திங்கள், 18 நவம்பர், 2024

இந்திரா அம்மையாருக்கு அரசியல் திருப்பம் கொடுத்த ஒன்பது தலித் உயிர்கள்.


ஸ்டாலின் தி 


இந்திரா காந்தி அவர்கள், தமது 'அவசரகால நடவடிக்கை'யின் மூலம் கடுமையான பின்னடைவை சந்தித்திருந்த காலம் அது. 1977 இல் நடந்த  தேசிய தேர்தலில் அவரும் காங்கிரஸும் ஏறத்தாழ அரசியலை விட்டே விலக்கப் பட்டிருந்தார்கள். அவரும் அவருடைய அரசியல் வாரிசான சஞ்சயும் கூட தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. முந்தைய தேசிய தேர்தலில் வென்றதைவிட 200 க்கும் அதிகமான தொகுதிகளை காங். அப்போது இழந்திருந்தது. அவருடைய எதிர்ப்பாளர்கள் ஒன்று கூடி அமைத்த ஜனதா அணி, மொரார்ஜி தேசாய் தலைமையில் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. எங்கும் இந்திரா எதிர்ப்பு அலை.  அந்தப் பேரலையில் மூச்சுத் திணறிப் போயிருந்தார் இந்திரா. ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலில்,  அரசியலை விட்டே விலகிச்சென்று, இமைய மலையடிவாரத்துக்கு சென்றுவிடலாம் என்று அவர் முடிவெடுத்திருந்தார். அப்படியோர் சூழலில்தான் பீகார் மாநிலத்தின், பெல்ச்சி எனும் கிராமத்தில், 1977 மே 27 ஆம் தேதி ஒரு பெருங்கொடுமை,  சாதி வெறியால் நடத்தப்பட்டது.

அன்றைய தினம்தான், அந்த கிராமத்தில்,  சாதிவெறிக் கும்பல் ஒன்று, ஒன்பது அப்பாவி தலித்துகளை உயிரோடு எரித்துக் கொன்றது. தேசத்தை கடும் அதிர்ச்சிக்காட்படுத்திய இந்த சாதியப் படுகொலையைப் பற்றி விசாரணை செய்வற்காக,  ஜனதா அணித் தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஒய்.பி.சவான்   அங்கே செல்வதாக அறிவித்தார். ஆனாலும் உடனடியாகச் செல்லவில்லை. 

உண்மையில்  பாபு ஜகஜீவன் ராம் அவர்களுக்கு முக்கியத்துவம்  கொடுத்திருந்தாலும்,  ஜனதா அரசு சாதியப் பிரச்சனைகளை,  அலட்சியமாகவே கையாண்டது. இந்திராவை ஜனநாயக விரோதியாக பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஜனதா ஆட்சியில் சாதிக் கலவரங்கள் அதிகமாக நடத்தப்பட்டன. ஜனதா ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் தேசத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சாதிக் கலவரங்கள் நடத்தப்பட்டு, தலித்துகள் ஒடுக்கப்பட்டனர். ஆனால், ஜனநாயகம் பேசிய ஜனதா ஆட்சியோ, அலட்சியமாக இருந்தது.  பெல்ச்சி படுகொலையையும் அந்த அரசு அப்படியே அணுகியது. இந்நிலையில் தான் இந்திரா யாரும் எதிர்பாராமல் பெல்ச்சி எனும் குக்கிராம சேரிக்கு புறப்பட்டார். 

விமானத்தின் மூலம் பாட்னா வந்திறங்கிய இந்திரா, அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டார். சேரும்  சகதியுமான பாதையில்  ஜீப்புக்கு மாறி பயணப் பட்டார். ஜீப்பும் செல்ல முடியாத வழியில் யானை சவாரி மூலம் அந்தக் குக்கிராம சேரிக்குச்  சென்று, சாதிவெறியால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளித்தார். இந்த பயணம் அவரை 'எளியோரின் தலைவி'யாக உருவமைத்தது என்பதை அவருடைய எதிரணியினரே ஒத்துக் கொண்டார்கள்.  மனதில் ஏற்பட்ட வலியால் அடைப்பட்டுக் கிடந்த, இந்திராவின் அந்த பயணம் மீண்டும் அவரை அரசியலில் தீவிரமாக இயங்க வைத்தது. அவரது தொண்டர்களும் கூடவே புத்துணர்வோடு எழுந்தார்கள். தொடர்ந்த சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்டிருந்த தலித்துகளின் ஆதரவு இந்திராவுக்கு பெருகியது. சில மாதங்களில்(1978 ஜனவரி) புதிய காங்கிரஸ்(இ) உதயமானது. அடுத்த மாதமே அது கர்நாடகா, ஆந்திரா மாநில தேர்தல்களில் வெற்றிகளைகக் குவித்தது. 

கர்நாடக சிக்மகளூர் தொகுதியில் வென்று மீண்டும் பாராளுமன்றம் நுழைந்தார். அடுத்த இரண்டே ஆண்டுகளில்(1980) வந்த  தேசிய தேர்தலில் இ.காங். 353 இடங்களில் வென்று, இந்திரா தலைமையில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. அந்த மாபெரும் வெற்றியின்  பின்னணியில் இந்திராவுடன் தலித்துகளும் இருந்தார்கள்.

(2017நவம்பர் 19, இந்திராகாந்தியின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முகநூலில் எழுதப்பட்ட என்னுடைய பதிவு.-‌ஸ்டாலின் தி.) 

புதன், 13 நவம்பர், 2024

மருத்துவர் மீதான தாக்குதல்: மருத்துவ மனை சீர்த்திருத்தம் குறித்தும் பேசப்படவேண்டும் .

ஸ்டாலின் தி 

தென்காசி அரசு மருத்துவமனையில் கை எலும்பு முறிவுக்கு சிகிச்சைக்கு சென்ற நோயாளியிடம் அவருடைய எக்ஸ்-ரே பதிவை  வெள்ளைத்தாளில்  நகல் எடுத்துக் கொடுத்து அனுப்பிய செய்தியை சில நாள்களுக்கும் முன்பாக ஊடகங்களில் பார்த்தோம். கடந்த மாதம், திருச்சி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு சிகிச்சைக்கு சென்று திரும்பிய தம்பி ஒருவர் எக்ஸ்-ரே படத்தை செய்தித்தாளால் மூடி எடுத்துவந்ததைக் கண்டு 'கவர் இல்லையா' என்றேன். 'இல்லையாம். இதோ மாத்திரைகளுக்கும் கூட கவர் இல்லை என்று கூறிவிட்டார்கள் ' என்று கையில் இருந்த ஓருமாதத்திற்கான மாத்திரை அட்டைகளை காட்டினார் என்னிடம். திருச்சி மருத்துவமனை சுமார் பத்து மாவட்டங்களிலிருந்து வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் 'பெரியாஸ்பத்திரி' ஆகும்.  சிகிச்சையும் கூட சிறப்பாகவே இருக்கிறது,பெரிய குறையில்லைதான். அப்படித்தான் மற்ற அரசு மருத்துவமனைகளும் உள்ளன. ஆனால், இப்படி நுகர்வோர் மீதான அலட்சியம் மட்டும் அரசு மருத்துவமனைகளில் தொடர்வது ஏன் என்கிற கேள்வி முக்கியமானது. இது வெறும் அலட்சியம் மட்டுமா அல்லது ஒருவகையிலான அதிகாரத்துவமா என்பதையும் நாம் விசாரணைக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது 25 வயதுடைய இளைஞன் விக்னேஷ் என்பவர்  கத்திக்குத்து தாக்குதல் நடத்தியது கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. நிச்சயமாக அது கண்டிக்கத் தக்கச் செயல்தான். சட்டப்பூர்வ பார்வையில் தண்டிக்கப்பட வேண்டிய செயலும்தான். கத்தி எடுப்பதே பிரச்சனைகளை தீர்க்க வழி என்கிற பார்வைக்கு  மனித நாகரீகத்தில் இடமளிக்கக் கூடாது. அதே வேளை மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டோர் களை(நோயாளிகள் மற்றும் அவர்களின் தரப்பினர்களை)  அதிகம் சோதிக்கின்றன என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது. மருத்துவர் பாலாஜி அவர்கள் தமக்கு அளித்த சிகிச்சையில் அலட்சியம் காட்டியதாகவும், தம்மை மிக மோசமான வார்த்தைகளால் அவமதிப்பு செய்ததாகவும் மரணப்படுக்கையில் கிடக்கும் புற்று நோயாளியான ஐம்பது வயதைக் கடந்த பிரேமா கூறுகிறார். பிரேமாவின் மகன்தான் மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷின்  தாய். சிகிச்சை குறித்த குற்றச்சாட்டை விசாரணையின் வழியேதான் நாம் பேச முடியும். ஆனால், மருத்துவமனைகளில் வெகுமக்கள் மீது தொடரும் அவமதிப்புகள்  பற்றி பேசித்தான் ஆக வேண்டும். 

சிறைக்கூடங்களும்   மருத்துவமனைகளும் சாராம்சத்தில் ஒரே வகையிலான ஒடுக்குமுறை கூடங்களாக இயக்கப்படுவதை ஃபூக்கோ  போன்ற பின்னை நவீனத்துவ அறிஞர்கள் விளக்கியிருக்கிறார்கள்.   
சிறைக்கைதிகள் மீது சிறை அதிகாரிகள் அதிகாரம் செலுத்துவதைப் போலவே நோயாளிகள் மீது மருத்துவர்கள் அதிகாரம் செலுத்துவதை பல்வேறு சான்றுகளுடனும் தர்க்கங்களுடனும் விளக்குவார்கள்  அவ்வறிஞர்கள். அதையே நாம் நேரிலும் காணமுடிகிறது. பல மருத்துவர்கள் (அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பலரும் கூட) தங்களை 'சிறை அதிகாரிகள்' என்றே கருதுகிறார்கள். அவர்களை பொருத்தமட்டில் நோயாளிகள் கைதிகள். சிறைச்சாலையில் கைதிகளை சந்திக்கும் நேரத்திலும் மருத்துவமனைகளில் நோயாளிகளை சந்திக்கும் நேரத்திலும்  நடைமுறைப்படுத்தப்படும் நடைமுறைகளை ஒப்பிட்டு பாருங்கள். கைதிகள், நோயாளிகள், பார்வையாளர்கள் ஆகியோர் மீது  ஏறத்தாழ ஒரே வகையிலான கெடுபிடிகள், கண்காணிப்புகள், அச்சுறுத்தல்கள்.‌ சரி, மருத்துவமனைகளில் கட்டுப்பாடுகள் கூடவே கூடாதா என்கிற 'பொது புத்தி கேள்வி' வரும். நலன் சார்ந்த கட்டுப்பாடுகள் அதிகாரம் சார்ந்த கட்டுப்பாடுகளாக நடைமுறைப் படுத்தப்படுவதுதான்  இங்கே பிரச்சனை என்கிறேன். அந்த அதிகார தொணியும் அவமதிப்பும்  பலகோடி பாமரர்களாலும் சகித்துக்கொள்ள முடிகிறது. அப்படி சகித்துக்கொள்ளச் செய்யும் வகையில் அவர்கள் மீது அதிகாரமும் செலுத்தப்படுகிறது. இந்த அதிகாரத்தை சமூகத்தில் நிலவும் சொல்லாடல்கள் மூலமும் உருவாக்க முடிகிறது. மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதைக்  கண்டித்து அறிக்கை அளித்துள்ள மருத்துவரும் பாமக தலைவருமான அன்பு மணி,  'மருத்துவர்களை கடவுள்களாக பார்க்க வேண்டும் ' என்று கூறியுள்ளார். மருத்துவர்கள் அதிகாரிகளாக இருப்பதே மக்கள் மீதான வன்முறை . ஆனால், இப்படி கடவுளின் பீடத்தை அளிக்க 'சமூக நீதி பேசுபவர்களே' விரும்புகிறார்கள் எனில் என்ன சொல்லுது. இதெல்லாமும்தான்‌  மருத்துவமனைகளை அதிகார மையங்களாக ஆக்கிவிடுகின்றன. 
சில வேளைகளில் அதுவே எதிர் விளைவை உருவாக்கியும் விடுகிறது, கிண்டியில் நடந்த கத்திக்குத்தைப் போல. இத்தகைய எதிர்விளைவு  சரி என்று வாதிட ஒன்றுமில்லை. ஆனால், இத்தகைய எதிர்விளைவுகளை பக்கவிளைவுகளாக உருவாக்கும் காரணிகளை யார் கண்டுகொள்கிறோம் என்பதுதான் கேள்வி.‌ மருத்துவமனையிலேயே வைத்து ஓர் மருத்துவ நிபுணரை கத்தியால் தாக்கிய வன்செயலை தலைவர்கள் முதல் யாவரும் பரவலாக கண்டிக்கிறோம். மருத்துவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று போராட்டத்திலும் இறங்கியுள்ளனர். மருத்துவர்களின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதுபோலவே மருத்துவமனைகளில் நுகர்வோரின் சுயமரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும். உயிருக்கு இணையானதுதான்  சுயமரியாதையும். அதனால்தான் சுயமரியாதைக்கான   போராட்டங்களில் எத்தனையோ போராளிகள் உயிரைக் கொடுத்துச் சென்றுள்ளனர். 

மேலும், மருத்துவமனை சீர்த்திருத்தங்கள் குறித்து இனியாவது தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டும். மக்களின் உயிரை பணயமாக வைத்து நடத்தப்படும் அதிகாரமும் அத்துமீறலும் சுரண்டலும் ஒழிக்கப்பட வேண்டும். அதேபோல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதைப் போலவே நோயாளிகளை பராமரிப்பவர்களுக்கான வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும். கிண்டியில் தாக்குதல் நடத்திய விக்ணேஷுக்கு அப்படி எதுவும் கிடைக்கவில்லை. இருபத்தைந்து வயதுடைய ஒரு இளைஞன் அவர். அண்மையில் அவருடைய தந்தை காலமாகி யுள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட தம்முடைய தாயாரின் மலத்தை அள்ளுவது முதற்கொண்டு அனைத்து பராமரிப்பு பணிகளையும் அந்த இளைஞர்தான் செய்துள்ளார். அரசு மருத்துவமனையிலும் பணம் செலவழிக்க வேண்டியதை எண்ணி ஒருபக்கம் கலக்கம்.  இத்தனை,  மனநெருக்கடியில் ஏதேனும் ஐயம் கேட்டால் 'நீ டாக்டரா நான் டாக்டரா?' போன்ற அதிகார தொணி சொற்கள் வேறு அவரை சிறுமைப் படுத்தியுள்ளது. 'முந்தைய தவறான சிகிச்சையே உன் தாயின் இன்றைய வலிநலிக்கு முக்கிய காரணம் ' என்று தனியார் மருத்துவமனை அவரிடம் கூறியிருக்கிறது. ஒரு சராசரி இளைஞன் மீது இத்தனை அழுத்தங்கள் விழும் போது அவனை வழிநடத்த யாருமில்லை. கத்தியை தூக்கி பழிதீர்க்க வாழ்க்கை ஒன்றும் திரைப்படக் காட்சியல்ல என்று அவருக்குப் போதிக்க எவருக்கும் நேரமில்லை. அவரின் குற்றச்சாட்டை செவிக்கொடுத்துக் கேட்கவேண்டிய  அரசும் அதன் துறைகளும் மற்றுமோர் அதிகார அமைப்புகளாக அச்சுறுத்துகின்றன.  இதெல்லாமும் சேர்ந்துதான் அந்த இளைஞனை குற்றத்தில் தள்ளியுள்ளன‌. குற்றம் மட்டுமல்ல குற்றத்தின் சூழலும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நீதியின் நிபந்தனை. எனவே,  விக்னேஷ் மீதான குற்றச்சாட்டைப் போலவே, சிகிச்சை மீதான குற்றச்சாட்டும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும். கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை துயர நிகழ்வைத்  தொடர்ந்தாவது  மருத்துவமனைச் சீர்த்திருத்தங்களுக்கான பாதையை  திறந்துவிட அரசு மனம் திறக்க வேண்டும்.

கே.பி.எஸ்.மணி என்கிற பூர்வகுடி ஆளுமை.

ஸ்டாலின் தி  சேரி மக்களால், மாவீரர் K.B.S. மணி என்று அழைக்கப்பட்டவர், தலைவர் கதிர்வேல் பால சுப்பிரமணி அவர்கள் ஆவார். முன்னாள் ர...