ஸ்டாலின் தி
சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்ட செய்தி தற்போது வெளியே வந்திருக்கிறது. 2023 மே மாதத்திலேயே பாதுகாப்பை நீக்கியிருக்கிறது திமுக அரசு. 'பாதுகாப்பு இல்லாத சூழலில் தம்மால் கிராணைட் முறைகேடு வழக்கில் சாட்சி கூற வர முடியாது' என்று மதுரை கனிம வள சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞருக்கு சகாயம் கடிதம் எழுதியதன் மூலமே தற்போது இந்த உண்மை வெளி வந்திருக்கிறது. சகாயம் அவர்கள் 2012 வாக்கில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது அங்கே நிலவிய கிராணைட் முறைகேடுகளை ஜெயலலிதா தலைமையிலான அன்றைய அதிமுக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அடுத்த நாளே அவர் கோ-ஆப்டெக்ஸ் துறைக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு, டிராபிக் ராமசாமி தொடுத்த பொது நல வழக்கில் 'கனிம முறைகேடுகளை விசாரணை செய்யும் அதிகாரியாக' சகாயத்தை நியமித்தது உயர் நீதிமன்றம். சகாயம் உயிருக்கு கனிம கொள்ளையர்களால் ஆபத்து வரலாம் என்று சகாயம் சார்பில் கூறப்பட்டதால், 2014 அக்டோபரில் சகாயத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 'சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய காவலரை பாதுகாப்புக்காக சென்னை காவல் ஆணையர் நியமிக்க வேண்டும். சென்னையை விட்டு வெளியே பயணம் செல்லும்போது, காவல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றுப்பயண விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய காவல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்' என்று காவல்துறை இயக்குநர் பாதுகாப்பு தொடர்புடைய காவல்துறையினருக்க கடிதம் எழுதினார். 2023 மே மாதம் வரை இந்த பாதுகாப்பு இருந்து வந்துள்ளது. இதற்கிடையில், கனிம முறைகேடுகளை விசாரணை செய்து, சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்படுத்திய முறைகேடுகளையும், குவாரியில் நடத்தப்பட்ட நரபலி உள்ளிட்ட குற்றங்களையும் கண்டறிந்து அறிக்கையும் அளித்துள்ளார் சகாயம். அந்த விசாரணை காலத்தில் விசாரணையை தடுக்கும் வகையில் அன்றைய அதிமுக ஆட்சியாளர்களாலும் அரசு அதிகாரிகளாலும் கடும் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டார் சகாயம். அன்றைக்கு சகாயத்திற்கு ஆதரவாக பேசியது திமுக. ஆனால், இன்றைக்கு அதே திமுகவின் ஆட்சிதான் சகாயம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெற்றுள்ளது. தம்முடைய பாதுகாப்பை திரும்ப பெற்றது குறித்து மாநில தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பலருக்கும் பலமுறை கடிதம் எழுதிய பிறகு, காவல்துறை இயக்குநர் அளித்த பதிலில், 'உங்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதால் பாதுகாப்பை திரும்பப் பெற்றுள்ளோம்' என்று கூறப்பட்டிருக்கிறது என்கிறார் சகாயம். எதன் அடிப்படையில் ஆபத்தில்லை என்று திமுக அரசும் அதன் காவல்துறையும் கூறுகிறது என்று தெரியவில்லை. அப்படியான பாதுகாப்பு சூழல் நிலவுகிறது என்று எவராலும் கூறமுடியாது என்பதே நிலவரமாக இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்கள் அங்கே நடந்த மணல் கொள்ளையை எதிர்த்ததால், கடந்த 2023 ஏப்ரல் 25 ஆம் தேதியன்று, அவரை அலுவலகத்தில் வைத்தே சராமாரியாக வெட்டிக்கொன்றனர் மணல் கொள்ளையர்கள். அந்த கொலை நடத்தப்பட்ட அடுத்த மாதமே 'சகாயத்திற்கு கனிம கொள்ளையர்களால் ஆபத்து இல்லை' என்று பாதுகாப்பை திரும்பப் பெற்றிருக்கிறது திமுக அரசு. அதன்பிறகு, புதுக்கோட்டை ஜகுபர் அலி கனிமக் கொள்ளையர்களால் கொடூரமாக, கனரக வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். ஆனாலும், கனிம கொள்ளையர்களால் ஆபத்து இல்லை என்பதையே சகாயம் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக அரசால் கூறப்பட்டுள்ளது. எனில், திமுக அரசு கனிம கொள்ளையர்களுக்கு சாதகமாக இயங்குகிறது என்கிற வாதம் வலிமை பெறுகிறது. இந்த விமர்சனம் சகாயம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றதால் மட்டுமல்ல, திமுக அரசின் தொடர் செயல்பாடுகளாலும் எழுகிறது.
கடந்த 14.12.2022 அன்று தமிழ்நாடு சிறு கனிம சலுகைச் சட்டவிதிகள் 1959இல் (The Tamilnadu Minor Mineral Concession Rules) பிரிவு 36 உட்பிரிவு 1(A)வில் சட்டத்திருத்தம் செய்து ஓர் அரசாணையை வெளியிடப்பட்டது.
இந்தச் சட்டத்திருத்தத்தின்படி காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கி.மீ சுற்றளவுக்குள் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதற்கான தடை நீக்கப்பட்டது. அதாவது, காப்புக் காடுகளில் இருந்து 1000 மீட்டடர்களுக்கு (1கி.மீ) குவாரிகள் அமைக்கப்படக் கூடாது என்பதை, காப்புக் காடுகளில் இருந்து 60 மீட்டர் தூரத்தில் குவாரி அமைக்கலாம் என்று திருத்தப்பட்டது. இந்த சட்டத் திருத்தம் தொடர்பான விளக்க அறிக்கையில், 'பாதுகாக்கப்பட்ட காடுகள் என்பதன் கீழ் சரணாலயம் மற்றும் தேசிய பூங்காக்கள் மட்டுமே வருமே தவிர, காப்புக்காடுகள் வராது என அமைச்சர் துரைமுருகன் விளக்கம் கொடுத்தார். மாஞ்சோலை தேயிலை தோட்டம் காப்புக் காட்டில் வருவதால் இனி அங்கே தேயிலைத் தொழிலாளர்களின் குடியிருக்கக் கூடாது என்று இன்றைக்கு கூறும் திமுக அரசு, காப்புக் காட்டுக்கு மிக அருகிலேயே குவாரி அமைக்கலாம் என்று மூன்றாண்டுக்கும் முன்னரே சட்டத் திருத்தம் செய்துள்ளதை பார்க்கும் போது இந்த அரசு யார் பக்கம் நிற்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
புதுக்கோட்டை ஜகுபர் அலி படுகொலையையொட்டி எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து,
'சுரங்க நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என்று' புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு தமிழக திமுக அரசு உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் பகுதியில் உள்ள 200 குவாரிகளில் மட்டுமே ட்ரோன் மூலம் ஆய்வுகள் செய்யப்பட்டன. கணக்கெடுக்கப்பட்ட 200 குவாரிகளில், 36 குவாரிகள் சட்டத்தை மீறியது கண்டறியப்பட்டது. ஆண்டுக்கு 6 லட்சம் கன மீட்டர் கனிமங்களை மொத்தமாக பிரித்தெடுக்க உரிமம் பெற்று, சட்டவிரோதமாக பத்து மடங்காக 63 லட்சம் கன மீட்டர் அளவுக்கு வெட்டியெடுக்கப்பட்டு கொள்ளை நடந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. இந்த விசாரணை மாநிலம் முழுக்க நடத்தப்பட்டால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்று சமூக அக்கறையாளர்கள் கருதிய சமயத்தில், ஜகுபர் அலி கொலை வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டதாகக் கூறி குவாரி ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. 'இனிமேல் எந்தவொரு ஆய்வும் சிபி-சிஐடியின் தேவைகளின் அடிப்படையில் இருக்கும்' என்று ஆய்வில் ஆய்வை மேற்கொண்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் கூறப்பட்டதாக செய்திகள் கூறியன.
கனிம வளத்துறையில் நடக்கும் கொடுமைகளை மேலும் அதிகமாக்கும் வகையில், கடந்த மாதம்(2025 ஏப்ரல்), திமுக அரசு குவாரி குத்தகை கால திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில் (2020), குவாரிகளின் குத்தகை காலம் ஐந்தாண்டு என்பதை இரண்டு மடங்காக்கி பத்தாண்டாக உயர்த்தி திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதே வழியில், குத்தகை காலத்தை மும்மடங்காக உயர்த்தி, குத்தகை காலம் பத்தாண்டு என்பதை முப்பது ஆண்டாக உயர்த்தி திருத்தம் கொண்டு வந்துள்ளது திமுக அரசு. அதாவது, புதியதாக குவாரி துவங்குபவர்கள் மற்றும் ஏற்கனவே நடத்துபவர்களுக்கு 25 ஆண்டுகள் வரை நீட்டிப்பு;
10 ஏக்கர் குவாரி வைத்திருப்பவர்களுக்கு 20 வரை நீட்டிப்பு, 10 ஏக்கருக்கு மேல் குவாரி வைத்திருப்பவர்களுக்கு 30 ஆண்டு வரை நீட்டிப்பு என்கிறது இந்த புதிய திருத்தம். குவாரி குத்தகை ஆண்டை குறைக்க வேண்டும், அரசே குவாரிகளை நேரடியாக நடத்த வேண்டும் என்றெல்லாம் மக்களும் பல்வேறு இயக்கங்களும் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்க, குவாரி முதலாளிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, கனிமக் கொள்ளைக்கான இந்த திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது திமுக அரசு. இப்படியான தொடர் குவாரி முதலாளிகளின் நலனுக்கான அரசாக தொடர்ந்து இயங்கி வரும் அரசு கொடுக்கும் ஆதரவும் ஆட்சியாளர்கள் கொடுக்கும் துணிவும்தான் கனிமக் கொள்ளையர்களின் முறைகேடுகளையும் குற்றங்களையும் வளர்த்து வருகின்றன. இதன் பின்னணியில்தான் கனிம வளத்தை பாதுகாக்க முற்படுவார்கள் கொல்லப்படுவதையும் பாதுகாப்பு அற்றச் சூழலில் அவர்கள் தள்ளபடுவதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கனிம கொள்ளைக்கான பாதையை பாதுக்கும் திமுக அரசு, கனிம கொள்ளைக்கெதிரானவர்களை பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளுகிறது என்பதை கனிம பாதுகாப்பு சிந்தனை உடையவர்களுக்கான கொலை மிரட்டல் என்றே நம்மால் கருத முடிகிறது.