ஸ்டாலின் தி
'தேயிலை கண்டுபிடிக்கப்பட்டது சீனாவில்தான்' என்கிற செய்தியை நாம் பலமுறை கேட்டிருப்போம், படித்திருப்போம். ஆனால் தேயிலைக் கண்டுபிடிப்பும் பரவலாக்கமும் நீண்ட வரலாறுகளைக் கொண்டவை. அவற்றில் பௌத்தத்திற்கும் தலித் சமூகத்திற்கும் முக்கிய இடமுண்டு.
சீன தேசத்தில் தேயிலைக் குறித்த ஒரு கதை உண்டு. அது தேயிலைக் குறித்தக் கதை மட்டுமல்ல, பௌத்தம் சார்ந்தக் கதையும் கூட. அந்தக் கதையின் நாயகன் ஓர் இந்திய பௌத்தர். நெடுங்காலத்திற்கும் முன் சீனத்து மலைக் குகைகளில் அந்த இந்திய பௌத்தர் தியானித்தலில் பலவகையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக அவர் ஒன்பது ஆண்டுகள் தூங்காமல் தியானிக்க வேண்டும் என்று நினைத்தார். சில, பலநாட்கள் தூங்காமல் தியானித்தாலும் தூக்கம் வரவேச் செய்தது. தூக்கத்தை தடுக்க வழியின்றியும் தியானித்தலில் ஆராய்வதை தொடரமுடியாமலும் தவித்தார். எரிச்சலுற்றார். தூக்கத்தின் மீது வந்தக் கடும் கோபத்தின் உச்சமாக, தம்முடைய இரண்டு கண்களின் இமைகளையும் பிய்த்து தரையில் தூக்கியெறிந்தார். சிலநாட்களில், அவர் இமைகளைத் தூக்கியெறிந்த இடத்தில் ஒரு தாவரம் முளைத்திருந்தது. அதன் இலைகளைப் போட்டுக் காய்ச்சிய நீரை அவர் பருகியபோது தூக்கம் போனது. தியானமும் தொடர்ந்தது. அந்தத் தாவரம்தான் தேயிலை. அந்த இந்திய பௌத்தர் போதி தர்மர்.
இது கதைதான். ஆனால் கதை மட்டுமல்ல, வரலாறும்தான். சீனாவில் பௌத்தம் பரவலான போது, தியானப்பயிற்சிகளில் தேயிலையின் பயன்பாடு முக்கியமானதாக இருந்தது. வெறும் மூலிகை இலையாக இருந்த தேயிலை, பௌத்த தியானத்தால் அன்றாட பானமாக ஆனது. தியானம் சென்ற இடங்களிலெல்லாம் தேயிலையும் சென்றது. தேயிலையை அன்றாட பானமாக பௌத்த பிக்குகள்தான் ஆக்கினார்கள் என்கிற வரலாற்றைத்தான் போதிதர்மர்-தேயிலை கதைக் கூறுகிறது. தேநீரை குடித்துவிட்டு அன்றைய வேலைகளைத் துவங்கும் இன்றைய பழக்கத்தை துவக்கி வைத்தவர்கள் பௌத்தர்கள்தான். தியானம் என்கிற இந்திய சொல்லின் அடிப்படையிலேயே தியான இலை என்று கூறப்பட்டு தேயிலை என்று ஆனது. அதாவது சைனத்தின் 'ட்யான்'(தியானம்) உச்சரிப்பிலிருந்து 'டீ(Tea)' வந்தது. ஸென் என்பதும் இதே தியானம்-ட்யான்-உச்சரிப்பிலிருந்து வந்ததுதான்.
ஜப்பானியர்கள் சீனாவிலிருந்து பௌத்தத்தோடு தேயிலையையும் கொண்டு சென்றார்கள். பௌத்தமும் தேயிலையும் பிரிக்கமுடியாத இணைகளாக நெடுங்காலம் தொடர்ந்து வந்தன. ஐரோப்பியாவில் தோன்றிய காலனிய அரசியல்தான் பௌத்தத்திடமிருந்து தியானத்திற்காக அல்லாமல் மனிதகுல அடிமைத் தொழிலுக்காக தேயிலையை பறித்தெடுத்தது. மனித மனங்களை பண்படுத்தும் தியானத்திலின் துணைப் பொருளாக இருந்த தேயிலையை, ஏகாதிபத்திய சுரண்டலுக்கான பொருளாக ஆக்கியது காலனியம்.
இந்தியாவில் முதன் முதலாக அசாமில் தேயிலைத் தோட்டங்களை அமைத்த பிரிட்டிஷனர், முதலில் சீனர்களைத்தான் பணியில் அமர்த்தினர். தேயிலை விவசாயத்தில் அவர்களுக்கிருந்த அனுபவம் முதற்காரணம். ஆனாலும் தேயிலைத் தொழிலை பிரிட்டிஷ் முக்கியமான தொழிலாக்கி பரவலாக்கும் போது, இந்திய தலித்துகளே அதிகம் ஈடுபடுத்தப்பட்டனர். கூட்டம் கூட்டமாக கொண்டுவரப்பட்ட தலித் மக்களை தேயிலைத் தோட்டங்களில் வதைத்ததனர். உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டல், கடும் தண்டனைகள், தாக்குதல்கள், கொலையாகுதல் என சகலக் கொடுமைகளையும் தேயிலைத் தோட்டங்களில் தலித்துகள் சந்திக்க நேர்ந்தது. இத்தோட்டங்களில், சாதி இந்துக்கள் கண்காணிகளாக ஆகி, முதலாளிகளுக்கு விசுவாசம் காட்டுவதாகக் காட்டிக்கொள்ள தலித்துகளை ஒடுக்கினார்கள். இந்தியாவின் எல்லையைத் தாண்டி இலங்கை, மலேசியா என்று தேயிலைத் தோட்டங்களும் தலித் தொழிலாளர்களும் பரவலாக்கப்பட்ட காலத்தில் தலித்துகள் சந்தித்தக் கொடுமைகள் ரத்த வரலாறுகள். இன்னமும் கூட இலங்கையில் தோட்டத் தமிழர் எனப்படுவோரில் தலித்துகளின் நிலை அவலநிலைதான்.
இவ்வாறாக, பௌத்தத்தோடு தமது வரலாற்றைத் தொடங்கிய தேயிலையின் பயணம், காலனிய ரத்தச் சுவடுகளைக் கடந்து வந்து, உள்ளூர் தமிழக சூத்திர சாதியினரின் தேநீர் கடையில் இரட்டை டம்ளரில் வந்து நிற்கிறது.
(டிசம்பர்-15
சர்வதேச தேயிலை நாள்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக