ஸ்டாலின் தி
.
சுதந்திரம் என்னும் சொல் மாபெரும் கனவை உருவாக்கும் சொல்; மாபெரும் மனக்கிளர்ச்சியை உருவாக்கும் சொல். மனித சிந்தனையில் உதித்த மகத்தான சொல் சுதந்திரம். அச்சொல்லின் வேர் மனித நாகரீகத்தின் ஈரத்தை தேடியலைகிறது. உண்மையில், சுதந்திரம் என்னும் சொல் சமூகத்தின் முக்கியத்துவமான சொல்லாக இருக்கிறது. ஆனால், அது சொல்லாக மட்டுமே இருப்பதுவும் சமூகத்தின் முக்கியத்துவமான பிரச்சனையாகவும் இருக்கிறது.
இன்றைய தேசமும் சர்வ தேசமும் சுதந்திரத்தின் அடிப்படையில் கட்டமைப்பட்டுள்ளன என்று பிரகடனப்படுத்தப்படுகின்றன. ஆனால், உண்மையென்ன. தேசமும் சர்வதேசமும் அதிகாரத்தின் களங்களாக உள்ளன. அவ்வதிகாரத்தைக் கொண்ட தரப்புகள் தங்களுடைய அதிகாரத்தால் ஆளப்படும் மண்ணை சுதந்திர மண்ணென்றும், சமூகங்களை சுதந்திர சமூகங்களென்றும் வரையறுக்கின்றன. இந்த போலி வரையறைக்குள் அகப்பட்டுள்ள மண்ணும் சமூகங்களும் சுதந்திரத்தின் அதிகாரத்தை நுகரமுடியாமல் அதிகாரத்தின் சுதந்திரத்தால் வதைபட்டுக் கொண்டிருக்கின்றன.
அதிகாரத்தை குவித்து வைத்திருக்கும் தரப்புகள்தான் இங்கே சுதந்திரமாக இருக்கின்றன. மண்ணைச் சுரண்டுவதற்கு சுதந்திரம், மக்களைச் சுரண்டுவதற்கு சுதந்திரம், தங்களுடைய அதிகாரங்களை குவிக்கவும், அவற்றிற்கான பின்னணிகளையும், காரணிகளையும் பெருக்கவும், பலப்படுத்தவும் சுதந்திரம் என, அதிகாரத்தின் மூலம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை சர்வ அதிகாரங்களாக வளர்த்துவருகின்றன அதிகாரம் படைத்த தரப்புகள்.
இன்னொருபக்கம் சுதந்திரத்தின் அதிகாரத்தை நுகர அனுமதிக்கப்படாத மக்கள் மண்ணுரிமை இழந்து, தன்னுரிமை இழந்து நெருக்கடியான வாழ்வில் கடந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் சாதியும் மதமும், பொருளாதார ஆதிக்கமும், ஆணாதிக்கமும் சுதந்திரத்தை கோடானுகோடி மக்களுக்கு கிட்டாமல் தங்களுடைய அதிகாரத்தால் தடுத்துவருகின்றன. இந்த அதிகாரத்தை மக்களுக்கான சுதந்திரம் எனப்படும் ஜனநாயக ஆட்சிமுறையை பயன்படுத்தியே இவர்கள் பெறுவதுதான், கிடைத்துவிட்டதாக பெருமையுடன் கூறப்படும் சுதந்திரத்தின் கேலிச்சித்திரமாகும்.
சுதந்திரம் யாவருக்குமானதாக இருக்கவேண்டுமானால் யாவருக்குமான அதிகாரம் இருக்கவேண்டும். அனைவருக்கும் அதிகாரம் என்பதே அனைவருக்குமான சுதந்திரத்தின் அர்த்தமாக இருக்க முடியும். அத்தகைய அதிகாரமென்பது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் ஒருங்கேக் கொண்டதே சமூகத்திற்கான, சமூக மேம்பாட்டிற்கான அதிகாரமாக இருக்க முடியுமென்றார் அண்ணல் அம்பேத்கர். சமூக மேம்பாட்டிற்கான அவ்வதிகாரமே சமூகங்களின், தேசங்களின் சுதந்திரமாக இருக்க முடியும்.