திங்கள், 22 ஜூலை, 2024

உள்நாட்டில் அகதிகளாக்கப்படும் மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள்.




ஸ்டாலின் தி


நெல்லை மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை வாடியா குழுமத்திற்குச் சொந்தமான ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (பி.பி.டி.சி.எல்) என்ற நிறுவனம் நடத்தி வந்தது. இந்த நிறுவனம் பர்மாவிலிருந்து மரங்களை இறக்குமதி செய்யும் தொழிலுக்காகத்தான் 1860 களில் உருவாக்கப்பட்டது. பிறகு(1913 இல்)  தேயிலை உற்பத்தித் தொழிலிலும் அது இறங்கியது. தமிழ்நாட்டில் முதலில் கோவை மாவட்டத்தில் தேயிலைத் தோட்டத்தை அமைத்த அந்நிறுவனம் 1929 இல் மாஞ்சோலை மலைப்பகுதிக்கு  வந்தது.  இப்பகுதியில் சிங்கம்பட்டி ஜமீனுக்கு‌  சொந்தமாக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் 8,373.57 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கான குத்தகையாக‌  1929 இல் பெற்று மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய ஊர்களை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தேயிலைத் தோட்டத்தை நிறுவியது. நெல்லை மாவட்டம் மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து  நூற்றுக்கணக்கானத்  தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். சொந்த ஊர்களைவிட்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக குடும்பத்துடன் வந்தவர்கள் 'மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில்' குடியமர்த்தப்பட்டனர். அன்றிலிருந்து நான்கு தலைமுறையாக மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் அமைந்த அந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிதான் அவர்களுக்கு சொந்த ஊராகிப்போனது. இவர்களில் பெரும்பாலானோர் தலித் சமூகத் தொழிலாளர்கள்.

மாஞ்சோலை, களக்காடு, முண்டந்துறை உள்ளிட்ட வனப்பகுதியை ஒன்றிய அரசு 1976 இல் புலிகள் காப்பகமாக அறிவித்தது.‌ அதை எதிர்த்த மாஞ்சோலை தேயிலை நிறுவனம்  நீதிமன்றத்தில் 1978 இல் வழக்கு ஒன்றை தொடுத்தது.‌ 39 ஆண்டுகளுக்கு பிறகு 2017 இல் இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. 'புலிகள் காப்பமாக இப்பகுதி அறிவிக்கப்பட்டது செல்லும். அதேவேளை,  அந்தப் பகுதியில் புதிய தேயிலைத் தோட்டங்களை நிறுவாமல், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியை மட்டும் குத்தகை காலம் முடியும்வரை,
பயன்படுத்திக்கொள்ளலாம்' என்பதுதான்  நீதிமன்ற தீர்ப்பின் சாரம். மேல்முறையீட்டில்  இத்தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் (2018 இல்) உறுதி செய்தது.‌  இன்னும் நான்கு ஆண்டுகளில் குத்தகை காலம் முடிவடையும் நிலையில், மாஞ்சோலை தேயிலை நிறுவனம் தம்முடைய தொழிலாளர்களுக்கு கடந்த 14/6/2024 அன்றைய நாளை இறுதி வேலை நாளாக அறிவித்தது. அதன்படி, அன்றைக்கு 'விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில்' தொழிலாளர்கள் கையொப்பமிட்டனர். ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் தொழிலாளர்கள் தங்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

கனத்த மனதுடன் இறுதி வேலை நாளை எதிர்கொண்ட தேயிலைத் தொழிலாளர்கள் கதறி அழுதக்  காட்சிகள் ஊடகங்களில் காணமுடிந்தது. உண்மையில்,  மாஞ்சோலைத்  தேயிலைத் தொழிலாளர்களின் கண்ணீர் நீண்ட காலமாகவே வழிந்தோடி கொண்டுதான் இருக்கிறது. உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை, உழைப்பாளர்களுக்கான  உரிமைகள் இல்லை, பெண் தொழிலாளர்களுக்கு உரிய சிறப்புரிமைகள் இல்லை என அவர்கள் பட்ட இன்னல்கள் ஏராளம். இவ்வுரிமைகளைக்  கேட்டுத்தான் ஜனநாயக முறைப்படி 1999 ஜூலை 23 அன்று அவர்கள் போராட வந்தார்கள். தம்முடைய காவல்துறையின் மூலம்  தாமிரபரணி ஆற்றில் அவர்களைத் தள்ளியது அன்றைய திமுக அரசு. அன்றைக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட  பதினேழு பேர் களப்பலி ஆக்கப்பட்ட பிறகும் கூட, மாஞ்சோலைத் தொழிலாளர்களின் வாழ்வில் பிறகு வந்த ஆட்சியாளர்கள் பெரிதான மாற்றமெதையும்  கொண்டுவரவில்லை. இன்று, அத்தொழிலாளர்கள்   அவர்களின் வாழ்விடத்திலிருந்தும் வாழ்வாதாரத்திலிருந்தும்  முற்றிலுமாக வெளியேற்றப்படும் நிலை வந்துவிட்டது. இப்போதும், அரசு மௌனம் சாதிப்பதுதான்   அவர்களின் இன்றைய  கண்ணீருக்கான   முக்கிய பின்னணி. 

இந்த அரச அலட்சியம் சுமார் 75 ஆண்டுகளாகவே தொடர்கிறது.‌ இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு(1948) ஜமீன்தாரிய நிலங்கள் அரசுடையாக்கப்பட்ட போது, சிங்கம்பட்டி ஜமீனுக்கு‌ சொந்தமாக இருந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் சார்ந்த நிலங்களும் அரசுடமையாக்கப்பட்டது. அன்றைக்கே மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தின் குத்தகை நீக்கப்பட்டு தேயிலை 1952 பிப்ரவரியில் இல் இராஜகோபாலச்சாரி  தலைமையிலான  காங்கிரஸ் அரசு மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உள்ள பகுதியை அரசு இடமாக ஆக்கியது. ஆனால், குத்தகையை நீக்காமல் மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலேயே மாஞ்சோலையை  விட்டது. அதன் பிறகு வந்த காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1958-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் நாளில் 'குத்தகைக்கு விடப்பட்ட 8,373.57 ஏக்கர் நிலத்தை குத்தகையின்  மீதிக் காலத்திற்கும் அந்த நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்து அரசாணையை வெளியிட்டு மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தை பாதுகாத்தது.தனியார் தேயிலை நிறுவனத்தை பாதுகாத்துவந்த அரசுகள் தொழிலாளர்களை கைவிட்டன. தற்போதும், அதே பாணியையே தமிழக திமுக அரசு கையாளுகிறது. 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று தொழிலாளர்கள் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் முறையீட்டதைத் தொடர்ந்து, 'தொழிலாளர்கள் வெளியேற்றப்பட  இடைக்காலத் தடை' உத்தரவு வழங்கியது கிளை உயர்நீதிமன்றம்.  'நீதிமன்ற மறு உத்தரவு வரும்வரை தொழிலாளர்கள் மாஞ்சோலை குடியிருப்புகளிலிருந்து வெளியேற வேண்டாம்' என்று  பி.பி.டி.சி.எல். நிறுவனமும் கூறினாலும் கூட, அவர்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படவில்லை. தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் கீழ் மாஞ்சோலை தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்நாடு திமுக அரசு நீதிமன்றத்திலேயே மறுத்துவிட்டது. நேற்று(22/7/2024) இவ்வழக்கு தொடர்பாக மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வாதாடிய போது, 
"மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தென்காசி, நெல்லை, கேரள மற்றும் அசாம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். மாஞ்சோலை தேயிலை தேட்டத்தை அரசால் ஏற்று நடத்த முடியாது" என்று திமுக அரசு உறுதியாக கூறிவிட்டது. மேலும், "மாஞ்சோலை பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்க குத்தகைக்கு விடுவதற்கு முன்பிருந்த நிலைக்கு மாஞ்சோலையை கொண்டுவர வேண்டியது அவசியம்" என்றும் திமுக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. 

இலங்கையில் போர்ச்சூழல் காலத்தில் தாயகம் திரும்பிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் மூலம் பாதுகாக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதேவேளை, இன்றைய மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். "மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சலுகை வழங்கினால் அதே சலுகையை அரசு ரப்பர் கழகம் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் கோரினால் மேற்கு தொடர்ச்சி மலையின் பழமையான வனப் பகுதியை இழக்க வேண்டியது வரும். இதனால் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை டான்டீ நிறுவனத்துக்கு வழங்க முடியாது" என்று கிளை உயர்நீதிமன்றத்தில் திமுக அரசு கூறியுள்ளது. ஈஷோ போன்ற வன ஆக்கிரமிப்பாளர்களையும், சுற்றுச்சூழலை நாசமாக்கிவரும் முதலாளிகளையும் பாதுகாக்கும் அரசு, வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பெயரில் நூற்றாண்டாக உழைத்து வரும் மாஞ்சோலை தொழிலாளர்களை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. 



* ஜூலை- 23: மாஞ்சோலை தொழிலாளர் போராட்டத்தில் 17 பேர் அரச வன்முறையால் கொல்லப்பட்ட-தாமிரபணி படுகொலை- நாள்(1999).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழ் வெண்மணி படுகொலையும் சமூகக் காரணிகளும்.

ஸ்டாலின் தி  கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...