ஞாயிறு, 13 அக்டோபர், 2024

தீட்சா தின குறிப்புகள்.



ஸ்டாலின் தி


1
 1935 அக்டோபர் 13 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இயாலோவில் நடைப்பெற்ற பட்டியலின மாநாட்டில் “நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்” என்று அண்ணல் அறிவித்தார். அந்த பேச்சு வெறும் கோபத்தின் வெளிப்பாடு என்று கூறினார் காந்தி. மாநாட்டுக்கும் முன்னதாக, இயாலோ நகராட்சி மன்றம் அண்ணலுக்கு வரவேற்புப் பட்டயம் வழங்கி கவுரவித்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் உரையில், “நெடுங்காலமாக தொடர்ந்து வரும் நமது போராட்டங்களுக்குப் பின்னரும், தீண்டப்படாத மக்களை குறித்த அவர்களது மனப்பான்மையில் மாற்றமேதுமில்லையென்றும், நம்மிடம் அவர்கள் நேயத்தோடு நடந்துகொள்ளப் போவதுமில்லையென்றும் முடிவுக்கு வந்துள்ளோம். எனவே நாம் இந்துக்களிடமிருந்து விலகி, சுய உதவி, சுயமேம்பாட்டுக்கான போராட்டம் இவற்றிலேயே நம்பிக்கை வைப்பது என முடிவெடுத்துள்ளோம்” என்று பேசினார் அண்ணல். ஆக, அண்ணல் இந்துவாக சாகமாட்டேன் என்கிற அறிவுப்பு காந்தி சொன்னதைப்போல் வெறும் கோபச்சொல் அல்ல. தீர்க்கமான இலக்கை நோக்கிய துவக்கம். ஆனாலும் அப்போது அண்ணல் இந்துமதத்திலிருந்து வெளியேறி எந்த மதத்தில் இணைவது என்கிற முடிவை எடுக்கவில்லை. இயாலோ மாநாட்டு உரைக்கு காந்தி தெரிவித்திருந்த எதிர்வினைக்கு அண்ணல் (அக்டோபர் 15-1935) அளித்த பதிலில், “நாங்கள் எந்த மதத்தில் இணையப்போகிறோம் என்று என்பது குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை;எந்தெந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்கப்போகிறோம் என்பதையும் முடிவு செய்யவில்லை;ஆனால், நாங்கள் தீர்க்கமாய் கலந்து ஆலோசித்து உறுதியாக முடிவு செய்திருப்பது ஒன்றுதான்; அதாவது இந்து மதத்தால் எங்களுக்கு நலன் எதுவும் கிடையாது” என்று கூறினார்.

1907 இல் அண்ணல் மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சியடைந்ததை முன்னிட்டு அவருக்கு நடந்த பாராட்டுக்கூட்டத்தில் ஆசிரியர் கெலுஸ்கர் வழங்கிய ‘கௌதம புத்தர் வரலாறு’ நூலின் மூலம் புத்தரை அறிந்த அண்ணல் 1930 களுக்குப் பிறகு தலித்துகளின் தீண்டப்படாத நிலைக்குறித்த ஆய்வுகளை ஆழமாக செய்தபோதுதான் பௌத்தமே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்ததையும் பௌத்தர்களே தீண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்பதையும் கண்டறிந்தார். இதே ஆய்வு முடிவை முன்னவே கண்டடைந்த பண்டிதர் அயோத்தி தாசர் வழியில் அண்ணல் பௌத்தம் நோக்கி பயணிக்கத்துவங்கினார். பண்டிதர் மற்றும் அவரது சகாக்களால் களப்பணியாற்றப்பட்ட சென்னை, கோலார் தங்கவயல் உள்ளிட்ட பௌத்த மறுமலர்ச்சி இடங்களுக்கு சென்று வரலாற்றாய்வு செய்தார் அண்ணல். முடிவாக பௌத்தத்தின் உன்னத நிலையான ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்னும் பண்பாட்டுத் தத்துவத்தை இலட்சியமாகக் கொண்டு பௌத்தம் தழுவும் முடிவுக்கு வந்தார். இதற்கிடையில் சுமார் 15 ஆண்டுகள் அண்ணல் மதங்களைக்குறித்தும் மதங்களின் எதிர்காலம் குறித்தும் விரிவாக அலசி ஆராய்ந்திருந்தார். கடும் ஆய்வுக்கும் சிந்தனைக்கும் பிறகே அவர் பௌத்தம் ஏற்றார். இவ்வாறு, இந்துவாக சாகமாட்டேன் என்று கூறியதை வெறும் சபதமாக இல்லாமல், அதை இலட்சியமாக ஆக்கி, அதன் மூலம் ஒரு சமூகத்தின் எதிர்கால நலனை எடுத்துக்காட்டிச் சென்றிருக்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

2

இந்துவாக இறக்கப்போவதில்லை என்று 1935 இல் அண்ணல் அறிவித்த பிறகு அனைத்து மதத்தினரும் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அவருடைய வரலாற்று அறிவும், சமூக விடுதலை உணர்வும் அவரை பௌத்தம் நோக்கி அழைத்து வந்தன. 1950 களின் துவக்கத்திலேயே அண்ணல் பௌத்தம் தழுவப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு வலுத்துக் கொண்டிருந்தது. அதற்கும் முன்னவே அவர் தம்மை பௌத்த சிந்தனையாளராக செயல்படுத்திக் கொண்டிருந்தார். அவரது பேச்சு,செயல் என சகலத்திலும் பௌத்தமே வெளிப்பட்டது. 1945 இல் அவர் மக்கள் கல்வி இயக்கத்தின் சார்பாக துவங்கிய கல்லூரிக்கு 'சித்தார்த்தா கல்லூரி' என்று புத்தர் பெயரை சூட்டினார். 1950 இல் டெல்லியில் பௌத்தப்பேரணியை நடத்தினார். அதே ஆண்டு மே மாதம் 25 ஆம்தேதி இலங்கை கண்டியில் புத்தரின் பல் இருக்கும் விஹாரையில் நடைப்பெற்ற சர்வதேச பௌத்த மாநாட்டில் ‘பௌத்தம் மதத்தின் தோற்றமும் வீழ்ச்சியும்’ பற்றி உரையாற்றினார். 1954 இல் இந்திய பௌத்த சங்கத்தை நிறுவினார். அதே ஆண்டில் பர்மாவில் நடைப்பெற்ற சர்வதேச பௌத்த மாநாட்டில் பங்கேற்றார். இப்படி அவரின் 1950 கள் காலக்கட்டம் பௌத்தத்தைச் சுற்றியே சுழன்றுகொண்டிருந்ததால் அவரது பௌத்த ஏற்பு நிகழ்வும் அது எப்போது, எங்கே நடக்கும் என்றும் எதிர்பார்ப்புகளைக் மக்களிடம் உருவாக்கியது. இந்நிலையில் அண்ணல் 1954 ஆண்டில், தமது பௌத்தம் ஏற்பு நிகழ்வு மும்பையில் நடைபெறலாம் என்று அறிவித்தார். ஆனால், மும்பையில் மதமாற்றம் நிகழாமல் நாக்பூரில் நடைபெற்றது. 

3

அண்ணல் மும்பையில் மதமாற்ற நிகழ்வு நடக்க வாய்பிருப்பதாக கூறியதைத்தொடர்ந்து இடத்தேர்வு குறித்த விவாதம் எழுந்தது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வொன்று நிகழும் இடமும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக இருந்தால் நல்லது என்கிற வாதம் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. நாக்பூர் பகுதியிலிருந்து அண்ணலுக்கு ஒரு கடிதம் வந்தது. கடிதத்தை எழுதியவர் வாமன் ராவ் காட்போல் என்கிற பௌத்த ஆய்வாளரும் அண்ணலின் சீர்மிகு தளபதியுமாவார். அக்கடிதத்தில் ‘பம்பாய்க்கு பௌத்த வரலாற்றில் முக்கிய இடமில்லை’ என்றும் ‘நாக்பூரே சிறந்த தேர்வாக இருக்கமுடியும்’ என்றும் கூறி, இடம் குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும் ‘இதுவரை தேதியை தேர்வு செய்யாமலிருந்தால் அக்டோபர் 14 ஐ தேர்வு செய்யுங்கள்’ என்றும் அக்கடிதத்தில் கோரியிருந்தார் வாமன்ராவ். அக்டோபர் 14 ஆம் தேதியை வாமன்ராவ் குறிப்பிட்டுக்கூறியதற்கு முக்கியக்காரணமும் இருந்தது. பகவான் புத்தர் உயிர் துறந்து மகாபரிநிப்பாணம் அடைந்த காலத்தைக் கணக்கிட்டு அந்த தேதியைக் குறிப்பிட்டார் வாமன்ராவ். இதற்கு ஆதாரமாக அவர் எடுத்துக்காட்டிய நூல் ஈ.ஜே.தாமஸ் எழுதிய ‘புத்தரின் வாழ்க்கை’ என்னும் நூலாகும். இந்நூலில் புத்தர் பரிநிப்பாணம் அடைந்த போது அவரது உடல் மீது பூக்கள் பொழிந்ததைப்பற்றி முக்கியக் குறிப்பு இருந்தது. அதன்படி, புத்தரின் உடல் மீது பொழிந்த பூக்கள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களிதான் பூக்கும். அவற்றையெல்லாம் கணித்த ஈ.ஜே.தாமஸ் புத்தரின் பரிநிப்பாணம் அக்டோபர் 13 ஆம் நாள்தான் நடைப்பெற்றது என்று அந்நூலில் கூறினார். எனவே புத்தரின் பரிநிப்பாண நாளுக்கும் மறுநாள் அக்டோபர் 14 ஐ முன்னிறுத்தினார் வாமன்ராவ். அதாவது பரிநிப்பாணத்திற்கு பிறகு நிகழும் மறுமலர்ச்சியை இந்த தேதி குறிக்கிறது எனலாம். சாம்ராட் அசோகரும் இதே தேதியில்தான்(விஜய தசமி) பௌத்தம் தழுவினார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 

வாமன்ராவ் அவர்களின் கடிதத்திற்கு பிறகு, அண்ணல் நாக்பூரையும் அக்டோபர் 14 ஆம் தேதியையும் தேர்வு செய்தார். நாக்பூரை தேர்வு செய்தவுடன் திட்டமிட்டே ஒரு பதற்றநிலை உருவாக்கப்பட்டது. ஏனெனில் இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் நாக்பூரில் இருந்தது. எனவே, ஆர்.எஸ்.எஸ்.அமைப்புடன் மோதலை உருவாக்குவதற்காகவே அண்ணல் அந்த இடத்தை தேர்வு செய்தார் என்று ஒரு நச்சுக்கருத்து பரப்பப்பட்டது. இதனால் பதற்றமும் உருவானது. பௌத்த ஏற்பு உரையில், ‘பௌத்ததை வளர்த்தெடுத்த நாக மக்கள் செழித்து வாழ்ந்த நிலம் நாகபுரி. நாங்கள் நாக வம்சத்தினர். எனவேதான் நாகபுரியை தேர்வு செய்தோமே தவிர, ஆர்.எஸ்.எஸ்.எல்லாம் எங்கள் மனதில் துளியிடத்திலும் இல்லை’ என்று பதிலளித்து விளக்கினார்.

4

நாக்பூரில் அக்டோபர் 14 ஆம் தேதியில் தீட்சை நாளை வைத்துக்கொள்ள அண்ணல் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து வாமன் ராவ் தலைமையிலான குழுவினர் விழா ஏற்பாட்டில் தீவிரமாக இறங்கினார்கள். நாக்பூர் கோத்தாரி மாளிகையில் ஒரு அறை அலுவலகமாக செயல்பட வாடகைக்கு எடுக்கப்பட்டது. வாமன்ராவ் அந்த அலுவலகத்திலிருந்து செயல்பாட்டாளர்களை இயக்கினார். நாக்பூர் பர்திப்பகுதி இளைஞர்கள் வாமன்ராவின் தீவிர செயல்பாட்டாளர்களாக ஓடி ஓடி உழைத்தனர். விழா நடக்கப்போகும் இடம் விசாலமாக இருக்க வேண்டுமென்று மெனக்கெட்டு தேடிய குழுவினர் ஷிராதாந்த் பேத்தில் இருந்த அம்மை நோய்த் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்திற்கருகிலிருந்த நிலப்பரப்பை ஏற்பாடு செய்தனர். அன்றிலிருந்தே அது தீக்‌ஷா பூமி என்று அழைக்கப்பட்டது. விழாவுக்கான பணிகள் இப்படி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த நிலையில் வாமன்ராவ் அவர்களுக்கு ரேவ்ராம்காவ்தே ஒரு தந்தியை அனுப்பியிருந்தார். ‘விழா ஏற்பாடுகளை நிறுத்த வேண்டுமென்றும் உடனடியாக பாபாசாகேப்பை வாமன்ராவ் சந்திக்கவேண்டுமென்றும்’ அந்த தந்தியில் இருந்தது. "பணிகள் எதுவும் தடைப்பட வேண்டாம், தொடருட்டும்" என்று செயல்பாட்டாளர்களிடம் கூறிவிட்டு வாமன்ராவ் அண்ணலை சந்திக்க டெல்லி புறப்பட்டு சென்றார்.

5

டெல்லிக்கு சென்ற வாமன்ராவ் தனக்கு தந்தி அனுப்பிய ரேவ்காவ்தேவை சந்தித்து ‘ஏன் விழா ஏற்பாடுகளை நிறுத்தவேண்டும்?’ என்று வினவினார். “பாபு அரிதாஸ் ஆவ்லே மற்றும் அக்கந்த் மேதே ஆகியோர் வேறு இடத்தை தேர்வு செய்திருக்கிறார்கள்” என்று கூறினார் காவ்தேவ். பிறகு, அண்ணலிடம் சென்றார் வாமன்ராவ். அங்கு அண்ணலுடன் பாபு அரிதாஸும் இருந்தார். அவரிடம் “ஏன் நாங்கள் தேர்வு செய்த இடத்தில் விழாக் கூடாது?’’ என்ற கேள்வியை முன்வைத்தார். “முதல் காரணம், விழா நடக்கவுள்ள இடத்தைச் சுற்றி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வசித்து வருகிறார்கள். இரண்டாவது காரணம் நீங்கள் விழாவுக்காக நடத்திய பூஜையானது பவானிசங்கர் நியோகி என்னும் பார்ப்பனரால் நடத்தப்பட்டிருக்கிறது” என்று பாபு அரிதாஸ் ஆவ்லே வாமன்ராவிடம் காரணங்களைக் கூறினார். அண்ணல் அனைத்தையும் கேட்டபடி இருந்தார். மேலும், பார்ப்பனரால் பூஜை செய்யப்பட்டதா? என்று அண்ணல் அதிர்ச்சியுமடைந்தார். அரிதாஸ் ஆவ்லேவுக்கும் அண்ணலுக்கும் பூஜையில் நடந்த விஷயத்தை இவ்வாறு விளக்கினார் வாமன்ராவ்: “தீக்‌ஷா பூமியில் நாங்கள் பூஜை நடத்தியது உண்மைதான். ஆனால், ஒரு பௌத்த மதத்தினரால்தான் அந்த பூஜை நடத்தப்பட்டது. அப்போதுதான் ஷிராமனீர் பதவியேற்றிருந்த லக்‌ஷ்மன் காவ்தே அவர்கள்தான் பூஜையை நடத்திய பௌத்தர். அவ்வழியாக நடந்து வந்துகொண்டிருந்த பார்ப்பனரான நியோகி பூஜை நடப்படைக் கண்டு ஆர்வத்தில் நின்றுகொண்டு கலந்து கொண்டார். அவர் கைகளால் எந்த பூஜையும் நடத்தப்படவில்லை”.
மேலும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் ஆபத்து வரவாய்ப்பில்லை. பாப்சாகேப்பின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் முழுத்தயாரிப்பில் இருக்கிறோம் என்றார் வாமன்ராவ். உடனே குறுக்கிட்ட அண்ணல் “என் உயிரைப்பற்றியக் கவலை எனக்கில்லை” என்று கூறிவிட்டு, முடிவை பிறகு சொல்கிறேன், காத்திருங்கள் என்று கூறினார். அன்று பருவமழையின் தீவிரம் உச்சத்தில் இருந்தது. அந்நிலையில் மாலை நேரத்தில் அண்ணல் தமது துணைவியாருடன் காரில் புறப்பட்டு பயணமானார். கடுமழையால் ஓட்டுநருக்கு தடுமாற்றம் ஏற்பட, தமது கட்டுப்பாட்டை இழந்தார். தறிக்கெட்டு ஓடிய அண்ணலின் கார் கண் இமைக்கும் நேரத்தில் ஒரு மின்கம்பத்தில் மோதி நின்றது.

6

அண்ணலின் கார் தறிக்கெட்டு ஓடி மின்கம்பத்தில் கடுமையாக மோதியது. அண்ணல் தூக்கியெறியபடும் நிலைக்கு தள்ளப்பட, சரியான நேரத்தில் அண்ணலின் துணைவியார் மாய்சாகேப் அவரைத்தாங்கிக் கொண்டார். நொடிப்பொழுதில் உயிர்தப்பிய அண்ணல் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். அவரின் உயிர் போய்விடும் என்கிற அதிர்ச்சியோ அச்சமோ அவருக்கு இல்லை. உயிரைப்பற்றிய கவலை அவருக்கு எப்போதுமே இல்லை. அவருக்கு கவலையெல்லாம் தானொரு இந்துவாகவே சாக நேரிடுமோ என்பதுதான். இந்த விபத்தில் அண்ணல் தன்னை மரணம் பின் தொடர்வதை உணர்ந்திருக்கவேண்டும். எனவே, இனியும் பௌத்த ஏற்பை தள்ளிப்போடவோ, வரும் இடையூறுகளுக்கு இடம்கொடுக்கவோ அவர் விரும்பவில்லை. விபத்திலிருந்து மீண்ட அண்ணல் நேராக வீடு வந்து அங்கு தங்கியிருந்த வாமன்ராவை உடனடியாக அழைத்தார். வாமன்ராவும் அண்ணலின் முன் வந்து நின்றார். “நீங்கள் உடனே நாக்பூர் செல்லுங்கள். ஏற்கனவே ஏற்பாடு நடந்துகொண்டிருக்கும் இடத்திலேயே மதமாற்ற விழா நடக்கும். இனி என் உயிரைப்பற்றியக் கவலை எனக்கில்லை” என்று வாமன்ராவிடம் கூறியதைத்தொடர்ந்து நாக்பூருக்கு திரும்பி வேலைகளை துரிதப்படுத்தினார் வாமன்ராவ்.

வாமன்ராவிடம் தீர்க்கமாக இடத்தை மாற்றவேண்டாம் என்று அண்ணல் கூறியவுடன், நாக்பூர் வந்தடைந்த வாமன்ராவ் பெரும் இளைஞர் பட்டாளத்தைக் கொண்டு வேலைகளை முடுக்கினார். விழா நடக்கவிருந்த பெரும் மைதானத்தில் புதர்கள் மண்டிக்கிடந்தது. விழா நடக்க ஓரிரு நாட்களே இருந்த நிலையில், மகர்புரா,தரம்பேத்,கர்னல் பூங்கா உள்ளிட்ட சேரிகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் இரவில் பெட்ரோமாஸ் விளக்குகளின் வெளிச்சத்தில் தூய்மைப்படுத்தினர். இரவென்றும் பாராமல் கற்களையும் முட்களையும் அப்புறப்படுத்திய இளைஞர்களுடன் வாமன்ராவ், வசந்த் மூன், பிரகலாத் மேதே உள்ளிட்டவர்களும் பங்கேற்று பணிசெய்தனர்.
அக்டோபர் 11 ஆம்தேதி டெல்லியிலிருந்து விமானத்தின் மூலம் வந்து சேர்ந்தார் அண்ணல். பர்தியில் வலுவான சேரியாக இருந்த மகர்புராவின் முன்னால் இருந்த விடுதியில் அண்ணல் தங்கினார். கர்னல் பூங்கா பகுதி சமத்துவ தொண்டர் படையினர் வெள்ளுடை அணிந்து காவல் பணியாற்றினர். மகர்புரா மக்களும் அண்ணலுக்கு பாதுகாப்பாக கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
இன்னொரு பக்கம் விழா நடக்கவிருந்த மைதானம் சிறப்பாக தயாராகிக் கொண்டிருந்தது. மைதானத்தை, சுத்தப்படுத்தி, சமதளமாக்கி, குடிநீர்,கழிவறை வசதிகளை நகராட்சியின் சார்பாக உதவி மேயர் சாதாநந்த் புல்ஜிலே செய்துக்கொடுத்தார்.
மைதானம் தொண்டர் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது. வாயில் அருகில் கடைகள் வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேடையும் தீவிரமாக தொண்டர் படையால் கண்காணிக்கப்பட்டது. விழா மேடை 30*50 என்ற அளவில் அமைக்கப்பட்டது. மேடையின் முன்புறம் சுமார் 50 அடிதூரத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. பாதுகாப்பு வேலியில்ருந்து மேலும் 20 அடி தூரம் இடைவெளி விடப்பட்டு, அதற்கு அடுத்ததாகவே மக்கள் உட்கார இடம் ஒதுக்கப்பட்டது. துப்பாக்கி சுடும் தூரத்தைக் கணக்கிட்டு இந்த தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. வலதில் ஆண்களுக்கும் இடதில் பெண்களுக்கும் இடம் அளிக்கப்பட்டது. விடுதில் அண்ணலுக்கு பாதுகாப்பளித்த கர்னல் பகுதி தொண்டர்படையே விழா மேடைப்பாதுகாப்பிலும் ஈடுபடுத்தப்பட்டது.

தம்ம தீட்சை விழா அன்று சுமார் 5 இலட்சம் மக்கள் பங்கேற்றனர். காலை 90.30 மணிக்கு பிக்கு சந்திரமணியுடன் அண்ணல் மேடைக்கு வந்துசேர்ந்தார். இவ்விழாவில் பிக்குகள் தெரோ பன்னாட்டிஸ்(போபால்), எச்.சித்தாதிஸ்ஸ(இலங்கை), எம்.சௌகரத்னா(காசி), ஜி.பிரித்னியானந்த்(இலட்சமணபுரி), நெர் ஷிரம்னெர்(மே.வங்கம்), அருட்டிரு பரம்சாந்தி உள்ளிட்ட பிக்குகள் பங்கேற்றனர்.
வணக்கத்திற்குரிய பிக்கு மகாஸ்தவீர் சந்திரமணி அவர்கள் திரிசரணங்களையும் பஞ்சசீலங்களையும் போதித்து அண்ணலுக்கும் அண்ணலின் துணைவியாருக்கும் தீட்சையளித்து புத்த மதத்தில் இணைத்தார். பாபாசாகேப்பும் துணைவியாரும் புத்தரின் சிலையின் முன் மும்முறை வணங்கி புத்தம் சரணடைந்தனர். அங்கே கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் பௌத்தம் ஏற்று மும்மணிகளை முழங்கினார்கள். அண்ணல் 22 சூளுரைகள் முழங்கினார். கூட்டமும் அவற்றை திருப்பி முழங்கியது. அந்த 22 உறுதி மொழிகளையும் அண்ணல் தன் கைப்படவே பெரிய எழுத்தில் தனித்தனி 22 தாள்களில் எழுதியிருந்தார். கண்ணாடி அணியாமல் படிக்கவே இப்படி செய்திருந்தார். ஏனெனில் ‘எந்த வண்ணக்கண்ணாடியும் போடாமலே-எந்தவொரு முன்கருதுகோளும் இல்லாமலே-தம்ம தீட்சையை அவர் எடுத்துக்கொள்ள நினைதிருக்கலாம் என்கிறார் விழா செயல்பாட்டாளர்களில் ஒருவரான வசந்த் மூன்.

7

அண்ணல் தீக்‌ஷா விழாவினை நிகழ்த்திய விழாக்குவினரில் ஒருவராக விளங்கினார் தளபதி வசந்த் மூன். விழா மேடைகளைக் கவனிக்கும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது. விழா துவங்கும் சமயத்தில்தான் அவர் மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளைக் கவனித்தார். அண்ணல் வருவதற்கு சில நிமிடங்கள் இருந்த அந்த சமயத்தில் அண்ணலுக்கு போடப்பட்டிருந்த இரும்பு மடக்கு நாற்காலி அவ்வளவு சரியாகப்படவில்லை. ரேவாரம் காவ்தே அவர்களிடம் இதுக்குறித்து வசந்த் மூன் அவர்கள் கேட்டபோது, ‘நகராட்சி லாரியில் பெரிய நாற்காலிகள் வந்துகொண்டிருக்கின்றன’ என்று காவ்தே அவர்கள் கூறினார். ஆனாலும் அண்ணல் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார் என்பதை உணர்ந்த வசந்த் மூன் அவர்கள் மைதானத்துக்கு வெளியே ஓடிவந்தார். மைதானத்தில் வெளிப்பகுதியில் இருந்த முக்கிய சாலையோரத்தில் ஒரு வீட்டில் ஒருவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பதை வசந்த் மூன் கண்டார். அவரிடம் சென்று வசந்த் மூன் விஷயத்தை விளக்கினார். அந்த வீட்டுக்காரர் இஸ்லாமியராக இருக்கலாம் என்கிறார் வசந்த் மூன். அண்ணலுக்கு நாற்காலி வேண்டுமென்று கேட்டவுடன் ‘மகிழ்ச்சியுடன் எடுத்து செல்லுங்கள்’ என்று சொல்லி நாற்காலியைக் கொடுத்தார் நாற்காலியின் உரிமையாளர். கனமாக இருந்த பழைய மர நாற்காலிகளை தூக்கிக்கொண்டு வசந்த் மூனும் அவரது சகாக்களும் மேடைக்கு விரைந்தனர். மேடையில் நாற்காலியை வைத்துக்கொண்டிருக்கும் போது ‘அம்பேத்கர் வாழ்க’ என்ற முழக்கங்களுக்கிடையே மேடையேறினார் அண்ணல். பிறகு, வசந்த் மூன் கொண்டு வந்திருந்த நாற்காலியில் அமர்ந்தார். விழா முடிந்த பிறகு, நாற்காலியின் உரிமையாளரிடம் சொல்லியபடி நாற்காலிகள் ஒப்படைக்கப்பட்டன.
விழா முடிந்து சிலமாதங்கள் கழித்து வசந்த மூன் விழா நடந்த மைதானத்திற்கு சென்றார். விழாவின் போது நிகழ்ந்த நிகழ்வுகள் அவரது மனதில் தோன்றின. மக்கள் வெள்ளம் கண்முன்னே வந்து போனது. அப்படியே அந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் அண்ணல் அமர்ந்திருந்த அந்த நாற்காலியும் நினைவில் வர, அதன் வரலாற்று முக்கியத்துவம் கருதி அந்த நாற்காலியை எப்படியும் வாங்கிவிடவேண்டுமென்று அந்த நாற்காலியை பெற்ற வீட்டிற்கு விரைந்தார் வசந்த மூன். ‘இங்கே வசித்தவர்கள் மத்திய பிரதேசம் சென்றுவிட்டார்கள்’ என்கிற பதில்தான் அவருக்கு கிடைத்தது. “அவர்களின் முகவரியாவது கிடைக்குமா?” என்று விசாரித்தபோது “தெரியாது” என்கிற பதிலே வந்தது.
அது வெறும் நாற்காலியல்ல. ஒரு சமூகம் கொடும் நிலையிலிருந்து சீர்நிலைக்கு செல்லுவதற்கிடையில் சற்று இளைப்பாறிய தடம் அது.

தீக்‌ஷா தின குறிப்புகளுக்காக உதவிய நூல்கள்:
1.ஒரு தலித்திடமிருந்து-வசந்த் மூன். விடியல் பதிப்பகம்.
2.டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல்தொகுப்பு 37, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன்.

(14/10/2016 அன்று முகநூலில் நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு)

வியாழன், 3 அக்டோபர், 2024

ராஜகோபாலாச்சாரியின் மதுவிலக்கு அரசியலும் வேடதார பிராமணியமும் .

ஸ்டாலின் தி 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் ராஜகோபாலாச்சாரி என்னும் ராஜாஜியின் உருவத் தட்டி(Cutout) வைக்கப்பட்டது பேசுபொருளாக ஆகியுள்ளது. விசிகவை ஆதரிப்பவர்களில் பலரும் கூட இதை ஏற்கவில்லை என்பது தெரிகிறது. 'ராஜாஜி மதுவிலக்கு என்பதில் உறுதியாக இருந்தவர் ' என்பதாக விசிகவின் பதிலாக உள்ளது. 1937 இல் சேலம் மாவட்டத்தில் முதன் முதலில் மதுவிலக்கை கொண்டுவந்தார் அன்றைய சென்னை மாகாண முதல்வரான ராஜாஜி. அதன் பிறகு இரண்டாவது முறையாக முதல்வரானபோது(1952) தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டுவந்தார் ராஜாஜி. 1971 இல் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி மதுவிலக்கை நீக்கும் வரை ராஜாஜி கொண்டு வந்த மதுவிலக்கு சட்டம் இருந்தது. இவற்றை வைத்துப் பார்த்தால் ராஜாஜி முற்போக்கான அரசியல்வாதியாக தெரியலாம். ஆனால், ராஜாஜியின் அசலான சனாதன முகத்தை மறைக்கவே அவருடைய மதுவிலக்கு அரசியல் அவருக்குத் தேவைப்பட்டது. உண்மையில் அவருடைய மதுவிலக்கு சிந்தனை என்பது 'பிராமண ஆச்சாரம் ' என்கிற பண்பாட்டிலிருந்தே வந்தது. 

மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்தத்தை சிதைக்கும் நோக்கில் வைதீக பார்ப்பனர்கள்(வேஷ பார்ப்பனர்கள்) தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள அதுவரை அவர்களால்-மிக விருப்பப்பட்டு- கடைப்பிடிக்கப்பட்டு வந்த சிலவற்றை கைவிட நேர்ந்தது. அவற்றில் இறைச்சியும் மதுவும் முக்கியமானவை. பசுக்கறியையும் மது(சுரா) பானத்தையும் சுவைத்துக் களியாட்டம் ஆடிவந்த வேஷ பார்ப்பனர்கள் பசுவை புனிதமாக்கி மாட்டுக்கறி உண்பதை தவிர்த்தார்கள்; மதுவை கைவிட்டு ஒழுக்க சீலர் வேடம் பூண்டார்கள். தங்களால் கைவிடப்பட்ட மாட்டுக்கறியை உண்டவர்களை தீண்டப்படாதவர்களாக அறிவித்தார்கள். மது/கள் உண்டவர்களை காணக்கூடாதவர்களாக ஆக்கினார்கள். தீண்டாமையில் மாட்டுக்கறியும் மதுவும் முக்கிய கருவிகளாக பார்ப்பனர்களால் ஆக்கப்பட்டன. பார்ப்பனர்கள் வணங்கும் தெய்வங்களுக்கு பாலும் நெய்யும் படைக்கப்பட்டன; பார்ப்பனரல்லாத சூத்திரர்/தலித்துகள் வணங்கும் தெய்வங்களுக்கு சாராயம் திணிக்கப்பட்டது;குடிசாமிகள் குடிகாரசாமிகளாக ஆக்கப்பட்டன. 'மதுவிலிருந்து விலகி இரு' என்று போதித்த பௌத்தத்தை சிதைத்த பார்ப்பனியம் விலக்கப்பட்டவர்களின் அடையாளமாக மதுவை ஆக்கியது.

இந்த வரலாற்றிலிருந்துதுதான் ராஜாஜியின் மதுவிலக்கு எண்ணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சேலம் மாவட்டத்தில் ராஜாஜியால் மதுவிலக்கு (1937) கொண்டுவரப்படுவதற்கு முன்னரே சென்னை மாகாண சட்டமன்றத்தில் மது எதிர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் தாதா இரட்டமலை சீனிவாசன். வெகுமக்களின் நலனுக்காக மது எதிர்ப்பில் கவனம் செலுத்திய இரட்டமலை சீனிவாசன் அவர்கள் 'விடுமுறை தினங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும்' என்று 1929 செப்டம்பர் 24 அன்று சென்னை மாகாண சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். மது எதிர்ப்பில் ராஜகோபாலாச்சாரியின் நோக்கம் வேறு, இரட்டமலையாரின் நோக்கம் வேறு. மக்களை சீர்கேட்டிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் மீட்க வேண்டும் என்பது இரட்டமலையாரின் நோக்கம். பிராமண பண்பாட்டை ஒழுக்கத்தின் பெயரில் நிறுவிட வேண்டும் என்பது ராஜகோபாலாச்சாரியின் நோக்கம். இரட்டமலையாரின் கொள்கை வாரிசாக தம்மை ஆக்கிக் கொண்ட தொல்.திருமாவளவன் அவர்களின் நோக்கம் ராஜாஜியின் நோக்கமாக இருக்க முடியாது என்பதை நம்மால் உறுதியாக கூறமுடியும். எனவேதான் சொல்ல வேண்டியிருக்கிறது, 'நாம் யாரை வழிகாட்டியாக முன்னிறுத்துகிறோம் என்பது யாருடைய நோக்கத்தை முன்னிறுத்துகிறோம் என்பதாகவும் ஆகிவிடுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.'

தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமை: பேசப்படுவதிலும் மறைக்கப்படுவதிலும் உள்ள வஞ்சகங்கள்.



ஸ்டாலின் தி


சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் (2/10/2024) நடைப்பெற்ற காந்தி பிறந்தநாளை ஒட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'கடந்த மூன்று ஆண்டுகளில் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது' என்று பேசியிருக்கிறார். அதை மறுக்கும் வகையில் 'தமிழகத்தில் அனைவரும் அண்ணன் தம்பிகளாக பழகுகிறார்கள்.சாதி-மதம் பார்க்காமல் தமிழர் என்ற உணர்வுடன் இருக்கிறார்கள். இந்தியாவில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. புள்ளி விவரங்களை சேகரிக்கும்போது சாதிகள் அடிப்படையில் அவை கிடைத்திருக்கலாம். ஆதிதிராவிடர்கள் என்பதாலேயே தாக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை. ஆதிதிராவிடர் மக்களை தாக்க வேண்டும் என்று யாரும் முயற்சித்ததே இல்லை' என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். 

ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக பின்புலம் உள்ளவர். பொய்யும் புரட்டும் அவர்களுக்கு கைவந்த கலை. ஆனால், இந்த விவகாரத்தில் அவர் கூறியிருப்பது உண்மையான தகவல். சதவீதக் கணக்குகளில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அட்டவணைச் சமூகங்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன என்பது கண்கூடான உண்மை. அரசு தரப்பிலான தகவல்களே அந்த உண்மையை கூறுகிறது. ஆளுநர் கூட மத்திய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் மூலம் கிடைத்த தகவல் என்றே தம்முடைய குற்றச்சாட்டை முன்வைக்கிறார். பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சாதிய வன்கொடுமைகள் பற்றி ஆர்.என்.ரவி பேசப்போவதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன என்பது அப்பட்டமான உண்மை. சமயம் பார்த்து திமுக அரசை கண்டிக்கும் நோக்கில் ஆர்.என்.ரவி பேசியிருந்தாலும் அக்குற்றச்சாட்டு உண்மைதான். இதை ஆர்.என்.ரவி மட்டுமல்ல, தலித் களச் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். ஆனால், ஆர்.என்.ரவிக்கு பதில் கூறினால் போதும் அல்லது அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுத்தால் போதும் என்று ஆளும் திமுக தரப்பு நினைக்கிறது. அப்படித்தான், திமுக ஆட்சியின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் பேச்சு இருக்கிறது. 

அண்மையில் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெற்ற தகவலின்படி,
கடந்த மார்ச் வரையில் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் 394 கிராமங்களில் அதிகம் உள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் 45 கிராமங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் 29 கிராமங்கள், திருச்சி மாவட்டத்தில் 24 கிராமங்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 கிராமங்கள், தேனி மாவட்டத்தில் 20 கிராமங்கள் என இம்மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன(செய்தி: விகடன் இணையதளம் 27/9/2024). 

இதெல்லாம் அரசு கணக்கில் வந்த தகவல்கள். ஆனால், ஆயிரக்கணக்கான கிராமங்களில் சாதிய பாகுபாடும், வன்முறைகளும் நடைமுறையில் உள்ளன என்பதே எதார்த்தம். இரட்டைக் குவளை, பாதையில் தீண்டாமை, வேளாண் கூலியில் பாகுபாடு, பிணங்களை கொண்டுசெல்லும் பாதைகளில் தடை, முடிவெட்டிக்கொள்ளுவதில் தீண்டாமை, நிலவுரிமையில் தீண்டாமை, தலித் ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி தலித் உறுப்பினர்கள் ஆகியோரிடம் காட்டப்படும் வன்மம் என பலவகையிலான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் அன்றாடம் நடந்துகொண்டுதான் உள்ளன. ஆணவக்கொலை, சாதியக் கொலை என கொடுக்கும் மக்களும் தலித்துகளுக்கு எதிராக நடத்தப்படுகின்றன. தலித் கொலைகளை நடத்துவதற்காகவே கூலிப்படைகளை நிறுவும் அளவுக்கு சாதிவெறியர்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். வன்கொடுமை வழக்கை பதிவுசெய்யவும் தலித்துகளுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் காவல்துறை காட்டும் அலட்சியம் கொஞ்சமும் குறையவில்லை. காவல்துறையில் மட்டுமல்ல அரசின் பல்வேறு துறைகளிலுமே தலித் விரோதப் போக்கு கடுமையாக தொடர்கிறது. மொத்தத்தில், சமூகத்திலும் அரசுத் துறைகளிலும் சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் சாதிபார்க்காமல் அண்ணன் தம்பியாகத்தான் அனைவரும் வாழ்கிறார்கள், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்கிறார் சட்டத்துறை அமைச்சர். வெற்று சவடால்களால் ஆளுநரை எதிர்கொள்ள முயற்சிக்கும் அவர் அதன்மூலம் சாதிய வன்முறைகளை மறைக்கவும் பார்க்கிறார். ஆளுநர் பேசுவது திராவிட அரசியலுக்கு எதிராக இந்துத்துவ அரசியலை வளர்ப்பதற்குத்தான் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் சாதிய வன்முறைகளே இல்லை, தீண்டாமை வன்கொடுமைகளே கிடையாது என்று திமுக அரசு அப்பட்டமாக பொய்க்கூறுவதை எப்படி ஏற்க முடியும். 'ஆதிதிராவிடர்கள் என்பதாலேயே தாக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை. ஆதிதிராவிடர் மக்களை தாக்க வேண்டும் என்று யாரும் முயற்சித்ததே இல்லை' என்று இத்தனை வன்கொடுமைகளுக்கு மத்தியிலும் மாநில சட்டத்துறை அமைச்சரே கூறுவது எவ்வளவு பெரிய வன்கொடுமை. இதெல்லாம் எந்த வகையில் சமூக நீதி அரசியலில் சேரும்.

செவ்வாய், 1 அக்டோபர், 2024

காந்தியக் குழப்பங்களும் அண்ணல் அம்பேத்கரின் தெளிவும்.




ஸ்டாலின் தி 

1939 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 17 ஆம்தேதி அன்று பம்பாய் சட்டமன்றத்தில் தலித் உறுப்பினரான கெய்க்வாட் அவர்கள் "திரு.காந்தியால் 1932 இல் ஆலய பிரவேச இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து பம்பாய் மாகாணத்தில் எத்தனை கோவில்கள் தீண்டப்படாதவர்களுக்கு திறந்துவிடப்பட்டன?" என்று ஒரு கேள்வியை முன்வைத்தார். அதற்கு காங்கிரஸ் அமைச்சர் கொடுத்த பதிலின்படி, பம்பாய் மகாணத்தில் ஏழாண்டுகளில் தலித்துகள் ஆலயபிரவேசம் நடந்த கோயில்களின் எண்ணிக்கை 142 ஆகும். அவற்றில் 121 கோயில்கள் உரிமையாளர்களற்ற, கேட்பாரற்ற சாலையோரக் கோயில்கள் ஆகும். அதுவரையிலும் கூட, குஜராத்தில் காந்தி பிறந்த மாவட்டத்தில் ஒரே ஒரு கோயில்கூட ஆலயபிரவேசத்திற்கு திறக்கப்படவில்லை. இப்படிதான் 'தீண்டாமைக்கெதிரான' காந்திய இயக்கத்தின் வேகம் இருந்தது. 

இன்னொருபக்கம், தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் கிடையாது என்று முழங்கிக்கொண்டிருந்த காந்தி காங்கிரஸை அப்படி வழிநடத்துவதற்கு பெரிதாக செயற்படவுமில்லை. ஆலய நுழைவு மசோதாவை கொண்டுவர வேண்டுமென்று கவர்னர் ஜெனரலை நிர்பந்தம் செய்த காந்தியால், அந்த மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்க மறுத்த போது காங்கிரஸுக்கு எந்த நிர்பந்தத்தையும் கொடுக்க முடியவில்லை. 1921 திலகர் சுயராஜ்ய நிதி எனும் பெயரில் காங்கிரஸின் பணிகளுக்காக திரட்டப்பட்ட 1 கோடியே 25 இலட்ச ரூபாயில் வெறும் 43 ஆயிரம் மட்டுமே 'தீண்டப்படாதோருக்கான பணிகளுக்கு' செலவிடப்பட்டதாக காங்கிரஸ் கணக்கு காட்டியது. சுயராஜ்யத்திற்கு தீண்டாமை ஒழிப்பை முன்நிபந்தனையாக பேசிய காந்தி சுயராஜ்யத்தின் பணிகளுக்கான திரட்டப்பட்ட நிதியில் இப்படி குறைவாக தலித்துகளுக்கான பணிகளில் செலவிடப்பட்டதைப் பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை. வட்டமேசை மாநாடுகளின் போது காந்தி நடந்துகொண்டவிதத்தை எந்த ஜனநாயகவாதியாலும் அங்கீகரிக்க முடியாது. 

காந்தி துவக்கத்தில் சாதியமைப்பை பெரிதும் போற்றினார். பிறகு அப்படி அதிகம் அவர் பேசவில்லை எனினும் அவர் தீண்டாமை என்பதை மட்டுமே தீர்க்கவேண்டியதாக கருதினார். ஆனால், சாதியை ஒழிக்காமல் தீண்டாமை ஒழியாது என்கிற தெளிவான பதிலடியை காந்தியின் குழப்ப அரசியல் மீதுக் கொடுத்தார் அண்ணல் அம்பேத்கர். காந்தியின் குழப்பமான அரசியலை அவருடைய காலத்தில் எதிர்த்துக் கொண்டேயிருந்தார் அண்ணல். அவர் காந்தியிடமிருந்த குழப்பத்தை மட்டுமல்ல, காந்தியத்திடமிருந்த குழப்பங்களையும் அம்பலப்படுத்தினார்.

அண்ணல் ஏதோ தலித் மக்களின் பிரச்சனையை முன்னிறுத்தியே காந்தியத்தை மறுத்தார் என்கிற வகையில்தான் இங்கே பலரும் பேசிவருகிறார்கள். ஆனால், உண்மை இன்னும் விரிவானது. 

காந்தியத்தின் மொத்தக் குழப்பங்களையுமே அண்ணல் கேள்விக்குட்படுத்தினார். "காந்தியம் வர்க்க கட்டமைப்பை வலியுறுத்துகிறது; சமூகத்தின் வர்க்க கட்டமைப்பையும் வருமானக் கட்டமைப்பையும் காந்தியம் புனிதமானவையாக கருதுகிறது; இவற்றின் விளைவாக ஏற்படும் ஏழை-பணக்காரன், உயர்ந்தவன்-தாழ்ந்தவர், முதலாளி-தொழிலாளி போன்ற பாகுபாடுகளை சமூக ஒழுங்கமைப்பின் நிரந்தர அம்சங்களாகவும் அது பாவிக்கிறது" என்று காந்தியத்தின் வர்க்க பார்வையின் குளறுபடிகளை எடுத்துக்காட்டினார் அண்ணல். 

காந்திய பொருளாதாரத்தின்படி பொருளாதார சீர்கேட்டுக்கு எந்திரமயமும் நவீன நாகரீகமும்தான் காரணங்கள். ஆனால் அதை அண்ணல் கடுமையாக மறுத்தார். தனியார் சொத்துரிமையையும், தன்னலத்தின் மீது பேராசைக் கொள்வதையும் புனிதமானவையாக, மீறமுடியாததாக ஆக்கியுள்ள இச்சமூக அமைப்பே பொருளாதார சீர்கேட்டுக்கான முக்கிய காரணங்கள் என்று தெளிவுபடுத்தினார். 

இப்படி, காந்தியத்தை விரிவான விசாரணைக்குட்படுத்திய அண்ணல், "காந்தியம் எவ்வகையிலும் ஒரு புரட்சிகரமான தத்துவமல்ல. அது உள்ளடக்கத்தில் பழமையை பேணும் தத்துவம்" என்று கூறியதோடு, "ஜனநாயகத்தை தமது குறிக்கோளாக கொண்டிருக்காத சமூகத்திற்கு வேண்டுமானால் காந்தியம் பொருத்தமாக இருக்க முடியும்" என்றும் தெளிவுபடுத்தினார்.

காந்தியத்தின் குழப்பங்களை அறிய அண்ணலின் பார்வையை புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அண்ணலின் நூலைத் தொட்டாலே தீட்டென்று இருப்பவர்களுக்கு அந்த பார்வையை புரிந்து கொள்ளவே முடியாது. அந்த புரிதல் வரும்வரை, மறுக்கவே முடியாத சித்தாந்தமாகத்தான் காந்தியம் ஊதிக்காட்டப்படும்.

(2019 அக்டோபர் 2 இல் எழுதப்பட்ட முகநூல் பதிவு) 

தீட்சா தின குறிப்புகள்.

ஸ்டாலின் தி 1  1935 அக்டோபர் 13 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இயாலோவில் நடைப்பெற்ற பட்டியலின மாநாட்டில்...