ஞாயிறு, 17 டிசம்பர், 2023

பௌத்தமும் நாத்திகமும்.


ஸ்டாலின் தி 

நாத்தீகம் என்பது முந்தைய காலத்தில் பௌத்த பிக்குகளைக் குறிப்பிடும் சொல்லாகவே இருந்தது. நாஸ்தீகர் என்பதிலிருந்தே  தற்போதைய நாத்தீகர் என்னும் சொல் வந்தது. ஆஸ்தீகர் என்பதற்கு எதிர்பதம் நாஸ்தீகர். ஆஸ்திகர் என்பவர்கள் சொத்து, பந்தம் உள்ளவர்கள். நாஸ்தீகர்கள் என்பவர்களோ சொத்து, பந்தங்களை துறந்தவர்கள். அதாவது பிக்குள். பிக்குகளின் சொத்து பிக்கு எனும் உடல்தான். அதனால்தான் அவர்களின் பிணங்கள் எரியூட்டப்பட்ட பிறகு கிடைக்கும் உடற்சாம்பல் ஆஸ்தி எனப்பட்டது.  

கடந்த நூற்றாண்டில் தமிழக சூத்திரர்களின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு நாத்தீக அடையாளம் சூட்டப்பட்டது. பிக்குகளை எதிர்த்த பார்ப்பனர் கும்பல், தங்களை விமர்சித்த கடவுள் மறுப்பு சூத்திரர்களையும் நாத்திகர்கள் என்று வசைபாடினர். அதையே தமது அடையாளமாக ஆக்கிக்கொண்டது சூத்திரர்தரப்பு. இதன் மூலம், நாத்திக அடையாளம் பௌத்த பிக்குகளிடமிருந்து பெயர்க்கப்பட்டு, இந்து மதத்தின் ஒரு பிரிவினரின் வெறும் கடவுள் மறுப்பின் அடையாளமாக ஆக்கப்பட்டது.

சூத்திர நாத்திக அரசியலில் ஆவல்கொண்டவர்கள், பௌத்த அடையாளமான நாத்திகம் எனும் சொல்லைக்கொண்டே இன்று பௌத்தத்தை கையாளுகிறார்கள்.  இவர்களகளின் பார்வையில் பௌத்தம் என்பது வெறும் கடவுள் மறுப்புவாதம் மட்டுமே.  எனவே, பௌத்தத்திற்கு வரலாற்றுப் பேச்சுத் தேவையில்லை; வழிபாடு தேவையில்லை; பண்பாடு தேவையில்லை;பண்டிகையும் தேவையில்லை என்கிறார்கள்.

ஆனால், பௌத்தம் என்பது சமயம் என்பதையோ, அது பண்பாட்டின் மூலமே உலகம் பரவி செழித்தது என்பதையோ இவர்கள் மறந்துவிடுகிறார்கள். அல்லது நினைவுப் படுத்துவதற்கு மறுத்துவிடுகிறார்கள். 

கடவுளை  புத்தரோ பௌத்தமோ  ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி ஒன்று உண்டா,  இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் பேசி நேரத்தை வீணடிப்பதையும் கூட புத்தரும் பௌத்தர்களும்  விரும்பியதில்லை. உலகியலின் பிரச்சனைகளும், அதன் காரணங்களும், அதற்கான தீர்வுகளும், அவற்றைப் பெறுவதற்கான மார்க்கங்களுமே பேசத் தகுந்தவை என்பதே புத்தரின், பௌத்தத்தின்  ஞானப் பார்வையாகும்.

எனவே, பௌத்தத்தை விரிவான நோக்கில் பயில வேண்டும். வெறுமனே கடவுள்களை கேலி செய்வதும், பக்தர்களுடன் மல்லுக்கு நிற்பதுமல்ல பௌத்தம். சமூகத்தின் விழிப்புணர்வுக்கு, மகிழ்வான வாழ்க்கைக்கு, விடுதலைக்கு பயன்படக்கூடியதுதான் பௌத்தம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...