செவ்வாய், 18 ஜூன், 2024

ஆதிதிராவிடர் எனும் பெயரடையாள வரலாற்றில் நீதிக்கட்சிக்கு எந்த இடம்?



ஸ்டாலின் தி



"ஆதிதிராவிடர் அடையாளத்தை கொடுத்ததே நீதிக்கட்சிதான்" என்று திராவிட இயக்கத்தினர் குறிப்பாக, அதிலுள்ள சாதி இந்து அறிவாளிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர். இது உண்மையா? தலித்துகள் நீதிக்கட்சி வரும்வரை அடையாளமற்று கிடந்தார்களா?

இல்லை. ஆதிதிராவிடர் என்கிற அடையாளத்தை ஆதிதிராவிடர்கள்தான் உருவாக்கினார்கள். 1881 இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேரி மக்களை தனி அடையாளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்கிற குரல் சேரி ஆளுமைகளிடம் எழுந்தது. அவ்வாளுமைகளில் முதன்மையானவர் பண்டிதர் அயோத்திதாசர். சாதியற்ற தமிழர், சாதியற்ற திராவிடர், ஆதிதிராவிடர் போன்ற அடையாளங்கள் முன்வைக்கப்பட்டன. சாதியின் பெயரால் தமிழ் சாதி இந்துக்கள் அடையாளமிட்டுக்கொண்டிருந்த அன்றைய காலக்கட்டத்தில் சாதி பேத அடையாளத்தை ஒதுக்க நினைத்த தலித் தலைவர்களும், தலித் அறிஞர்களும் சாதி பெயரற்ற ஓர் அடையாளத்தை விரும்பினார்கள். அவ்வகையில்தான் தமிழர், திராவிடர்போன்ற அடையாளங்களை அவர்கள் தேர்வு செய்தனர். மொழிரீதியான சொல்லாடலில் தமிழர் என்பதும் அரசியலில் சொல்லாடலில் திராவிடர் என்பதும் அடையாளச் சொற்களாக எடுத்தாளப்பட்டன. பண்டிதர் தாம் நடத்திய இதழுக்கு தமிழன் என்றும் அமைப்புக்கு ஆதிதிராவிட மகாசபை என்றும் பெயரிட்டது உதாரணம்.

இதைத் தொடர்ந்து 1882 இல் ஜான் ரத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்கிற அமைப்பை உருவாக்கினார். தொடர்ந்து அவர் திராவிட பாண்டியன் என்னும் பத்திரிக்கையை கொண்டுவந்தார்; பண்டிதர் அதன் துணை ஆசிரியராக பணியாற்றினார். சுமார் பத்தாண்டுகளுக்கு பிறகு, நீலகிரியில் 1891 ஆம் ஆண்டு திராவிடர் மகாசபை சார்பில் மாநாடு நடைபெற்றது. பத்தம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற இம்மாநாட்டின் தலைவர் திராவிட மகாசபையின் தலைவர் பண்டிதராவார். திராவிட மகாசபையானது 1892 இல் ஆதிதிராவிட மகாசபை என்று பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆதிதிராவிட அடையாளம் சேரி மக்களிடம் குறிப்பாக, கற்றோர் தரப்பில் புதிய அடையாளமாக வளர்ந்துவந்தது. 1907 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையிலிருந்து
வெளிவந்த ஓர் பத்திரிக்கையின் பெயர் ஆதிதிராவிட மித்ரன். அதே இலங்கையிலிருந்து
1919 இல் வந்த இன்னொரு பத்திரிக்கைக்கு 
'ஆதிதிராவிடன்' என்று பெயரிடப்பட்டது. இவ்விரண்டும் தலித்துளால் நடத்தப்பட்ட பத்திரிக்கைகள்.

மாண்டேகு-சேம்ஸ்போடு ஆணையத்திடம்1917 இல் தலைவர்கள் எம்.சிராஜா, வி.பி.வேணுகோபால் பிள்ளை, கே.முனுசாமி பிள்ளை, வி.பி.வாசுதேவபிள்ளை, வி.ராஜரத்னம்பிள்ளை, எம்.சண்முகம்பிள்ளை உள்ளிட்டோர் கையொப்பமிட்டு அளித்த அறிக்கையிலும் ஆதிதிராவிடர் என்கிற அடையாளமே வலியுறுத்தப்பட்டிருந்தது. அதற்கும் அடுத்தாண்டான 1918 இல் ஆதிதிராவிடர் மகாஜன சபையானது, ஆதிதிராவிடர் அடையாளத்தைக் கோரி அரசிடமும் மக்களிடமும் தொடர் பிரச்சாரம் செய்துவந்தது.

இவற்றைத் தொடர்ந்து 1921 மக்கள் தொகை கணக்கெடுப்பில், சென்னை மகாணத்தின் அன்றைய சுமார் 63 இலட்சம் தலித்துகளில் சுமார் 15 ஆயிரம் பேர் தங்களை ஆதிதிராவிடர் என்று கூறி பதிவு செய்தனர்.

இவ்வரலாற்றின் தொடர்ச்சியாக, நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்கள், சேரிமக்களின் பொது அடையாளப்பெயராக 'ஆதிதிராவிடர்' என்கிற பெயரை சூட்ட வேண்டுமென்று சென்னை சட்டமன்றத்தில் 1922 ஜனவரி 20 இல் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். நம்பெருமாள் செட்டியார் அவர்கள் தீர்மானத்தை வழிமொழிந்தும் எம்.சி.மதுரைப்பிள்ளை அவர்கள் தீர்மானத்தை ஆதரித்தும் உரையாற்றினார்கள். இறுதியில் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது. அதன்படி 1922 மார்ச் 22 இல், ஆதிதிராவிடர் பெயரை அங்கீகரித்து அரசு ஆணையிட்டது.  

அதாவது ஆதிதிராவிடர் எனும் அடையாளப்பெயர் தலித்துகளிடம் உருவாகி சுமார் நாற்பதாண்டுகளாக தலித் அறிஞர்களால் தொடர்ந்து பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, வலியுறுத்தப்பட்ட பிறகுதான் அரசின் ஒப்புதலை பெறமுடிந்தது. இவற்றுக்குப் பின்னால், தலித் சுயமரியாதை உணர்வும், சாதி இழிவுமீதான எதிர்ப்புக்குணமும், விடாமுயற்சியும், தீர்க்கமான பார்வையும் இருந்திருக்கின்றன.
இத்தனை அம்சங்களைக் கொண்ட சுமார் அரைநூற்றாண்டு வரலாற்றை மறைக்கும் விதமாக, நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் தாமாகவே முன்வந்து ஆதிதிராவிடர் அடையாளத்தைக் கொடுத்தது என்பது போன்ற பிரச்சாரமானது தலித் வரலாற்றின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, சுயமரியாதைக்கான போராட்டத்தின் மீதான அலட்சியமும் ஆகும்.  

சரி.நீதிக்கட்சி ஆதிதிராவிடர் என்பதை விரும்பியதேயில்லையா என்று யாரேனும் கேட்கலாம்.
நீதிக்கட்சி எப்போது ஆதிதிராவிடர் என்பதை முக்கியமானதாக கருதியது என்றால், வட்டமேசை மாநாடுகளில் அண்ணலிடம் நிலைகுலைந்து போயிருந்த காந்தி அவர்கள் 'ஹரிஜன்' எனும் அடையாளத்தை எடுத்துக்கொண்டு தலித்துகளிடம் வந்தார். அப்போது அந்த அடையாளத்தை அண்ணல் போன்றவர்கள் ஏற்கவில்லை. காந்தியின் ஹரிஜன அடையாள அரசியலுக்கு எதிரான சிந்தனைகள் இந்தியா முழுவதும் தலித்துகளிடம் எழுந்தன. அதேநேரத்தில், தமிழகத்தில் தலித்துகளை தங்களுடைய பார்ப்பரனல்லாதோர் அரசியலுக்கு பலமாக பயன்படுத்த வேண்டுமென்கிற கட்டாயமும் நீதிக்கட்சிக்கு வந்திருந்தது. 

அந்நிலையில்தான், 1940 ஆம் ஆண்டு ஆகஸ்டு 4 இல், பெரியார் ஈ.வெ.ரா தலைமையில் திருவாரூரில் நீதிக்கட்சியின் 16வது மாகாண மாநாடு நடைபெற்றது. அம்மாநாடு 'அரிஜன்' எனும் வார்த்தைக்கு மாற்றாக 'ஆதிதிராவிடர்' என்ற பெயரை பயன்படுத்த வேண்டுமென்று அரசாங்கத்தையும், மக்களையும் கேட்டுக்கொண்டது. அதாவது, ஏற்கனவே தலித்துகளிடம் அறுபதாண்டுகளாக புழக்கத்திலிருந்த, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் அரசு ஒப்புதல் அளித்த அடையாளத்தையே பெரியாரின் நீதிக்கட்சியும் பரிந்துரை செய்தது என்பதே வரலாறு. 

(முகநூலில் 2019 ஜூன் 17 இல் எழுதப்பட்ட பதிவு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...