சனி, 15 பிப்ரவரி, 2025

குடைசாய்ந்த வண்டிக் கதை.



ஸ்டாலின் தி


மு.கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் மு.க.ஸ்டாலின் நடித்து 1987 இல் வெளிவந்த திரைப்படம் 'ஒரே ரத்தம்.' ஸ்டாலின் இதில் தலித் சமூகத்து இளைஞராக நடித்திருப்பார். அவருடைய அறிமுக காட்சியில், கல்வி கற்றறிந்த அவர் தமது கிராமத்திற்கு வருவார். அப்போது அவரின் நடை, உடைய, மொழியை வைத்து அவரை உயர் சாதிக்காரராக கருதி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொள்வார் சூத்திர சாதியைச் சார்ந்த பாத்திரத்தில் நடிக்கும் ராதாரவி. பேச்சுவாக்கில் ஸ்டாலின் தானொரு 'தாழ்த்தப்பட்டவர்' என்று கூறுவதைத் தொடர்ந்து அவரை கீழே இறங்கச் சொல்லுவார் ராதாரவி. ஸ்டாலின் மறுப்பார். சாதிவெறி முற்றிப்போய் வண்டியை குடைசாய்த்து ஸ்டாலினை விழச்செய்வார் ராதாரவி; கீழே வீழ்ந்து காயப்படுவார் ஸ்டாலின். 

இத்தகையக் காட்சி இந்திய சாதியக் கிராமத்தில் எங்கும் காணக்கிடைப்பதுதான். ஆனால், இத்திரைப்படத்தில் வந்த இந்தக் காட்சி அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கைக் கதையாடலில் இருந்தே உருவாக்கப்பட்டிருப்பதை எளிதாக யூகித்துவிட முடியும். நாம் இதை முன்வைத்து சுட்டிக்காட்ட வந்தது வேறு. அதாவது, அண்ணலின் வாழ்க்கையில இந்த வண்டி குடை சாய்த்த கொடுமை நடந்ததா? அவர் அதனால் படுகாயம்பட்டாரா? 

அண்ணலின் வாழ்வில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகளை கலந்து உருவாக்கப்பட்டதுதான் இந்த வண்டி குடைசாய்க்கப்பட்டக் கதை என்பதே உண்மை. அந்த இரண்டு நிகழ்வுகளை அண்ணல் தமது 'ஒரு விசாவுக்கு காத்திருத்தல்' குறிப்புகளில் குறிப்பிட்டுமிருக்கிறார். 

நிகழ்வு 1:
   
அண்ணல் அம்பேத்கர் பள்ளி சிறுவனாக இருந்த போது இது நடந்தது. கோரேகானில் பணியாற்றி வந்தார் அண்ணலின் தந்தை ராம்ஜி சக்பால் அம்பேத்கர். அவரைக் காணுவதற்காக தம்முடைய அண்ணன் மற்றும் அத்தை மகன்கள்(எல்லோருமே சிறுவர்கள்தான்.) பயணப்படுகிறார்கள். அப்போது ரயில் நிலையத்தில் வந்திறங்கிய இச்சிறுவர்களை அழைத்துவர தந்தையும் வரவில்லை அவர் அனுப்பி வைப்பதாக கடிதத்தில் கூறியிருந்த பணியாளரும் வரவில்லை. ரயில் நிலைய வளாகத்தில் இருந்த மாட்டுவண்டியில் போகாலாம் என்றால் சிறுவர்கள் மகர்கள் என்பது தெரிந்து வண்டியோட்டிகள் வர மறுத்துவிட்டார்கள். சிறுவர்கள் படும் அவதியை பார்த்து மனம் இளகிய ரயில் நிலைய அதிகாரி மாட்டுவண்டிக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக, இருமடங்கு கட்டணம் தரவேண்டும் என்றும், வண்டியை சிறுவர்களே ஓட்டவேண்டும், வண்டிக்காரர் நடந்தே வருவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறே பயணம் புறப்பட்டது. ஆனால், பல மைல் தூரத்திற்கு பிறகு(தாங்கமுடியாத கால்வலி வந்திருக்கலாம்!), வண்டிக்காரன் வண்டியில் ஏறிக்கொண்டு வண்டியோட்டினான். பல சிரமங்களைக் கடந்து, மறுநாள் காலை பதினோரு மணியளவில் ராம்ஜி சக்பால் அம்பேத்கரை அடைந்தனர். அந்த இரவின் துயரத்தையும் சாதியின் வன்மத்தையும் இந்த நிகழ்வில் அண்ணல் விவரித்திருப்பார். இந்த நிகழ்வில் அண்ணலை வண்டிக்காரன் குடைசாய்த்து தள்ளவில்லை என்பது தெரிகிறது.

நிகழ்வு 2: 

1929 ஆம் ஆண்டு பம்பாய் அரசு தலித்துகளின் மீதான வன்கொடுமைகள், புறக்கணிப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்ய ஓர் குழுவை அமைத்தது. அணணல் அம்பேத்கர் அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு பிரித்தளிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் விசாரணைகளை நடத்தச் சென்றார். அப்படி போகும் நாளொன்றில், வழியே ஓரிடத்தில் அவரை தங்களுடைய சேரியில் ஓர் நாள் தங்க வேண்டுமென்று மக்கள் அண்ணலிடம் கோரிக்கை வைத்தனர். முதலில் பயணத்தில் இடையில் தங்கும் திட்டம் அவருக்கு இல்லை என்றாலும், மக்களின் அன்பை மதித்து தங்குவதாக கூறிவிட்டு தான் விசாரிக்க வந்த கிராமத்திற்கு சென்றார். விசாரணையை முடித்துவிட்டு மீண்டும் தான் தங்கவிருந்த சாலிஸ்காவோன் மகார்வாடா சேரிக்கு செல்லுவதற்காக சாலிஸ்காவோன் ரயில் நிலையத்தில் வந்திறங்கினார் அண்ணல். அருகேயிருந்த மகார் வாடாவுக்கு அவரை அழைத்துச் செல்ல ஒரு ஒற்றைக் குதிரைவண்டி வந்தது. அண்ணல் அதில் ஏறிக்கொள்ள திரளாக வந்திருந்த மற்றவர்கள் குறுக்கே வயல் வழியாக புறப்பட்டனர். அண்ணலோடு புறப்பட்ட குதிரை வண்டி கொஞ்ச தூரத்திலேயே ஒரு மோட்டார் வாகனத்தில் மோதும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் நூலிழையில் விபத்து தவிர்க்கப்பட்டு அண்ணல் பெருமூச்சுவிட்டார். வண்டியோட்டியின் மீதும் கோவம்கொண்டார். ஆனால் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. அடுத்ததாக குறுக்கே ஒரு வாய்க்கால் பாலம் வந்தது. அதில் தடுப்புச் சுவரில்லை, இடையிடையே குத்துக் கற்கள் மட்டுமே இருந்தன. பாலத்திலிருந்து திரும்பும் நிலையில் வண்டியின் சக்கரம் குத்துக்கல்லொன்றில் மோதவும் வண்டி குடை சாய்ந்து, அண்ணல் தூக்கியெறிப்பட்டார்; அண்ணலின் காலெலும்பும் முறிந்தது. 

விபத்துக்கு காரணம் பிறகுதான் அண்ணலுக்கு தெரியவந்தது. அதாவது அந்த வண்டியை ஓட்டிவந்தவர் மகார்வாடாவைச் சார்ந்த ஓர் தலித். வண்டியோ ஜாதி இந்துவுடையது. ரயில் நிலைய வளாகத்தில் இருந்த வண்டிக்காரர்கள் "மகாரான அம்பேத்கருக்கு நாங்கள் வண்டி ஓட்ட மாட்டோம். வாடகைக்கு வண்டி மட்டும் தருகிறோம், நீங்களே ஓட்டிக்கொள்ளுங்கள்" என்று கூறியதால், முன் அனுபவமற்ற தலித் ஒருவரே வண்டியோட்டும் நிலை வந்தது. அதுவே விபத்திற்கு காரணம். சிறுவனாக இருந்த போதும் சரி, ஒரு மாநில அரசின் பிரதிநிதியாக இருந்தபோதும் சரி அண்ணலுக்கு நேர்ந்த இரண்டு நிகழ்வுகளுமே ஒரேத் தன்மையுடைய, ஒரேக் காரணமுடையவைதான். காலங்கள் மாறினாலும் அவலங்கள் மாறவில்லை என்பதைக் கூறும் நிகழ்வுகள் அவை. அவைதான் அண்ணலின் வாழ்வில் நடந்ததாக அவரால் கூறப்படும் முக்கியத்துவமான வண்டிப்பயண நிகழ்வுகளாகும். அவற்றில், அவரை எங்கும் வண்டியிலிருந்து யாரும் கீழேத் தள்ளவில்லை.  

அண்மையகாலத்தில் வாழ்ந்த ஓர் அதிமுக்கிய தலைவரின் வாழ்க்கையிலும் கூட இப்படி புனைவுகளை நிகழ்த்திவிட முடியும் என்பதற்கு அண்ணலை குடைசாய்த்த கதையின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த புனைவு ஓர் நல்ல நோக்கத்திற்கானது என்றும் கூட யாரேனும் வாதாடலாம். அதாவது, வண்டியிலிருந்து அண்ணல் தள்ளப்பட்டார் என்கிற புனைவு சாதியின் கோரத்தை காட்ட உதவும்தானே என்று கேட்கலாம். ஆனால், அந்த புனைவைவிட உண்மையான நிகழ்வில்தான் அதிகம் நாம் பேசமுடியும். புனைவில் வண்டியோட்டியை ஓர் அறியாமையான ஆளாகவும் காட்ட முடியும். ஆனால், அண்ணலின் பதிவில் உள்ள அசல் வடிவமோ, அந்த வண்டியோட்டிகள் விவரமுள்ள சாதியவாதிகளாக உள்ளதைக் காட்டுகின்றன. ஆம். அந்த இரண்டு வண்டிக்காரரகளும் அப்பாவிகள் அல்லர். சாதியை காரணமாக வைத்து இருமடங்கு கட்டணத்தை பெற்றுக்கொள்கிறான் ஒருவன்; கட்டணத்தை பெற்றுக்கொண்டு வண்டியை மட்டும் அனுப்பி பிழைக்கிறான் இன்னொருவன். முதல் நிகழ்வில் வரும் வண்டியோட்டி தன் உடல் நோகும் போது நேக்காக தமது வாக்குறுதியை மீறி வண்டியில் ஏறிக்கொள்கிறான். அந்தளவுக்கு அவர்கள் விவரமானவர்கள், சுரண்டல்வாதிகள் என்பதைத்தான் உண்மையான நிகழ்களின் விவரிப்புகள் கூறுகின்றன. புனைவைவிட அதுவே வலிமையானது என்பதைக் கூறவே இதுக்குறித்து இங்கே பேசுகிறோம்.


(16/2/2022- முகநூலில் எழுதியது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கே.பி.எஸ்.மணி என்கிற பூர்வகுடி ஆளுமை.

ஸ்டாலின் தி  சேரி மக்களால், மாவீரர் K.B.S. மணி என்று அழைக்கப்பட்டவர், தலைவர் கதிர்வேல் பால சுப்பிரமணி அவர்கள் ஆவார். முன்னாள் ர...