ஸ்டாலின் தி
கூலி கேட்டதற்காக கொல்லப்பட்ட வரலாறு உண்டு. கூலியென்பதை ஆண்டைகள் கூலியாகக் கருதவில்லை. தங்களின் அடிமைகளுக்கு தாங்கள் இடும் பிச்சையாகவே கருதினார்கள். அதனால் கூலி எவ்வளவு என்பதை தீர்மானிக்க கூலியாட்களுக்கு உரிமையில்லை என்றனர். ஆண்டைகளைப் பொறுத்தமட்டில் ‘’கூலியென்பது கேட்பதை கொடுப்பதல்ல கொடுப்பதை வாங்கிக் கொள்வதே’’யாகும். எனவே கூலி வேண்டுமென்று நாம் கேட்டாலே அவர்கள் கோபப்பட்டார்கள். நாம் கூலியை உயர்த்தி கேட்டால் மட்டுமல்ல, கூலி வேண்டுமென்றாலே அவர்களுக்கு கொலை வெறி வந்துவிடும். 1968 டிசம்பர் 25 வெண்மணி 44பேர் எரித்துக் கொல்லப்பட்டது இதன் அடிப்படையில் தான். அரை படி நெல்லை அவர்களால் கொடுத்திருக்க முடியும். ஆனால் கூலியை ‘’கொடு’ என்று முழங்கும் அளவிற்கு இந்த தாழ்த்தப்பட்ட சனங்களுக்கு திமிர் வந்துவிட்டதே என்கிற கோபம் தான் 44 பேரை எரித்தது.
கீழ் வெண்மணியில் இந்த கொடூரம் நடத்தப்படுவதற்கு முன் சுமார் 56 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1912இல் இதே போன்றதொரு டிசம்பர் மாதம் தமிழகத்தில் ஒரு பிரச்சனை நடத்தப்பட்டது. அதுவும் கூலிப்பிரச்சனை தான். ஆனால் அது பறையர் கூலிகேட்ட பிரச்சனையல்ல, கூலி கொடுத்த பிரச்சனை! அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில், திண்டிவனம் தாலுக்காவிற்குட்பட்ட விடாலபுரம் கிராமத்தில் இராகவன் என்கிற பறையர் வாழ்ந்து வந்தார்.
தான் கல்வியறிவை பெற முடிய வில்லையே என்கிற அவரது வேதனை அவரது பிள்ளைகளுக்கு கல்வி நுகர்வை கொடுக்கசெய்தது. மேலும் தன்னுடைய உழைப்பால் பெற்ற பலன் மூலம் சொற்பமான விளைநிலத்தை வாங்கி சிறந்த விவசாயியாகவும் இருந்துவந்தார். பிள்ளைகளுக்கு கல்வி அறிவை புகட்டுவது, நிலம்வைத்துக்கொண்டு கௌரவமாக வாழ்வது ஒரு பறையனின் தகுதிமிகுந்த நிலையல்லவா என்று வயிறெரிந்து கொண்டிருந்தது அவ்வூர் ரெட்டியார் சாதியினர்க்கு. அதே வயிற்றெரிச்சலை இன்னமும் அதிகமாக்கியது இராகவன் செய்த இன்னொரு விஷயம். ரெட்டியார்களின் நிலத்தில் உழைக்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கு ரெட்டியார்கள் கொடுத்த சம்பளமோ நாளொன்றுக்கு ஒரணா (1அணா). ஆனால் பறையர் இராகவன் தன் நிலத்தில் உழைத்த விவசாயத் தொழிலாளிகளுக்கு கொடுத்த சம்பளமோ இரண்டணா (2அணா). இதன் காரணமாக ரெட்டியார்களுக்கு வேலைசெய்த தொழிலாளர்கள் இராகவன் எனும் பறையருக்கு மட்டுமே வேலை செய்ய விரும்பினார்கள். ரெட்டியார்களின் வயல் களை நிலங்களாகிப்போயின. அதனால் ரெட்டியார்களுக்கு கடுமையான கோபம் வந்தது. விரோதம் அதிகமாகத் தொடங்கிய நேரத்தில் இராகவன் சென்னை சென்று, இராயப்பேட்டையில் இயங்கி வந்த தாத்தா ரெட்டமலையாரின் ’’பறையன்’’ பத்திரிக்கையில் ரெட்டியார்களின் கொடுமைகளை விவரித்துவிட்டு வந்தார். இதனால் கோபமடைந்த ரெட்டியார்கள் இராகவனின் வயல்களையும், கால்நடைகளையும் சேதப்படுத்தினார்கள். கிராம அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் ரெட்டியார்களின் வேறியாட்டம் அதிகமானது.
அதன் உச்சகட்டமாக, 1912 டிசம்பர் 25 அன்று இரவு ரெட்டியார் சாதி வேறிக்கும்பல் இராகவன் சார்ந்த சேரியை தாக்கத்துவங்கியது. இராகவனின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. இரவு முழுவதும் இராகவனின் வயலில் மாடுகளை மேயவிட்டு பயிர்களை பாழாக்கினார்கள். மறுநாள் (டிசம்பர்26) அந்த சாதி வெறிகும்பல் இரகவனை அடித்தே படுகொலை செய்து வெறிதீர்த்தது.
இராகவன் நல்ல புத்தியாலும், நல்ல உழைப்பாளும், நல்ல குணத்தாலும் உயர்நிலையை அடைந்தவர். அதுதான் சாதி இந்துகளுக்கு குற்றமாக தெரிந்தது. ஏனேனில் சாதி இந்துகளுக்கு உயர்வு என்பது பிறப்பின் அடிப்படையில் தீர்மனிக்கப்படுவதேயாகும். இன்னமும் அந்த மூட நம்பிகயில் தான் இருக்கிறார்கள் சாதி இந்துக்கள்;புத்தியாலும் உழைப்பாலும்,குணத்தாலும் உயர்நிலையடைய செத்துக் கொண்டுதானிருக்கிறார்கள் இராகவன்கள்!
* செய்தி ஆதாரம்: பண்டிதர் அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 3.
(டிசம்பர் 26: ஐயா இராகவன் படுகொலை நாள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக