன் சமூகத்தில் உள்ள படித்த இளைஞர்களை திரட்டி அவர்களின் உதவியோடு பத்திரி்கையை நடத்தினார். இந்த பத்திரிக்கை மக்களிடையே கல்வி கற்க தூண்டியது. அதைவிட முக்கியமாக பட்டியல் மக்களின் பல்வேறு பிரச்சனைகளை புரிந்துகொள்ள உதவியது.

புலயைர்கள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மேலாடை அணியும் உரிமை பெறவில்லை. மார்புகளை மறைக்கும் வகையில் பெரிய பெரிய பாசி பவளங்களாலும், துளையிடபட்ட சிறிய கற்களான மாலைகளை மார்பு நிறைய அணிந்து மானம் காத்து வந்தார்கள். இந்தக் கல் மாலை அணியும் வழக்கத்தை நிறுத்தி, புலையர் பெண்களும் மேலாடை அணிய ஏற்பாடு செய்ய விரும்பினார் அய்யன்காளி.  பெண்களை திரட்டி அவர்களை தங்கள் கல் மாலைகளை அறுத்து எரிந்துவிட்டு, மார்பைத் துணியால் மறைக்கச்சொல்லி போராட்டம் தொடங்கினார். 1915-16 ஆகிய இரு ஆண்டுகள் நடந்தது இந்தப்போர், பிறகு "இச்சம்பவம் கல் மாலை போர்" என்று வரலாற்றாளர்களால் புகழபட்டது.

அய்யங்காளி அவர்களாலும், நாராயண குரு அவர்களாலும் தென்கேரளவில் நடந்த நீண்ட போராட்டங்கள் இந்துக்களிடையே சில மாற்றங்களை ஏற்படுத்தியது. தலித்துக்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் அதிக காலம் அடக்கியாள முடியாது என்பதைப் புரிந்து கொண்ட மன்னரும் அவருடைய பணியாளர்களும் அவர்களுடன் ஒத்துப் போகும் எண்ணத்தை வெளிப்படுத்தினர். அதனுடைய பலனாய் 1946 நவம்பர் 12ல் கோவில் நுழைவு விளம்பரம் வெளியிடப்பட்டது. 

ஏழை மக்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட. சாது ஜன பரிபாலன சங்கம் அய்யங்காளி அவர்களாலும் மற்ற தலைவர்களாலும் தொடர்ச்சியான முயற்சியால் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக செயல்ப்பட்டது.

அய்யங்காளியின் சமூக போராட்டத்தை  காந்தி நேரில் வந்து பாராட்டினார். மேலும் ரவிந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற இதர தலைவர்களும் கடித தொடர்பில் இருந்தனர்.

மேலும் அய்யங்காளியைப் பொருத்தவரை, மானமும் சுயமரியாதையும் இல்லாத ஒரு மனிதன் உயிருடன் இருக்க வேண்டி வருவதை விட அவமான கரமான ஒன்று வேறில்லை என்பார். 1980ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி  "இந்தியாவினுடைய மகானான புத்திரன்" என்று இந்திராகாந்தி அவருடைய சிலையை திறந்து வைத்து சிறப்பித்து கூறினார்.

தொடர்ந்து போராட்டங்கள், மோதல்கள், எதிர்தாக்குல்கள் இவைகளிலேயே வாழ்வின் பெரும்பகுதியை கழித்த அய்யன்காளியின் உடல் நிலை படிப்படியாக மோசமடைந்து 1941 ஜூன் 18 ஆம் நாள் அவர் தன் 77ஆவது வயதில் இயற்கையடைந்தார்.


(ஜூன் 18: மாவீரர் ஐயன்காளி நினைவு நாள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...