புதன், 19 பிப்ரவரி, 2025

உ.வே.சாமிநாதரின் அக்கிரகாரக் கதை.





ஸ்டாலின் தி 

உ.வே.சாமிநாதர் ஐயர் என்பதில் உ என்னும் எழுத்து அவருடைய ஊரான உத்தமதானபுரத்தைக் குறிக்கிறது. தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் இது. இந்த ஊர்க்கதையை தம்முடைய தன்வரலாற்று நூலான 'என் சரித்திரம்' நூலின் முதல் அத்தியாயமான 'எங்கள் ஊர்' என்னும் தலைப்பில் அவர் எழுதியிருக்கிறார் உ.வே.சா. அதாவது, சற்றேரக்குறைய இருநூறாண்டுகளுக்கும் முன்பாக தஞ்சையை ஆண்டுவந்த அரசர் ஒருவர் தம்முடைய படைபரிவாரங்களோடு நாட்டை சுற்றிப்பார்க்க பயணப்பட்டார். இயற்கை காட்சிகளையும் கோயில் குளங்களையும் கண்டுகளித்த அரசர் தஞ்சைக்கு கிழக்குப்பகுதியில் உள்ள பாபநாசம் அருகில் ஓரிடத்தில் ஓய்வு எடுத்த போது, உணவை உண்டுகளித்து தாம்பூலம் (வெற்றிலைப்பாக்கு) போட்டு குதப்பிய போதுதான் அன்றைய நாள் ஏகாதசி நாள் என்று தெரிந்து கொண்டாராம். ஏகாதசி அன்றைக்கு விரதம் இருக்க வேண்டிய தாம் இப்படி விருந்துணவில் களித்ததோடு தாம்பூலத்தையும் போட்டுவிட்டோமே என விசனப்பட்ட அரசர், அருகில் அரண்மனை புரோகிதர்களும் இல்லாததால் 'வேறு சில பெரியவர்களை' அழைத்து பரிகார ஆலோசனையைக் கேட்டுள்ளார். அந்த கெட்டிக்காரப் பெரியவர்கள், 'ஓர் அக்கிரகார பிரதிஷ்டை செய்து, வீடுகள் கட்டி, வேதவித்துகளான அந்தணர்களுக்கு(பார்ப்பனர்களுக்கு) வீடுகளோடு நிலத்தையும் தானமாக அளித்தால் இந்த தோஷம் நீங்கும் ' என்று பரிகாரம் கூறியுள்ளனர். 'இதென்ன பிரமாதம்.இதோ செய்கிறேன்' என்று துள்ளிக்குதித்த அரசர் அதே இடத்தில் உடனடியாக 48 வீடுகளையும் இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு என்கிற விகிதத்தில் 24 கிணறுகளையும் அமைத்துக் கொடுத்து நாற்பத்தியெட்டு புரோகித பார்ப்பனர்களின் குடும்பங்களை குடியேற்றி தலா ஒரு குடும்பத்திற்கு நான்கு ஏக்கர் (12 மா) நன்செய் நிலத்தையும் அதற்கான புன்செய் நிலத்தையும் பங்கிட்டு கொடுத்தார். இப்படி உருவாக்கப்பட்ட அக்கிரகாரமே 'உத்தம தானபுரம்' என்று அழைக்கப்படும் சிற்றூராக ஆனது என்று கூறுகிறார் உ.வே.சா. 

அவருடைய ஊர்க்கதை என்பது அந்த ஊரின் வரலாற்றை மட்டுமல்ல, வரலாற்றில் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் மலிவான வழிகளில் கூட நிலத்திலும் நிலத்தின் மீதான அதிகாரத்தில் வேரூன்றினார்கள் என்பதையும், பார்ப்பனர்களின் வழிகாட்டுதலில் எவ்வளவு மூடத்தனமாக தமிழ்நாட்டின் மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. 

(பிப்ரவரி 19: உ.வே.சா.பிறந்த நாள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கே.பி.எஸ்.மணி என்கிற பூர்வகுடி ஆளுமை.

ஸ்டாலின் தி  சேரி மக்களால், மாவீரர் K.B.S. மணி என்று அழைக்கப்பட்டவர், தலைவர் கதிர்வேல் பால சுப்பிரமணி அவர்கள் ஆவார். முன்னாள் ர...