ஸ்டாலின் தி
1919 ஆம் ஆண்டானது, இந்திய தலித் வரலாற்றில் முக்கியத்துவமான ஆண்டாகும். அந்த ஆண்டில்தான், மாண்டேகு-செம்ஸ் அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக நியமிக்கப்பட்ட சவுத் பரோ குழுவிடம், இந்திய தலித் சமூகங்களின் பிரச்சனைகளை அறிக்கையாக அளித்து, தமது தீவிர அரசியல் வரலாற்றைத் துவக்கினார் புரட்சியாளர் அம்பேத்கர். அதே ஆண்டில்தான், இந்தியாவில் முதல் முதலாக மாகாண மேலவை உறுப்பினராக ஓர் தலித் நியமிக்கப்பட்டார்; அவர் பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்கள். அதே ஆண்டில் பிறந்தவர்தான் ப.வேதமாணிக்கம் அவர்கள்.
பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களை மாகாண மேலவை உறுப்பினர்களாக நியமித்தவர் ஆளுநர் வெல்லிங்டன் பிரபு. அவருடைய பெயரில் 1918 ஆம் ஆண்டு அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் மேற்கு பகுதியான திட்டக்குடி அருகே வெட்டப்பட்டது ஒரு பாசன ஏரி. வெள்ளாற்று நீரையும், சிற்றோடைகளின் நீரையும் தேக்கி வைத்து வேளாண்மைக்கு பயன்படுத்துவதற்காக அந்த வெல்லிங்கடன் ஏரி வெட்டப்பட்ட போது அதன் கரையோர கிராமங்களின் மக்கள் ஏரிவெட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அத்தகைய கிராமங்களில் ஒன்றுதான் இளமங்கலம்.
வெல்லிங்கடன் ஏரியின் தெற்கு கரைக்கும், வெள்ளாற்றின் வடக்கு கரைக்கும் இடையில் கடலூர்-திருச்சி முக்கிய சாலையில் உள்ளது இளமங்கலம் கிராமம். திட்டக்குடியை ஒட்டி உள்ளதால் தி.இளமங்கலம் என்று அழைக்கப்படும் அக்கிராமத்தில், பவுல்-திரவியம் ஆகியோருக்கு ஆறு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். அவர்களில் ஒரு மகன் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். இரண்டாவது மகன்தான் வேதமாணிக்கம். ஏரி பணிகள் நடக்கும் போது, ஆங்கிலேயர்களிடம் இளமங்கலம் சேரி மக்கள் தங்களுடைய உழைப்பாலும், நற்குணத்தாலும் நன்மதிப்பைப் பெற்றனர். அந்த நட்புறவு பலரை கிறிஸ்தவர்களாக ஆக்கியது. ஆங்கிலேயர்களிடம் நட்பாக பழகிய குடும்பத்தினராக பவுல் குடும்பத்தார் இருந்தனர். பவுல்-திரவியம் தம்பதியரின் மூத்த மகன் மார்ட்டின் ஆற்காடு லுத்ரன் திருச்சபையின் போதகராக பல்லாண்டுகள் பணியாற்றியவர். திருச்சபயையின் முக்கிய ஆளுமையாக அவர் திகழ்ந்தார். மார்ட்டின் அவர்களின் இளைய சகோதரர்கள் அனைவருமே ஆசிரியர் பயிற்சி கல்லி பெற்றிருந்தனர். ஆசிரியர்களாகவும் பணியாற்றினர். அவர்களின் உடன்பிறந்த சகோதரியான ரஞ்சிதம் அவர்கள் பெ.பொன்னேரி கிராமத்தில் கனகசபை ஆசிரியரை திருமணம் செய்துகொண்டார். ரஞ்சிதம்-கனகசபை தம்பதியினரின் மூத்த மகன்தான் தலித் தலைவரான க.திருவள்ளுவன் ஆவார்.
சகோதரர்களைப் போலவே ஆசிரியர் பயிற்சி முடித்திருந்த வேதமாணிக்கம் அவர்கள், விருத்தாச்சலம் கஸ்பா பகுதி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். பள்ளியில் பணியாற்றி வந்தாலும் சமூகக் கொடுமைகளைக் களைய சீர்திருத்தமே முக்கியமென்று மக்களிடம் சென்று செயற்பட்டார். அவருடைய கல்வியும், மக்களின் மீதான அக்கறைம், கம்பீரமான தோற்றமும் அவரை எளிதாகவே மக்களிடம் கொண்டு சேர்த்தது. திட்டக்குடி, விருதாச்சலம் பகுதியில் அன்றைய தலித் மக்களிடம் இளம் தலைவராக வலம்வந்துகொண்டிருந்தார் வேதமாணிக்கம்.
சீர்திருத்தத்தின் ஓர் அம்சமாக, தலித்துகளுக்கு கல்வி அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், 1945 ஆம் ஆண்டில் தலித் மாணவர்கள் தங்குவதற்கு விடுதியொன்றைத் துவக்கினார். அப்போது அவருக்கு வயது 26. இரண்டாடுகள் கிராமங்களுக்குச் சென்று, மக்களிடம் தானியங்களை நன்கொடையாக பெற்று வந்து விடுதியில் மாணவர்களுக்கு உணவளித்தார். இந்திய சுதந்திரம் அடைந்த 1947 இல்தான் அந்த விடுதிக்கு அரசு அங்கீகாரம் கிடைத்தது. அக்காலத்திலேயே அவர் துவக்கிய விடுதியில் 180 மாணவர்கள் தங்கி படித்துக் கொண்டிருந்தனர். அவர் துவக்கிய விடுதியில், தலித் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஏழ்மையில் இருந்த இந்து குடும்பத்து பிள்ளைகளுக்கும் இடமளிக்கப்பட்டது.
வேதமாணிக்கத்தின் வளர்ச்சியை கண்ணுற்ற காங்கிரஸ் கட்சி அவரை 1952 இல், விருதாச்சலம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது. அத்தேர்தலில் கட்டிமுத்து என்பவர் வேதமாணிக்கத்தை வென்றார். அச்சமயத்தில் திமுகவிற்கு வரவேண்டுமென்று வேதமாணிக்கத்திற்கு அழைப்புவிடுத்தார் அண்ணாதுரை. ஆனால், காங்கிரஸிலேயே செயற்பட்டார் அவர். 1957 தேர்தலில், காங்கிரஸில் இருந்த சாதியவாதிகளின் சூழ்ச்சியால் வேதமாணிக்கத்திற்கு காங்கிரஸ் இடம் கொடுக்கவில்லை. எனவே, சுயேட்சையாக நல்லூர் பொதுத் தொகுதியில் நின்று, காங்கிரஸ வேட்பாளரும், பிரபலமான பெரும் பணக்காரருமான வெங்கட கிருஷ்ண ரெட்டியை வெற்றி பெற்றார். அந்த வெற்றியின் மூலம், 'சுதந்திர இந்தியாவில் பொதுத்தொகுதியில் வெற்றி பெற்ற முதல் தலித்' என்கிற வரலாற்று அடையாளத்தையும் பெற்றார். அதற்கு அடுத்த தேர்தலில் சின்னசேலத்தில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டு தோல்விடையந்தார். இந்த தோல்வியின் பின்னணியில், காங்கிரசில் இருந்த சாதியவாதிகளின் வஞ்சகமும் இருந்ததாக மக்களால் கூறப்பட்டது.
அதேநேரத்தில், அவருடைய கல்விப் பணிகள் வளர்ந்தன. விருத்தாச்சலம்-உளுந்தூர் பேட்டை சாலையோரம் உள்ள பெரியவடவாடி கிராமத்தில் 1961 எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளியை நிறுவினார். அதற்கு, 'அம்பேத்கர் குருகுலம்' என்று பெயிரிட்டார். காங்கிரசில் இருந்தாலும் அவருக்கு அண்ணல் அம்பேத்கர் மீதிருந்த மதிப்பு இதைக் காட்டுகிறது. 1964 ஆம் ஆண்டில் அப்பள்ளியை விருத்தாச்சலத்தில் விடுதியுடன் நிறுவிய அவர், தம் வாழ்வின் இறுதிவரை நடத்தினார். மேலும், ஆசிரியர் பயிற்சி மையம் ஒன்றையும் அவர் நடத்தி வந்தார்.
அரசியலில் மலிந்துபோன சாதியமும், ஊழலும் அவரை தீவிர அரசியலிலிருந்து விலக்கிவைத்திருந்தன. அவரும் கல்விப்பணியிலேயே தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
தாம் மேற்கொண்ட கல்விப்பணியால் பல்லாயிரம் பேர்களின் வாழ்வில் ஒளிக்கொடுத்த வேதமாணிக்கம் அவர்களுக்கு, 24/9/1996 இல் பாரதிய தலித் சாகித்ய அகடாமி 'டாக்டர் அம்பேத்கர் விருது' அளித்து கௌரவித்தது.
1997 மார்ச் மாதம் 9 ஆம்தேதி, விருத்தாச்சலத்தில் நடைபெற்ற இரட்டை வாக்குரிமை மாநாட்டில் தனிவாக்காளர் தொகுதியே தலித்துகளுக்கு சரியானது என்று வலியுறுத்தி உரையாற்றினார். காங்கிரஸின் தொண்டராக இருந்து வளர்ந்த அவர், காந்தியால் எதிர்க்கப்பட்ட, அண்ணல் அம்பேத்கரால் முன்வைக்கப்பட்ட இரட்டை வாக்குரிமை-தனிவாக்காளர் தொகுதியை ஆதரித்து தமக்கு சமூக நலனே முக்கியம் என்று அந்த உரையின் மூலம் காட்டினார். ஆனால், பெருந்துயரமாக அடுத்த இண்டாவது வாரத்திலேயே (31/3/1997)
ப.வேதமாணிக்கம் என்னும் அந்த சீர்த்திருத்தத் தலைவர் விருத்தாச்சலத்தில் இயற்கையடைந்தார். இன்னமும் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சேரிகளில் தலைவர் வேதமாணிக்கத்தின் புகழை பாடிக்கொண்டிருக்கிறார்கள் அவரால் கல்வி பெற்றவர்களும், சீர்திருத்தம் கண்டவர்களும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக