திங்கள், 11 டிசம்பர், 2023

ஐ, ஐயா, ஐயர், ஐயனார்,ஐயப்பன், சாஸ்தா மற்றும் புத்தர்.



ஸ்டாலின் தி






'ஐ'என்பதற்கு, 'அரசர், தலைவர், ஆசிரியர்' போன்ற அர்த்தங்களை தருகின்றன தமிழகராதிகள். ஐயிலிருந்தே ஐயா, ஐயர், ஐயனார், ஐயப்பன் போன்ற அடையாளங்கள் உருவாக்கப்பட்டன. ஐயா என்பது தலைவனையும், ஐயை என்பது தலைவியையும் குறிக்கும் சொற்களாகும். ஆசிரியன்(ர்) எனும் ஆண்பாலுக்கான(ஆச்சாரி+ஐயன்) பெண்பால் ஆசிரியை(ஆச்சாரி+ஐயை)ஆகும்.


ஐயர் என்பது இன்று குறிப்பிட்ட ஜாதியின் அடையாளமாக திரிக்கப்பட்டிருந்தாலும் அது, அறிவில் மேன்மையடைந்தவர் என்பதன்  அடையாளமாகவே துவக்கத்தில் இருந்துள்ளது. எட்டுத்தொகை நூல்களுல் ஒன்றான பதிற்றுப் பத்துவில் தொகுக்கப்பட்டிருக்கும் ஏழாவது பதிகமான, கபிலரின் பத்துப் பாடலில் இறுதிப் பத்தான 'பறைகுரல் அருவி' பதிகத்தில் 'உயர்நிலை உலகத்து ஐயர்' என்று குறிப்பிடப்படுவது அறிவுலகத் தலைவரையேக் குறிப்பதாகும். பிற்கால பார்ப்பனியம் ஐயரை வர்ணாசிரமத்தின் தலைப் பிரிவானவர்களுக்கு சூட்டிக்கொண்டது.


ஐ, ஐயா, ஐயர் அடிப்படையிலான பார்வையில் புத்தரே ஐய்யனார் ஆவார் என்பது வெளிப்படையாகும். புத்தர் அவதாரமல்ல என்பதையும் ஐயனார் என்பது மானுடராய் பிறந்து, அறிவின் உச்சத்தைத் தொட்டவரின் அடையாளம் என்பதையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை எளிதாக விளங்கிவிடும். அவ்வாறே, ஐயனார் புத்தர் ஐயப்ப புத்தராகவும் வழிபாட்குக்குரியவரானார். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்ததாகக் கூறப்படும் ஐயப்பன் பிறப்புக் கதையானது, புத்தரை மக்களிடமிருந்து அன்னியப்படுத்துவதற்காக, பார்ப்பனியத்தால்  பிற்காலத்தில் திணிக்கப்பட்ட புரட்டாகும். தமிழடத்தில் மட்டுமல்லாமல், இலங்கை பௌத்தர்களும் ஐயனார் புத்தரை வணங்கிய தகவல் மூலம் இது உறுதிப் படுத்தப்படுகிறது. 


சாஸ்தா? 



ஐயர் என்பது  தலைவரை, ஆசிரியரை குறிக்கும் சொல்லென்பதை அறிவோம். வடமொழியில் சாஸ்தா எனும் சொல்லும் தலைவரை, ஆசிரியரைக் குறிக்கும் சொல்லாகும். சாஸ்திரி எனும் சொல் சாஸ்தா எனும் சொல்லில் இருந்தே வந்ததாகும். சாஸ்தா என்பது புத்தரைக் குறிக்கும் சொல்லாகும் என்று பண்டிதர் அயோத்திதாசர் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் உறுதிபடுத்திவிட்டனர். எனவே சாஸ்தா என்று இங்கே அழைக்கப்படும் ஐயப்பனார் புத்தரே ஆவார். மக்கள் தங்களது நடையில் சாஸ்தா என்பதை சாத்தன் என்று கூறனார்கள்.'சாத்தமங்களம், சாத்தான்குளம், சாத்தனூர், சாத்தநத்தம்' போன்ற தமிழக ஊர்ப்பெயர்கள் பௌத்த அடையாளத்தையே தாங்கி இருக்கின்றன. கேரளாவில் தலித்துகளை 'சாத்தன்கள்' என்று அழைக்கும் வழக்கம் உண்டு என்று தெரிகிறது. புத்தரை அவர்கள் வணங்கியதால் அந்த அடையாளம் அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். 


ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல, கேரள அரசும் கூட, 'சபரி மலை ஐயப்பன் எனும் சாஸ்தாக் கோயில் முந்தைய பௌத்த விகார்தான்' என்று கடந்த 2006 ஆம் ஆண்டு, பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்லுதல் தொடர்பான வழக்கொன்றில் நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...