ஸ்டாலின் தி
1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி மும்பை தாமோதரர் அரங்கத்தில் சமூகப் போராளிகளின் கூட்டமொன்றை ஒருங்கிணைத்தார் அண்ணல் அம்பேத்கர். சமூகக் கொடுமைகளை எதிர்க்கவும், சமூகத் தேவைகளை அரசாங்கத்திடம் எடுத்துரைக்கவும், சமூகத்தை ஒருங்கிணைக்கவும் ஓர் அமைப்பு வேண்டும் என்று அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, அண்ணல் அம்பேத்கரின் தலைமையில் 1924 ஜுலை 20 ஆம் நாளன்று 'பகிஷ்கிர்த் ஹிதகரனி சபா(புறக்கணிக்கப்பட்டவர்கள் அவை)' துவக்கப்பட்டது.
அண்ணல் துவங்கிய இவ்வவையின் இலச்சினையில் உதய சூரியன் சின்னம் உள்ளதைக் காணமுடிகிறது. 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 17-18 தேதிகளில் செங்கல்பட்டில் பெரியார் தலைமையில், அன்றைய சென்னை மாகாண முதல்வர் சுப்புராயன் முன்னிலையில் நடைப்பெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் சூரியன் சின்னம் திராவிட அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பார்கள். இப்போதிருக்கும் திமுக சின்னமான இரட்டைமலையில் உதிக்கும் சூரியன் சின்னத்தை 1936 இல் தாத்தா இரட்டமலை சீனிவாசனாரின் சென்னை மாகாண ஷெட்யூல்ட் ஃபெடரேசன் அமைப்பினர் அறிமுகம் செய்தனர். ஆனால், இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக அண்ணல் அம்பேத்கர் தம்முடைய அமைப்பின் சின்னத்தில் உதய சூரியன் சின்னத்தை அமைத்திருக்கிறார் என்பது வரலாறு. விடியலைக் குறிக்கும் விதத்தில் அண்ணலும் இரட்டமலையாரும் உதய சூரியனை முன்னிறுத்தியிருந்தாலும், ஞானத்தின் ஒளியாக உவமைப்படுத்தப் பட்ட 'ஆதிபகவன்' புத்தரையும் சூரிய அடையாளம் குறிப்பிடுவதால் இவையெல்லாம் வரலாற்றின் உன்னத பக்கங்களாக விளங்குகின்றன.
அதேபோல, புறக்கணிக்கப்பட்டவர்கள் சபையின் இலச்சினையில் அண்ணல் முன்வைத்துள்ள முழக்கங்களின் வரிசை அமைப்பையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. Educate(கற்பி), Agitate(கலகம் செய்), Organize(ஒன்று சேர்) என்பதே அண்ணல் வகுத்த அடையாள முழக்கத்தின் சரியான வரிசை அமைப்பு என்பதை இந்த இலச்சினையின் மூலம் அறிய முடியும். இன்னமும் கூட, கற்பி/ஒன்று சேர்/ கலகம் செய் என்கிற வரிசையில் பலர் முழங்கி வருகின்றனர். உண்மையில், இது அம்பேத்கரிய செயற்பாட்டை குழப்பும் முறை என்பதை நாம் உணர வேண்டும்.
*ஜூலை 20 பகிஷ்கிர்த் ஹிதகிரனி சபா (புறக்கணிக்கப்பட்டவர்கள் அவை) துவக்கப்பட்ட நாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக