சனி, 19 அக்டோபர், 2024

உடன்கட்டை ஏற்றப்பட்ட நீதி.




ஸ்டாலின் தி 

1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகிலுள்ள தியோராலோ என்னும் கிராமத்தில் உடன்கட்டை ஏற்றப்பட்டார் ரூப் குவர்பா கன்வர் என்னும் இளம்பெண். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. திருமணம் ஆகி எட்டே மாதங்கள் ஆகியிருந்தன. தியோராலோவைச் சார்ந்த மால்சிங் செகாவத் என்பவர்தான் அப்பெண்ணின் கணவர். தம்முடைய 24 ஆவது வயதில் நோய்வாய்ப்பட்டு அவர் இறந்தார். அவரை தகனம் செய்வதற்கான இறுதி சடங்கில் ரூப் கன்வரை உடன்கட்டை ஏற்ற அவரை அழைத்துக்கொண்டு மால்சிங்கின் உறவினர்களும் சாதியினரும் ஊர்வலம் (உடன்கட்டைக்கான இந்த ஊர்வலம் (shobha yatra) ஷோபா யாத்திரை என்று அழைக்கப்படுகிறது)
சென்றனர். இறுதியாக ரூப் கன்வர் அவருடைய கணவனின் உடல் எரியும் சிதையில் ஏற்றப்பட்டார்; துடிதுடிக்க நெருப்பில் தள்ளப்பட்டு கொல்லப்பட்டார். இறுதி சடங்கில் கூடியிருந்த ஆயிரம் பேர்களும் அந்தக் கொடூரத்தை தங்களுடைய பண்பாட்டுக் கடமையாக கண்டுகளித்து விட்டு கலைந்து சென்றனர். ரூப் கன்வரை உடன்கட்டையில் ஏற்றி கொலை செய்தவர்கள் தீவிர சாதிய-சனாதன காப்பாளர்களான ராஜ்புத்திர‌ சாதியினர். 

1829 ஆம் ஆண்டு உடன்கட்டை ஏற்றப்படுவதை தடை செய்தது பிரிட்டிஷ் அரசு. ஆனால், சுதேசிகளின்‌ ஆட்சியில் ரூப் கன்வர் உடன்கட்டைத் தீயில் தள்ளி கொல்லப்பட்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட உடன்கட்டை கொடுமைகளின் எண்ணிக்கை 40. நாற்பத்தி ஓராவது பெண்தான் ரூப் கன்வர். ரூப் கன்வர் உடன் கட்டை கொலையின் போது, காங்கிரஸ் ஆட்சியின் பிரதமராக ராஜீவ்காந்தி இருந்தார். ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ்தான் ஆட்சி செய்தது; ஹரிதேவ் ஜோஷி முதல்வராக இருந்தார். ரூப் கன்வர் உடன் கட்டை கொலையைப் பற்றி கேள்வி எழுந்த போது முதல்வராக பதில் சொல்ல வேண்டிய ஹரிதேவ் ஜோஷி, "மக்களின் வழிபாடுகளை தடுக்க முடியாது" என்று பார்ப்பனராக பதில் கூறி உடன்கட்டையை நியாயப்படுத்தினார். நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. அதன் பிறகே 'ரூப் கன்வரின் மாமனார், கொழுந்தனார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

அடுத்த ஆண்டில் ரூப் கன்வரை உடன்கட்டை ஏற்றிய முதலாவது ஆண்டை பலர் கூடி புனித சடங்குகளை நடத்திக் கொண்டாடினர். அதே ஆண்டில்(1988)‌ தான் 'உடன்கட்டையை நடைமுறைப்படுத்துவது மட்டுமல்ல, அதை அங்கீகரிப்பதுவும், புனிதப்படுத்துவதும் கூட கடுங்குற்றம்தான். அப்படி செய்வோருக்கு ஏழாண்டுகள் வரை சிறை தண்டனை' என்கிற சட்டத்திருத்தம் தேசம் முழுமைக்கும் நடைமுறைக்கு வந்தது. அச்சடத்தின்கீழ் ரூப் உடன்கட்டை கொலையை புனித சடங்கு மூலம் கொண்டாடியவர்களில் 45 பேர்கள் மட்டும் கைது செய்யப்பட்டார்கள். 

ரூப் உடன்கட்டை கொலையில் நேரடியாக தொடர்புடைய அவரின் மாமனார் சுமர்சிங் மற்றும் கொழுந்தனார் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று 1996 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டனர். ரூப் உடன்கட்டை கொலையை புனிதப்படுத்திய 45 பேர்களில் 25 பேர்களை ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்களில் 6 பேர் சிறையிலேயே இறந்துவிட்டனர். பிணையில் வெளியே வந்த 6 பேர் தலைமறைவாகிவிட்டார்கள் என்று காவல்துறை கூறிவிட்டது. எஞ்சிய 8 குற்றவாளிகளான 'மகேந்திர சிங், ஷ்ரவன் சிங், நிஹால் சிங், ஜிதேந்திர சிங், உதய் சிங், தஸ்ரத் சிங், லக்ஷ்மண் சிங் பன்வர் சிங்' ஆகியோரை கடந்த 9/10/2024 அன்று 
ஜெய்ப்பூர் சதி நிவாரண சிறப்பு நீதிமன்றம் (நீதிபதி அஷி கன்சால்) 'போதிய ஆதாரம் இல்லை' என்று கூறி விடுதலை செய்தது. சுதந்திர இந்தியாவில் கடைசியாக பதியப்பட்ட உடன்கட்டை கொலை வழக்கில், 37 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணையில் ஆதாரங்கள் இல்லை என்று எளிதாக கூறி குற்றவாளிகள் தப்பிக்க வைக்கப்படுவது சனாதன சக்திகளின் பிடியில்தான் சுதந்திர இந்தியாவும் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஆயிரத்திற்கும் அதிகமான பேர் ஓர் பெண்ணை ஊர்வலமாக இழுத்துச்சென்று தீயில் தள்ளி 'ஜெய் சதி மாதாகீ ஜே' என முழக்கமிட்டு செய்த கடுங்குற்றத்தை நிரூபிக்க வக்கில்லாத, துணிவில்லாத, நேர்மையில்லாத அரசு நிர்வாகங்களும், பாதுகாப்புத் துறைகளும், விசாரணை அமைப்புகளும், நீதித்துறையும் நம்மை ஆண்டுகொண்டிருப்பதை நினைத்தால் வெட்கம் தான் வருகிறது. ரூப் கன்வர் கொல்லப்பட்டதற்கோ அந்த கொலையை புனிதமாக கொண்டாடியதற்கோ ஆதாரம் இல்லை என்கிறது நீதிமன்ற தீர்ப்பு. அதேவேளை, இதே தீர்ப்புதான் ரூப் கன்வர் கொலையை நடைமுறைப்படுத்திய சனாதனம் இன்னும் நாட்டை ஆளுகிறது என்பதற்கான ஆதாரமாகவும் இருக்கிறது.‌ சாதிய படிநிலையை திருமண உறவால் பாதுகாத்திடும் உத்திகளில் உடன்கட்டை ஏற்றப்படுவது ஒன்று என்பார் அண்ணல் அம்பேத்கர். இன்றைக்கு பரவலாக நடக்கும் சாதிய ஆணவக்கொலைகளும் கூட உடன்கட்டையின் சக வடிவம்தான். அன்றைக்கு ரூப் கன்வர் உடன்கட்டைக் கொலையை நடத்தியவர்களும் அதை புனிதமாக்கி கொண்டாடியவர்களும், இன்றைக்கு ஆணவக்கொலையை கொண்டாடுபவர்களும்‌ ஒரே வகையினத்தவர்கள்தான்; சாதிய-சனாதனிகள். 

ஆணவக்கொலை மலிந்துவிட்ட இக்காலத்தில் முந்தைய ஆணவக்கொலை குற்றவாளிகள் விடுதலை ஆவது குற்றச் சமூகத்திற்கு வலிமை சேர்க்கும் என்பதுதான் இதிலுள்ள கவலைக்குரிய உண்மையாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உடன்கட்டை ஏற்றப்பட்ட நீதி.

ஸ்டாலின் தி  1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகிலுள்ள தியோராலோ என்னும் கிராமத்தில் உடன்கட்டை ஏ...