ஸ்டாலின் தி
திமுகவின் துவக்ககாலத்தில் சென்னை சேரிகளின் துடிப்பான பல செயல்வீரர்கள் செயற்பட்டார்கள். அவர்களில் ஒருவராகவும் செல்வாக்கும் கொண்ட இளைஞராகவும் திகழ்ந்தவர் வை.பா. என்று மக்களால் அழைக்கப்பட்ட தலைவர் வை.பாலசுந்தரம் அவர்கள். சென்னையின் முக்கிய வணிகமாக அன்று விளங்கிய சுண்ணாம்பு விற்பனையில் ஈடுபட்ட குடும்பம் வை.பா.வின் குடும்பம். எனவே, பொருளாதார ரீதியாகவும் வலுவான பின்னணியைக் கொண்டிருந்த குடும்பமாகவும் அவருடைய குடும்பம் இருந்தது. அன்றைய சூழலிலேயே சென்னை மௌண்ட் ரோடு, தி.நகர் உள்ளிட்ட சில இடங்களில் இடமும் கட்டடங்களையும் கொண்டிருந்தது வை.பாவின் குடும்பம். செனையில் திமுகவின் வளர்ச்சிக்கு வை.பா.குடும்பத்தின் பொருளாதார பின்னணியும் துணையாக இருந்தது. அன்றைய காலத்தில் சென்னையில் நடந்த பல கூட்டங்களுக்கு அண்ணாதுரையும், கருணாநிதியும் வந்துசென்றது வை.பா.வீட்டுக் காரில்தான். சென்னை மக்களிடம் வை.பாவுக்கு இருந்த மதிப்பும், திமுகவில் அவருக்கிருந்த இடமும் அவரை 1969 இல் சென்னை மேயராக ஆக்கியது.
1971 இல் அவர் அச்சரப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பாக நின்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். அவர் திமுகவில் இருந்தாலும் தான் சார்ந்த தலித் சமூகத்தின் நலன் மீதும் அவருக்கு மிக்க அக்கறையிருந்தது. அதன்காரணமாக அவருக்கு சென்னை தலித்துகளிடம் மட்டுமில்லாமல் சென்னைக்கு வெளியே மாநில அளவிலான தலித்துகளிடமும் உறவும் மதிப்பும் கிடைத்தன. அதன் விளைவாக, ஆயிரக்கணக்கான டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்றங்களை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் மாநாட்டை சென்னையில் நடத்தி பெரும் கவனத்தை உருவாக்கினார் வை.பா. அதன்தாக்கம் அவரை தனித்தன்மையான இயக்கத்தை உருவாக்க உந்தியது. மேலும், அவரின் தலித் அணித்திரட்டளை திமுகவின் தலைமையும் விரும்பவில்லை. அதைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு உருவானதுதான் 'அம்பேத்கர் மக்கள் இயக்கம்.' பிறகு, அதுவே அம்பேத்கர் மக்கள் கட்சியாகவும் ஆனது.
அண்ணல் அம்பேத்கரின் படத்தை மையமாகக் கொண்ட நீலக்கொடி அன்றய தலித் இளைஞர்களை கவனிக்கவைத்தது; ஈர்த்தது. வை.பா.எனும் ஆளுமையை ஏற்று, அதுவரை கிராமங்களில் இயங்கிய டாக்கர் அம்பேத்கர் மன்றங்கள் வை.பா.தலைமையிலான அம்பேத்கர் மக்கள் இயக்கத்தில் இணைந்தன; வை.பா.தமிழகத்தின் முக்கிய தலித் தலைவராக எழுந்தார்.
1980களில் தலித் சமூக இயக்கங்களை ஒருங்கிணைக்கும் சிந்தனை வளர்ந்தது. தனித்தனி இயக்கங்களாக இருந்தாலும் ஒருகிணைந்து செயல்பட வேண்டுமென்கிற செயற்திட்டம் பெரியவர் இளையபெருமாள் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு முக்கிய துணையாகவும் தூணாகவும் இருந்த தலைவர் டி.எம்.மணி என்கிற டி.எம்.உமர் ஃபாருக். அவர்களின் முன்னெடுப்பால் தமிழக தலித் இயக்கங்கள் பல ஒருங்கிணைப்பில் இணைந்தன. 'ஷெட்யூல்ட் இன விடுதலைக் கூட்டமைப்பு' என்று பெயரிடப்பட்ட அந்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டவர் தலைவர் வை.பா. அவர்களாவார். அந்தளவுக்கு சக தலித் இயக்கங்களாலும், தலித் தலைவர்களாலும் மதிக்கப்பட்டவர் அவர்.
இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் வை.பா. அவர்கள் வயது முதிர்வால் சிலகாலமாக உடல் நலிவுற்று இருந்தார். இந்நிலையில்தான் அவர் இன்று இயற்கையடைந்துள்ளார் என்கிற செய்தி கிடைக்கிறது.
அண்ணல் அம்பேத்கரின் படம் தாங்கிய நீலக்கொடியை தாங்கியும், அண்ணலின் பெயரிலேயே கட்சியை நடத்தியும் பாடுபட்ட தலைவர் வை.பாலசுந்தரம் அவர்கள், அண்ணலின் நினைவு நாளிலேயே(2019 டிசம்பர் 6) இயற்கையடைந்தார்.
தலைவர் வை.பா.அவர்களுக்கு நினைவஞ்சலி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக