வியாழன், 28 செப்டம்பர், 2023

தலைவர் ந.சிவராஜ்

செப்டம்பர் 29/ தந்தை ந.சிவராஜ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்.

- ஸ்டாலின் தி

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் அன்புடனும் மரியாதையுடனும் “தலைவர்” என அழைக்கப்பட்ட தந்தை ந.சிவராஜ் அவர்கள், சென்னையில் 1892 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 இல் பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர நமச்சிவாயம்.
சென்னை மாநிலக்கல்லூரியிலும், சட்டக்கல்லூரியிலும் கல்விக்கற்று தேர்ந்த சிவராஜ் அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞராகவும், சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும் கடமையாற்றினார். 
இளம் வயதிலேயே தான் பிறந்த சேரி சமூகத்தின் முன்னேற்றம் குறித்து சிந்தித்து செயல்பட்டார். சேரிக்கு உழைத்த தலைவர்களோடு இணைந்து பணியாற்றினார். அவரது கருத்துமிக்க உரையினாலும் ஆக்கமான செயல்களாலும் மக்களின் நன்மதிப்பை சீக்கிரமே பெற்றார். கல்வி, சட்ட அறிவு, விவசாய நிலம், அரசியல் அதிகாரம் ஆகியவையே நம் சமூகத்தை முன்னேற்றும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தினார். 

1922 இல் சென்னை மகாண சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தந்தை சிவாரஜ் அவர்கள்தான் பட்டியலின  மாணவர்களுக்கான விடுதிகள் உருவாக காரணமாக இருந்தார். சட்டமன்றத்தில் அமைக்கப்பட்ட பல குழுக்களில் பங்கேற்று சிறப்பான பணிகளை மேற்கொண்டார். 

 1927 ஆம் ஆண்டுவரையுமே -சுமார் 85 ஆண்டுகளா- சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட சமூகத்தவர் எவரையும் மாணவராகச் சேர்க்கப்படவில்லை. தந்தை சிவராஜ், பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மீது வழக்கு தொடுத்து,  வென்ற பிறகே 1928 முதல் ஆதிதிராவிட மாணவர்கள் அக்கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

அண்ணல் அம்பேத்கர் மீது பற்றுகொண்ட தந்தை சிவராஜ் அவரோடு இணைந்து பணியாற்றினார். தந்தை சிவராஜ் அவர்களின் மனைவியும் சேரியின் போராளித்தாயுமான அன்னை மீனாம்பாள் அவர்களும் அண்ணலின் சகோதிரியாக இணைந்து செயல்பட்டார். தந்தை சிவராஜ் அவர்களின் ஆளுமையையும் அறிவையும் கண்டு மகிழ்ந்த அண்ணல் அவரை 1942 இல் 'செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன்' அமைப்பின் அகில இந்திய தலைவராக ஆக்கினார். 

1945 ஆம் ஆண்டு சென்னையின் மேயரான தந்தை சிவராஜ் அவர்கள் சிறப்பான மேயராக விளங்கினார். சான்பிரான்ஸிஸ்கோ மநாட்டில் கலந்துகொண்ட தந்தை சிவராஜ் அவர்கள் இந்தியாவில் உள்ள ஜாதி இழிவுகளைக்குறித்தும் கொடிய வறுமைக்குறித்தும் உரையாற்றினார்.
ஆங்கிலேயர்கள் செய்த சில சீர்திருதங்களை ஏற்றுக்கொண்டாலும் தந்தை சிவராஜ் அவர்கள் முழுமையாக அவர்களை ஆதரிக்கவில்லை. சேரி மக்களுக்கு பெரிதாக எதுவும் ஆங்கிலேய அரசு செய்திடவில்லை என்ற காரணத்தை வலியுறுத்தி அவர்களால் கொடுக்கப்பட்ட 'திவான் பகதூர்' பட்டத்தை 1946 ஆம் அண்டில் தூக்கியெறி்ந்தார்.

1946 இல் ஜெய்பீம் என்கிற ஆங்கில பத்திரிக்கையை துவக்கினார். இதழ் வழியாக ஜாதி வெறியையும் ஆங்கிலேய ஆட்சியின் குறைகளையும் கண்டித்து கருத்துரைத்தார்.
1944 மற்றும் 1960 ஆகிய ஆண்டுகளில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அமைக்கப்பட்ட பலக் குழுக்களில் பங்கேற்று சிறப்பான திட்டங்கள் உருவாக காரணமாக இருந்தார். அண்ணலின் மறைவுக்குப் பிறகு அண்ணலின் சீடர்களால் உருவாக்கப்பட்ட இந்திய குடியரசுக் கட்சியின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். 

சேரி மக்களின் விடுதலைக்காவும் பாதுகாப்புக்காகவும் அல்லும் பகலும் கடும் உழைப்பைக் கொடுத்து போராளியாக, அகில இந்திய தலைவராக, சிறந்த பாராளுமன்ற ஜனநாயகவாதியாக திகழ்ந்த உத்தமர் தந்தை ந. சிவராஜ் அவர்கள் 1964 இல் அவர் பிறந்த தேதியான செப்டம்பர் 29 ஆம் தேதி அன்றே புது தில்லியில் இயற்கையெய்தினார். 
 
*             *          *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...