சனி, 5 ஜூலை, 2025

சென்னகரம்பட்டி படுகொலை நாள்!


ஸ்டாலின் தி 

மதுரை மாவட்டத்தில் அம்பலக்காரர்கள் எனப்படும் முக்குலச்சாதியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கிராமம் சென்னகரம்பட்டி. அங்கு 1991 ஜூலை 30 ஆம்தேதி அம்மச்சி அம்மன் கோயிலுக்கான நிலம் ஏலம் விடப்பட்டது. 1987 முதலே குத்தகை உரிமைக்கேட்டு வந்தார்கள் தலித்துகள். அதனாலேயே அம்பலத்தார்கள் ஏலத்தை தள்ளிப்போட வைத்து வந்தனர். 1991 ஆம் ஆண்டிலும் தலித்துகள் ஏலம் எடுப்பதில் முனைந்தனர்.
இதைக் கண்டித்து அம்பலக்காரர்கள் ஏலத்திலிருந்து விலகிப்போனார்கள். ஆனாலும் பூர்ண பிரகாஷ் என்னும் அம்பலக்காரர் மட்டும் கலந்துகொண்டார். தலித்துகள் தரப்பில் பெருமாள் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் ஏலம் கேட்டனர். பெருமாள் மற்றும் ஆறுமுகதிற்கே ஏலமும் கிடைத்தது. 'கீழ்ச்சாதிகாரன், நம் நிலத்திலே பண்ணையடிப்பவன் நிலத்தில் உரிமைக் கொண்டாடுவதா?' என்று அம்பலக்காரர்கள் கடும் கோபமடைந்தனர். பெருமாள் மற்றும் ஆறுமுகம் எடுத்த ஏலம் செல்லாது என்று நீதி மன்றத்திற்கு சென்றனர் அம்பலச்சாதிக்காரர்கள். ஆனால், சென்னை உயர் நீதி மன்றமோ தலித்துகள் எடுத்த ஏலம் செல்லும் என்று 1991 நவம்பர் 22 ஆம்தேதி தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தில் தோற்றுப்போன அம்பலச்சாதியினர் கிராமத்தில் தலித்துகளை ஒடுக்குவதை தீவிரப்படுத்தினார்கள். 

தங்களின் நிலத்தில் இனி வேலைசெய்யக்கூடாது என்று தலித்துகளுக்கு தடைப்போட்டனர் சாதிவெறியினர். இதனால் பக்கத்து ஊர்களுக்கு உழைக்கப்போனார்கள் தலித்துகள். இதனால் மேலும் வெறியடைந்த சாதிவெறியர்கள் 1992 ஜூலை 3 ஆம்தேதி பக்கத்து ஊர்களுக்கு வேலைக்குச் சென்று வந்த அழகி, ராஜேந்திரன், சேவி, நல்லமணி போன்றவர்களை வெட்டித்தாக்கினார்கள். கொலை முயற்சி பிரிவு மற்றும் வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கெல்லாம் போட்டாலும் நடவடிக்கை எடுக்கவில்லை அன்றைய ஜெயலலிதா அரசின் காவல்துறை. காவல்துறையின் இந்த கையாலாகாத்தனம்தான் சாதிவெறியர்களை இன்னும் தீவிரமாக இயங்கக் காரணமாகவும் ஆனது.

மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சமாதானப் பேச்சுக்காக 1992 ஜூலை 5 ஆம் தேதி இரு தரப்பையும் அரசு அழைத்தது. தலித்துகள் மட்டும் வந்தார்கள். சாதி இந்துக்கள் வரவில்லை. அப்போதாவது அவர்களின் திட்டம் அறிந்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால் எடுக்கவில்லை. அல்லது திட்டமே ஆளும் தரப்பின் ஆசியுடன் நடந்திருக்கலாம்தான். இரவு எட்டு மணியளவில் அதுவரைக் காத்திருந்த தலித்துகளை போகச்சொன்னார்கள் அதிகாரிகள். சுமார் பத்து மணி அளவில் சுந்தர்ராஜபுரத்தில் தலித்துகள் வந்த பேருந்தை வழிமறித்தது ராமர் என்னும் சாதிவெறியனின் தலைமையிலான சாதிவெறிக்கூட்டம். எல்லோர் கையிலும் ஆயுதங்கள். பேருந்தில் இருந்த காவலர்களும் தப்பி ஓடினார்கள். மற்றவர்களெல்லோரும் தாக்குதல் துவங்கியவுடன் இருட்டில் ஓடி தப்பித்துக்கொள்ள அம்மாசியும் வேலுவும் மட்டும் சாதிவெறிக்கும்பலிடம் சிக்கிக்கொண்டனர். பேருந்திலிருந்து இழுத்துப்போடப்பட்ட அந்த இருவரையும் சராமாரியாக வெட்டினார்கள் சாதிவெறியர்கள். ரத்தச் சகதியில் பலியானார்கள் அந்த நிலவுரிமைப் போராளிகள்.

சமாதானத்திற்கு என நம்பி வந்த இரண்டு மனிதர்களை சுமார் முப்பது சாதிவெறி மிருகங்கள் வெறித்தீர வெட்டிக்கொன்ற நாள் இன்று(ஜூலை 5).

எம் நிலவுரிமைப் போராளிகளுக்கு வீரவணக்கம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: தலித் அடையாளம், பண்பாடு, நோக்கத்தின் மீதான வன்முறை.


ஸ்டாலின் தி 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும் தென்னிந்திய பௌத்த பண்பாட்டு செயல்பாட்டாளருமான   கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கடந்த 5/7/2024 அன்று  சிலரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு 'இதுதான் காரணம்' என ஒரு கதையும், 'இது காரணம் அல்ல' என்று ஒரு கதையும் உடனடியாக கூறப்பட்டன. இரண்டு கதைகளும் தமிழ்நாடு அரசு காவல்துறையிலிருந்தே  கூறப்பட்டன. 

பிரபல ரவுடியின்  கொலைக்கு பழிக்குப்பழியாகவே   ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது' எனக்  கூறியது காவல்துறை. 'கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் மற்றும் சாதி ரீதியான காரணம் ஏதுமில்லை' என்கிற கதையைக் கூறினார் சென்னை காவல் ஆணையராக அப்போது இருந்த சந்தீப் ராய் ரத்தோர்.

இவ்விரண்டு கதைகளையும், அவை வந்த வேகத்தையும் வைத்துப் பார்க்கும் போது, இக்கதைகள் முன்கூட்டியே எழுதப்பட்டுவிட்டன  என்பதையும் நம்மால் கணிக்க முடிகிறது. ஆம்ஸ்ட்ராங் என்னும் தலைவரை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இக்கதைகளின்  முடிவாக, 'ஆம்ஸ்ட்ராங் தலைவரே இல்லை, அவர் ஒரு ரவுடி, கட்டப் பஞ்சாயத்துக்காரர்' என்கிற தோற்றத்தையும் காவல்துறையும் அதுவரை அவரை கண்டுகொள்ளாத  ஊடகங்களும் உருவாக்கியன . ஆனால், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வெறும் உடல் மீதான வன்முறை மட்டுமானதல்ல  என்பதையும், அவர் முன்னெடுத்த அடையாளம், பண்பாடு, நோக்கம் ஆகியவற்றின் மீதான வன்முறையும் தான் என்பதையும் நம்மால் உறுதியாகக் கூற முடியும்.

பொது சமூகம் எனும் அடையாளத்தில் உள்ள சாதி இந்து தரப்பினர்,  தலித் சமூகத்தின் மீது வலிந்து திணித்த அடையாளங்களுக்கு  நேரெதிரான அடையாளங்களை  உருவாக்குவதில் தம்மளவில்  தீவிரமாக செயல்பட்டவர் ஆம்ஸ்ட்ராங். துவக்கமாக, தம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அத்தகைய மாற்று அடையாளங்களை அவர் உருவாக்கினார். வடசென்னை தலித் இளைஞர்கள் மீது  'அடியாள், ஊதாரிகள், கிரிமினல்கள், அழுக்கானவர்கள்' போன்ற அடையாளங்களை அரசியல்.  கட்சிகளும் கழகங்களும்,  முதலாளிகளும், திரைப்படம் மற்றும் செய்தி ஊடகங்களும் பூசி வைத்திருந்தனர். அவற்றுக்கிடையில்தான்  சமூக முன்னேற்றத்திற்கான பணியில் ஈடுபட்ட இளைஞர் என்னும் அடையாளத்தோடு மேலெழுந்து வந்தார் ஆம்ஸ்ட்ராங்.மறைந்த தலித் தலைவரான பூவை மூர்த்தி அவர்களின் செயல்பாடுகளிலிருந்து  தாக்கம் பெற்று சமூகப் பணியில் இறங்கிய ஆம்ஸ்ட்ராங், தம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட இழி  அடையாளத்திற்கு  மாற்றான 'கலகக் கார' அடையாளத்தை தம்முடையதாக   ஆக்கிக் கொண்டார். தலித்துகளின் ஆண்டைகளாக  தங்களை நிறுவிக் கொண்டவர்கள்தான்  தலித்துகளின் பிரச்சனைகளைப் பேச வேண்டும், அவர்களை வழிநடத்த வேண்டும் என்கிற நிலைக்கு மாற்றாக, எங்களுக்குள்ளான பிரச்சனைகளையும், எங்களைச் சூழும் பிரச்சனைகளையும் நாங்களே பேசித்  தீர்க்கிறோம், எங்களை நாங்களே வழிநடத்திக்கொள்ளும்‌ அறிவும் ஆற்றலும் எங்களுக்கு உள்ளன  என்கிற தலித் கலக நடைமுறையை கையிலெடுத்தார் ஆம்ஸ்ட்ராங். அதைத்தான் கட்டப்பஞ்சாயத்து என்று கரித்துக் கொட்டியது சாதிய தரப்பிலான பொது சமூகம் என்னும் தலித் வெறுப்பு சமூகம்.

படிக்காதவர்கள், கெட்ட வார்த்தை பேசக்கூடியவர்கள், குற்றவாளிகள் போன்ற படிமங்கள் மற்றப் பகுதிகளில் உள்ள தலித்துகள் மீது சுமத்தப்பட்டதைப்  போலவே, 'மெட்ராஸ் பறையர்' என்னும் தலைநகர் தலித்குடிகள் மீதும் சுமத்தப்பட்டன. ஆம்ஸ்ட்ராங் அத்தகைய அடையாளங்களை தலைகீழாக்கினார். ஏழை -எளிய உழைக்கும் தலித் குடும்பங்களில் படிப்பவர்களை உருவாக்கினார்,  உருவாகி வந்தவர்களை  ஊக்கப்படுத்தினார். தலித் விளையாட்டு வீரர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் உறுதுணையாக இருந்தார். தலித்துகளிடையே சமூக நீதி பேசும் பேச்சாளர்களையும்,  கலைஞர்களையும் வளர்த்தெடுத்தார். அவ்வாறு வளர்ந்து கொண்டிருந்தவர்களை ஆதரித்தார்.  குற்றப் பின்னணி உடையவர்கள் எனக் கருதப்பட்ட தலித்துகளிடமிருந்து நீதிக்கு குரல் கொடுக்கும் குணமுடைய  நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களை உருவாக்கினார்; முன்மாதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் சட்டம் படித்து வழக்கறிஞராகவும்  ஆனார். சேரி மக்களை அழுக்கு என்னும் படிமத்தில் புறத்தார் கண்டதை  மறுக்கும் வகையில் தூய்மையின் சின்னமான 'வெள்ளுடை' அணிந்து கவனம் பெற்றார். 

இவ்வாறு, கல்வி அற்றவர்களாக கருதப்பட்டவர்களிடமிருந்து  கல்வியாளர்களையும், பேசத் தெரியாதவர்கள் எனப்பட்டவர்களிடமிருந்து  துணிந்து பேசக் கூடியவர்களையும், காவல் நிலையங்களின் பலியாடுகளாக  ஆக்கப்பட்டவர்களிடமிருந்து வழக்கறிஞர்களையும்  அவர் உருவாக்கியதும், தம்மையும் மாற்று அடையாள உருவாக ஆக்கிக் காட்டியதும் மாபெரும் அடையாள மாற்றப் போராட்டம். அவருடைய அடையாள மீட்டுருவாக்கப் போக்கை புரிந்துகொள்ள, தலித் மீதான இழி அடையாளத் திணிப்பை புரிந்துகொள்ளும் அறிவு வேண்டும் என்பது நிர்பந்தமாக இருப்பதாலேயே பொது சமூகம் எனும் தரப்புக்கு இன்னமும் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அடையாள அரசியலை புரிந்துகொள்ளும் பக்குவம் கிட்டவில்லை. 

தலைநகரின் வழமையான பரபரப்பான அரசியல் களத்தில் பண்பாட்டு அரசியலை முன்னெடுப்பது எவ்வளவு சிரமமான செயல்பாடு என்பதை பண்பாடு குறித்த புரிதல் உள்ளவர்களால்தான்  புரிந்துகொள்ள முடியும். மாற்று அடையாளம் என்பது மாற்று பண்பாடாக உருத்திரளும். ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மாற்று அடையாள அரசியல் அதற்கான பண்பாட்டுத் தளத்தை இயல்பாகவே அடைந்தது. அவர் பகுதியில் இயங்கிய அவரின் முன்னோடி தலித் செயற்பாட்டாளர்கள் வழியே கிடைக்கப்பெற்ற சமூக ஆர்வத்தின் தொடர்ச்சியாக  அண்ணலின் எழுத்துகளை வாசிக்கத் துவங்கி, பண்டிதர் அயோத்திதாசர் வரை கற்றுணர்ந்து, தம்முடைய சமூக பண்பாட்டு அரசியல் பார்வையை வளர்த்துக் கொண்டார். இவையெல்லாம் சேர்ந்து அவரை தலித் சமூகத்தின் பூர்வ பண்பாட்டில் கொண்டுவந்து நிறுத்தியது. 

தலித்துகள் பூர்வகுடி மக்கள் என்பதை புரிந்துணர்ந்த ஆம்ஸ்ட்ராங், தலித்துகளின் பூர்வ பண்பாடு என்பதே  பௌத்தம்தான்  என்கிற பண்பாட்டு வரலாற்றை அடியொற்றி  பௌத்தத்தை தம்முடைய  செயல்பாடுகளில் முன்னிறுத்தினார். சபரி மலை, திருப்பதி போன்ற  இந்துக் கோயில்களுக்கு பயணம் சென்று கொண்டிருந்த தலித்துகளின் மத்தியில் அண்ணல் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாக்பூர் தீட்சா  பூமியைப் பற்றி பேசினார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில், அண்ணல் பௌத்தம்  தழுவிய தீட்சா தினத்தை கொண்டாடும் விதமாக, தம்முடைய பொறுப்பில் தீட்சா பூமிக்கு நூற்றுக்கணக்கானவர்களை 'பௌத்த யாத்திரை'யாக  அழைத்தும் சென்றார். 2016 மார்ச் 3 ஆம் நாளில் நடைப்பெற்ற தம்முடைய திருமணத்தை 'பௌத்த திருமணம்' என்னும் அடையாளத்தில் பிக்குகள் சூழ நடத்திக் காட்டினார். சுமார் 125 ஆண்டுகளுக்கும் முன்பாக  பெரம்பூரில் பண்டிதர் அயோத்திதாசரால் 'தென்னிந்திய சாக்கைய புத்த விகார்' துவக்கப்பட்டது. அவருடைய மறைவுக்குப் பிறகும் அது பல்லாண்டுகள் இயங்கிவந்தது. 1954 ஜூலை மாதத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்  வந்து பார்வையிட்டுச்  சென்ற  அவ்விகார் காலப்போக்கில் வழக்கொழிந்தது. பல்வேறு நில அபகரிப்புகளில் சிக்கி,   விகார் அமைக்க பண்டிதர் அயோத்திதாசருக்கு பெரம்பூரைச் சார்ந்த 'சாக்கிய பறையர் குடும்பங்கள்' அளித்த 31,204 சதுர அடி  நிலமும் காணாமல் போயிருந்தது. இவ்வரலாற்றை அறிந்து,  அவ்விடத்தில் தம்முடைய முயற்சியால் மீட்கப்பட்ட சிறிதளவிலான இடத்தில் மீண்டும் 'தென்னிந்திய புத்த விகாரை' 2018 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாளில், பல்வேறு நாடுகளிலிருந்து  வரவழைக்கப்பட்ட பௌத்த பிக்குகளைக்  கொண்டு திறந்துவைத்து, பண்டிதர் அயோத்திதாசரும் அண்ணல் அம்பேத்கரும் துவக்கிவைத்க 'பூர்வ பௌத்த' பண்பாட்டின் மறுமலர்ச்சியை சாத்தியப்படுத்தினார் ஆம்ஸ்ட்ராங். நான்கு அடுக்குகளைக் கொண்ட தென்னிந்திய புத்த விகாரில் பௌத்த வழிபாடுகள், தியானம் போன்ற சமய உள்ளொளி செயற்பாடுகள்  மட்டுமல்லாமல்,  சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த உரையாடல்களையும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் முன்னெடுத்தார். நீட் தேர்வு என்னும் மோசடிக்கெதிரான  போராட்டத்தில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட தலித் மாணவியான அனிதா பெயரில், 'அனிதா அறிவுசார் மையம்' என்னும் பயிலகத்தை  விகாரின் இரண்டாம் தளத்தில் நடத்திவந்தார். இதன் மூலம் பௌத்த விகாரை வெறுமனே 'கோயில்' என்றில்லாமல் பண்டைய 'பௌத்த -சமண பள்ளி' வடிவில் இயக்கிக்காட்டினார்.  அவரின் இதுபோன்ற பௌத்த அறம் சார்ந்த களப்பணிகள், தலித்துகளின் இளம்  தலைமுறையிடம் பௌத்த பண்பாட்டு மீட்சிக்கான  சிந்தனையை  விதைத்தது.இன்னொருபக்கம்,  சேரி மக்களுக்கு மதிப்புடைய பண்பாட்டு வாழ்க்கையேக்  கிடையாது என்று கருதிவந்த  பொது சமூகத்திற்கு  ஆம்ஸ்ட்ராங் அவர்கள் முன்னெடுத்த 'பூர்வ பௌத்த பண்பாட்டு மீட்சி'யானது மனரீதியான ஒவ்வாமையை உருவாக்கியது. 

அண்ணல் அம்பேத்கர் அவர்களை சமூக அரசியலுக்கும், பண்டிதர் அயோத்திதாசரை பண்பாட்டு மீட்சிக்கும்  முன்னோடிகளாக பின்பற்றிய ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அரசியல் நோக்கத்திற்கு தாதா சாகிப் மான்யவர் கன்ஷிராம் அவர்களே  முன்னோடியாகத் தெரிந்தார். 'அம்பேத்கரிய தலித்' தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் உள்ளடக்கிய 'பகுஜன் அரசியலை' முன்னெடுத்த கன்ஷிராம் பகுஜன் சமாஜ் கட்சியை உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஆட்சியில் அமரச் செய்த வரலாற்று சாதனையை  தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவெங்கும் சாத்தியப்படுத்த  முடியும் என்று ஆம்ஸ்ட்ராங் நம்பினார். ஆனாலும்,  தமிழகத்தில்-ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் கூட- தலித்-பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை என்பது பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்களின் தலைமையிலான அரசியல் நோக்கத்திற்கான  செயல்திட்டமாகவே இருப்பதால், அம்பேத்கரியத்தை தலைமையாகக்  கொண்ட  பகுஜன் அரசியல் தலித் அரசியல் என்பதாகவே பார்க்கப்பட்டது. தலித் தலைமை என்பதயே  ஏற்க விரும்பாத சாதி இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் 'அம்பேக்கரிய தலித் தலைமை' என்பதை நினைத்துக்கூட பார்க்க வாய்ப்பில்லை என்பதை புரிந்துகொண்ட 
ஆம்ஸ்ட்ராங் அவர்களும் தலித்துகளிடமே  கட்சியை கொண்டு சென்றார். கள யதார்த்தம் எவ்வாறாயினும்  'அம்பேத்கரியர்கள் ஆள வேண்டும்' என்கிற சிந்தனையை அவரால் உறுதி குலையாமல், தொடர்ந்து பேசமுடிந்தது. அவருடைய அனைத்து மேடைகளிலும் தலித்துகளை நோக்கி  'நாம் ஆள வேண்டும்' என்பதையே விடாமல் முழங்கிவந்தார். மற்றவர் ஆளுவதற்கு  அரசியல் எடுபிடிகளாக  தலித் சமூகக்கினர்  இருப்பது அவமானம் மட்டுமல்ல சமூக துரோகமும் கூட  என்று இடித்துரைத்தார். 'உங்கள் வாக்குரிமையை உங்களை ஆட்சியாளர்களாக ஆக்குவதற்கான திறவுகோலாக  ஆக்குங்கள்' என்று அவர் கூறியதெல்லாம் தலித் இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியன. தலித் சமூகம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டவகையில் அமைந்த   அவருடைய  இத்தகைய தொடர் பேச்சுகள், ஆட்சிகளில்  கோலோச்சும்   சாதியினர்களுக்கும்  அச்சாதியினரின்   அரசியல் அதிகாரக் கனவுகளை நிறைவேற்றும் கட்சிகளுக்கும்   கடும் எரிச்சலைக்  கொடுத்தன. முற்போக்கு பேசிய இந்துக்களும் கூட வெளிப்படையாக ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவருடைய அரசியல் நோக்கத்தின் மீது கடும் வன்மத்தை உமிழ்ந்ததற்கான  காரணம், 'அம்பேத்கரிய தலித் தலைமையில் ஆட்சி வர வேண்டும்' என்பதையே அவர் நோக்கமாகக் கொண்டிருந்ததுதான். 

இப்படியாக, 
ஆம்ஸ்ட்ராங் அவர்களின் வாழ்வும் அரசியலும் இந்த மண்ணில்  தொடர்ந்து மறுக்கப்படுகின்ற   பூர்வகுடி மக்களின்  அடையாளங்களையும், பண்பாட்டையும், அரசியல் உரிமைகளையும் மீட்பதிலேயே கவனம் கொண்டிருந்தன. அதுவே அவர் மீதான வன்மங்களுக்கும்  அடிகோலியன. அவர் முன்னெடுத்த  மாற்று அடையாளம், மாற்று பண்பாடு, மாற்று அரசியல் ஆகியவற்றை சீரணித்துக்கொள்ள  முடியாத பொது சமூகம் என்னும் பெயரிலான  தரப்புகள் ஆம்ஸ்ட்ராங் அவர்களை கண்டும் காணாமல் கடந்து போயின‌.  சாதி இந்து அதிகார மயக்கத்தில் திளைத்தபடி சமூக ஊடகங்களில் எழுதி வந்தவர்கள் அவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் 'ஜெய்பீம் கோஷ்டி' என்று எள்ளி நகைத்தனர், 'நீல சங்கிகள்'  என்று  வசைபாடினர்.  ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு இரங்கல் வாசித்த  அரசியல் கட்சிகளில் பல அவர் வாழ்ந்த காலத்தில் அவரை ஓர்  தலைவராக பார்த்ததே இல்லை.  அவர் வெட்டுப்படும் காட்சியை நிமிடத்திற்கு நிமிடம் இன்றைக்கு காட்டும் ஊடகங்கள் அவரை தலைவராக, சிந்தனையாளராக, களப்பணியாளராக என்றைக்குமே காட்டியதில்லை. படுகொலையை முன்கூட்டியே தடுத்திருக்க வேண்டிய அரசோ எல்லாம் முடிந்த பிறகு சாவகாசமாக வந்து நின்றது. 'சென்னையின் மைந்தன்' என மக்களால் போற்றப்பட்ட  அவரின் உடலை சென்னைக்கு வெளியே அனுப்பி வைத்தது நீதித்துறை. அவர் மீது நிகழ்த்தப்பட்ட  இத்தகைய வன்மங்களும் புறக்கணிப்புகளுமே   அவருடைய படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்களாகும்.

(நீலம் பதிப்பகம் கேட்டு, 2024/ஜூலையில் எழுதப்பட்ட கட்டுரை)

சென்னகரம்பட்டி படுகொலை நாள்!

ஸ்டாலின் தி  மதுரை மாவட்டத்தில் அம்பலக்காரர்கள் எனப்படும் முக்குலச்சாதியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கிராமம் சென்னகரம்பட்டி. அங...