திங்கள், 25 டிசம்பர், 2023

தலித் அன்னையர் தினம்.


ஸ்டாலின் தி 



அண்ணலின் அன்புச்சகோதரி, அன்னை மீனாம்பாள் அவர்களின் பிறந்த தினம்! தலித் அன்னையர் தினம்!

20 ஆம் நூற்றாண்டின் நவீனகால இந்தியாவின் தலித் சமூகத்தின் பெண்தலைவராக உருவெடுத்தவர் அன்னை மீனாம்பாள் ஆவார். சமூகக்கொடுமைகளும் அதற்கெதிரான தலித் சமூகத்தின் எதிர்வினையும் அன்னை மீனாம்பாள் அவர்களை சமூகவிடுதலை அரசியல் களத்திற்கு கொண்டுவந்து சேர்த்தது. அன்னையின் குடும்பப் பின்னணியும் அவருக்கு உந்துசக்தியாக விளங்கியது.

அன்னையின் பாட்டனார்(அம்மாவின் அப்பா) பெ.ம.மதுரைப்பிள்ளை அவர்கள் பெரும் வணிகரும் அரசியல் பிரமுகருமாவார். அவர் 1885-1890 காலக்கட்டத்தில் ரங்கூன் முனிசிபாலிட்டியின் கமிஷனராகவும், சுமார் 25 ஆண்டுகள் இரண்டாம் வகுப்பு நீதிபதியாகவும் கடமையாற்றியவர். வணிகத்திலும் சிறந்து விளங்கிய இவர், கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் தியாகி வா.உ.சி.க்கும் முன்னவே சொந்தமாகக் கப்பல் வாங்கி வணிகம் செய்தவர். இவரது மருமகனும் அன்னை மீனாம்பாளின் தந்தையுமான வி.ஜி.வாசுதேவப்பிள்ளை அவர்களும் அன்றைய பிரபலமான தலித் சமூகத் தலைவராவார். சென்னை மாகாண சிறை அதிகாரியாக பணியாற்றிய இவர், பிறகு முழுநேரமாக தலித் சமூகத்திற்கு உழைக்கும் தலைவராக திகழ்ந்தார். 1920 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் இந்தியாவிலேயே முதல் முதலாக மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலித் தலைவர் என்கிற இடத்தையும் பிடித்தார். 

இப்படிப்பட்ட குடும்பபின்னணியில் வந்த அன்னை அவர்கள், தலித்சமூகத்தின் சிறந்த தலைவரான தந்தை என்.சிவராஜ் அவர்களை திருமணம் செய்து, சமூகப்பணியில் சீரியமுறையில் ஈடுபட்டார்.

1928 இல் வந்த சைமன் குழுவை ஆதரித்து முதல்மேடைப்பேச்சைத் துவங்கிய அன்னை, அதன்பிறகு நூற்றுக்கணக்கான கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமைதாங்கினார். 1930களில் அண்ணலை தலைவராக ஏற்றுக்கொண்ட அன்னை, அண்ணலுக்கும் அவரது அரசியலுக்கும் தூணாக இருந்தார். அறிவாலும் ஆற்றலாலும் சமூவிடுதலைக்கு அர்ப்பணிக்கும் அன்னையைக் கண்ட அண்ணல் அவர்மீது பாசத்துடன் இருந்தார். அன்னையை தமது ‘அன்புச்சகோதரி’ என்றே அண்ணல் அழைத்தார்.

சமூகத்தலைவராக மட்டுமில்லாமல் அன்னை அவர்கள், துணைமேயர், ஆனரி பிரசிடென்ட் மாஜிஸ்ட்ரேட், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் , சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர் , தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர், சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர், சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் , போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர் , S.P.C.A உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்), சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர், விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர், மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் , சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர், அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளிலும் சிறப்பாக பணியாற்றினார். 
இம்மண்ணில் 88 ஆண்டுகள் வாழ்ந்து, சுமார் 50 ஆண்டுகள் சமூகப்பணியாற்றிய அன்னை மீனாம்பாள் அவர்களை போற்றி, அவர் வழி செல்வோம். 

(டிசம்பர் 26; அன்னை மீனாம்பாள் பிறந்த நாள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...