ஸ்டாலின் தி
சமகால புதுச்சேரி- தமிழ்நாடு இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான கவிஞர் பாரதி வசந்தன் அவர்கள் நேற்று(7/12/2024) காலமானார் என்கிற செய்தி வருத்தத்தை கொடுக்கிறது.
கவிஞர் தமிழ் ஒளியின் வழியில் வந்த கவிஞராக அறியப்பட்டவர் பாரதி வசந்தன். கவிதை, கட்டுரை, கதைகள் என சுமார் 70 நூல்களை இயற்றியுள்ளார். புதுவை அரசு கலைமாமணி பட்டம் அளித்து அவரை சிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2022 இல் அவருடைய 'பெரிய வாய்க்கால் தெரு' நூலுக்கு சிறந்த நூல் விருது அளிக்கப்பட்டது. மேலும், புதுவை கம்பன் கழக விருதும் பெற்றவர் அவர். பாரதியார் வாழ்க்கையில் நடைப்பெற்ற நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு பாரதி வசந்தன் அவர்கள் எழுதிய 'தம்பல' சிறுகதை பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் துவக்க காலத்தில் புதுவையில் பெரிதும் துணையாக இருந்த குடும்பங்களில் பாரதி வசந்தன் குடும்பமும் ஒன்று என்பதை நேரில் பார்த்தவன் நான்.
பாரதி வசந்தன் அவர்களின் சகோதரர் அண்ணன் அமுதவன் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் 90 களிலிருந்தே இருப்பவர். தற்போது முதுவை மாநில அமைப்புச் செயலாளராக உள்ளார். அநேகமாக எனக்கு பதிமூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும் போது எனக்கிருந்த தொண்டை சதை(Tonsils) பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள புதுவைத் தோழர்களிடம் அப்பா அனுப்பி வைத்தார். அப்போது ஒருவார காலம் அமுதவன் அண்ணனுடன் அவருடைய வீட்டில் தங்கியிருந்தேன். கூரை வேய்ந்த இரண்டு வீடுகள். ஒன்றில் அமுதவன் அவர்களும் மற்றொன்றில் பாரதிவசந்தன் அவர்களும் தங்கியிருந்தார்கள். இருவருக்கும் அப்போது திருமணம் ஆகவில்லை. அவர்களின் அம்மா அப்போது இருந்தார். மாலை வேளைகளில் இருவரையும் பார்க்க அவரவரின் தோழர்கள் வந்து கொண்டிருப்பார்கள். பாரதி வசந்தன் வாசலில் இலக்கிய பேச்சுகளும் அமுதவன் அறையில் அரசியல் பேச்சுகளும் நடக்கும். நான் இரண்டு இடத்திலும் மாறி மாறி உட்காருவேன். அவ்வப்போது அவரிடமிருந்த தொலைக்காட்சியை பார்க்க செல்லுவேன். அவர் என்னைப் பார்ப்பார், ஆனால் எதுவும் கேட்க மாட்டார். நான் அங்கு சென்ற நான்கைந்து நாள் ஆனபோது, பாகூர் கமலா நேரு மண்டபத்தில் நடந்த ஒரு கூட்டத்திற்கு அமுதவன் அழைத்துச் சென்றார். பல இயக்கங்கள் பங்கேற்ற அந்த கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் சார்பில் அண்ணன் புதுவை பழனிவேல் (இன்றைய விசிக புதுவை மாநில இணைப்பொதுச் செயலாளர் பாவாணன்) உரையாற்றினார். கூட்டம் முடிந்து கடைசி பேருந்தில் புதுவை வந்து நள்ளிரவில் வீடு சேர்ந்தோம். காலையில் அமுதவன் வேலைக்கு( புதுவை அரசு அச்சகம்) சென்ற பிறகு என்னை அழைத்தார் பாரதி வசந்தன். அப்போதுதான் என்னை யாரென்று விசாரித்தார். 'தோழரின் மகனா நீ. ஆஸ்பிடலுக்கு வரவச்சுட்டு டாக்டர்கிட்ட போகாம உன்ன இழுத்துக்கிட்டு சுத்துறானா' என்று கேட்டார். மாலை அமுதவனிடம் 'அண்ணன் சத்தம் போட்டதை' சொன்னேன். அன்று இரவே காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஒருவரிடம் சென்றோம். வீடு திரும்பியதும் அவரிடம் சென்று மருத்துவரை பார்த்துவிட்டு வந்ததை தெரிவித்தேன். சிரித்தார். போய் சாப்பிடுங்க என்றார். கடையில் சாப்பிட்டு வந்ததால் நான் சாப்பிடவில்லை. 'ஆக்குனதை சாப்பிடலனா அம்மா திட்டும்' என்று கூறி அமுதவன் சாப்பிட முற்ற்ததில் அமர்ந்தார். பாரதி வசந்தனும் சரி, அமுதவனும் சரி. அம்மாவுக்கு மிகுந்த பயம் கலந்த மரியாதையை கொடுத்ததை பார்த்தேன். அம்மாவும் சிறுபிள்ளைகளை அழைப்பதைப் போலவே சோறாக்கி வைத்து சாப்பிட அழைப்பார்.
மறுநாள், அப்பா வந்திருப்பதாக கூறி என்னை அழைத்துப் போக மூத்த தோழர் முனுசாமி அவர்கள் வந்திருந்தார். அண்ணன் அமுதவன் வேலைக்கு சென்றுவிட்டதால் அம்மாவிடம் கூறிவிட்டு, பாரதி வசந்தன் அவர்களிடம் சொல்ல சென்றேன். சிரித்த முகத்துடன் வழியனுப்பி வைத்தவர் என் கையில் நூல் ஒன்றை அளித்தார். அவர் எழுதிய கவிதை நூல் அது. 'தனி மரம் தோப்பாகாது' என்பது தலைப்பு.
2000 ஆவது ஆண்டில் கடலூர் மத்திய சிறையிலிருந்து பிணையில் வந்த அப்பாவை அழைக்க சென்றிருந்தோம். அழைக்க வந்தவர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு புதுவைக்கு வண்டியை விட்ச்சொன்னார் அப்பா. போய் இறங்கிய இடம் அமுதவனின் வீடு. தோழர்கள் கூடியிருந்தார்கள். எழுத்தாளர் ரவிக்குமார் வந்துவிட்டு சென்றார். நாங்கள் புறப்படும் போது பாரதி வசந்தன் இருக்கிறாரா என்று பார்த்தேன். வெளியே போயிருக்கிறார் என்றார்கள். அதன் பிறகு சிறுபத்திரிக்கைகளில் அவருடைய எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். 2007 வாக்கில் இதழியலாளர் கவிதாச்சரண் அவர்களோடு ஒருநாள் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது, 'உங்களுக்கு பாரதி வசந்தனை தெரியுமா?' என்றார். 'அண்ணன்தான்' என்றேன். 'உங்களுடைய கட்டுரையை (சாதி ஒழிப்புக் கல்வி) பற்றி கேட்டார். இன்னார் எழுதியது என்று சொன்னேன். உங்களை தெரியும் என்று சொன்னார்' என்றார் கவிதாச்சரண். ஆகச்சிறந்த எழுத்தாளரின் நினைவில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். கடந்த ஆண்டு மக்கள் பாடகர் தலித் சுப்பையா நினைவேந்தல் நிகழ்வுக்காக அப்பா புதுவை சென்றார். நிகழ்ச்சி முடிந்த பிறகு அன்றிரவு அண்ணன் அமுதவன் வீட்டில் தங்கியதாக வீடு வந்த போது கூறினார். பாரதி வசந்தன் அண்ணனை பார்த்தீர்களா என்றேன். 'அவரை பார்க்க முடியல' என்றார். புன்னகையும் சொல்லழகும் கொண்ட அந்த கவிஞரை இனி அவருடைய எழுத்தில்தான் பார்க்க முடியும் என்பதை நினைத்தால் மனம் பாரமாகிறது.
8/12/2024