வியாழன், 24 அக்டோபர், 2024

தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இந்துவும்.


ஸ்டாலின் தி 

சென்னையில் தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 18/10/2024 அன்று நடைப்பெற்ற 'ஹிந்தி மாத' கொண்டாட்ட விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.அதில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது   'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்னும் வரி பாடப்படவில்லை. அது விமர்சனமாக ஆனது. 'கவனக்குறைவாக நடந்த தவறு' என்று தூர்தர்ஷன் விளக்கம் கொடுத்தாலும், தொடர்ந்து இந்து சாதனத்தை துதிக்கும் ஆளுநரான ஆர்.என்.ரவி. பங்கேற்ற நிகழ்ச்சியில் இது நடந்ததால், ஆரிய-திராவிட மோதலின் தொடர்ச்சியாகவும் திராவிட அடையாளத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியின் எடுத்துக்காட்டாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன. தமிழ்நாடு முதல்வரான ஸ்டாலின் அவர்கள் 'ஆளுநரா? ஆரியநரா?' என்று காட்டமாகவே ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து,  மறுநாள் (19/10/2024) ஆளுநர் பங்கேற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடப்பட்டதாகவும், ஆளுநரும் எழுந்து நின்று சேர்ந்து பாடியதாகவும் செய்திகள் கூறுகின்றன. இவற்றைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பலர் ஆரிய-சனாதன-பிராமணிய  எதிர்ப்புக் கருவியாக முன்னிறுத்தி பேசிவருகிறார்கள். இது அவ்வப்போது நிகழும் உரையாடல்தான். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 23 இல் சென்னை இசை அகடாமியில், எச்.ராஜாவின் தந்தை ஹரிகரன் தொகுத்த 'தமிழ் சம்ஸ்கிருதம் அகராதி' வெளியீட்டு விழா நடைபெற்றது. அன்றைய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கிய அந்நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது  காஞ்சி (இளைய) மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது விமர்சிக்கப்பட்டது; 'திராவிடத்தின் மீதான ஆரிய ஆணவம்' என்று திராவிட அரசியல் சார்ந்தோரால் கண்டிக்கப்பட்டது. இப்போதும் அதே வகை வாதங்கள் எழுந்துள்ளன. ஆரிய சனாதனத்திற்கு மாற்றானவை திராவிடமும் தமிழும். அதனால்தான் அவ்விரண்டையும் போற்றும்(வணங்கும்) தமிழ்த்தாய் வாழ்த்தை ஆரிய தரப்பிலிருப்பவர்கள்  அவமதிக்கிறார்கள், புறக்கணிக்கிறார்கள் என்கிற கூற்று ஏறத்தாழ பொதுவான கண்டனமாக வருகிறது. மேலும், 'தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவரான மனோன்மணீயம் சுந்தரனார் 'வைதீக, ஆரிய எதிர்ப்பாளர்.அதன் அடையாளம்தான் தமிழ்த்தாய் வாழ்த்து' என்பதாகவும் பேசப்படுகிறது. குறிப்பாக, இப்பாடலை மாநிலப்பாடலாக ஆக்கும்போது அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் நீக்கப்பட்ட 'ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து' என்னும் வரியை இப்பாடலையும் இப்பாடலாசிரியரையும் ஆரிய, வைதீக எதிர்ப்பு அடையாளங்களாக காட்ட துணைக்கு வைத்துக் கொள்ளுவதைக் காணமுடிகிறது. உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதப்பட்டதன் நோக்கம்  'ஆரிய-சனாதன எதிர்ப்பை முன்வைத்து எழுதப்பட்ட பாடல்தானா? அதை இயற்றியவருக்கு அத்தகைய நோக்கம் இருந்தது என்பது உண்மையா? அவருடைய பார்வையில் ஆரிய-திராவிட அடையாளம் எதன் அடிப்படையில் அமைந்திருந்தது என்பதையெல்லாம் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

மனோன்மணீயம் என்னும் நாடக இலக்கிய  நூலை சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் எழுதி(லிட்டன்  என்னும் ஆங்கிலேயர் எழுதியThe se​cret way (இரகசிய வழி) எனும் நூலைத் தழுவி இந்நூல் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது)  உ.வே.சாமிநாத(ஐயர்)ரிடம் கொடுத்து சரிபார்க்கப்பட்டு 1891 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார் அதன் ஆசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை. அந்நூலில்தான்  'தமிழ்த்தெய்வ வணக்கம் ' என்னும் தலைப்பில் ஓர் பாடல் உள்ளது. அதைத்தான் 1970 இல் மாநிலப் பாடலாக அறிவித்தது மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. விமர்சனங்களை  தவிர்க்க நினைத்த முதல்வர் கருணாநிதி 'ஆரியம் போல் உலக வழக்கொழிந்த' என்னும் வரியை நீக்கினார். அந்த வரியைத் தான் இன்று எடுத்துக்காட்டி ஆரிய எதிர்ப்பு பாடலாக இப்பாடல் முன்வைக்கப்படுகிறது. திராவிடம் என்கிறச் சொல்லை நாங்களும் ஏற்கமாட்டோம் என்று தனிக்கொடிப் பிடிக்கிறார்கள் தமிழ்த்தேசியர் சிலர். அது தனிக்கதை. சுந்தரனார் ஆரிய எதிர்ப்பு எத்தகையது, அவருடைய திராவிட அடையாளம் எதன் அடிப்படையில் என்பதையே நாம் இங்கே கவனிக்க வேண்டிய தேவை இருக்கிறது. 

நேரடியாக கூற வேண்டும் எனில், சுந்தரனாரின் பார்வையில் ஆரியம் என்பது வைணவம்; திராவிடம் என்பது சைவம். சமஸ்கிருதத்தை வைணவ அடையாளமாகவும் தமிழை திராவிட அடையாளமாகவும் அவர் பார்த்துள்ளார். அதேவேளை, திராவிட அடையாளம் யாருக்கானது என்பதிலும் அவர் உறுதியாக இருந்துள்ளார். இவ்விடத்தில் அவர் சுந்தரனாராக இல்லாமல் சுந்தரம் பிள்ளையாகவே  நிற்கிறார். அவர் 'திராவிட இனத்தின் மலர்கள்' என்று வெள்ளாளர்களை(பிள்ளைமார் சாதியை) கூறுகிறார். ஆனால், திராவிட மொழிகளை  ஒப்பிட்டு ஆராய்ந்த கால்டுவெல் 'பறையர்களும் திராவிடர்கள்தான்' என்று கூறியதை ஏற்க மறுத்திருக்கிறார். அதாவது திராவிட (தமிழர்) அடையாளத்தில் பறையர்களுக்கு இடமில்லை என்பதுதான் சுந்தரம் பிள்ளையின் எண்ணம். 'கால்டுவெல் பறையர்களைத் திராவிடர்கள் என்றபோது, அடிமைகளான பறையர்களும் அவர்கள் எஜமானர்களான வெள்ளாளர்களும் ஓரினத்தவர்களாகின்றனர். இது சுந்தரம் பிள்ளையைக் கொந்தளித்து எழச்செய்தது' என்கிறார் மறைந்த ஆய்வாளரும் பேராசிரியருமான மு.வேதசகாய குமார்.  சுந்தரம் பிள்ளை தம்முடைய  இந்த சாதிய ஆதரவு நிலையைத்தான் திராவிடர் அடையாளத்தின் கீழ் செய்துள்ளார். மேலும், அரசியல் அடிப்பைடையில்  வெள்ளாளர்களை ஒருங்கிணைக்க முயன்றதன்  ‌மூலம்  சாதிய அரசியலின் முன்னோடியாகவும் சுந்தரம் பிள்ளை இருந்துள்ளார். அவ்வரசியலுக்கு வலிமை சேர்ப்பிக்கும் வகையில் 'சேர,சோழ,பாண்டிய அரச மரபை வெள்ளாளர் மரபாக ஆக்க விரும்பினார். 'வெள்ளாளர்கள் தங்களை சூத்திரர்களாகவோ,.  வைசியர்கள் என்றோ கருதுவது முட்டாள்தனம்; அவர்கள் சத்ரியர்கள்  என்பதாகவே அவருடைய எண்ணம் இருந்ததால்தான்   'சத்திரிய வர்ண' இடத்தை நோக்கி பிற சாதியினர் நகர்ந்ததை அவரால் ஏற்க முடியவில்லை. குறிப்பாக, சாதிய படிநிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சாதியினர்  தங்களை 'ஆண்ட சாதி' என்று சொல்லுவதை அவரால் ஏற்கவே முடியவில்லை. பறையர்களை திராவிட(தமிழர்)  அடையாளத்தில் கொண்டு வருவதை விரும்பாத சுந்தரம் பிள்ளை, நாடார்கள் மற்றும் ஈழவர்கள் அன்றைக்கு முன்னெடுத்த வர்ண உயர்வு முயற்சியையும் ஏளனப்படுத்தினார். அக்காலத்தில் சைவ தரப்பில் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்த  நீதிபதி நல்லச்சாமிக்கு எழுதிய கடிதத்தில், 
' சாணார்களும் ஈழவர்களும் ஆயிரம் கேட்டால் நூறாவது கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் சத்திரியைர்கள்  எனத் தங்களை அழைக்க உரிமை கோருகின்றைனர்’ என்று தம்முடைய வர்ணாசிரம ஆதரவு குணாம்சத்தை  காட்டியிருக்கிறார் சுந்தரம் பிள்ளை. இவற்றையெல்லாம் நோக்கும்போது, சுந்தரம் பிள்ளையின் திராவிட அல்லது தமிழ் மீதான  துதியானது சனாதனத்தை எதிர்த்து எழுந்த சிந்தனையல்ல, மாறாக தமிழ்(திராவிட) சாதிய அமைப்பை போற்றவும் நிலை நாட்டவும்  எழுந்த மனக்கிளர்ச்சிதான் அது என்கிற முடிவுக்கே நம்மால் வரமுடிகிறது. சுந்தரம் பிள்ளையின் தமிழ்த்தாய் என்பது கிட்டத்தட்ட 'வெள்ளாளர்களுக்கான தாய்தானேத் தவிர பறையர்களுக்குமான தாயல்ல'. இன்றைய நிலையில் வேண்டுமானால் சனாதனவாதிகளை எதிர்க்க சுந்தரம்பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கருவியாக பயன்படுத்தப்பட்டாலும் கூட, அப்பாடலானது சனாதனத்தின் மற்றொரு கருவியாகவே உருவாக்கப்பட்டது என்பதே நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மையாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காலனி என்னும் சொல் நீக்கமும் சாதியின் இருப்பும்.‌

ஸ்டாலின் தி 'அரசு ஆவணங்கள் மற்றும் பொது புழக்கத்தில் இருந்து காலனி என்னும் சொல் நீக்கப்படும் ' என்று இன்றைய(29/4/2025) ச...