ஸ்டாலின் தி
இந்திரா காந்தி அவர்கள், தமது 'அவசரகால நடவடிக்கை'யின் மூலம் கடுமையான பின்னடைவை சந்தித்திருந்த காலம் அது. 1977 இல் நடந்த தேசிய தேர்தலில் அவரும் காங்கிரஸும் ஏறத்தாழ அரசியலை விட்டே விலக்கப் பட்டிருந்தார்கள். அவரும் அவருடைய அரசியல் வாரிசான சஞ்சயும் கூட தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. முந்தைய தேசிய தேர்தலில் வென்றதைவிட 200 க்கும் அதிகமான தொகுதிகளை காங். அப்போது இழந்திருந்தது. அவருடைய எதிர்ப்பாளர்கள் ஒன்று கூடி அமைத்த ஜனதா அணி, மொரார்ஜி தேசாய் தலைமையில் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. எங்கும் இந்திரா எதிர்ப்பு அலை. அந்தப் பேரலையில் மூச்சுத் திணறிப் போயிருந்தார் இந்திரா. ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலில், அரசியலை விட்டே விலகிச்சென்று, இமைய மலையடிவாரத்துக்கு சென்றுவிடலாம் என்று அவர் முடிவெடுத்திருந்தார். அப்படியோர் சூழலில்தான் பீகார் மாநிலத்தின், பெல்ச்சி எனும் கிராமத்தில், 1977 மே 27 ஆம் தேதி ஒரு பெருங்கொடுமை, சாதி வெறியால் நடத்தப்பட்டது.
அன்றைய தினம்தான், அந்த கிராமத்தில், சாதிவெறிக் கும்பல் ஒன்று, ஒன்பது அப்பாவி தலித்துகளை உயிரோடு எரித்துக் கொன்றது. தேசத்தை கடும் அதிர்ச்சிக்காட்படுத்திய இந்த சாதியப் படுகொலையைப் பற்றி விசாரணை செய்வற்காக, ஜனதா அணித் தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஒய்.பி.சவான் அங்கே செல்வதாக அறிவித்தார். ஆனாலும் உடனடியாகச் செல்லவில்லை.
உண்மையில் பாபு ஜகஜீவன் ராம் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், ஜனதா அரசு சாதியப் பிரச்சனைகளை, அலட்சியமாகவே கையாண்டது. இந்திராவை ஜனநாயக விரோதியாக பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஜனதா ஆட்சியில் சாதிக் கலவரங்கள் அதிகமாக நடத்தப்பட்டன. ஜனதா ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் தேசத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சாதிக் கலவரங்கள் நடத்தப்பட்டு, தலித்துகள் ஒடுக்கப்பட்டனர். ஆனால், ஜனநாயகம் பேசிய ஜனதா ஆட்சியோ, அலட்சியமாக இருந்தது. பெல்ச்சி படுகொலையையும் அந்த அரசு அப்படியே அணுகியது. இந்நிலையில் தான் இந்திரா யாரும் எதிர்பாராமல் பெல்ச்சி எனும் குக்கிராம சேரிக்கு புறப்பட்டார்.
விமானத்தின் மூலம் பாட்னா வந்திறங்கிய இந்திரா, அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டார். சேரும் சகதியுமான பாதையில் ஜீப்புக்கு மாறி பயணப் பட்டார். ஜீப்பும் செல்ல முடியாத வழியில் யானை சவாரி மூலம் அந்தக் குக்கிராம சேரிக்குச் சென்று, சாதிவெறியால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளித்தார். இந்த பயணம் அவரை 'எளியோரின் தலைவி'யாக உருவமைத்தது என்பதை அவருடைய எதிரணியினரே ஒத்துக் கொண்டார்கள். மனதில் ஏற்பட்ட வலியால் அடைப்பட்டுக் கிடந்த, இந்திராவின் அந்த பயணம் மீண்டும் அவரை அரசியலில் தீவிரமாக இயங்க வைத்தது. அவரது தொண்டர்களும் கூடவே புத்துணர்வோடு எழுந்தார்கள். தொடர்ந்த சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்டிருந்த தலித்துகளின் ஆதரவு இந்திராவுக்கு பெருகியது. சில மாதங்களில்(1978 ஜனவரி) புதிய காங்கிரஸ்(இ) உதயமானது. அடுத்த மாதமே அது கர்நாடகா, ஆந்திரா மாநில தேர்தல்களில் வெற்றிகளைகக் குவித்தது.
கர்நாடக சிக்மகளூர் தொகுதியில் வென்று மீண்டும் பாராளுமன்றம் நுழைந்தார். அடுத்த இரண்டே ஆண்டுகளில்(1980) வந்த தேசிய தேர்தலில் இ.காங். 353 இடங்களில் வென்று, இந்திரா தலைமையில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. அந்த மாபெரும் வெற்றியின் பின்னணியில் இந்திராவுடன் தலித்துகளும் இருந்தார்கள்.
(2017நவம்பர் 19, இந்திராகாந்தியின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முகநூலில் எழுதப்பட்ட என்னுடைய பதிவு.-ஸ்டாலின் தி.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக