புதன், 30 அக்டோபர், 2024

தீபாவளியும் பௌத்தமும்.



ஸ்டாலின் தி 

இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. தீபங்களை வரிசையாக ஏற்றுதல் என்னும் பொருளுடையச் சொல் தீபவளி அல்லது தீபாவளி. ஆவளி என்பது வரிசை. வம்ச வரிசை என்பது வம்ச ஆவளி> வம்சாவளி என்றாவதைப் போல, தீப ஆவளி தீபாவளி என ஆகும். ஏனையப் பண்டிகைகள் போலவே தீபாவளியும் பல தொன்மக் கதைகளை கொண்டிருக்கிறது. முழுவதும் மூடத்தனமும் பிற்போக்குத் தனமும், வன்முறைகளை ஊக்குவிக்கும் போக்கும் கொண்ட வைதீக அவதாரக் கதையைத் தாண்டி சில நற்கதைகளையும் தீபாவளி கொண்டிருக்கிறது. அத்தகைய நற்கதைகள் வெற்று நம்பிக்கையாக அல்லாமல், மக்களின் பண்பாட்டுக் கதையாடலாக வேரூன்றி இருக்கின்றன. அதனாலேயே அக்கதைகளை நாம் ஏற்கத் தக்க பண்பாட்டு மிச்சங்களாக பார்க்க வேண்டியிருக்கிறது. தீபாவளி பற்றிய பௌத்தக் கதையாடல் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காரணங்களை கொண்டிருக்கிறது. அவற்றில், புத்தரோடு தொடர்புடையது, அசோகரின் தம்ம ஏற்புடன் தொடர்புடையது, பிக்குகளின் அறிவியல் கண்டுபிடிப்பு பற்றியது என மூன்று கதையாடல்களை சுருக்கமாக இங்கே காண்போம். 

ரோகிணி ஆற்று நீர் பங்கீட்டில் சித்தார்த்தர் நாட்டிற்கும் (சாக்கியர் நாடு) அண்டை நாட்டிற்கும்(கோலியர் நாடு) போர் துவங்க இருந்த சூழலை ஆதரிக்காமல் கண்டித்ததால் சொந்த நாட்டினரலாலேயே நாடுகடத்தப்பட்டார் இளவரசரான சித்தார்த்தர். அதன் பிறகு, அவர் மானுட பிரச்சனைகள் (துக்கங்கள்) குறித்து பகுத்தாய்ந்து தீர்வுகளைத் தேடி கண்டடைந்து 'உயர் ஞானம் பெற்றார்.' உயர் ஞானம் பெற்றவரானதால்‌ சித்தார்த்தர் புத்தரானார். கபிலவஸ்துவை தலைமையாகக் கொண்ட சாக்கிய நாட்டை ஆண்டு வந்த சுத்தோதனார்தான் புத்தராக உயர்ந்த சித்தார்த்தரின் தந்தை ஆவார். புத்தராக தம்முடைய மகன் உயர்ந்தாலும் அந்த துறவு கோலத்திலிருந்து அவரை வெளியேற்ற விரும்பிய சுத்தோதனார் அவரை எப்படியாவது கபிலவஸ்துவிற்கு அழைத்து வந்து திசை மாற்ற விரும்பினார். அதற்காக, பலரை தூதர்களாக அனுப்பினார் சுத்தோதனார். ஆனால், புத்தரை அழைக்கப் போன தூதுவர்களெல்லோரும் புத்தரின் சீடர்களாக( பிக்குகளாக) ஆனார்கள். இறுதியில் காலோதயன் என்னும் அரசுத் தூதர் சென்றார். அவரும் புத்தரின் சீடரானாலும் புத்தரை கபிலவஸ்துவிற்கு அழைத்து வந்தார்; ஆனாலும், இளவரசர் சித்தார்த்தனாக அல்லாமல் புத்தராகவே போதித்து திரும்பினார் புத்தர். அப்படி கபிலவஸ்துவை புத்தர் வந்த நாளில் தீபங்களை வரிசையாக ஏற்றி கபிலவஸ்து முழுவதுமாக மக்கள் கொண்டாடினர். அதுவே, பின்னாளில் தீபாவளியாக கொண்டாடப்பட்டது என்பது ஒரு கதையாடல். 

அடுத்து, அசோகர் தொடர்புடைய தீபாவளி கதையாடல். அக்கதையாடலின்படி, பியதஸ்ஸி தேவனாம்பிரியா என்னும் பெயரைக் கொண்ட பேரரசர் பாடலிபுத்திரத்தை தலைமையாக கொண்டு ஆண்டுவந்தார். கலிங்கப் போரில் இலட்சத்திற்கும் அதிகமான பேர்களையும் படைசார்ந்த விலங்குகளையும் பியதஸ்ஸ தேவனம் பிரியவின் படை கொன்று குவித்தது. இரத்த வெள்ளத்தில் போர் வெறியின் வெற்றியை கொண்டாடிய பியதஸ்ஸனிடம் சென்ற உபகுப்தர் என்னும் பௌத்த ஞானி போரின் வெற்றியின் பின்னுள்ள அறத்தின் தோல்விகளை விளக்கினார். அதைத் தொடர்ந்துதான் அறிவொளி கண்ட பியதஸ்ஸி அசோகர் ஆக உயர்ந்தார். அசோகர் என்றால் 'அறநெறி அரசர்' என்று பொருள். அதற்கும் முன் அவர் 'சந்த சோகர் ' என்று அழைக்கப்பட்டார். சந்த சோகர் என்றால் 'கொடூர அரசன்' என்று பொருள். இவ்வாறு கொடூர மன நிலையில் இருந்து அறவோராக அசோகர் உயர்நிலை அடைந்ததை போற்றும் வகையில் அன்றைய மக்கள் எங்கெங்கும் தீபங்களை ஏற்றி கொண்டாடிய நாள்தான் தீபாவளி என்று ஆனது. 

இவற்றிலிருந்து மாறுபட்ட சற்றே மாறுபட்ட கதையாடலை தென்னிந்தியாவில் பௌத்த அறிஞராக திகழ்ந்த பண்டிதர் அயோத்திதாசர் முன்வைக்கிறார். அவருடைய பண்பாட்டு ஆய்வு பௌத்தர்களின் அறிவியலை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தது. விலங்குகளை உணவுக்காக கொல்லுவதை பௌத்தம் ஏற்றுக்கொண்டாலும், அதீதமாக விலங்குகளை உணவுக்காக கொல்லுவதை விரும்பவில்லை. புலால் தவிர்த்த நோன்புகளை கடைப்பிடிப்பது போன்ற செயல்களில் பௌத்தர்கள் ஈடுபட்டது அதனடிப்படியில்தான். உணவுக்கான எண்ணெய்(நெய்)க்காக விலங்குகளின் கொழுப்பே அக்காலத்தில் அதிகம் பயன்பாட்டில் இருந்தது. அந்நிலையில் தான் தாவர எண்ணெய்க் குறித்த சிந்தனை தீவிரமடைந்தது. பௌத்த விகார் என்றழைக்கப்படும், பௌத்த மடங்களில் தங்கியிருக்கும் பிக்குகள் போதனை மட்டுமின்றி மருத்துவம், அறிவியல், வானவியல், வேளாண்மை உள்ளிட்ட ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகளையும், கண்டுபிடிப்புகளையும் மக்களிடமும் கொண்டு சேர்த்தார்கள். 

அந்தவகையில், தென்னிந்தியாவின் 'பள்ளி' எனும் நாட்டில்- பௌத்த மடத்தில் இருந்த பிக்குகள் 'எள்' எனும் விதைகளைக் நெய்யை (கவனிக்கவும் – நெய் என்பது பொதுப்பெயராகத் தமிழில் வழங்கும் சொல். அச்சொல்லுக்கு முன் சேர்க்கப்படும் பெயர் அது எந்த நெய் என்பதைக் காட்டும்) வடித்து அதன் குணங்களையும், மருத்துவப் பயன்களையும் கண்டறிந்தார்கள். அதைத் தொடர்ந்து, பள்ளி’ நாட்டை ஆண்ட அரசரான 'பகுவன்' என்பவரிடம் பிக்குகள் எள் நெய்யைக் காட்டி அதன் பயன்களை விளக்கினார்கள். எள்ளின் மகிமையை உணர்ந்த மன்னர் பகுவன் எள்ளினை அதிகளவில் விளைவிக்க செய்தார். எள் விதையிலிருந்து நெய்யெடுத்து அதனைக் கொண்டு உணவுப்பொருள்களை தயாரிக்கவும் எள் நெய்யை தலையில் தேய்த்து நீராடவும் தம் குடிமக்களை அவர் பணித்தார். அவ்வாறு, மக்களும் அந்நாட்டின் தலை நகரில் ஓடிக்கொண்டிருந்த 'தீபவதி' ஆற்றில் எள் நெய் தேய்த்து குளியலாடி, எள் நெய்யால் செய்யப்பட்ட பலகாரங்களை உண்டு களித்து, வீடுகளிலும் பௌத்த மாடங்களிலும் தீபங்களை ஏற்றிவைத்துக் கொண்டாடினர். அந்நாளே தீபவதி நாள் என்றும் அதுவே தீபாவளி என்றானது என்றும், பெருந்திரட்டு எனும் பண்டையத் தமிழ் நூலின் ‘பாண்டி படலம்’ எனும் அத்தியாயத்தை சான்றாகக் காட்டி விளக்குகிறார் பண்டிதர் அயோத்திதாசர். 

பௌத்தத்தில் தீபாவளி குறித்து இவ்வாறான வெவ்வேறு கதைகள் கூறப்பட்டாலும், அக்கதைகளில் அறிவுக்கு புறம்பான எதுவுமில்லை. வஞ்சகம், வன்முறை, மனித உரிமை மீறல், மூட நம்பிக்கை எதுவுமில்லை. மாற்றாக, தியாகம், அறம், அறிவியல் மீதான நாட்டம் என மனித மாண்புகளே அடிப்படையாக உள்ளன. இவையே கொண்டாட்டங்களின் அடிப்படையாக இருக்க வேண்டும். அதுவே நாகரீகமான சமூகத்திற்கான சிறந்த அடையாளமாக இருக்க முடியும்.‌

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தீபாவளியும் பௌத்தமும்.

ஸ்டாலின் தி  இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. தீபங்களை வரிசையாக ஏற்றுதல் என்னும் பொருளுடையச் சொல் தீபவளி அல...