வியாழன், 25 மே, 2023

திரௌபதி அம்மன்: பௌத்த பண்பாட்டின் மீது கட்டப்பட்ட பொய்ப் புராணம்.

தமிழகத்தில் சாதி இந்துக்களின் வசமுள்ள திரௌபதி அம்மன் கோயில்கள் சிலவற்றில் தலித் சமூகத்தவர் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த தீண்டாமையை நியாயப்படுத்தியும், அங்கீகரித்தும் சாதி இந்துக்கள் பொதுவெளியில் கூடுவதும், போராட்டம் என்னும் பெயரில் கூச்சலிடுவதும் நடக்கின்றன. தீண்டாமைக்கு எதிராக போராடுபவர்களை அதிகாரத்தின் மொத்த வலிமையையும் பயன்படுத்தி ஒடுக்கும் இந்த ஆட்சியாளர்களும் காவலர்களும் தீண்டாமை வன்கொடுமைக்கு ஆதரவாக கூடும் கூட்டத்தை வேடிக்கைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிலவரங்கள் இவ்வாறு இருக்க, திரௌபதி அம்மனை வணங்குவதற்கான யோக்கியதை இந்த தீண்டாமைக் குற்றவாளிகளுக்கு இருக்கிறதா என்கிற கேள்வியை நாம் முன்வைக்க வேண்டியிருக்கிறது. திரௌபதி அம்மனை எந்தவகையில் இவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள்? திரௌபதி எவ்வாறு வணங்குவதற்கான தகுதியை பெற்றார் என்று தெரிந்தால், இன்று உரிமை கோரும் எந்த சாதி இந்துவும் திரௌபதியை வணங்கமாட்டார். மகாபாரத்தில் கைவிடப்பட்டதைப் போல, இச்சாதியினரால் திரௌபதி இன்னொருமுறை கைவிடப்படுவார். திரௌபதியின் பக்தர்கள் நினைப்பதைப் போல திரௌபதி ஐந்து கணவன்களோடு வாழ்ந்து, சூதாட்டத்தில் பந்தயப்பொருளாக்கப்பட்டு, துகில் உரிக்கப்பட்டு கதறியவர் அல்லர். திரௌபதி என்பது பௌத்த பெண் போதிசத்வர்களின் பொது அடையாளம் என்கிற உண்மையை திரௌபதியின் சாதி இந்து பக்தர்களால் தாங்கிக்கொள்ள முடியாதுதான். ஆனால், அதுதான் உண்மை.

பௌத்த கதையாடலை திரித்து உருவாக்கப்பட்ட பெருங்கதையாடல்தான் மகாபாரதம் என்பதை மகாபாரதக் கதைகளை வைத்தே நம்மால் நிரூபித்துவிட முடியும். எடுத்துக்காட்டாக, திரௌபதி என்னும் கதாபாத்திரம் பௌத்த அடையாளத்தை சிதைத்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்தான். பௌத்த வழிபாட்டில்-குறிப்பாக? மகாயான மரபுகளில் தோன்றிய வழிபாடுகளில்- முக்கியமான பெண் உருவகம்தான் தாரா என்னும் தாராதேவி. தற்போதும், திபெத்திய வஜ்ரயான  பௌத்தத்தில் தாரா வழிபாடுகள் முக்கிய பண்பாட்டு கூறுகளாக உள்ளன என்பதைக் காணமுடியும். ஆதிகாலம் தொட்டே  இந்தியா நிபரப்பின் வடக்கே தாரா என்றும் தெற்கே சிந்தாமணி தாரா என்றும் பௌத்தர்களால் வணங்கப்பட்ட  தாரா என்பது தனி நபர் என்பதைவிட அன்பு, கருணை, ஒழுக்கம், உயர்வு, நம்பிக்கை, நற்செயல் உள்ளிட்ட  பௌத்த சீலங்களை அடையாளமாகக் கொண்ட பெண் போதிசத்வர்களின் பொது அடையாளம்தான்  என்றும்  கருதப்படுகிறது. தென்னிந்தியாவில் இந்த அடையாளம் சிந்தா தேவி(சிந்தாமணி தாரா) என்று வணங்கப்பட்டு வந்தது. தமிழ் பௌத்த காப்பியமான   மணிமேகலை காப்பியத்தில் சிந்தாதேவி வழிபாடு கூறப்பட்டுள்ளது. சிந்தாமணி தாரா யோகக் கலைகளின் போதிசத்வராக வணங்கப்படுகிறார். மணிமேகலையின் அமுதசுரபியான பிச்சை பாத்திரம் சிந்தாதேவியிடம் இருந்து ஆபுத்திரன் வழியாக வந்ததாக மணிமேலைக் கூறுகிறது.

மேலும், தாரா வழிபாடு பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் பௌத்தர்களால் அன்றும் இன்றும் வணங்கப்படுகின்றன. சினத்தை நெறிப்படுத்தும் உருவகமாக நீல நிற தாரா உருவமும்,  கருணை, அமைதி உள்ளிட்ட அடையாளமாக வெள்ளை நிற தாரா உருவமும், ஆற்றலின் சின்னமாக கறுப்பு நிற தாரா உருவமும், விழிப்புணர்வுகளையும்  உயர்ந்த செயற்பாடுகளையும் குறிக்கும் உருவமாக பச்சை நிற தாராவும், செல்வச் செழிப்பு குறித்த உருவகமாக மஞ்சள் நிற தாராவும், கருணையின் வடிவமாக வெள்ளை நிற தாராவும் வணங்கப்படுகின்றன.

இவ்வாறாக பௌத்த வழிபாட்டில் இருந்த தாராவைத்தான் பிறகு வந்த வைதீக தரப்பு சிதைத்து, தாரா என்னும் சொல்லின் சமஸ்கிருத உச்சரிப்பான 'திரௌ' என்கிற பெயரிலேயே 'திரௌபதி'யாக மகாபாரதக் கட்டுக்கதையில் இணைத்து திரித்துவிட்டது. 
மகாபாரத திரௌபதியின் இன்னொரு பெயர் பாஞ்சாலி. அது 'பஞ்ச சீலி' என்பதை திரித்த அடையாளமாகும். சீலன் என்றால் ஒழுக்கம் நிறைந்த ஆண், சீலி என்றால் ஒழுக்கம் நிறைந்த பெண் என்று பௌத்தம் கூறுகிறது. பஞ்ச சீலி என்றால் பௌத்தத்தின் பஞ்ச சிலத்தை கடைப்பிடிக்கும் பெண் என்று அர்த்தம். பஞ்ச சீலியையே வைதீக(இந்து) மதம் பாஞ்சாலி என்று திரித்தது. பஞ்ச சீலங்களான ஐந்து நெறிகளையே வாழ்க்கையாகக் கொண்ட பஞ்ச சீலி என்னும் அறத்தலைவி அடையாளத்தை ஐந்து கணவன்களுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணாக-பாஞ்சாலியாக- திரித்துக் கதைக்கட்டியது மகாபாரதம் என்னும் இந்து புராணம். கூடவே, பாஞ்சாலியின் கணவன்களை 'பஞ்ச பாண்டவர்கள்' என்று மகாபாரதம் கூறும். வடமொழிகளில் பாண்டு என்பது தாமரை மலரையும், பாண்டு ரங்கன் என்பது தாமரையில் வீற்றிருக்கும் புத்தரையும் குறிக்கும் என்று அண்ணல் அம்பேத்கரும் கூறுவார். பாண்டவர்கள் என்பது பௌத்தர்களையே குறிக்கும் என்பது இதன்படி வெளிப்படை. பௌத்தர்கள் புழங்கிய மலைக்குன்றுகளை இன்றைக்கும் கூட 'பாண்டவர் மலை' என்றே மக்கள் அழைப்பர். பஞ்ச பாண்டவர்கள் என்றால் ஐந்து ஒழுக்கங்களை கொண்ட பௌத்தர்கள் என்றே கருதமுடியும். 
அப்படியான பௌத்த அடையாளமான  'பஞ்ச பாண்டவர்' என்பதைத்தான் 'மனைவியை வைத்து சூதாடிய கயமைத்தனம் உடையவர்கள்' எனத் திரித்தது மகாபாரதம்.

இப்படியாக, பௌத்த அடையாளங்களை சிதைத்து வந்துள்ள இந்து மதமும் அதன் புராணக் கதையாசிரியர்களும் முக்கிய பெண் அடையாளமான தாரா வழிபாடு, ஐந்து கணவன்களால் சூதாட்டத்தில் கைவிடப்பட்ட திரௌபதி என்னும் இந்து பெண்ணாக   சிதைத்தனர். நாளடைவில்,  பௌத்தர்களால் வணங்கப்பட்ட தாரா விகார்கள் இந்து திரௌபதி கோயில்களாக ஆக்கப்பட்டன. சீலங்களை மறுத்த சாதி இந்துக்கள் மகாபாரத  திரௌபதியின் திடீர் பக்தர்களானார்கள். பஞ்ச சீலி தாராவை வணங்கிவந்த பூர்வ பௌத்தர்கள், திரௌபதி கோயிலுக்குள் நுழையக்கூடாத 'தீண்டப்படதாதவர்கள்' என ஆக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...