வெள்ளி, 29 டிசம்பர், 2023

அன்பு விஜயகாந்த்: ஓர் ரசிகனின் அஞ்சலி.



ஸ்டாலின் தி 




நான் விஜயகாந்த் ரசிகனாக ஏன் என்னுடைய இளம்பிரயாயத்தில் ஆனேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். திரைப்பட அரங்கத்திற்குள் நுழைந்தாலே கத்திக்கூப்பாடு போடும் குழந்தையாம் நான்.  அழாமல் கொள்ளாமல் நான் அமைதியாகப் பார்த்த படம் நினைவே ஒரு சங்கீதமாம்.    'விஜயகாந்த் படம்னா பாப்பான் போல' என்று அம்மாவுக்கு நம்பிக்கை. அது எனக்குள்ளும் எப்படி போனது என்று தெரியவில்லை.
எங்கள் ஊரில் பத்து சிறார்கள் விளையாடும் இடத்தில் கடைசியாக பேச்சு திரைப்படம் பற்றிதான் வந்து முடியும். அந்த பத்து பேரில் சுமார் எட்டு பேர் விஜயகாந்தை அண்ணணாக ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள். எங்கள் காலத்தில் தெருக்கூத்து அருகி, 'வீடியோ-டெக்' ஆக்கிரமித்து இருந்தது. கல்யாணமோ, கருமகாரியமோ வீடியோ நிச்சயம்; அதில் விஜயகாந்த் படமும் நிச்சயம். வீடியோ காட்டப்படும் வீதியின் மண் தரையில் படுத்து படம் பார்க்கத் தேவையில்லை. மெத்தையாக லாட்டரி சீட்டுகள் கிடக்கும். அவை விஜயகாந்தின் அறிமுகக் காட்சியில் தூவப்பட்ட காகித மலர்கள். வீடியோ கண்ட சில நாட்களுக்கு சிறார்களின் விளையாட்டில் 'விஜயகாந்த் ஃபைட்'க்கு முக்கிய இடமுண்டு. பள்ளிக்கூடம் செல்லும் வழியில் ஒட்டப்பட்டிருக்கும் அவருடைய திரைப்பட சுவரொட்டிகளை நின்று பார்க்கும் ஒரு கூட்டம் எப்போதும் உண்டு. திண்ணைப் பேச்சுகளில் விஜயகாந்த் படக்கதைகளை காட்சிக்கு காட்சியாக கூறுபவர்கள் மற்ற ஊர்களைப் போலவே எங்கள் ஊரிலும் இருந்தார்கள். சென்னைக்கு சென்று விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்து படமெடுத்துக்கொண்டு, பேருந்து செலவுக்காக அவர் கொடுத்த ரூபாய் தாளோடு வந்து பெருமைப்பட்டவர், விஜயகாந்த்-பிரேமலதா திருமணத்திற்கு சென்று எவர் சில்வர் பாத்திரத்தை மொய்யாக வைத்துவிட்டு அங்கே விருந்து உண்டதை சிலாகித்து கூறுபவர்களும் எங்கள் ஊரில் இருந்தனர்.  இப்படியாக விஜயகாந்தால் சூழப்பட்ட காலத்தில் என்னுடைய சிறார் பருவமும் துவங்கியதால் விஜயகாந்தின் ரசிகனாக ஆகியிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.  அதேவேளை, என்னை ஒரு ரசிகனாக தக்கவைக்கும் சூட்சுமங்களை அவருடைய திரைப்படங்கள் கொண்டிருந்தன என்பதுவும் உண்மை. எங்கள் பகுதியில் நிலவிய இடதுசாரி -தலித் கலகக் குரல்களின் சாயல்களை அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் கொண்டிருந்தன. வேறெந்த நடிகரின் படங்களைவிடவும் அவருடைய படங்களில்தான் அதிகம் ஏழைகளுக்கான குரல்கள் கேட்டன. என் பதின்பருவ காலத்தில்,  அநிநியாயத்தை எதிர்க்கும் நாயக கதாபாத்திரங்களில் அவருடைய பாத்திரங்களே என்னை கவர்ந்தது. 

2

விஜயகாந்தின் வாழ்க்கையில் முக்கியமானது அவருக்கு இருந்த தன்னம்பிக்கைதான் என்று கூறுவேன். அன்றைய காலக்கட்ட வழக்கத்தின்படி அவர் எந்த நாடக அரங்கிலும் பயிலவில்லை. திரைப்பட கல்லூரியின் வாசல் கூட தெரியாது. எந்த திரைப்பட பிரபலங்களையும் தெரியாது. யாருடைய பரிந்துரைக் கடிதமும் கிடையாது. ஆனால், நம்பிக்கையுடன் வந்தார். திரைப்படத்துறையினரின் அலுவலகங்களில் ஏறி இறங்கினார். கறுப்பு நிற உடல், தெற்கத்திய மொழி என அவமதிப்புகள், புறக்கணிப்புகள் என பலவகையான தடைகள். ஆனால், அவர் கைப்பற்றியிருந்த ஆர்வமும் தன்னம்பிக்கையும் அவரை விழாமல் பார்த்துக்கொண்டன. அவற்றை எதிர்கொள்ள முடியாமல், அவரிடம் வீம்புகாட்டுவதை சற்று தளர்த்தியது திரையுலகம். எம்.ஏ.காஜா என்னும் மனிதர் தாம் இயக்கிய இனிக்கும் இளமையில் நடிக்க வைத்தார். அதற்கும் முன்பாக, ரஜினிகாந்த் நடித்த 'என் கேள்விக்கு என்ன பதில்?' என்னும் திரைப்படத்தில் சிறிய வேடம் ஒன்றை விஜயகாந்திற்கு அளித்து பிறகு பறித்ததும், சில ஆண்டுகளிலேயே விஜயகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் இந்தி மொழி மறுஉருவாக்கத்தில் விஜயகாந்த் ஏற்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்ததும் புன்னகைக்க வைக்கும் செய்தி.  

நடிப்புக் குறித்து சிலாகித்து எழுதும் பலரும் தங்களுடைய பட்டியலில் விஜயகாந்திற்கு இடமளிப்பதில்லை. ஆனாலும், அவர் சிறந்த நடிகர் என்பதற்கு பல திரைப்படங்களிலும் ஆதாரங்கள் உள்ளன. அவருடைய நடிப்புத் திறனை புரிந்துகொள்ளுவதில் திரைப்பட விமர்ச்சக அறிவாளிகளைவிட வெகுமக்கள் சிறந்த அறிவைப் பெற்றிருந்தார்கள் என்பதுதான் உண்மை. மேலும் விஜயகாந்த் அவர்களை தங்களில் ஒருவராக பார்த்தனர் மக்கள்‌. 'பக்கத்து வீட்டு நாயகன்' என்கிற ஒரு அடையாளம் சில கதாநாயகர்கள் மீது உண்டு. விஜயகாந்த் அவர்களோ சொந்த வீட்டு நாயகனாகவே மக்களிடம் வாழ்ந்தார். அதனால்தான்  அவருடைய ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி  பெண் ரசிகர்களும் அவரை அண்ணன் என்றே அழைத்தார்கள். 

விஜயகாந்த் நேரடியாகவும் சாயலாகவும் சில தலித் கதாபாத்திரங்களை செய்திருக்கிறார்.   அலையோசை, டௌரிக் கல்யாணம், பெரியண்ணா  போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்தவை நேரடியான தலித் குடும்ப பின்னணிகளைக் கொண்டவை. சிவப்பு மல்லி, கோமல் சுவாமிநாதனின் எழுத்தில் வந்த சாதிக்கொரு நீதி போன்ற திரைப்படங்களில் அவருடைய பாத்திரங்கள் தலித் வாழ்வியலுக்கு நெருக்கமானவை. குடும்ப-சாதி அந்தஸ்திலிருந்து வெளியேறி மக்களோடு மக்களாக கலந்து அரசியல் பேசும் அவருடைய ' ஏழை ஜாதி சுபாஷ் ' கதாபாத்திரம் தலித்துகளால் ரசிக்கப் பட்டது.

'The May Day' என்கிற பெயரில் ஆங்கிலத்தில் ஒருபடம் தயராக இருப்பதாக அந்நாட்களில் செய்தி உண்டு. ஆனால், தமிழைத் தவிர்த்து பிற மொழிகளில் நடிப்பதில்லை என்கிற நிலையில்தான் விஜயகாந்த் இருந்தார். 'அவருக்கு வேறு மொழி தெரியாததுதான் காரணம்' என்று கேலி பேசுவோர் உள்ளனர். ஆனால், அவருக்குத் தெரிந்த தெலுங்கிலும் கூட அவர் நடிக்கவில்லை என்பதையும் அவர்கள் அறிய வேண்டும். இத்தனைக்கும், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான இவருடைய படங்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு. 

3
பொதுவாக, பிரபலமான நடிகர்கள் தங்களின் கதாபாத்திரங்கள் மரணிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ரமணா கதாபாத்திரம் இறுதியில் தூக்கிலிடப்படும். மன்னிப்பு குற்றவாளிகள் பெருக காரணமாக இருக்கிறது என்று நம்பும் ரமணா கருணை மனு போடக் கூடாது என்கிற நியாயத்தின் படி அதுதான் சரியான முடிவு. ஆனால், இதே ரமணா தெலுங்கில் 'தாகூர்' என்கிற சிரஞ்சீவி நடிப்பில் படமாக்கப்பட்ட போது தாகூருக்கு மரண தண்டனை கிடையாது. ஐந்காண்டு சிறை தண்டனை மட்டும்தான். ஏனெனில், ரமணா இறக்கலாம் சிரஞ்சீவி இறக்கக் கூடாது என்கிற 'ஹீரோயிசம்.' ஆனால் விஜயகாந்த் அப்படியெல்லாம் அலட்டிக்கொண்டவரில்லை. வைதேகி காத்திருந்தாள், பூந்தோட்டக் காவல்காரன், கரிமேடு கருவாயன், ரமணா போன்ற படங்களில் மரணித்த விஜயகாந்தின் கதாபாத்திரங்கள் இன்னமும் மக்கள் மனங்களில் வாழ்கின்றன. அவர் தம்மை இயக்குனர்களிடம் ஒப்படைத்துக் கொண்டார். தம்முடைய நூறாவது படத்தில் படம் துவங்கி அரைமணி நேரத்திற்கு பிறகுதான் அவருடைய கதாபாத்திரம் வரும். இன்றைய பெரும் கதாநாயகர்களிடம் இத்தகைய சமரசத்தை காண்பது அரிது.

விஜயகாந்தை 'பெரிய இயக்குநர்கள்' பெரிதாக கண்டுகொள்ளவில்லை.  விஜயகாந்தும் பெரிய இயக்குனர்களுக்காக காத்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக, புதிய இயக்குனர்களாக திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஐம்பத்தி நான்கு பேர்களை அறிமுகம் செய்துள்ளார். இந்திய திரையுலகில் வேறெந்த நாயகர்களும் செய்யாத துணிச்சலான செயல் இது‌. 

4
விஜயகாந்த் திரைப்படங்களில் வெகுவாக மக்களைக் கவர்ந்தவற்றில் அவருடைய வசனமும் சண்டைக் காட்சிகளும் முக்கியமானவை. வசன உச்சரிப்பில் பாத்திரங்களுக்கேற்றபடி ஏற்ற இறக்கங்களையும், உடல் மொழியையும் வெளிப்படுத்துவதில் தேர்ந்த கலைஞர் அவர். அதனால்தான் அவர் புரட்சிக் கலைஞர் என்று அழைக்கப்பட்டார். 

எம்.ஜி.ஆர். முறையாக சண்டை வித்தைகளைக் கற்றவர். அதனாலேயே அவருடைய சண்டைக்காட்சிகள் சிறப்பாகவும் அமைந்து வரவேற்பைப் பெற்றன. விஜயகாந்த் அப்படியான பயிற்சிகளை  முறையாக பயின்றவர் இல்லை. ஆனாலும் சிறந்த 'ஆக்சன் ஹீரோ 'வாக தம்மை நிறுவிக்கொண்டார். தூரத்து இடி முழக்கம் என்னும் திரைப்படத்தில் படகுத் துடுப்பை எடுத்து எதிரியை அடிப்பது போன்ற காட்சியின் போது அவருடைய தோள்பட்டை இறங்கிவிட்டது. அது கடைசி வரையிலுமே அவருக்கு பிரச்சனையாகவும் இருந்ததை உடன் பணியாற்றியவர்களும் சண்டைப்பயிற்சியாளர்களும்  கூறுகிறார்கள். இருந்தும் கூட சண்டைக் காட்சிகளை மிக சிறப்பாக நடித்துக் கொடுத்தார். நாயகர்கள் நடிப்பதற்கு தயங்கும் பல சிரமமான சண்டைக் காட்சிகளில் அவர் மிகுந்த ஆர்வத்துடன் நடித்திருக்கிறார். ஹெலிகாப்டரில் தொங்குதல், கடலுக்குள் நடிப்பது என இன்றைக்கும் நாயகர்கள் அஞ்சும் காட்சிகளை இருபதாண்டுகளுக்கு முன்னரே அவர் செய்து காட்டியிருக்கிறார். தம்முடன் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் துணை ஸ்டண்ட் நடிகர்கள் மீது மிகுந்த அக்கறையைக் காட்டிவர் அவர். அடியாள் கதாபாத்திரங்களிலேயே நடித்து, படுகாயம்பட்டு திரையுலகிலிருந்தே வெளியேற இருந்த தம்மை அழைத்து  'மெயின் வில்லன்' நடிகராக (செந்தூரப்பாண்டி) ஆக்கியதாக நடிகர் பொன்னம்பலம் கூறுகிறார். 


இசைஞானியின் இசையில் விஜயகாந்தின் திரைப்படங்கள் கூடுதலாக ரசிக்க வைத்தன. அகல் விளக்கு திரைப்படத்தில் 'ஏதோ நினைவுகள்' என்று பாடியபடி துவங்கிய இசைஞானி-விஜயகாந்த் கூட்டணி பல சிறந்த பாடல்களைக் கொடுத்துள்ளது. விஜயகாந்த் நாயகனாக நடித்த ஆட்டோ ராஜா என்னும் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ். அவர்கள் கேட்டுகொண்டதற்காக தம்முடைய ஒரு பாடலை வழங்கியிருந்தார் இசைஞானி. அந்தப்பாடல்தான் 'சங்கத்தில் பாடாத கவிதை.' வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, கரிமேடு கருவாயன், பூந்தோட்டக் காவல்காரன், ஏழை ஜாதி, கோயில்காளை, சர்க்கரை தேவன், சின்னக் கவுண்டர், பெரிய மருது, ரமணா போன்ற பல படங்களின் மொத்த பாடல்களுமே மக்களின் ரசனையில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன. இசைஞானியின் குரல் சில நடிகர்களுக்குத்தான் மிகச் சரியாக பொருந்தும். அவர்களில் விஜயகாந்த் ஒருவர். நல்ல வெள்ளிக் கிழமையில் (சக்கரை தேவன்), தாயுண்டு தந்தையுண்டு (கோயில் காளை), கதை கேளு( கரிமேடு கருவாயன்), இந்த வீடு நமக்கு சொந்தமில்லை (ஏழை ஜாதி), அந்த வானத்தைப் போல( சின்னக் கவுண்டர்), ஏழைகள் வாழ (பூந்தோட்ட காவல்காரன்), நல்வீணை(பரதன்) ஆகியவை மனதை உருகவைக்கும் பாடல்கள்.

மற்ற  நாயகர்களுக்கு இசைஞானி அமைத்த பின்னணி இசையிலிருந்து விஜயகாந்திற்கு அமைத்த பின்னணி இசை வேறுபட்டே நிற்கிறது. விஜயகாந்தும் அத்தகைய இசைக்கோர்ப்புக்கேற்ப நடித்திருப்பார். நூறாவது நாள், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சத்ரியன், ஆனஸ்ட்ராஜ், ரமணா போன்ற திரைப்படங்கள் இசைஞானியின் பின்னணி இசையிலும் விஜயகாந்தின் கம்பீரத்திலும் தனி முத்திரையை பதித்துள்ளன.

6

விஜயகாந்தை நினைவு கூறுபவர்களால் அதிகம் கூறப்படுவது அவருடைய மனித நேயம் பற்றிதான். திரைப்படத்துறையில் வளரும் பருவத்திலேயே அவர் பலருக்கும் துணையாக இருந்திருக்கிறார். அவரும் அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் நடத்திய அலுவலகம்தான் திரைப்பட ஆர்வலர்கள் பலருக்கும் சோறும் அடைக்கலமும் சுமார் முப்பதாண்டுகளாக கொடுத்து வந்தது. அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்தான் திரைப்படத் தொழிலாளர்கள் பொட்டலச் சோற்றிலிருந்து இலை சோறு என்னும் நிலையைக் கண்டார்கள். நாயகனிலிருந்து கடைநிலை தொழிலாளி வரை சமமான உணவு என்னும் 'சமபந்தி போஜனத்தை'  திரையுலகில் அவர்தான் நடத்திக் காட்டினார். பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கும் போதும், தொழிலாளர்களின் உணவுக்காக தம்முடைய சம்பளத்தில் குறிப்பிட்டத் தொகையை திருப்பி அளித்துவந்திருக்கிறார். இன்னொரு பக்கம் திரைத்துறைக்கு வெளியே இருந்த ஏழை எளியவர்கள்,மாணவர்கள், பெண்கள் மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு பல நல உதவிகளை சலிக்காமல் செய்தார். பேரிடர் காலங்களில் நிவாரணத் தொகை அறிவிப்பதில் அவரே முன்னிலை வகித்தார். கொரோனாத் தொற்றில் இறந்தவர்களின் உடல்களை இடுகாட்டில் அடக்கம் செய்யவே அஞ்சிய சூழலில் தம்முடைய கல்லூரி அமைந்துள்ள நிலத்தில் இடமளித்தார். 

7
ரசிகர் மன்றங்களை நிர்வகிப்பதில் மற்ற நடிகர்களிடமிருந்து விஜயகாந்த் வேறுபட்டிருந்தார். கூடுமானவரை ரசிகர்களை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கினார். வெளிப்புற படப்பிடிப்புகளின் போது குவியும் ரசிகர்களை சந்திக்காமல் அவர் புறப்பட்டதே இல்லை. அவருடைய ரசிகர் மன்றங்கள் அவரைப்போலவே பொது பிரச்சனைகளை பேசியன, உதவித் திட்டங்களை செயல்படுத்தியன.  ஈழத்தமிழர் பிரச்சனை, காவேரி பிரச்சனை போன்ற தமிழ்நாட்டுடன் தொடர்புடைய பிரச்சனைகளில் மற்ற ரசிகர் மன்றங்களை போலில்லாமல் விஜயகாந்த் மன்றங்கள் கவனம் செலுத்தியன. விலைவாசி உயர்வுகளை கண்டித்து போராட்ங்களை,  விஜயகாந்த் மன்றங்கள் நடத்தியதை முந்தைய காலத்தில் கண்டிருக்கிறோம்‌. பல் வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்ததன் மூலம் வெறும் ரசிகர் மன்றமாக இல்லாமல் 'நற்பணி மன்றங்கள்' ஆகவே விஜயகாந்த் மன்றங்கள் இருந்தன. 'அன்பு விஜயகாந்த்' என்னும் மாத இதழையும் 
தொடர்ந்து நடத்தப்பட்டது. விஜயகாந்த் காலத்தின் மற்ற நடிகர்கள் இதுபோன்ற கட்டமைப்பை உருவாக்கிக்கொள்ளவில்லை என்றே கூறலாம். 

8
பலரும் யூகித்தபடிதான் விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் இருந்தது. இரண்டு கட்சிகளின் மீதும் நம்பிக்கையை இழந்தவர்களில் பலர் விஜயகாந்தின் அரசியல் வருகையை கவனத்தில்கொண்டார்கள். 

அவர் துவக்கத்திலிருந்தே வெகுமக்கள் மீதான அரசியலை கவனித்தே வந்திருந்தார். எம்.ஜி.ஆரின் ரசிகனாக தம்மைக் காட்டிக்கொண்ட போதும் 'கலைஞரின் ஆள்' என்றே அவர் அறியப்பட்டார். தேர்தல்களில் அவருடைய மன்றங்களும் திமுகவையே ஆதரித்தன. 1991-1996 களில் அதிமுக ஆட்சியிலிருந்த ஜெயலலிதாவின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த போது கருணாநிதி அவர்களுக்கு பொன்விழா நடத்தியது நடிகர் சங்கம்‌. அதை நடத்திக் காட்டியவர் விஜயகாந்த். ஆனாலும் விஜயகாந்த் அரசியலுக்கு வரும்போது திமுகவினரும் திமுக ஆதரவாளர்களுமே கடுமையான பதற்றத்தை சந்தித்தனர். 

ஒரு கட்டத்தில் விஜயகாந்திற்கு கிடைத்த வெகுமக்கள் ஆதரவை எதிர்கொள்ள முடியாமல் அவர் மீது தனிப்பட்ட முறையிலான தாக்குதலை திமுகவும் அதிமுகவும் நடத்தத் துவங்கின. கொள்கையை தூரப்போட்டுவிட்ட இக்கட்சிகள் விஜயகாந்தை கொள்கை அற்றவர் என்று கேலி செய்தன. ஜெயலலிதாவும் கருணாநிதியும் அவரை குடிகாரர் என்று பரப்புரை செய்தார்கள். அவர்கள் அப்படி கூறிய காலத்திற்கும் பல ஆண்டுகளுக்கும் முன்னரே அவர் குடிப்பதை நிறுத்தியிருந்தார். ஆனால், விஜயகாந்தை எதிர் கொள்ள, கொள்கை கோட்பாடுடைய அவர்களுக்கு வேறு வழியோ மொழியோ கிடைக்கவில்லை. 

9

2006 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனித்துப் போட்டியிட்டது. அவர் விருத்தாசலத்தில் போட்டியிட்டார். பலரும் அவர் மதுரைப் பகுதியில் போட்டியிடுவார் என்றே கருதினார்கள். மதுரை அவர் வளர்ந்த ஊர். அவருடைய சாதியான நாயுடுகள் வலிமையாக உள்ள பகுதி. ஆனால் விருத்தாசலம் நேரெதிர் திசையில் உள்ள வடத்தமிழகப் பகுதி.  அவர் சார்ந்த சாதியினரும் அங்கே பெரும்பான்மையாக இல்லை. இன்னொரு பக்கம் அவருடைய அரசியல் வருகையை கடுமையாக எதிர்த்து வந்த பாமகவும் வன்னியர் சமூகமும் பரவலாக உள்ள தொகுதி அது. ஆனால், அவரோ அவருடைய இயல்பான துணிவுடன் விருத்தாசலத்தையே தேர்வு செய்தார். 

விருத்தாசலத்தில் விஜயகாந்த் போட்டியிடும் செய்தி வந்ததும் தொகுதியே பரபரப்பானது. முன்னைவிட கூடுதலாக தலித்துகள் அங்கே தேமுதிக பக்கம் சென்றார்கள். இதை அக்கட்சியில் இருந்து சாதி இந்துக்கள் சிலர் விரும்பவில்லை. விஜயகாந்த் தொகுத்திக்குள் வருவதற்கும் முன்னரே, தலித் தொண்டர்களை தேமுதிக புறக்கணிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. பரப்புரை செய்வதற்காக விருத்தாசலத்திற்கு வந்தார் விஜயகாந்த்.  தம்முடை பரப்புரை வாகனத்தில் இருந்தபடி, "கஸ்பா சங்கர் எங்க இருக்கே... இங்கே வா.." என்று ஒலிப்பெருக்கியில் அழைத்தார். கூடியிருந்த கூட்டத்தினரிலிருந்து வந்தார் கஸ்பா சங்கர் என்பவர். "உன்னுடைய அம்மாவை கூப்பிடு" என்று அறிவித்தார் விஜயகாந்த். சங்கரின் அம்மாவை அழைத்து வந்தார்கள்.  அந்த அம்மாவின் கையில் கட்சிக் கொடியை கொடுக்கச் சொல்லிவிட்டு, கஸ்பா சங்கரை தன்னுடன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அவருடைய அம்மாவைப் பார்த்து, வாகனத்தின் முன் நின்று கொடியை அசைக்கக் கூறினார் விஜயகாந்த். விஜயகாந்தின் முதல் தேர்தல் பரப்புரை துவங்கியது. விருத்தாசலம் கஸ்பா சங்கர் என்பவர், நீண்ட காலமாகவே விஜயகாந்த் ரசிகர் மன்றப் பொறுப்பில் இருப்பவர். தலித் சமூகத்தைச் சார்ந்தவர். 

ஏற்கனவே வன்னியர் எதிர்ப்பு பலமாக இருக்கும் போது இது தேவையா என்று தேமுதிகவிலேயே பேசிக்கொண்டனர். இது தேர்தல் முடிவில் பாதகத்தை உருவாக்கும் என்று நியாயம் பேசினார்கள். ஆனால், வெற்றிப் பெற்றார்.

10

அயோத்தியில் பாபர் மசூதியை இந்துத்துவ கும்பல் இடித்ததை 'காட்டு மிராண்டித்தனம்' என்று கூறி கடுமையாக எதிர்த்தவர் விஜயகாந்த். அதே இடத்தில் மீண்டும் மசூதியை கட்டிக்கொடுப்பதுதான் 'பரிகாரம்' என்றும் அவர் கூறினார். ஆனால், திரைப்படங்களில் திணிக்கப்பட்ட 'இஸ்லாமிய தீவிரவாதம் ' என்னும் போலித் தோற்றத்தை அவருடைய பிற்கால திரைப்படங்களிலும் கண்டதை அவருடைய நல்ல ரசிகர்கள் விரும்பவில்லைதான். அரசியலில் அவரிடம் பெரிய தத்துவார்த்த கூறுகளைத் தேடுவது அபத்தமானதுதான். அவருடைய மனித நேயத்தின் நீட்சியாகவே அவருடைய அரசியல் முயற்சியையும் காண்பதுதான் சரியாகும். ஆனால், வெகுமக்களின் திரட்சியை சரியாக நெறிப்படுத்தும் திட்டமும் செயற்பாட்டாளர்களும் அவருக்கு வாய்க்கவில்லை என்பது துயரம். அதனால்தான் மிகவும் குறுகிய காலத்திலேயே  எதிர்க்கட்சி என்னும் இடத்தை அடைந்த அவருடைய கட்சி, குறுகிய காலத்திலேயே தேக்கத்தையும் கண்டது. அது அவருடைய நன்முயற்சிகளையும் தோல்வியடைச் செய்தது. இதெல்லாம் அவருடைய தனிப்பட்ட போதாமைகள் அல்ல; ஆனால், அவர் மனரீதியாக உடைந்துபோக இவையும் காரணங்களாக இருந்தன. இவற்றுடன் அவருடைய உடல் நலக் கோளாறுகளும் இணைந்து கொள்ளவே, மக்களின் மனம் கவர்ந்த விஜயகாந்த் என்னும் பண்பாளரை தமிழகம் இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. 

விஜயகாந்திற்காக இன்று சிந்தப்படும் கோடானுகோடி கண்ணீர்த் துணிகளைத் காணும் போது, கடந்த காலத்தில் அவருடைய ரசிகர்களாக இருந்தவர்கள் பெருமிதம் கொள்ளுகிறோம். ஓர் கலைஞர் தம்முடைய ரசிகர்களுக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமை இத்தகைய பெருமிதங்களை கொடுப்பதுதான். அந்த வகையில், கேப்டன், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கடமை தவறாதவராக வாழ்ந்து சென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பண்டிதரின் பேரொளி.

ஸ்டாலின் தி  பௌத்த மரபின் வேர்களை சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் இன்று(மே-20)...