ஸ்டாலின் தி
'அரசு ஆவணங்கள் மற்றும் பொது புழக்கத்தில் இருந்து காலனி என்னும் சொல் நீக்கப்படும் ' என்று இன்றைய(29/4/2025) சட்ட மன்ற கூட்டத்தில் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். 'தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் இனி நீக்கப்படும்' என்று அந்த அறிவிப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலனி என்னும் சொல் இலத்தீன் மொழியின் 'கொலெர்(Colere)'என்னும் சொல்லில் இருந்து பிறந்தது. Colere என்பதற்கு இலத்தினில் வேளாண்மை நடப்பதை குறித்தது. இதிலிருந்து கொலனஸ் (Colonus) என்னும் சொல் வந்தது. அது வேளாணமையில் ஈடுபட்டவர்களை குறித்தது. வேளாண் (Colere) பகுதியில் வேளாண் சார்ந்த மக்களின் (Colonus) அடங்கிய வசிப்பிடத்திற்கும் வேளாண்மக்கள் குடியேற்றப்பட்ட இடங்களுக்கும் 'கலொனியா Colonia ' என்று பெயர் வந்தது. இந்த இலத்தின் சொல் பிரெஞ்ச் மொழியில் 'கொலனீ(Colonie)' என்று மாற்றமடைந்து ,ஆங்கிலத்தில் காலனி(Colony)என்று வழங்கப்பட்டது. பிறகு, ஆங்கிலேயர்கள் தங்களுடைய குடியேற்ற ஆட்சியை நிறுவிய நாடுகளில் காலனி என்கிற சொல்லும் குடியேறியது. (தமிழில் கழனி என்பது வேளாண் பகுதியை குறிக்கும் சொல். காலனியும் அவ்விடத்திலிருந்தே வந்துள்ளமை யால், கழனி | காலனி என்பதைக் குறித்து தனியே விசாரணை செய்யலாம்.)
இந்தியாவில், அதிகாரத்திற்காக குடியேறிய(காலனிய) ஆங்கிலேயர்களின் அதிகாரிகளின் வசிப்பிடங்களுக்கு காலனி என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது. அது பிற தொழிலாளர்கள் குடியிருப்பை குறிக்கும் சொல்லாக நகரப்பகுதிகளில் பயன்பாட்டுக்கு வந்தது. இறுதியாக, கிராமப்புற சேகரிக்கும் வந்தது. இலத்தீனில் நிலத்தில் உழைத்த மக்களின் குடியிருப்புக்கு கூறப்பட்ட காலனி அடையாளம், இந்திய நிலத்தில் உழைத்த மக்களின் அடையாளமாக ஆனது. காலனிக்காரர்கள் ஆனார்கள் சேரி மக்கள். தமிழ் நிலத்தில் சேரி என்னும் சொல் காலனி என்னும் சொல்லுக்கு இணையானச் சொல் என்பதாலும், 'பறைத்தெரு, சக்கிலித் தெரு, பள்ளத்தெரு' என்று இருந்த இழிவான சொல்லாடலை நீக்க தலித்துகளே காலனி என்னும் சொல்லை தேர்வு செய்தனர். ஆனாலும், ஊர்த்தெரு சாதியினரால் தீண்டாமையை அடையாளப்படுத்தும் சொல்லாகவே காலனி ஆக்கப்பட்டது. ஊர்-சேரி என்னும் பூர்வ மொழிச் சுட்டுதலில் காலனி என்னும் அயல் மொழிச் சொல்லை தீண்டப்படாத சொல்லாக வைத்தது சாதிய சமூகம். ரயில்வே காலனி, போலீஸ் காலனி என்றெல்லாம் அரசு குடியிருப்புகள் அழைக்கப்பட்டாலும், காலனி என்றால் அது சேரி மற்றும் சேரி மக்களின் அடையாளமாகவே புரிந்து கொள்ளப்பட்டது. 'ஊர் மக்களுக்கும்-காலனி மக்களுக்கும் மோதல்' என்று அச்சு ஊடகங்களும் கூட காலனி என்பதை தலித்-சேரி- அடையாளமாகவே அமைத்தது. தமிழ்த் திரைப்படங்கள் 'அசுத்தமானவர்கள், கேலிக்குரியவர்கள், குற்றவாளிகள் போன்றோரை அடையாளப்படுத்த காலனி என்பதை பயன்படுத்தியது.
தலித் மக்களுக்கு அரசால் அளிக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் கூட காலனி வீடுகள் என்றே கூறப்பட்டன. தலித் மக்களின் பழைய மனைகள், புதிய மனைகள் முறையெ பழைய காலனி, புதிய காலனி என்றே இன்றும் கூறப்படுகின்றன. இன்றைக்கு தமிழ்நாடு முதல்வர் தீண்டாமை அடையாளமாக காலனி என்னும் சொல் இருப்பதை சட்ட மன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதன் வேர்ச்சொல், வழிச்சொல் வழங்கும் பொருள் எதுவாக இருந்தாலும், இங்கே அது தீண்டாமையையே குறிக்கிறது. கடந்த காலங்களில் தலித் செயற்பாட்டாளர்கள் இதை கவனத்தில் எடுத்துள்ளனர். காலனி என்று வந்த இடங்களை 'நகர்' என்று திருத்தியிருக்கிறார்கள். புதிய காலனிகள் அம்பேத்கர் நகர்களாக உருவெடுத்தன. 90 களில் எழுந்த தலித் அரசியல் எழுச்சி பண்டைய சொல்லான சேரியையும் முன்வைத்தது. சேரிப் பண்பாடு, சேரித் தலைமை போன்ற சொல்லாடல்களை தலித் அரசியல்-பண்பாட்டு இயக்கங்கள் முன்வைத்தன. துவக்கக் காலத்தில்
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பின்னணியில் திட்டக்குடியிலிருந்து 'சேரி' என்னும் இதழ் ஒன்று வெளியாகியுள்ளது. 'தலை நிமிர சேரிதிரளுள்- அன்று தலைகீழாய் நாடு புரளும்' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கொடுத்த முழக்கம் ஒரு காலத்தில் சேரி எனும் சொல்லை ஆயுதமாக ஏந்தி நின்றது. ஆனாலும், சேரி என்னும் சொல் அரசியல் களத்தில் மீண்டும் கைவிடப்பட்டது. இன்னொரு பக்கம், காலனி என்கிற படிமம் தொடர்ந்து கொண்டே வருகிறது. அதை மறுக்கும் குரலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதே இதில் முக்கியம். கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் அவர்கள், 'ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியை காலனி என்று குறிப்பிடாமத் சான்றோர் குடியிருப்பு அல்லது தொல் தமிழர் குடியிருப்பு என்று மாற்ற வேண்டும் ' என்று கோரிக்கை விடுத்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள F. கீழையூரில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியை 'F. கீழையூர் காலனி' என்று பெயரிட்டு, வருவாய் மற்றும் பஞ்சாயத்து ஆவணங்களில் மாற்றப்பட்டது. அதை எதிர்த்து பிரதீப் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் (2023) வழக்கு தொடுத்தார். கடந்த ஆண்டு(2024) இல், நாமக்கல் மாவட்டத்தில் மல்ல சமுத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பெயர் பலகையில் 'அரிசன காலனி' என்று எழுதப்பட்டிருந்தை கணேசன் என்பவர் கடுமையாக எதிர்த்து போராடினார். அதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக சென்று அந்த பலகையில் இரந்த அரிசன காலனி என்கிற இப்பெயரை அழித்தார். இப்படியான தொடர் நிகழ்வுகளின் தொடர்ச்சிதான் முதல்வரின் இன்றைய அறிவுப்பு. இதை வரவேற்கும் அதே நேரத்தில் நம்மிடம் உள்ள கேள்வி, இது சாதிய மனநிலையில் என்னவகையான மாற்றத்தை நடத்தப் போகிறது என்பதுதான். ஆங்கிலச் சொல்லான காலனி என்பதை தீண்டப்படாத சொல்லாக ஆக்கிய சாதி இந்துக்கள் காலனி என்கிற சொல்லை மறந்துவிட்டால் அவர்களின் சாதிய குணமும் மறந்துபோகுமா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாக கிடைக்கும். தலித் மக்களின் இழிவான அடையாளமாக இருப்பது காலனி என்கிற சொல் மட்டுமல்ல. அவர்கள் நிலமற்றவர்களாக, அதிகாரம் அற்றவர்களாக, உரிமை அற்றவர்களாக இருக்க வைக்கப்பட்டிருப்பதுதான் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பவற்றிலேயே மாபெரும் இழிவான அடையாளங்களாகும். அவற்றைப் போக்க அவர்கள் நெடுங்காலமாக போராடுகிறார்கள், அர்ப்பணிக்கிறார்கள். அத்தகைய போராட்டங்களையும் அர்ப்பணிப்புகளையும் அவற்றின் பின்னுள்ள நியாயங்களையும் இந்த அரசு என்ன மதிப்பீட்டில் வைத்திருக்கிறது என்பதுதான் இங்கே முக்கியமான விவாதப் பொருளாக இருக்க வேண்டும். இழி சொற்கள் நீக்கப்பட்டல் இழி வாழ்வு மாறாது. மாறாக, இழி வாழ்க்கை மாற்றப்படும் போதுதான் இழி சொல் மாறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக