சனி, 25 மார்ச், 2023
புத்தர் மீதான வன்மமும் பௌத்தரை இந்துமயமாக்கும் வஞ்சகமும்.
செவ்வாய், 21 மார்ச், 2023
தண்ணீரும் ஜாதியும்.
செவ்வாய், 7 மார்ச், 2023
புவனகிரி சாத்தப்பாடி தலித் மக்கள் மீதான சாதிய வன்முறை; தமிழக அரசின் மெத்தனப் போக்கும்தான் காரணம்.
மாசி மகம்(6/3/2023) அன்று, கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சார்ந்த தலித்(பறையர்) சமூக மக்கள், தங்களுடைய பல்லாண்டுகால வழக்கப்படி மாரியம்மன் கோயிலிருந்து காலையில் புறப்பட்டு பரங்கிப் பேட்டை புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்று மாரியம்மனுக்கும் தங்கள் குடும்பத்தில் உயிர் நீத்தவர்களுக்கும் வழிபாட்டு சடங்குகளை செய்துவிட்டு மாலை வேளையில் திரும்பினர். இவ்வாறு இவர்கள் செல்லும் போது 'வண்டி கட்டி'போவது வழக்கம். அதுபோலவே, மாரியம்மன் உருவப்படம் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் பயணித்தனர். வழிபாடு முடிந்து ஊர் திரும்பும் வழியில், சுமார் 6.30 மணிக்கு சாத்தப்பாடி அருகில் உள்ள மேல் மணக்கொடி என்னும் ஊரின் முக்கிய சாலையில் வண்டி பயணித்தது. வாகனத்தில் இருந்த ஒலிப்பெருக்கியில் 'போரடடா... ஒரு வாளேந்தடா..." என்னும் (திரையிசை) பாடல் ஒலிக்க, வாகனத்தில் இருந்தவர்களும் களைப்பை மறக்க கரவொலி எழுப்பி வந்தனர். மேல்மணக்கொடி வன்னியர்கள் இக்காட்சியைக் கண்டதும் தங்களுடைய சாதிய வெறியை உசுப்பிக்கொண்டு, இரு சக்கர வாகனங்களில் சுமார் இருபது பேர் உருட்டுக் கட்டைகளுடன் தலித்துகள் சென்ற டிராக்டர் வாகனத்தை விரட்டிச்சென்று வழிமறித்து, "பறப்பயலுங்க வாளேந்துவீங்களாடா..." என சாதிவெறியிலும், ஆபாசமான வார்ததைகளாகல் வசைபாடிக்கொண்டே கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த திடீர் சாதிவெறியுடன் கூடிய கொலைவெறித் தாக்குதலை எதிர்பார்க்காத தலித் மக்கள் தற்காப்பு செய்துகொள்ளுவதற்குள் கடுமையாக தாக்கப்பட்டனர். பலரும் பதின் பருவ சிறார்களும் பெண்களும் இருந்ததால் சாதிவெறியர்களுக்கு தாக்குதல் நடத்துவது எளிதாக ஆகிவிட்டது.
தாக்கப்பட்டவர்கள் தங்களுக்கான சிகிச்சைக்காக அரசின் 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். காயம்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் திரும்பும் போது மீண்டும் வழிமறித்து ஆம்புலன்ஸில் இருந்தவர்களை உள்ளே சென்று தாக்கியதோடு, கீழே இழுத்துப் போட்டும் தாக்கியது அந்த சாதி வெறிக்கும்பல். பெண்கள் மட்டும் ஆம்புலன்ஸில் தப்பி மருத்துவமனைக்கு சென்றனர். கடுமையாகத் தாக்கப்பட்ட மற்றவர்களை சாலையில் வீசிவிட்டு இருட்டில் ஓடி மறைந்தனர் சாதிவெறியினர்.
தலித் மக்கள் தங்களின் முன்பாக வாகனத்தில் ஆடிப்பாடி செல்லுவதா என்கிற சாதி ஆணவமே இத்தாக்குதலுக்கான முதல்காரணம். இந்து சாஸ்திரத்தின்படி வன்னியர்கள்தான் கீழ்சாதி என்கிற உண்மையைக் கூட அறியாத அறிவிலிகளைத்தான் இந்த அரசும் அரசியல் கட்சிகளும் வளர்த்துக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் சாதியில் நாங்கள் மேலானவர்கள் என்கிற ஆணவம் அந்த தன்னிறவற்றக் கூட்டத்திற்கு வருகிறது. வன்னியர்களுக்காக பாடுபடுவதாக கூறிக்கொண்டிருக்கும் பாமவோ அந்த மக்களை மேலும் மேலும் சாதிவெறியர்களாகவே வளர்த்து வருகிறது.
தாக்குதல் நடைப்பெற்ற மறுநாள் காலையிலேயே இந்த சாதிவெறி வன்முறையை நடத்தியவர்களை பாதுகாக்க, புவனகிரி காவல்நிலையத்தில் பாமகவினர் திரண்டு நிற்கிறார்கள். எது நியாயம் என்பதைக் கூட தம்முடைய மக்களுக்கு போதிக்க யோக்கியதை அல்லாத இவர்களும் இவர்களின் தலைவர்களும் சமூகநீதியின் போராளிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளுவது வெட்கக் கேடானதல்லவா.
'தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிறது. சாதி சண்டைகள் ஏதுமில்லை' என்று ஓரிரு நாட்களுக்கும் முன்பாகத்தான் தமிழக காவல்துறை தலைமை இயக்கநர் சைலேந்திரபாபு அவர்கள் கூறினார். ஆட்சிக்கு வந்ததிலிருந்து திமுகவினரும் தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்றே அடித்துக் கூறுகிறார்கள். ஆனால், நியாயமற்ற காரணத்தைக் காட்டியும், அரசு ஆம்புலன்ஸையே மறித்தும் எளிய மக்களை தாக்கும் அளவுக்கு சாதிவெறியர்கள் திரிகிறார்கள். அமைதிப்பூங்கா என்பது அவ்வப்போது பூசிக்கொள்ளும் வேடமல்ல; அமைதியான ஒரு சூழலை உருவாக்கவிடாமல் தடுக்கும் சாதி வெறியர்களை கட்டுப்படுத்த முடியாத இயலாமையில் ஆளுபவர்கள் அமைதியை விரும்பும் ஆட்சியாளர்களும் அல்லர்.
வடக்கும் தெற்கும்: தொழிலாளர் நலன் காக்கத் தவறும் அரசுகள்.
பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பீகார் சட்டமன்றத்தில் 3/3/2023 அன்று எதிர்க்கட்சித் தலைவர் விஜய்குமார் சின்கா(பாஜக) கேள்வி எழுப்பினார். அனைத்துக் கட்சிக் குழு ஒன்று தமிழகத்திற்கு செல்ல வேண்டும் என்று விஜய்குமார் சின்கா கோரிக்கை வைத்தார். அதை துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்தார். 'இருமாநில அரசுகளின் பதில்கள் திருப்தியளிக்காவிட்டால் எதிர்க்கட்சி(பாஜக) மத்திய அரசை நாடலாம்' என்றும் அவர் கூறினார். பிறகு, முதல்வர் நிதிஷ்குமாரை அவருடைய அறையில் விஜய்குமார் சின்கா உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்த பிறகு, அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது. 4/3/2023 அக்குழு தமிழ்நாடு வந்ததாக செய்திகளில் காண முடிகிறது. அதுபோலவே, ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திலும் இது விவாதமாகி அங்கிருந்தும் ஒரு குழு வந்ததுள்ளது.
திருப்பூரில் ஒரு தேநீர் கடையில் வடமாநில தொழிலாளர் ஒருவருக்கும், தமிழ்நாட்டு தொழிலாளர் ஒருவருக்கும் நடைப்பெற்ற சிறு சச்சரவை ஊதிப்பெருக்கிய சிலர் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை தாக்குவதாக வதந்திகளை பரப்பினர். தமிழ் உணர்வின் பெயரில் பிற்போக்கு அரசியல் பேசும் பலரும் இதுபோன்ற வதந்திகளை விரும்புவதால் அது பரவியது. இந்த வதந்தியை பயன்படுத்திக்கொண்ட இந்துத்துவ கும்பலும் வட மாநில தொழிலாளர்கள் இந்தி பேசுவதாலேயே தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்தியை பரப்பியது. குறிப்பாக, பாஜக கூட்டம் இந்த வதந்தியை பரவலாக்கியது. தற்போது, வதந்திகளை பரப்புவதற்கெதிரான எச்சரிக்கையை தமிழக அரசு செய்திருந்தாலும், பாஜக அண்ணாமலை, சீமான் போன்றோரை கைது செய்யாதது தமிழக அரசின் எச்சரிக்கை என்பது வடமாநில அரசியல் நண்பர்களை திருப்திபடுத்தத்தானோ என்கிற ஐயம் எழுகிறது.
வடமாநிலத்திற்கு தமிழர்களும் தமிழகத்திற்கு வட மாநிலத்தவர்களும் வேலைத் தேடி போவதும் வருவதும் புதிய நிகழ்வுகள் அல்ல. ஆனால், வடக்கே நிலவும் மிகக் கடுமையான பொருளாதார பின்னடைவும் அதற்கு காரணமான சாதி-மதவாதம், ஊழல் மிக்க அரசியல் ஆகியவையும் தற்போது அவர்களை முன்னைவிட கூடுதலாக விரட்டுகின்றன. குறிப்பாக, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்தே தமிழகத்திற்கு அதிகம் தொழிலாளர்கள் வருகிறார்கள். இதைத் தொடர்ந்து சென்னை,கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் சிறு நகரங்கள் வரை வடமாநிலத்தவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பீகாரும் சரி அதிலிருந்து பிரிக்கப்பட்ட ஜார்கண்டும் சரி. சாதிய பண்ணை முறையிலிருந்து இன்னமும் விடுபடாத மாநிலங்கள் ஆகும். நிலவுடைமை ஆதிக்க சாதிகளும் அவர்களிலிருந்து வரும் ஆட்சியாளர்களும் நிலச்சீர்த்திருத்தம், கல்வி போன்றவற்றிற்கு எதிராகவே சிந்திப்பதால் அங்கே அதீத வறிய நிலையில் வெகுமக்கள் தள்ளப்படுகிறார்கள். முதலில் பீகாரிலிருந்து கல்வி கற்க பிற மாநிலங்ளுக்கு சென்ற சிறு விவசாயக் குடும்பங்கள் தங்களிடம் இருந்த சிறு சிறு நிலங்களை விற்றே சென்றனர். கல்விக்கான வேலையும் கிடைக்காமல், இருந்த வாழ்வாதரமும் பறிபோய் நிர்கதியில் அவர்கள் தள்ளப்பட்டார்கள். சொத்துடைமை அற்ற தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சில சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு சாதிய பண்ணை அடிமை முறையும், ஊழல் அரசியலும் கூடுதல் சுமைகளைக் கொடுத்தன. பலரும் பிற்படுத்தப்பட்டவர்களின் நாயகர்களாகள் போற்றும் லல்லு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் போன்றவர்களின் ஆட்சியில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செல்வச் செழிப்பில் திளைத்தார்கள். எளிய மக்களோ வாழ்வாதாரம் தேடி நாடெங்கும் ஓடினார்கள். மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரசும் பாஜகவும் இப்பிரச்சனைகளை கண்டுகொண்டதே இல்லை. மாறாக, எளிய மக்களுக்கு துணை நின்ற தலித் மற்றும் இடதுசாரிய போராளிகளை அங்கே வேட்டையாட மாநில அரசில்வாதிகளுடன் கைக்கோர்த்தன. இன்று தமிழகத்திற்கு சாரை சாரையாக பீகார் மாநில தொழிலாளர்கள் வருதற்கு பின்னணியில் இப்படியான உண்மைகள் இருக்கின்றன. இப்படி இங்கே பிழைக்க வரும் ஒவ்வொரு மாநிலத் தொழிலாளர்களின் பின்னணியிலும் பல உண்மைகள் உள்ளன. அத்தனையையும் மூடி மறைத்துவிட்டு வடமாநில தொழிலாளர்களின் வருகையை 'படையெடுப்பு' என்று தமிழ் சாதிதேசியவாதிகளும், வட இந்திய தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் ஆபத்து இருக்கிறது என்று இந்து தேசியவாதிகளும் பொய்களைப் பரப்பி வருகின்றனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள பெரு நிறுவனங்கள் வட இந்திய தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுக்கொண்டு, சொற்பத் தொகையையே ஊதியமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, 'வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்' என்று அறிக்கை வாசிக்கும் தமிழக திமுக அரசு இந்த உழைப்புச் சுரண்டல் பற்றியோ, ஊதியக் கொள்ளைக் குறித்தோ பேசுவதில்லை. வதந்திகளை பரப்புகிறவர்களை எச்சரிக்கை செய்யும் திமுக அரசு, வட மாநில தொழிலாளர்களின் ஊதியத்தை குறைத்துக் கொடுக்கும் முதலாளிகளை எச்சரிக்கை செய்யவில்லை. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப்படவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அவர்கள் உழைப்புச் சுரண்டலால் தாக்கப்படுவதும் உண்மைதான். அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு தொழிலாளர்களை பாதுகாக்கும் அரசு என்று எப்படிக் கூறிக்கொள்ள முடியும். தமிழக தொழிலாளர்களுக்கும் இதே உழைப்புச் சுரண்டலும் ஊதியக் கொள்ளையும் நிகழ்வதை வேடிக்கைப்பார்த்து இவர்களுக்கு பழகிவிட்டதால், வடமாநில தொழிலாளர்களுக்கு நேரும் அதே கொடுமையையும் வேடிக்கைப்பார்க்கிறார்கள் என்றுதான் இதை புரிந்துகொள்ள முடியும்.
எனவே, வடக்கும் சரி, தெற்கும் சரி. தொழிலாளர் நலன் காக்கும் அரசுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மையாகும்.
திங்கள், 6 மார்ச், 2023
மாசி மகமும் பௌத்தமும்.
கே.பி.எஸ்.மணி என்கிற பூர்வகுடி ஆளுமை.
ஸ்டாலின் தி சேரி மக்களால், மாவீரர் K.B.S. மணி என்று அழைக்கப்பட்டவர், தலைவர் கதிர்வேல் பால சுப்பிரமணி அவர்கள் ஆவார். முன்னாள் ர...
-
ஸ்டாலின் தி பத்தாண்டுகளாக பல்வேறு வேடங்களை தரித்து நின்ற மோடி, தியான வேடம் போட கன்னியாகுமரி கடலில் உள்ள பாறைத்திட்டுக்கு வந்து...
-
ஸ்டாலின் தி நெல்லை மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை வாடியா குழுமத்திற்குச் சொந்தமான ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிம...
-
ஸ்டாலின் தி கீழ்வெண்மணி கிராமத்தில் 1968, டிசம்பர் 25 ஆம் தேதி குடிசைக்குள் வைத்து 44 தலித் விவசாயக்கூலித்தொழிலாளிகள் பண்ணையார்...